Advertisement

அனைத்தையும் கேட்ட வெண்மதிக்கு மனம் பாரமாகிப் போன உணர்வு. “உங்க அண்ணன் ரொம்ப பாவம். அவங்க அவளை விரும்பினாங்களா டி?”, என்று கேட்டாள்.

“லவ் எல்லாம் பண்ணலை. இருந்தாலும் பொண்டாட்டினு ஒரு உரிமை உணர்வு இருந்துருக்கும்ல? ஆனா அவளுக்கு ஈமச் சடங்கு செய்யச் சொன்னப்ப செய்ய மாட்டேன்னு சொல்லிடுச்சு டி. அது மனசுல என்ன வலியும் வேதனையும் இருக்கோ? இப்பவும் ரூமுக்குள்ள தான் முடங்கி கிடக்கு. ரெண்டு நாளா காலேஜ்க்கு போகுது போல?”, என்று பூர்ணிமா முடிக்கும் போது அவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்திருந்தது.

அன்று பள்ளிக்குச் சென்ற பிறகும் வெண்மதியின் மனது அலைபாய்ந்த படி தான் இருந்தது. அவனுடைய நிலையை விட தன்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று தான் அவளுக்குத் தோன்றியது.

அவனை விட்டுப் போன மனைவியால் வெளியே தலை காட்ட முடியாமல் அவன் எவ்வளவு தவித்திருப்பான் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனை எண்ணும் போதே மனம் வேதனையில் கசங்கியது.

அன்றைய இரவில் தன்னுடைய அறையில் படுத்திருந்தாள் வெண்மதி. அவள் மனம் இன்று ஏனோ நிம்மதி இல்லாமல் தவித்தது. இறந்த அவளுடைய கணவனை நினைத்தா? அவளுடைய எதிர்காலத்தை நினைத்தா? இல்லை சரவணனை நினைத்தா? இல்லை மூன்றுமா? ஏதோ ஒன்று அவளை பாடாய்ப் படுத்தி எடுக்க அவள் கண்களில் கண்ணீர் வந்தது.

முன்பெல்லாம் வெண்மதி இப்படி இல்லை. எதற்குமே அழவே மாட்டாள். குறும்புத்தனமும் சுட்டித்தனமும் கொண்ட பெண். அவள் கண்ணீரையே கண்டதில்லை என்று கூட சொல்லலாம். அன்பான அப்பா, கண்டிப்பும் அக்கறையும் கொண்ட அன்னை, கேட்டதெல்லாம் கிடைக்கும் சந்தோஷம் என அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள்.

தன்னுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி அசை போட்டாள் வெண்மதி. இரண்டரை வருடங்களுக்கு முன்பு தன்னுடைய அறையில் போர்வையை கழுத்து வரை மூடி தூங்கிக் கொண்டிருந்தாள் வெண்மதி. அவளை எழுப்ப வந்த மங்கை மகளை ஒரு நொடி ரசித்தாள். கள்ளம் கபடம் இல்லாத பிள்ளை முகம் என்று மகளைப் பற்றி எண்ணி பூரித்துப் போனாள்.

அப்போது கீழே இருந்து “விசாலம், இங்க வா”, என்று குற்றாலம் குரல் கொடுக்க “இதோ வரேங்க”, என்று சொன்ன விசாலம் மகளை நெருங்கினாள்.

“வெண்மதி, வெண்மதி எந்திரி டி. நேரம் ஆகிருச்சு பாரு. அப்புறம் ஏன் எழுப்பலைன்னு கத்துவ”, என்று சொல்லி அவள் போர்த்தி இருந்த போர்வையை விலக்கினாள்.

போர்வையை விலக்கியதும் மகள் இருந்த கோலத்தைக் கண்டு திகைத்து விட்டாள். அணிந்திருந்த நைட்டி முட்டுக் கால் வரை மேலே ஏறி இருக்க தன்னுடைய தலையிலே அடித்துக் கொண்டு அதை கீழே இழுத்து விட்டவள் “பொம்பளை பிள்ளை இப்படியா டி தூங்குறது?”, என்று கேட்டாள்.

