Advertisement

அத்தியாயம் 4

காதலில் விதி என்பது

உணர்வுகளைச் சுழற்றி அடிக்கும்

விளையாட்டாக திகழ்கிறது!!!

தனக்கு திருமணம் நடந்து விட்டது, தன்னை ஒருவன் மனைவியாக எண்ணிக் கொண்டு அவன் வாழ்க்கையை அடகு வைத்திருக்கிறான் என்றெல்லாம் அவள் மனதில் எழவே இல்லை. அவளை அன்போடும் பண்போடும் வளர்த்த பெற்றவர்களும் அவளுக்கு நினைவில் வரவில்லை. குட்டிமா, கண்ணு, செல்லம், வைஷு குட்டி என்ற அவர்களின் பாசமான அழைப்பும் அவளுக்கு மறந்து தான் விட்டது. அந்த நிமிடம் அவள் காதல், அவள் சந்தோஷம் மட்டுமே அவளுக்கு பெரியாக தெரிந்தது. உணர்ச்சியின் பிடியில் சிக்கியவளுக்கு எப்படி அறிவு வேலை செய்யும்?

அவனுடன் வாழ்ந்து முடித்தவள் அப்படியே நன்கு தூங்கிப் போனாள். இனி அவளுக்கு நிம்மதியான தூக்கமே கிடையாது என்று அவளுக்கு தெரிந்ததோ என்னவோ? அப்படி ஒரு தூக்கம். அடுத்த நாளே அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்று விட்டான் ரகு. அவளும் எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்போடு அவனுடன் சென்றாள்.

ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அவளைத் தங்க வைப்பான் என்று அவள் நினைக்க அவன் அழைத்துச் சென்றதோ ஒரு குடவுனுக்கு. அங்கே அவனுடைய நண்பர்கள் நான்கு பேர் இருக்க அதுவும் அவர்கள் இருந்த நிலை அவளுக்கு பயத்தைக் கொடுத்தது.

முழு போதையில் இருந்தார்கள் அவர்கள். “ரகு இங்க எதுக்கு வந்துருக்கோம்? பிளீஸ் இங்க இருந்து போவோம்”, என்று அவள் அவனுடைய சட்டைக் காலரைப் பற்ற அதை உதறியவன் “நாங்க ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்தா தனியா எல்லாம் அனுபவிக்க மாட்டோம். எல்லாரும் சேர்ந்து தான் எஞ்சாய் பண்ணுவோம்”, என்று அவன் வெக்கமே இல்லாமல் சொல்ல அதிர்ந்து போனாள்.

“ரகு”, என்று அவள் அதிர்வாக அழைக்க அவள் அதிர்ச்சியைக் கூட கவனிக்காமல் ஒருவன் அவளை இழுத்து அனைத்து அவளை தரையில் சரித்து அவள் மேல் படர்ந்தான்.

அந்த காட்டானின் முன் அவளுடைய மறுப்புகள் எல்லாம் காணாமல் போனது. அடுத்து வந்த ஒவ்வொரு நிமிடமும் அவள் அனுபவித்தவை அனைத்தும் மரண வலிகள் தான்.

“என்னை கொன்னுருங்க டா… என்னை கொன்னுருங்க”, என்று பிதற்றியவளின் கண்களில் கண்ணீரும் அவள் உடலில் இருந்து ரத்தமும் வடிந்தது. அப்படியே அவள் மயங்கிச் சரிந்தாள்.

அடுத்து அவள் கண் விழித்துப் பார்க்கும் போது அவள் இருந்தது விபச்சார விடுதியில் தான். ரகு அவளை அங்கே விற்று விட்டுச் சென்றிருந்தான். அவளுடைய கண்ணீர், மறுப்புகள் எதுவுமே அங்கு செல்லுபடியாக வில்லை. தினம் ஒருவனுக்கு தன்னுடைய உடலை காணிக்கையாக்கினாள் அந்த பைத்தியக்காரி. அதற்கு பின்னர் தான் போலீசில் அவள் சிக்கியது. இப்போது பழைய படி அவளது வீட்டில் அவளுடைய அறையில் இருக்கிறாள். ஆனால் அவள் பழைய வைஷ்ணவி அல்லவே.

