Advertisement

“அப்பா அவளைப் பாக்க பாவமா இருக்கு பா”, என்றான் சரவணன்.

“இதுல நாம தலையிட முடியாது சரவணா. சில விசயங்கல்ல இருந்து ஒதுங்கி போறது தான் நமக்கு நல்லது”, என்றார் வெற்றிவேல்.

வைஷ்ணவியின் கதறல் அதிகமாக கேட்க ஒரு கான்ஸ்டபிள் தான் வந்து மூர்த்தியை தடுத்து நிறுத்தினார்.

“விடுங்க சார், இதுக்கு மேல அடிச்சா அந்த பொண்ணு செத்துரும். முதல்ல இங்க உக்காருங்க. இன்ஸ்பெக்டர் இப்ப வந்துருவார்”, என்று சொல்லி அவரை அமர வைத்தார்.

“இவளைக் கொன்னா தான் என் ஆத்திரம் தீரும்”, என்ற படி மூர்த்தி அமர “அந்த பொண்ணே ரொம்ப நொந்து போய் வந்துருக்கு சார். அதுவும் இந்த பத்து நாள்ல அது அனுபவிக்காத வலி இல்லை. மாத்தி மாத்தி நிறைய பேர் அவளை சீரழிச்சிருக்காங்க. இப்ப அவளை கைது பண்ணினது கூட ஒரு விபச்சார விடுதில தான். ரகுன்னு ஒருத்தனை நம்பி ஓடினால்ல? அவன் இவளை அவ பிரண்ட்ஸ் கூட அனுபவிச்சிட்டு அந்த மாதிரி இடத்துல வித்துட்டு போய்ட்டான்”, என்று அவர் சொல்ல அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள்.

தங்கள் கைகளுக்குள் வளர்ந்த பெண்ணுக்கா இந்த நிலைமை என்று வெற்றிவேலுக்கு கூட வேதனையாக இருந்தது. மூர்த்தி கண்களில் கண்ணீர் அரும்பியது. “உன்னைப் பெத்ததுல ஒரு தகப்பன் என்னல்லாம் கேக்க கூடாதோ அதை எல்லாம் கேட்டுட்டேன். இப்ப நிம்மதியா டி உனக்கு?”, என்று மூர்த்தி கேட்க வைஷ்ணவியோ யாரையும் நிமிர்ந்து பார்க்க வில்லை.

சரவணனுக்கு கூட அந்த நிமிடம் அவள் மேல் பரிதாபம் தான் எழுந்தது? அனைவரையும் உதறி விட்டுச் சென்று நீ பெற்றது என்ன? என்று மானசீகமாக அவளிடம் கேள்வி கேட்டானே தவிர அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச அவன் தயாராக இல்லை.

அப்போது அங்கே வந்த இன்ஸ்பெக்டர் “இங்க சரவணன்…”, என்று கேள்வியாக இழுத்தார்.

“நான் தான் சார்”, என்றான்.

“வாங்க, இங்க உக்காருங்க. இவங்க….”, என்று மூர்த்தி மற்றும் வெற்றிவேலைப் பற்றிக் கேட்டார்.

“இது என்னோட அப்பா. அது வைஷ்ணவியோட அப்பா சார்”, என்றான் சரவணன்.

“எல்லாரும் உக்காருங்க”, என்று சொன்னவர் வைஷ்ணவியை ஒரு பார்வை பார்த்து விட்டு “அந்த ரகுங்குறவன் இந்த பொண்ணு கிட்ட இருந்த நகையை எல்லாம் பிடுங்கிட்டு விபசாரம் நடக்குற இடத்துல விட்டுட்டு போய்ட்டான். போலீஸ் ரைட் போன இடத்துல தான் பிடிச்சிருக்காங்க. திருநெல்வேலின்னு இந்த பொண்ணு ஊர் சொன்னதும் என் பிரண்டு தான் பாவப்பட்டு இந்த பொண்ணை இங்க அனுப்பி வச்சான்”, என்றார் இன்ஸ்பெக்டர்.

“அப்படியே இவளை ஜெயில்ல போடுங்க சார். எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க? விபச்சாரம் பண்ணுறவங்க கூட என்னைப் பொறுத்த வரைக்கும் நல்லவங்க தான். ஆனா இவ கேடு கெட்டவ சார். எங்க எல்லாரையும் அவமானப் படுத்திட்டு போனதுக்கு கடவுள் நல்ல கூலியா கொடுத்துட்டார். இனி இவ எங்களுக்கு வேண்டாம் சார்”, என்று சொன்னார் மூர்த்தி.

