Advertisement

தார தப்பட்டை முழங்க, மாலை மற்றும் பூக்களின் வாசமும், ஊது பத்தியின் நறுமணமும் அந்த இடத்தை நிறைத்திருக்க பெண்கள் அனைவரும் குழுமி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

மற்ற அனைவரின் முகமும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. வீட்டின் நடுக் கூடத்தில் கண்ணாடிப் பேழைக்குள் படுத்திருந்தாள் வைஷ்ணவி.

அவளுக்கு வயது இருபத்தி ஐந்து தான். சாகும் வயதா இது? அவளைப் பெற்ற அன்னை, அவளது உறவினர்கள் அனைவரும் கதறிக் கொண்டிருக்க அவளைக் கட்டிய கணவனும் சரி அவளைப் பெற்ற தந்தையும் சரி ஒரு பொட்டு கண்ணீர் கூட சிந்தாமல் இறுகி நின்றார்கள்.

சரவணனை கணவன் முறை செய்யச் சொல்ல முடியாது என்று மறுத்து விட்டான். அவள் அவனுக்கு மனைவி என்ற ஸ்தானத்தில் இல்லாத போது அதை எப்படி அவன் செய்வான்? அவன் கட்டிய தாலி கூட அவள் கழுத்தில் இல்லாத போது அவனுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

வைஷ்ணவியின் முகத்தைப் பார்த்த சரவணன் “இதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்?”, என்று எண்ணி நொந்து போய் நின்றான்.

“கடைசியா முகத்தை பாக்குறவங்க பாத்துக்கோங்கப்பா”, என்று சொல்லப் பட சரவணன் நின்ற இடத்தை விட்டு அசையவே இல்லை.

“தூங்குங்கப்பா… நேரம் ஆச்சு”, என்ற குரல்களுக்கிடையே “சரவணா நீ தான் பா இறுதி காரியம் எல்லாம் செய்யனும். என்ன தான் இருந்தாலும்…”, என்று ஒரு பெரியவர் சொல்ல கல் போல் இறுகி நின்றான்.

அவன் மன நிலை உணர்ந்தவர்களுக்கு அவனைக் கட்டாயப் படுத்த முடியவில்லை. என்ன செய்ய என்று தெரியாமல் அங்கே அமைதி நிலவ “நானே செய்யுறேன். வேற வழி கிடையாது. சரவணனை யாரும் கஷ்டப் படுத்தக் கூடாது”, என்று சொன்னார் மூர்த்தி. வெற்றிவேலும் அவர்களுடன் இடுகாட்டுக்கு சென்றார். என்ன இருந்தாலும் அவர் தூக்கி வளர்த்த மருமகள் ஆயிற்றே.

வைஷ்ணவியின் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. சரவணன் இடுகாட்டுக்கு கூட செல்லாமல் தாயுடன் வீட்டுக்கு வந்து விட்டான். ஏதோ நினைவில் அவன் வீட்டின் உள்ளே செல்லப் போக “ஏய் இரு டா. தலை முழுகாம உள்ள போக கூடாது”, என்று சொல்லி அவனை கிணத்தடிக்கு அழைத்துச் சென்று தண்ணீரை இறைத்து குடம் குடமாக அவன் தலையில் ஊற்றினாள்.

பின் கொடியில் கிடந்த துண்டைக் காட்டி “அதை எடுத்து கட்டிட்டு ரூமுக்கு போய் இன்னொரு தடவை குளி சரவணா. இன்னையோட உன்னைப் பிடிச்ச பீடை எல்லாம் ஒழியட்டும்”, என்று வசந்தா சொல்ல தாய் சொன்ன படியே செய்தான்.

அங்கே இடுகட்டுக்கு சென்றதும் வேலைகள் மளமளவென்று நடந்தது. எப்படி எல்லாமோ வாழ வேண்டிய வைஷ்ணவி ஒரு குழிக்குள் புதைந்து போனாள். இது தான் மனித வாழ்க்கையோ? வாழப் போகும் சிறிது நாட்களுக்குள் எதற்காக இந்த ஆட்டம்? எப்படியும் ஒரு நாள் ஆட்டம் அடங்க தானே செய்யும்?