இப்போதைக்கு அவள் உடல் பல ஓநாய்களால் குதறப் பட்ட ஒரு சதைப் பிண்டம். அவளுடன் கூடியதில் எவனோ ஒருவனுடைய உயிரணு கூட அவள் கருவறையைச் சென்றிருக்கலாம். அவளுக்கே அவளை நினைத்து அருவருப்பாக இருந்தது.

இதை எல்லாம் எண்ணிய படியே தன்னுடைய அறையில் படுத்திருந்தவளுக்கு இதற்கு மேல் இந்த உலகத்தில் வாழ விருப்பமே இல்லை.

காதலும் செத்து விட்டது. அவளது உடலும் மனமும் கூட செத்து விட்டது. பெரியவர்களின் வெறுப்பையும் சந்தித்து, தாலி கட்டிய கணவனுக்கும் துரோகம் செய்து, ஊர்க்காரர்களிடையே அசிங்கப் பட்டு இன்னும் அவளால் எப்படி உயிர் வாழ முடியும்? சாகத் தயாராகி விட்டாள்.

சாவதற்கு முன் ஒரு முறை தாய் தந்தையைக் காண ஆசை வந்தது. அறையை விட்டு வெளியே வந்தாள். ஹாலில் இருந்த சோபாவில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார் மூர்த்தி.

“அப்பா”, என்று மெதுவாக அழைக்க அவளை நிமிர்ந்து பார்த்தவர் “ஏய், என்னை அப்படிக் கூப்பிடாதேன்னு சொன்னேன்ல? ஏய் மங்கை இங்க வாடி. இந்த சனியனை உள்ள போகச் சொல்லு”, என்று கத்தினார்.

அங்கே வந்த மங்கை “ஏன் டி இப்படி பண்ணுற? அவர் உயிரை எடுத்துறாத. தயவு செஞ்சு உன் ரூமுக்கு போ”, என்று சொல்ல இருவரின் முகத்தையும் பார்த்து மனதில் நிறைத்தவள் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டாள்.

டேபிள் மீதிருந்த லேப்டாப்பை எடுத்து தன்னுடைய மெயிலை ஓப்பன் செய்தவள் சரவணனுக்கு ஒரு நீண்ட மெயிலை அனுப்பினாள்.

“உன் கிட்ட மன்னிப்பு கேக்குற அருகதை எனக்கு இல்லை அத்தான். நான் இந்த உலகத்துல இருக்கவே கூடாது. காலேஜ் படிக்கிறப்ப ரகு என் கிட்ட காதலைச் சொன்னதும் நான் பூரிச்சு போயிட்டேன். அவன் மேல நான் உயிரையே வச்சிருந்தேன். அதனால தான் அப்பா கிட்ட கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். அவர் கேக்கலை. ரகுவைக் கொன்னுருவேன்னு மிரட்டினார். எனக்கு வேற வழி தெரியலை. கல்யாணம் முடிஞ்ச அப்புறமும் உன் கிட்ட இருந்து விலகிப் போக ரகு தான் காரணம். அது மட்டுமில்லாம உன்னை ஏமாத்துறோமேன்னு குற்ற உணர்ச்சியும் தான். நான் போனா நீ உனக்குனு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக்குவன்னு தான் நினைச்சேன். ஆனா உன்னோட மரியாதை எல்லாம் போகும்னு நான் யோசிக்கவே இல்லை. என்னை மன்னிச்சிரு அத்தான். ஆனா என் காதல் எல்லாம் செத்துப் போச்சு அத்தான்…. அவன் என்னை… எல்லாம் என்னோட பாவம்”

…..