“அம்மா, காலைலே ஏன் இப்படி பண்ணுற? எனக்கு தூக்கமா வருது மா”, என்று சிணுங்கினாள்.

“பொம்பளைப் பிள்ளை அடக்க ஒடுக்கமா இருக்க வேண்டாம்? தூக்கத்துல கூட முழிப்பு இருக்கணும் டி. இப்படி துணி விலகுற மாதிரியா தூங்குவாங்க?”

“எனக்கு எப்படி தூங்கினாலும் எங்க தூங்கினாலும் துணி விலகும் தான். அதுக்கு தானே போர்வையை மூடி தூங்குறேன். அப்புறம் என்ன?”, என்று அறிவாளியாக கேட்டாள் வெண்மதி.

“போர்வை கிடைக்கலைன்னா என்ன டி பண்ணுவ?”, என்று மகளிடம் அவள் வம்பு பேச மீண்டும் “விசாலம்”, என அழைத்தார் குற்றாலம்.

“இந்த மனுஷன் கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுறாரா? சரி நீ எந்திச்சு குளிச்சிட்டு வா. காபி போட்டுத் தரேன்”, என்று சொல்லிச் சென்றாள்.

அன்னை சென்றதும் சிறு சிரிப்புடன் எழுந்து குளிக்கச் சென்றாள் வெண்மதி. குற்றாலம் விசாலம் தம்பதிக்கு இருக்கும் ஒரே ஒரு செல்ல மகள் தான் வெண்மதி. குற்றாலம் மகள் மேல் உயிரையே வைத்திருந்தார். அவளுக்கும் தந்தை என்றால் பிரியம் தான். ஆனால் அவர் தொழிலைத் தான் அவளுக்கு பிடிக்காது.

கட்டப் பஞ்சாயத்து, சில ஜாதிக் கொலைகள், அதிகாரக் கொலைகள் என செய்ய தயங்காதவர். சிறிய கூலிப் படையை வைத்து செயல்படுகிறார். அரசியல்வாதிகளும் பெரிய புள்ளிகளும் யாரையாவது போட்டுத் தள்ள வேண்டும் என்றால் குற்றாலத்தை தான் அணுகுவார்கள். இவரும் யார் என்று கூட பார்க்க மாட்டார். அவர்கள் பணம் கொடுத்தால் தலையை சீவி விட்டு சென்று கொண்டே இருப்பார். இத்தனைக்கும் இவருக்கும் செத்து போனவர்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது.

பணம் செழித்திருந்ததால் மகளுக்கு நகைகளை வாங்கிக் குவித்திருந்தார். ஊரில் ரைஸ் மில், மாவு மில் என தொடங்கி இருந்தார்.

அவர் செய்த கொலைகளால் எப்போதிருந்தாலும் அவருக்கு ஆபத்து உறுதி. அவர் தலைக்கு மேலே கத்தி எப்போதும் தொங்கிக் கொண்டே தான் இருக்கிறது. அதை பத்தி அவரிடம் யாரும் பேசி விட முடியாது.

மற்ற விஷயங்களில் எல்லாம் மனைவி மகள் மீது உயிராக இருப்பவர் தொழில் என்று வரும் போது மிருகமாகி விடுவார். அந்த  நேரத்தில் மகள் என்று கூட பார்க்க மாட்டர். அவர் அவருடைய அறையில் தொழில் விசயம் பேசும் போது ஒரு நாள் வெண்மதி அங்கே சென்று விட்டாள்.

அவளைக் கண்டதும் “போ வெளிய”, என்று அவர் கத்திய கத்தலில் பயந்து போனாள் வெண்மதி. அவ்வளவு தான் அன்றே அவளுக்கு காச்சல் வந்தது. அந்த அளவுக்கு குற்றாலம் மிருக குணம் கொண்டவர் என்றால் அவரின் மகள் பூஞ்சை மனம் கொண்டவள். காச்சல் வந்த மகளை சரியாக தூங்காமல் கண்ணின் மணி போல் அவர் பார்த்துக் கொண்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வெண்மதி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பிள்ளைகளுக்கு கணக்கு பாடம் எடுக்கிறாள். அங்கே மகள் வேலைக்குப் போவது குற்றாலத்துக்கு பிடிக்க வில்லை தான். ஆனால் மகள் ஒன்று கேட்டு அவரால் அதை மறுக்க முடியாவில்லை என்பது தான் உண்மை. அவள் கிளம்பி முடித்து அறையை விட்டு வெளியே வர மகளின் அழகில் மெய் மறந்து நின்றாள் விசாலம்.

