Advertisement

அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றதும் மங்கை அவளை அடி விளாசி விட்டாள். அவள் ஆத்திரம் தீரும் மட்டும் அடித்து அவளை கேக்க கூடாத வார்த்தை எல்லாம் கேட்டாள். மங்கைக்கு எப்போதும் கெட்ட வாய் சரளமாக வரும். ஆனால் இன்று பெத்த மகளையே கண்ட படி பேச வேண்டிய நிலைமை வந்தது. அனைத்தையும் அமைதியாக வாங்கிக் கொண்டாள் வைஷ்ணவி.

அன்று மாலை பஞ்சாயத்து கூடி இருக்க ஊர் மக்களும் கூடி இருந்தார்கள்.

“சுத்தி வளைச்சு பேச விரும்பலை சித்தப்பா. என் அண்ணன் மகளுக்கும் என் மகனுக்கும் சரி பட்டு வராது. அதனால இந்த கல்யாணத்தை வெட்டி விட்டுருங்க”, என்றாள் வசந்தா.

“நடந்த விசயங்களை எல்லாம் கேள்விப் பட்டோம் மா. ஏப்பா சரவணா, நீ என்ன சொல்ற? நீ தான் பாதிக்கப் பட்டவன்”, என்று சரவணனிடம் கேட்டார் ஊர் பெரியவர்.

“இந்த உறவு வேண்டாங்க ஐயா? இதை இன்னையோட முறிச்சிக்கலாம்”, என்றான் சரவணன்.

“ஏப்பா மூர்த்தி நீ என்ன சொல்ற?”

“அவங்க சொன்னதுக்கு சம்மதிக்கிறேன் சித்தப்பா? இந்த சனியனால தரந்தாழ்ந்து போய்ட்டோம். ஊர் மரியாதையும் சேர்த்து கெடுத்ததுக்கு என்னை மன்னிச்சிருங்க. என் தங்கச்சி மகன் நல்லா இருக்கணும். அதை கெடுத்து பெரிய பாவம் செஞ்சிட்டேன். அதுக்காக இந்த ஊர் சனம் முன்னாடி நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். இந்த கல்யாணத்தை வெட்டி விட்டுருங்க”, என்றார் மூர்த்தி.

“ஏமா, நீ என்ன சொல்ற? நீ பேசுறதுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கணும்ல?”, என்று வைஷ்ணவியிடம் கேட்டார்.

“நல்ல வாழ்க்கையை புரிஞ்சிக்காம என் அத்தானை நான் அசிங்க படுத்திட்டு போயிட்டேன். அவர் கிட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு அருகதை இல்லை. இருந்தாலும் கேக்குறேன். என்னை மன்னிச்சிருங்க. இதுக்கு மேல எனக்கு சொல்றதுக்கு எதுவும் இல்லை”, என்று சொன்னாள் வைஷ்ணவி.

அதற்கு பின் ஊரே ஒன்று கூடி அந்த திருமணத்தை முறிவு செய்தார்கள். இனி இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதி வாங்கப் பட அவள் முகத்தைக் கூட பார்க்காமல் சென்று விட்டான் சரவணன்.

வீட்டுக்கு சென்றதுமே “ஏங்க நாம வசந்தா கிட்ட பேசிப் பாப்போமா?  என்ன இருந்தாலும் பொம்பளை பிள்ளை வாழ்க்கைங்க. நாம எல்லாம் ஒரே குடும்பம் தானே? அவங்க நம்ம மகளை மன்னிச்சு ஏத்துக்க மாட்டாங்களா? இவளை எப்படி நாம இனி கரை சேக்க முடியும்?”, என்று கேட்டாள் மங்கை. அவளது தாயுள்ளம் அப்படிக் கேட்க வைத்தது.

“இப்படிக் கேட்க உனக்கு அசிங்கமா இல்லையா டி? இந்த கேடு கெட்டவளை மறுபடியும் அங்க அனுப்பி அவங்க உயிரை மொத்தமா குடிக்க சொல்றியா?”, என்று கேட்டார் மூர்த்தி.

“என்ன தான் இருந்தாலும் வைஷ்ணவி நம்ம பெத்த பொண்ணுங்க”

“சரி டி, நான் தங்கச்சி கிட்டயும் மாப்பிள்ளை கிட்டயும் பேசுறேன். ஆனா இந்த தறுதலை கிட்ட கேளு. ஓடிப் போனவன் கூட வாழ்ந்தாளான்னு”, என்று கேட்க இருவரும் அவளைப் பார்க்க அவள் தலை குனிந்தாள். அதுவே சொன்னது அவள் தவறை.

