Advertisement

அத்தியாயம் 3

உந்தன் பிரிவைக் கூட விதி

என்னும் முகமூடியில்

மறைக்க முயல்கிறேன்!!!

“நீங்க பேசுறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? உங்களுக்கு மட்டும் தான் ஆசை இருக்குமா? நான் என்ன உணர்வுகள் இல்லாத ஜடமா? இல்லை எனக்கும் என் புருசன்னு நினைப்பு இல்லாம போகுமா? சாயங்காலம் ஆறு மணிக்கு ஸ்கூல்ல இருந்து வந்து உங்க கிட்ட இருந்து கால் வரும் வரும்னு பாத்துட்டு பதினொரு மணிக்கு தான் தூங்குறேன். அவ்வளவு நேரம் வெட்டியா தான் இருக்கேன். அந்த நேரம் உங்க கிட்ட பேச எனக்கு எவ்வளவு ஆசையா இருக்கும்னு உங்களுக்கு தெரியுமா? எனக்கு பேச ஆசையா இருக்குனு அந்த நேரத்துல உங்களுக்கு போன் மேல போன் நான் போடட்டுமா? இல்லை நீங்க கால் எடுக்கலைன்னு உங்க கிட்ட சண்டை போடட்டுமா?”, என்று வேதனையாக கேட்டாள் பூர்ணி.

“அப்ப வேலை இருக்கும் பூர்ணி”, என்று குற்ற உணர்வுடன் சொன்னான் செந்தில். “எனக்கு தெரியுங்க. என்னால உங்க வேலையை புரிஞ்சிக்க முடியும். ஆனா நீங்க மட்டும் ஏன் என்னை புரிஞ்சிக்க மட்டுக்கீங்க? ஒவ்வொரு நாளும் கஷ்டப் பட்டு போறது எனக்கு தான் தெரியும். நீங்க ஈஸியா என் கூட வாழ்ந்துட்டு போய்ட்டீங்க? அதோட தாக்கம் எனக்கும் இருக்காதா? இன்னும் சொல்லப் போனா உங்களை விட எனக்கு தான் பீலிங்க்ஸ் அதிகம். போன் பேசினாலும் முத்தம் அது இதுன்னு பேசி என்னோட உணர்வுகளை தூண்டுறீங்க? அதுக்கு அப்புறம் நான்…. நீங்க இல்லாம கஷ்டப் படுறது எனக்கு தானே தெரியும்? ஆனா நீங்க ஈஸியா சொல்லிட்டீங்கல்ல”, என்று கேட்டாள். இத்தனை நாள் மனதில் இருந்த குமுறல் இன்று வெளியே வந்திருந்தது.

அதற்கு பிறகு தான் மனைவியின் நிலை புரிய “பூர்ணி சாரி டி”, என்றான் செந்தில்.

“உங்க சாரி யாருக்கு வேணும்? ஒழுங்கு மரியாதையா ஊருக்கு கிளம்பி வரப் பாருங்க சொல்லிட்டேன்”, என்று அவள் கடுப்பாகச் சொல்ல “மூணு வருஷ காண்ட்ராக்ட்ல வந்தேன் டி. இன்னும் ஆறு மாசம் மீதம் இருக்கு. அதுக்குள்ள வர முடியாது. அது மட்டுமில்ல. அங்க வந்தாலும் என்ன வேலை கிடைக்கும்? எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. ஆனா என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியாது டி”, என்றான்.

“தெரியுதுல்ல? நம்மளோட நிலைமை கொஞ்ச நாளுக்கு இப்படி தான் இருக்கும்னு உங்களுக்கும் புரியுது தானே? அது தெரிஞ்சு தான் நானும் பொறுமையா இருக்கேன். ஆனா இனி என்னால பொறுமையா இருக்க முடியாது. இன்னும் ஆறு மாசத்துல நீங்க இங்க இருக்கணும். நீங்க வேலைக்கு போனாலும் சரி போகலைன்னாலும் சரி. எனக்கு நீங்க வேணும். காண்ட்ராக்ட் முடிஞ்சதும் இங்க கிளம்பி வந்துருங்க. அதுக்கப்புறம் உங்க கிட்ட பேசலைன்னா நேர்ல வந்து என் கிட்ட சண்டை போடுங்க. எதுக்கு என் கிட்ட பேச மாட்டிக்கன்னு என் சங்கைப் பிடிச்சு கேளுங்க”