“உங்க கோபம் எனக்கு புரியுது சார். மிஸ்டர் சரவணன் இந்த விசயத்துல அதிகமா பாதிக்கப் பட்டது நீங்க தான். நீங்க என்ன சொல்றீங்க?”, என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“என்னைப் பொறுத்த வரைக்கும் இதுல சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை சார். எனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போனவளைப் பத்தி யோசிக்கிற அளவுக்கு என் மனசு பெருசு இல்லை சார். அதை அவளும் அவ அப்பாவும் பேசிக்கட்டும். நான் நீங்க கூப்பிட்டதுனால தான் வந்தேன்”, என்று கழண்டு கொண்டான் சரவணன்.

மூர்த்தி புறம் திரும்பிய இன்ஸ்பெக்டர் “இங்க பாருங்க சார், உங்க பொண்ணு பாக்க ரொம்ப இன்னொசண்ட்டா இருக்கா. அந்த கேஸ்ல கோர்ட் ஜெயில்னு போனா இவளை விபச்சாரின்னு முத்திரை குத்திருவாங்க. அவ வாழ்க்கையே வம்பா போயிருக்கும். இப்பவே அடி பட்டு மிதி பட்டு தான் வந்துருக்கா. இனி தப்பான வழில போக கூட அவ விரும்ப மாட்டா. அதனால வீட்டுக்கு அழைச்சிட்டு போய் புத்தி சொல்லுங்க. கொஞ்ச நாள் இந்த விஷயத்தை ஆறப் போட்டு அதுக்கப்புறம் என்ன செய்யணுமோ செய்யுங்க. இப்ப அவளை அழைச்சிட்டு போங்க”, என்று சொன்னவர் வைஷ்ணவி புறம் திரும்பினார்.

“ஏய் இங்க வா மா. இதுல கையெழுத்து போட்டுட்டு உங்க அப்பா கூட கிளம்பு. பெத்தவங்க பேச்சைக் கேட்டு நடக்காம காதல் கத்திரிக்காய்ன்னு கண்டவன் கூட போனா இது தான் நிலைமைன்னு இப்ப உனக்கு புரிஞ்சிருக்கும். அப்புறம் உனக்கு ஒரு நல்ல விஷயம் சொல்றேன். அந்த ரகுவை அரஸ்ட் பண்ணிட்டாங்களாம். உன்னை மாதிரி பல பெண்கள் வாழ்க்கையில அவனும் அவனோட நண்பர்களும் விளையாடிருக்காங்க. எல்லாரையும் பிடிச்சாச்சு”, என்று சொல்ல அவரை நிமிர்ந்து கூட பார்க்காமல் கையெழுத்திட்டாள். ஆனால் ரகு அரஸ்ட் ஆன விஷயம் அவளுக்கு சிறு நிம்மதியைக் கொடுத்தது மட்டும் நிஜம்.

சரவணன் வெளியே சென்று வண்டி அருகே நிற்க வெற்றிவேல் அங்கே வந்தார். அவருக்கு பின்னே மூர்த்தி வந்தார். அவர் பின்னே பூனை போல வந்து நின்ற வைஷ்ணவி “அப்பா”, என்று அழைக்க “எங்க டி என் பின்னாடி வர? உன்னைப் பாத்தாலே எனக்கு வெட்டிப் போடணும் போல இருக்கு. ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போய்டு”, என்று கத்தினார் மூர்த்தி.

பின் வெற்றிவேல் புறம் திரும்பிய வைஷ்ணவி “மாமா”, என்று அழைக்க “சீ என்னை அப்படிக் கூப்பிடாதே. உன்னைப் பாத்தாலே எனக்கு வெறுப்பா இருக்கு”, என்றார் வெற்றிவேல்.

அவள் அழுத படி இருக்க சரவணனுக்கு தான் பாவமாக இருந்தது. “மாமா, அவளை ஊருக்கு கூட்டிட்டு வா”, என்று மூர்த்தியிடம் சொன்னான்.