மகளுக்கு இறுதிக் காரியங்களை நல்ல முறையில் செய்த மூர்த்திக்கு வைஷ்ணவியின் இறப்பில் ஏதோ ஒரு சின்ன சந்தோஷம் மனதில் எழுந்தது. யாராவது கேட்டால் கூட மகள் இறந்து விட்டாள் என்று சொல்லி விடலாம் என்ற நிம்மதி வந்தது. ஆனால் அவள் வீட்டில் இருந்தால் தினம் தினம் அவளைக் கண்டு அவரால் நிம்மதியாக இருந்திருக்க முடியாது அல்லவா?

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து தான் சரவணன் அந்த மெயிலைப் பார்த்தான். அதைப் படித்தவனுக்கு மனம் பாரமாகிப் போனது. பெண் பிள்ளைகளை சரியாக வளர்த்தாலும் சில விஷயங்கள் அவர்களை தடுமாற வைக்கிறது என்று புரிந்தது.

“நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லனும்னு எதிர் பாக்குறியே வைஷ்ணவி? எனக்கு உண்மையிலே உன் மேல காதல்ன்னு ஒண்ணு வந்திருந்தா தானே அதை சொல்லி இருக்க முடியும்? காதல், கல்யாணம்னு சொன்னாலே என் மனக்கண்ணில் ஒரு உருவம் மின்னி மறைவது உனக்கு தெரியுமா?”, என்று வேதனையாக எண்ணிக் கொண்டான். கூடவே வைஷ்ணவியின் இறப்பு அவளுக்கு விடுதலை தான் என்று அவனுக்குத் தோன்றியது.

வைஷ்ணவி இறந்து ஒரு வாரம் கழிந்திருந்தது. இப்போது சரவணன் காலேஜுக்கு கிளாஸ் எடுக்க சென்றான். ஆனாலும் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பரிதாபப் பார்வை அவன் மீது விழத் தான் செய்தது.

ஆனாலும் அதை எல்லாம் கடக்க முயன்றான். அதற்கு அடுத்த நாள் காலையில் அவன் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்க அங்கு வந்தார் மூர்த்தி.

“வாண்ணே”, என்றாள் வசந்தா.

“மாப்பிள்ளை என்ன செய்றான் தங்கச்சி?”

“காலேஜுக்கு கிளம்பிட்டு இருக்காண்ணே”

“பெரிய மாப்பிள்ளை எங்க?”

“வயலுக்கு போனார். ஆமா நீ என்ன காலைலே இங்க வந்துருக்க?”

“இல்லை மா… அது வந்து…”

“என்னண்ணே?”

“வைஷ்ணவிக்கு காரியம் செய்யணும்”, என்று அவர் தயக்கத்துடன் சொல்ல “அதுக்கு?”, என்று அடக்கப் பட்ட கோபத்தில் கேட்டாள் வசந்தா.

“உன் கோபம் புரியுது மா. ஆனா பழக்க வழக்கம்னு ஒண்ணு இருக்கே. செத்தும் அவ ஆத்மா நிம்மதி இல்லாம அலையனுமா? அதுக்கு தான் எல்லாரும் பாபநாசம் போறோம். நீங்க எல்லாரும் வறீங்களா?”

“நாங்க வரலைண்ணா. இதுக்கு என் வீட்டுக்காரரும் சம்மதிக்க மாட்டார். என் மகனும் அங்க வர மாட்டான்”

“சரி மா, நாங்க போய் தலை முழுகிட்டு வந்துறோம். நீங்களும் தாமிரபரணி ஆத்துலயாவது சீவலபேரி ஆத்துலயாவது போய் ஒரு முங்கு போட்டுருங்க. உங்களை பிடிச்ச பீடையும் ஒழியட்டும். இனியாவது என் சரவணன் மாப்பிள்ளை நல்லா இருக்கணும்”, என்று சொன்னவர் கையில் கிடந்த துண்டை தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்.

அவரையே பார்த்துக் கொண்டு வசந்தா நிற்க “என்ன மா அசையாம நிக்குற?”, என்று கேட்டான் சரவணன்.

“உன் மாமா வந்திருந்தார் டா”

“என்னவாம்?”