“பாத்தியா உன் பொண்ணோட லட்சணம். வீட்ல இத்தனை பேரை கலங்கடிச்சுட்டு போயிருக்கோம்னு மனசுல உறைக்காம கண்டவன் கூட படுத்து எந்திரிச்சு வந்துருக்கா. அதுவும் ஒருத்தன் கூட இல்லை, பல பேர் கூட. இந்த அசிங்கம் புடிச்சவளுக்காக நான் போய் அவங்க வீட்ல பேசனுமா? அதுக்கு நான் நாண்டு கிட்டு செத்துறலாம். ஆனா நான் சாக மாட்டேன் டி. ஒரு நல்ல பையன் வாழ்க்கையை கெடுத்து அவன் பாவத்தை தலையில வாங்கிக் கிட்டேன். அவனுக்கு ஒரு நல்லது செய்யாம செத்தா சாவு கூட  எனக்கு நிம்மதியை தராது. நல்லதா போச்சு ஒத்த பிள்ளையோட நிறுத்தினோம். இல்லைன்னா அதுவும் கண்டதை தான் மேயப் போயிருக்கும். இனி இந்த சனியனை என் கண்ணு முன்னாடி இருக்க வேண்டாம்னு சொல்லு. அவ ரூமை விட்டு வெளிய வரக் கூடாது. நீ அவளுக்கு சாப்பாடு அவ ரூமுக்கே போய் தான் கொடுக்கணும். அவ வீடு முழுக்க அலைஞ்சிட்டு இருந்தா நான் மனுசனா இருக்க மாட்டேன். ஒரு மூலையில் தான் கிடக்கணும். இல்லைன்னா ஒரெடியா போய்ச் சேரச் சொல்லு. தலை முழுகிருவேன். அது தான் எனக்கு ஆறுதலா இருக்கும்”, என்று சொல்லி விட்டுச் சென்றார் மூர்த்தி. மங்கையும் மகளிடம் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள்.

விரக்தியுடன் தன்னுடைய அறைக்குச் சென்றாள் வைஷ்ணவி. தான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று இப்போது அவளுக்கு புரிந்தது. அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். மகளுக்காக அனைத்தையும் வாங்கிப் போட்டிருந்தார் மூர்த்தி.

எதனால் புத்தி கெட்டுப் போய் அந்த ரகு பின்னால் சென்றாள்? காதல் அந்த அளவுக்கு அவள் கண்ணை மறைத்திருந்ததே? இப்போது அவளிடம் என்ன இருக்கிறது? அவள் மனதில் நிறைந்த காதல் இருக்கிறதா? பெண்ணுக்கு முக்கியமான கற்பு இருக்கிறதா? மனதில் நினைத்தவனுடன் வாழ்ந்த திருப்தி தான் இருக்கிறதா? வீட்டில் இருந்து சென்றதை நினைத்துப் பார்த்தாள்.

அன்று சரவணன் மாடிக்கு தூங்கச் சென்றதும் தூங்காமல் விழித்திருந்தாள் வைஷ்ணவி. ஜெயிலில் இருந்து வெளியே வந்த ரகு அவளை அழைத்தான்.

“ரகு… ரகு… எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க? எனக்கு கல்யாணம் ஆகிருச்சு தெரியுமா? ஏன் இப்படி பண்ணுனீங்க?  நீங்க வருவீங்கன்னு ஒவ்வொரு நாளும் நான் காத்துட்டு இருக்கேன் தெரியுமா?”, என்று அழுதாள் வைஷ்ணவி.

“வைஷு சாரி டி, என்னால உன்னை தொடர்பு கொள்ளவே முடியலை. எனக்கு ஒரு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு. உன்னைப் பாக்க வரும் போது தான் லாரி மோதிருச்சு. கோமாக்கு போயிட்டேன். இப்ப தான் எனக்கு நினைவே வந்துச்சு. அதான் கூப்பிட்டேன்”, என்று கதை விட்டான் அவன்.

காதல் கொண்ட மனமும் அதை அப்படியே நம்பியது. “ஐயையோ, அப்படியா? இப்ப எப்படி இருக்கீங்க?”, என்று பதறித் துடித்தாள்.