“என்ன விளையாடுறியா மாப்பிள்ளை? இவளால நாம பட்ட கஷ்டம் போதாதா?”, என்று மூர்த்தி கேட்க “வேற என்ன செய்ய சொல்ற? இப்படியே விட்டுட்டு வந்து மீதி இருக்குற என்னோட மானத்தையும் வாங்க போறியா? இவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா எல்லாரும் உன் பொண்ணுக்கு பிரச்சனைன்னு பேச மாட்டாங்க. சரவணன் பொண்டாட்டிக்கு பிரச்சனைன்னு தான் பேசுவாங்க. நான் இதுல இருந்து வெளிய வரணும். வேற எதுவும் பேசாம ஊருக்கு கூட்டிட்டு வா மாமா”, என்ற சரவணன் வண்டியை கிளப்பி “அப்பா ஏறுப்பா”, என்றதும் வெற்றிவேல் ஏறி அமர்ந்தார்.

வேறு வழியில்லாமல் வண்டியைக் கிளப்பிய மூர்த்தி “ஏறு டி சனியனே”, என்று சொன்னதும் மூர்த்தி பின்னே ஏறி அமர்ந்தவள் பழக்க தோசத்தில் அவர் தோளில் கையை வைக்க “அடச்சி, எடு கையை”, என்று அவர் கத்த பட்டென்று கையை விலக்கிக் கொண்டாள். தான் எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்று அவளுக்கு வேதனையாக இருந்தது.

சரவணன் மற்றும் வெற்றிவேல் இருவரும் வீட்டுக்கு சென்றதும் “எங்க போனீங்க ரெண்டு பேரும்? போகும் போது கேக்க கூடாதுன்னு தான் கேக்கலை”, என்று வசந்தா கேட்க எல்லாம் சொல்லி விட்டார் வெற்றிவேல்.

”தேவை தான், இன்னும் அவ சீரழிஞ்சிருக்கணும். சி பொண்ணா அவ? கடவுள் நல்ல கூலி கொடுத்துட்டார்”, என்று வசந்தா சொல்லும் போது அங்கே வந்தார்கள் மூர்த்தியும் வைஷ்ணவியும்.

அவர்களைக் கண்டு வெற்றிவேல் எரிச்சலுடன் நிற்க சரவணனுக்கு இதில் இருந்து எப்படி வெளியே வருவது என்று குழப்பமாக இருந்தது. அவளைக் கண்டு கொதித்துப் போன வசந்தா “அங்கயே நில்லு டி, மானங்கெட்ட சிறுக்கி. உன் கால் என் வீட்ல பட்டுச்சு காலை வெட்டிருவேன் வெட்டி. இவளை எதுக்குண்ணே இங்க கூட்டிட்டு வந்த? எங்கயாவது தொலைச்சு தலை முழுகு. இல்லைன்னா உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ”, என்று கத்தினாள்.

“என்னை மன்னிச்சிரு அத்தை. புத்தி கேட்டு போய் நடந்துக்கிட்டேன்”, என்று வைஷ்ணவி சொல்ல தெருவே வேடிக்கை பார்த்தது. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் மகனின் மானத்தைக் காப்பது மட்டும் கடமையாக தெரிய அவளை வாய்க்கு வந்த படி பேசிவிட்டாள் வசந்தா.

“எவன் கூடவோ போய் இப்படி ஏமாந்து வந்துருக்கியே? கடவுள் இருக்கான் டி. என்னோட ஒரு வார்த்தைக்கு கட்டுப் பட்டு உன் கழுத்துல தாலி கட்டினான் டி என் புள்ள? அவனை அசிங்க படுத்திட்டு போன நீ நல்லா இருந்துருவியா? அப்படின்னா நாம கும்பிடுற அத்தனை தெய்வங்கள் இருந்து என்னத்துக்கு? அண்ணே இவங்க கல்யாணத்தை நாம கவர்ன்மெண்ட்ல எந்த பதிவும் பண்ணலை. இன்னைக்கு நாட்டாமை கிட்ட சொல்லி பஞ்சாத்தைக் கூட்டி இந்த கல்யாணத்தை வெட்டி விட்டுறனும். இனி என் மகனுக்கும் இவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பஞ்சாயத்து முடிஞ்சதுக்கு அப்புறம் உன் மகளை நீ என்ன செய்வியோ செஞ்சிக்கோ. இப்ப இவளை இங்க இருந்து இழுத்துட்டு போ. இவளைப் பாக்கவே பிடிக்கலை”, என்று வசந்தா சொல்ல “சரி மா, நானே சாயங்காலம் பஞ்சாயத்தைக் கூட்டிறேன்”, என்று தங்கையிடம் சொன்ன மூர்த்தி “வா சனியனே. உன்னை பெத்ததுக்கு நாலு நாயைப் பெத்துருக்கலாம்”, என்று மகளைத் திட்டி விட்டு வண்டியைக் கிளப்பினார்.

Advertisement