“சாரி டி, நிஜமாவே உன்னை ரொம்ப தேடுது டி. அதனால தான் அப்படி எல்லாம் பேசிட்டேன்”

“சரி விடுங்க, என்னாலயும் உங்களை புரிஞ்சிக்க முடியுது. ஏதோ கோபத்துல பேசிட்டேன், அத்தான்”

“விடு டி, நம்ம நிலைமை இப்படி ஆகிருச்சு. ஒண்ணே ஒண்ணு கேக்கவா?”, என்று கிசுகிசுப்பாக அவன் கேட்க அவன் குரலில் அவளுக்குள் எதிர்பார்ப்பு கிளர்ந்தது.

“என்ன? கேளுங்க”

“என்ன டிரஸ் போட்டுருக்க?”, என்று அவன் கேட்க அவளுக்கு சிரிப்பு வந்தது.

அவள் அமைதியாக இருக்க “சாரி டி, சரி நீ தூங்கு”, என்று அரை மனதாக சொன்னான். அவன் மனது அவளுக்கு அப்பட்டமாக புரிய “என்ன டிரஸ் போட்டுருக்கேன்னு பாக்க வீடியோ கால் வாங்க”, என்றாள்.

பூர்ணி”, என்று அவன் குரல் குழைந்து வர அவள் உடல் சிலிர்த்தது. அவன் வீடியோ காலில் அழைக்க இருவரும் முகம் பார்த்து உரையாட ஆரம்பித்தார்கள். அந்த உரையாடலில், காதல், தவிப்பு, தாகம், ஏக்கம், உணர்வுகள் என அனைத்துமே வெடித்து கிளம்பியது.

விடியலில் ஐந்து மணிக்கு தான் அவளை தூங்க விட்டான் செந்தில். அடுத்த நாள் சிவந்த கண்களுடன் வந்த பூர்ணிமாவைக் கண்டு சிரித்து விட்டாள் வெண்மதி.

“என்ன டி அண்ணா உன்னை தூங்க விடலையா?”, என்று கேட்க “ஆமா டி, ரொம்ப இம்ஸையா இருக்கு”, என்று சொல்ல “கொஞ்ச நாள் தானே? அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”, என்றாள். சிறிது நேரத்தில் அவள் தோளிலே சாய்ந்து தூங்கி விட்டாள் பூர்ணிமா.

எப்போதும் போல அன்றும் சரவணன் அறைக்குள்ளே ஓய்ந்திருக்க காலேஜில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

நடத்த வேண்டிய கிளாஸ் இருப்பதாக சொல்ல நாளை கட்டாயம் வருவதாக சொல்லி போனை வைத்தான். அப்போது மீண்டும் அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

யாரென்று தெரியாமல் எடுத்து பேசினான். அவனுக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ யாரு?”, என்று சரவணன் கேட்க “நான் மானூர் இன்ஸ்பெக்டர் பேசுறேன். நீங்க சரவணன் தானே?”, என்று கேட்டார் அவர்.

குழப்பத்தில் புருவம் உயர்த்தியவன் “ஆமா சார், சொல்லுங்க”, என்றான்.

“கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா?”

“கண்டிப்பா வரேன் சார், ஆனா என்ன விசயம்னு தெரிஞ்சா நல்லா இருக்கும்”

“வைஷ்ணவி உங்க மனைவி தானே?”, என்று அவர் கேட்க அவனுக்குள் எரிந்தது. என்ன சொல்ல என்று தெரியாமல் சரவணன் அமைதியாக இருக்க “அந்த பொண்ணு இப்ப இங்க தான் இருக்கு. நீங்க கொஞ்சம் நேர்ல வாங்க. பேசிக்கலாம்”, என்றார் அவர்.

“சரி சார், வரேன்”, என்று சொல்லி போனை வைத்தவனுக்கு எரிச்சலாக வந்தது. அவளை சந்திக்க அவனுக்கு விருப்பமே இல்லை. ஆனாலும் அவள் எதற்கு போலீஸ் ஸ்டேஷன் சென்றாள் என்று கேள்வி பிறந்தது. உடனே கீழே வந்தவன் தந்தையை தேடினான். வெற்றிவேல் வரவே “அப்பா மானுர்ல இருந்து இன்ஸ்பெக்டர் பேசினார். வைஷ்ணவி அங்க தான் இருக்காளாம். என்னை வரச் சொன்னார்”, என்றான்.