“அவளுக்கு திதி கொடுக்க பாபநாசம் போறாங்களாம். நம்மளைக் கூப்பிட வந்தார். நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்”

“நீங்களும் போயிட்டு வந்துருங்க மா. சித்தப்பா வீட்லயும் சொல்லிருங்க”

“என்ன டா சொல்ற?”

“எல்லாம் முடிஞ்சிருச்சு. இனி அவளுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. அதனால வைஷ்ணவியை உங்க அண்ணன் பொண்ணா நினைச்சு இதுல கலந்துக்கோங்க”

“அப்ப நீ?”

“நான் வரலை. ஆனா நீங்க போங்க. அப்பா கிட்ட சொல்லுங்க. சித்தப்பா கிட்டயும் சொல்லுங்க. பூர்ணியையும் கூட்டிட்டு போங்க. நான் நம்ம ஆத்துலயே நாளைக்கு முங்கிக்கிறேன்”

“சரிப்பா”, என்று சொன்ன வசந்தா வெற்றிவேலுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லி விட்டு மூர்த்தியிடமும் தாங்கள் வருவதாகச் சொன்னார்.

அன்று பூர்ணிமாவும் அவர்களுடன் சென்றாள். அதனால் அவள் பள்ளிக்கு வராததால் வெண்மதி அவளை அழைத்தாள். அதை எடுத்த பூர்ணிமா “சொல்லு டி”, என்றாள்.

“பஸ் கிளம்பிருச்சு பூர்ணி. நீ இன்னைக்கு ஸ்கூல்க்கு வரலையா?”

“நான் இன்னைக்கு வரலை டி. லீவ் சொல்லிட்டேன்”

“என்ன ஆச்சு?”

அருகில் ஆட்கள் எல்லாம் இருந்ததால் வைஷ்ணவி பற்றி பேச விரும்பாமல் “திங்கள் கிழமை சொல்றேன் டி”, என்றாள்.

“சரி டி”, என்று சொல்லி போனை வைத்தாள் வெண்மதி.

திங்கள் கிழமை வந்ததும் “ஏன் டி வெள்ளிக்கிழமை ஸ்கூலுக்கு வரலை?”, என்று கேட்டாள் வெண்மதி.

“வைஷுக்கு திதி கொடுக்க பாபநாசம் போனோம் டி. போகணுமா வேண்டாமான்னு யோசிச்சிட்டே இருந்தாங்களா. அதான் உன் கிட்ட சொல்லலை. மாமா அத்தை எல்லாம் போக மாட்டேன்னு தான் சொன்னாங்க. ஆனா அண்ணா தான் அவ செத்ததுக்கு அப்புறமாவது அவளுக்கு நிம்மதி கிடைக்கட்டும்னு சொல்லி எல்லாரையும் போகச் சொன்னாங்க. என் பக்கத்துல தான் வைஷ்ணவியோட அம்மா உக்காந்திருந்தாங்க. அதான் உனக்கு மெஸ்ஸேஜ் கூட அனுப்பலை”

“உங்க கூட அவங்க வந்தாங்களா டி?”

“யாரு? அண்ணனா?”

“ஆமா”

“இல்லை, ஈமச் சடங்கையே செய்ய மாட்டேன்னு சொன்னவன் எப்படி அதுக்கு வரப் போறான்?”

“பாவம் தான். அவங்க வாழ்க்கைல என்ன தான் நடந்துச்சு டி? ஊர்ல நிறைய பேச்சு அடி படுது. அந்த பொண்ணு இறந்ததுல இருந்து உன் கிட்டயும் என்னால சரியா பேச முடியலை. வைஷ்ணவி உங்க அண்ணனைப் பிடிக்காம தானே ஓடிட்டா? அப்படி ஓடினவ எதுக்கு திரும்பி வரணும்? ஊருக்காரங்க பேசுறதுல எது உண்மை?”

வெண்மதி அப்படிக் கேட்டதும் தனக்கு தெரிந்ததையும் வைஷ்ணவி பற்றியும் அவள் அனுப்பிய மெயிலைப் பற்றியும் சொன்னாள் பூர்ணிமா.

Advertisement