“என்னைப் பாக்குறதை விட்டுட்டு சாப்பாடு போடு மா. ரொம்ப பசிக்குது. இன்னைக்கு என்ன சாப்பாடு? ஐ ஜாலி, பொங்கல் சட்னி, சாம்பார், வடை. இன்னைக்கு புல் கட்டு கட்டிட்டு கிளாசில் போய் தூங்கப் போறேன்”, என்று சொல்லிய படியே சாப்பிட அமர்ந்தாள்.

“அதெல்லாம் தூங்க மாட்ட. நல்லா சாப்பிடு”

“அப்பா சாப்பிட்டாரா மா?”

“அவர் அப்பவே சாப்பிட்டு கிளம்பிட்டார். நீ நல்லா சாப்பிடு டி”

“இந்த பொங்கல் கூட ஏதாவது ஸ்வீட் சாப்பிட்டா சூப்பரா இருக்கும்ல?”

“இந்த ஸ்வீட் பைத்தியம் எப்ப தான் உன்னை விட்டுப் போகுமா? உனக்கு பிடிக்கும்னு கேசரி செஞ்சேன். இரு எடுத்துட்டு வரேன்”

“அம்மான்னா அம்மா தான்”, என்று சிலாகித்தவள் அந்த பொங்கலை ரசித்து ருசித்து உண்ண ஆரம்பித்தாள்.

“ஏய் வேகமா சாப்பிடு டி. பஸ் போயிரும்”, என்று சொன்ன விசாலம் அவள் தட்டில் கேசரியை வைத்தாள்.

“பஸ் போனா போகுது? அப்பாவோட ஆட்கள் கார்ல கொண்டு போய் விடப் போறாங்க. இதெல்லாம் பெரிய விசயமா? நமக்கு சாப்பாடு தான் முக்கியம். கேசரில இன்னும் கொஞ்சம் முந்திரி போட்டுருக்கலாம்ல மா?”

“திண்ணிப் பண்டாரம். நீயெல்லாம் ஒரு டீச்சர்”, என்று சொல்லி மகளின் தலையில் கொட்டினாள் விசாலம்.

உணவை உண்டு முடித்தவள் கை கழுவி விட்டு பிரிட்ஜைத் திறந்து எதையோ தேடினாள். அங்கே அவள் தேடியது இல்லாததால் “அம்மா”, என்று கத்தினாள்.

“என்ன வெண்மதி இப்படி கத்துற? அமைதியா பேசிப் பழகு. பொம்பளைப் பிள்ளைக்கு அடக்கம் வேணும்”

“அதெல்லாம் இருக்க தான் செய்யுது. சரி மல்லிப்பூ எங்க காணும்?”

“நேத்து கனகம் மல்லிப்பூ கொண்டு வரலை டி. பிச்சிப் பூ தான் கொண்டு வந்தா. அதை எடுத்து வச்சிட்டு போ”

“ஏமா இப்படி பண்ணுற? எனக்கு மல்லிப் பூ வைக்கலைன்னா அந்த நாளே நல்லா இல்லாத மாதிரி இருக்கும்”

“அம்மா இன்னைக்கு வங்கி கட்டி வைக்கிறேன் டா. கனகு கொண்டு வரலைன்னா கூட நம்ம வேலுவை விட்டு டவுண்ல வாங்கிட்டு வரச் சொல்றேன். நம்ம ஊர் தோட்டத்துல கூட எல்லாம் பிச்சியும் முல்லையும் தான் பூத்திருக்கு. மல்லிகை சீசன் இல்லையோ என்னவோ?”

“அம்மா ஏன் மா? எனக்கு வேணும்”, என்று சிணுங்கினாள் வெண்மதி.

காதல் வெடிக்கும்….

Advertisement