“இன்னும் அவளுக்கு என்ன தான் வேணுமாம்? எதுக்கு உன் நம்பர் கொடுத்தா?”

“தெரியலை பா”

“அவ வீட்ல போட்ட நகையை அள்ளிட்டு போனது பத்தாதுன்னு உன் கிட்ட இருந்தும் பணம் கரக்க பாக்குறாளா? இன்னைக்கு அவளா நாமளான்னு பாக்கலாம் டா. சரி நீ உன் மாமாவுக்கு சொல்லு. அவரே வந்து அவர் மக கிட்ட பேசட்டும். நான் சட்டையை மாட்டிட்டு வரேன்”, என்றார். உடனே மூர்த்தியை அழைத்தான்.

“மாப்பிளை”, என்று அவர் சந்தோஷமாக பேச “உடனே மானுர் ஸ்டேஷன் வா மாமா”, என்று சொல்லி போனை வைத்தான். அவருக்கு ஏன் என்று தெரியாததால் குழப்பமாக கிளம்பினார்.

முதலில் வந்த மூர்த்தி என்ன விவரம் என்று தெரியாமல் ஸ்டேஷன் வெளியே இருந்த மரத்தடியில் நின்றார். அப்போது வெற்றிவேல் மற்றும் சரவணன் இருவரும் வந்தார்கள். வெற்றிவேலை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தார் மூர்த்தி.

“இப்ப தலை குனிஞ்சு என்ன மச்சான் செய்ய? பொண்ணுங்களை நல்ல முறையில வளக்கணும். இல்லைன்னா இப்படி தான்”, என்றார் வெற்றிவேல்.

“அப்பா விடுங்க, அவர் என்ன பண்ணுவார்?”, என்று சரவணன் கேட்க “என்னை மன்னிச்சிரு சரவணா”, என்றார் மூர்த்தி.

“இப்ப மன்னிப்பு கேட்டு எதுவும் ஆகப் போறது இல்லை மச்சான். இப்ப எதுக்கு இங்க வந்துருக்கோம் தெரியுமா? உங்க மக உள்ள தான் இருக்காளாம். எதுக்கு நம்மளை இங்க வர வச்சிருக்கான்னு தெரியலை. அவ என்ன பிரச்சனை பண்ணினாலும் நீங்க என்ன செய்யனுமோ செஞ்சிக்கோங்க. ஆனா எங்க வீட்டுக்கும் உங்க பொண்ணுக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது. அதை அவ கிட்ட எழுதி வாங்க தான் நாங்க வந்தோம்,. அதை மட்டும் மனசுல வச்சிக்கோங்க”, என்று சொன்ன வெற்றிவேல் மகனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். மூர்த்தியும் அவர்களுடன் சென்றார்.

ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தாள் வைஷ்ணவி. இந்த பத்து நாட்களில் ஆளே மாறிப் போயிருந்தாள். முகத்தில் ஆங்காங்கே காயத்துடனும் லேசான கிழந்த சேலையைக் கட்டிக் கொண்டு எந்த நகையும் இல்லாமல் மூழி போல இருக்க அவளைக் கண்டு சரவணன் மற்றும் வெற்றிவேல் இருவரும் அதிர்ந்து விட்டார்கள். ஆனால் மூர்த்தியோ அடுத்த நொடி அவள் அருகே பாய்ந்து சென்றவர் அவளை இழுத்து போட்டு அடி பின்னி விட்டார்.

வெற்றிவேல் மற்றும் சரவணன் இருவரும் அதை அமைதியாக வேடிக்கை பார்க்க வைஷ்ணவியோ “அப்பா வலிக்குது பா. அடிக்காதப்பா”, என்று கதறினாள். அவள் கதறலைக் கேட்டு சரவணன் மூர்த்தியை தடுக்க போக அவன் கையை பிடித்து தன்னுடனே நிறுத்திக் கொண்டார் வெற்றிவேல்.

Advertisement