“உன்னை இழந்துட்டு நான் எப்படி சந்தோஷமா இருப்பேன் வைஷு? பேசாம என் கூட வந்துறியா டி? எனக்கு நீ இல்லாம இருக்க முடியாது”

“நீங்க என்னை கூப்பிட வந்துற மாட்டீங்களான்னு தான் என் உயிரையும் கற்பையும் காப்பாத்திட்டு இருக்கேன் ரகு”

“என்ன டி சொல்ற?”

“ஆமா, நான் இன்னும் அத்தான் கூட வாழவே ஆரம்பிக்கலை. ஏதோ நேரம் சரி இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஒரு வேளை அப்படி ஒரு சூழ்நிலை வந்தா கண்டிப்பா செத்துப் போயிருப்பேன். அதுக்குள்ள நீங்க கால் பண்ணிட்டீங்க? என்னை இங்க இருந்து கூட்டிட்டு போங்க ரகு”

“சரி டி. நீ என்ன பண்ணுற? சரியா பன்னிரெண்டு மணிக்கு உன்னோட ஊர் எல்லைக்கு வந்துரு. நான் உன்னைக் கூப்பிட வரேன்”

“கண்டிப்பா வந்துறேன்”

“அப்புறம் ஹாஸ்பிட்டல்ல இருந்ததுனால பணம் அதிகமா செலவாகிருச்சு வைஷு. உன் கிட்ட ஏதாவது பணம் இருக்குமா? நான் அப்புறமா திருப்பிக் கொடுத்துறேன். ஏன்னா வீடு பாக்கணும், அட்வான்ஸ், வாடகை, வீட்டுக்கு தேவையான ஜாமான், நம்ம கல்யாணச் செலவுன்னு எல்லாமே இருக்கு. அதான்”

“என் கிட்ட பணம் ஒரு ஐயாயிரம் தான் இருக்கு ரகு. ஆனா அப்பா போட்ட நகை இருக்கு”

“அப்படின்னா அதை எடுத்துட்டு வரியா? இப்போதைக்கு நிலைமை சரி இல்லை. அதனால தான் கேக்குறேன். ஆனா எனக்கே உன் நகையை கேக்க சங்கடமா தான் இருக்கு”

“எனக்கு நகையை விட நீங்க தான் முக்கியம் ரகு. எங்க அப்பா எனக்கு போட்ட நகை தானே? அது எனக்கு தான் சொந்தம். நான் எடுத்துட்டு வரேன்”, என்றாள்.

சொன்னது போல பன்னிரெண்டு மணிக்கு முன்னே ஊர் அடங்கியதும் லட்டர் எழுதி வைத்தவள் தன்னுடைய பேகை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். சொன்னது போல ரகு அவளை அழைக்க வந்து விட்டான். அவனுடன் அந்த ஊரில் இருந்து விடை பெற்றுச் செல்லும் போது ஏதோ இந்த உலகையே வென்ற பரவசம் அவளுக்கு வந்திருந்தது.

அவர்கள் நேராக போய் நின்றது ஒரு ஹோட்டலுக்கு தான். “இங்க எதுக்கு ரகு வந்துருக்கோம்?”, என்று கேட்டாள் வைஷ்ணவி.

“மணி இப்ப ரெண்டு டா. இந்த நேரத்துல நம்மளால எங்கயும் போக முடியாது. நாளைக்கு எல்லாம் முடிவு பண்ணலாம்”

“சரி ரகு”, என்று அவனுடன் சென்றாள். அறைக்குள் சென்றதும் அவள் கட்டிலில் படுக்க அவள் அருகே படுத்த ரகு அவள் இடையில் கை போட்டான்.

அதைக் கண்டு அவள் திகைத்து மறுக்க “நீ என்னை நம்பலையா டி?”, என்று கேட்டான் ரகு. அவன் மேல் இருந்த அதிகப் படியான காதலால் அவள் சம்மதித்தாலும் சரவணன் கட்டிய தாலி கழுத்தில் கிடக்க அவள் தயங்கினாள்.

“இது தானே உனக்கு குழப்பத்தைக் கொடுக்குது?”, என்று கேட்ட ரகு அடுத்த நொடி அந்த தாலியை அவள் தலை வழியே கழட்டி இருந்தான். உள்ளுக்குள் மனதை பிசையும் உணர்வு எழுந்தாலும் ரகுவின் பேச்சும் செய்கையும் அவனது அந்தரங்கமான வார்த்தைகளும் அவள் கவலையை துணி கொண்டு துடைத்தது. அவள் அனைவரையும் மறந்தாள். அவளையே மறந்தாள்.

காதல் வெடிக்கும்….

Advertisement