“நீ ஏன் அத்தான் என் கிட்ட முன்னாடியே என்னை காதலிக்கிறேன்னு சொல்லலை? அப்படிச் சொல்லிருந்தா கண்டிப்பா என் மனசு இன்னொருத்தன் பின்னாடி போயிருக்காது. இந்த அப்பாவும் உன்னை தான் என்னோட புருசன்னு சொல்லி வளத்திருந்தா என்னோட கவனம் எல்லாம் உன் பக்கம் மட்டும் தான் இருந்துருக்கும். எல்லாமே தலைகீழா மாறிருச்சுல்ல? நீ நல்லவன் அத்தான். உனக்கு கண்டிப்பா நல்ல வாழ்க்கை கிடைக்கும். என்னோட பாவத்தோட நிழல் கூட உன் மேல பதியக் கூடாது அத்தான். நீ இருக்குற இதே ஊர்ல நான் இருந்தேன்னு வையேன் அது என்னைக்கு இருந்தாலும் உனக்கு பிரச்சனை தான். மறுபடியும் இந்த வீட்ல இருந்து வெளிய போய் நான் சீரழிய விரும்பல. அதனால என்னோட முடிவு என்னோட சாவு தான். நான் செத்தா தான் உன் மேல பதிஞ்ச களங்கம் எல்லாம் உன்னை விட்டு மறையும். நான் போறேன் அத்தான். ஒரெடியா போறேன். உன் மனசுக்கு பிடிச்ச பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ அத்தான். அப்புறம் நான் உண்மையான காதலால மட்டும் தான் அத்தான் உன்னை விட்டுட்டு அவன் கூட போனேன். மத்தவங்க சொல்ற மாதிரி ஆம்பளை சுகத்துக்கு அலைஞ்சு இல்லை. என்னை நம்புற தானே? நான் தப்பான ஆளைக் காதலிச்சிட்டேன் அத்தான். ஆனா நான் தப்பானவ இல்லை. நீயும் என்னை அசிங்கம் பிடிச்சவளா நினைச்சு வெறுத்துறாத அத்தான். முடிஞ்சா என்னை மன்னிச்சிரு அத்தான். நான் போறேன்”, என்று எழுதி அவனுக்கு அனுப்பி வைத்தாள்.

பின் பேப்பரை எடுத்து “அப்பா அம்மா என்னை மன்னிச்சிருங்க. என்னால இந்த உலகத்துல வாழ முடியாது. நான் வாழவே தகுதி இல்லாதவ. அதனால இந்த உலகத்தை விட்டே போறேன். அத்தை மாமா நீங்களும் முடிஞ்சா என்னை மன்னிச்சிருங்க. சரவணன் அத்தான் உங்க வாழ்க்கையை நாசம் பண்ணிட்டோம்னு குற்ற உணர்வு என்னை அறுக்குது. நீங்க ஒரு நல்ல வாழ்க்கையை வாழ ஆரம்பிச்ச பிறகு தான் என் ஆத்மா சாந்தி அடையும். நான் போறேன். இந்த உலகத்தை விட்டே போறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இப்படிக்கு வைஷ்ணவி”, என்று எழுதியவள் அடுத்த நொடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

அடுத்த நாள் தான் அவளது அறைக் கதவைத் தட்டினாள் மங்கை. அது திறக்காததால் கதவை உடைத்தார்கள். அவள் இருந்த நிலையைக் கண்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள். போலிஸ்க்கு தகவல் சொல்லப் பட்டது. அவளது கடிதம், மெயில், பின் கதவு உள் பக்கமாக தாழ் போட்டிருந்தது எல்லாம் சேர்ந்து அது தற்கொலை தான் என்று முடிவு செய்தார்கள்.

இறுதிச் சடங்குக்கான எல்லா காரியங்களும் ஆரம்பித்தது. விஷயம் கேள்விப்பட்டு ஊரில் உள்ள அனைவரும் வந்து விட்டார்கள். வெற்றிவேல் குடும்பமும் சக்திவேல் குடும்பமும் அங்கே வந்தது. சரவணனும் அங்கே வந்தான்.  நல்ல காரியத்துக்கு போக வில்லை என்றாலும் கெட்ட காரியத்துக்கு போக வேண்டுமே?

Advertisement