Advertisement

அத்தியாயம் 20

அகிலத்தையே வென்று

விடுவேன் உந்தன் பார்வை

என் மீது பட்டால்!!!

வளைகாப்பு அன்று எல்லா உறவினர்களும் வந்திருந்தார்கள். பெற்றோர்கள் இறந்த போது செந்திலை தனியே விட்டுச் சென்ற அவனது உறவினர்கள் கூட வந்திருந்தார்கள். அவர்களை அழைக்க மாட்டேன் என்று தான் செந்தில் சொன்னான். அவனை கை கழுவி விட்டுச் சென்றவர்களின் மீது அவனுக்கு துளி கூட நல்ல அபிப்பிராயம் கிடையாது. 

ஆனால் “சொந்தம் விட்டுப் போகக் கூடாது மாப்பிள்ளை. ஒரு நாள் உங்க சித்தப்பா எங்களை எல்லாம் செந்தில் கண்டுக்க மாட்டிக்கான்னு வருத்தப் பட்டார். அதனால எல்லாரையும் கூப்பிடுங்க மாப்பிள்ளை”, என்று வெற்றிவேல் சொன்னதால் தான் அவர்களை வரச் சொல்லி இருந்தான்.

பூர்ணிமா முழு அலங்காரத்தில் இருக்க அவள் முகம் சந்தோசத்தில் பூரித்து இருந்தது. செந்திலும் பட்டு வேஷ்டி சட்டையில் அழகாக  இருந்தான். சாந்தியும் வசந்தாவும் ஏழு வகை கலவை சாதத்தை தயார் செய்து எடுத்து வந்திருந்தார்கள். வேறு சாப்பாடை சரவணன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தான். 

பட்டு சேலையுடுத்தி அவளுக்கு பிடித்த மல்லிகைப் பூச்சூடி மிதமான அலங்காரத்தில் அழகு சிலை என அங்கே இங்கே அலைந்து கொண்டிருந்த வெண்மதியைக் கண்டு சரவணன் கிறுகிறுத்து தான் போனான்.

தனிமையில் சிக்கும் போது “இவ்வளவு அழகையும் எங்க டி ஒளிச்சு வச்சிருக்க? இன்னைக்கு நைட் கண்டு பிடிக்கிறேன்”, என்று சொல்லி அவளைச் சீண்டினான்.

“தினமும் தான் ஆராய்ச்சி பண்ணுறீங்க? இன்னும் கண்டு பிடிக்கலையா? இன்னைக்காவது கண்டு பிடிச்சிருவீங்களா?”, என்று சரசமாக சொல்லி விட்டுச் சென்றாள் வெண்மதி. அவனால் அவளிடம் இருந்து பார்வையைத் திருப்பவே முடியவில்லை. அவளும் கணவனின் கம்பீரத்தை ரசிக்கவே செய்தாள். 

குற்றாலம் மற்றும் விசாலம் கூட விழாவுக்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு மகளை அப்படி பார்க்க சந்தோஷமாக இருந்தது. அதுவும் அவள் பார்த்து பார்த்து அனைவரையும் கவனிப்பது, மாமியார் என்று பாராமல் வசந்தாவுடன் ஒட்டிக் கொள்வது, சரவணனுடன் கண்களால் ரகசியம் பேசுவது என அனைத்தையும் கண்டவர்களுக்கு மனதுக்கு அப்படி ஒரு நிறைவு எழுந்தது.   பெற்றவர்களுக்கு பிள்ளைகளின் சந்தோஷத்தை தவிர வேறு என்ன வேண்டுமாம்?

பூர்ணிமா மற்றும் செந்திலுக்கு அனைவரும் நலங்கு வைத்தார்கள். அந்த கூட்டத்திலே அழகு சிலை என சுற்றிக் கொண்டிருந்த வெண்மதியை கண்டு செந்திலின் உறவுப் பெண்ணுக்கு பொறாமை வந்தது. அதனால் அவளைக் காயப் படுத்த முடிவு எடுத்து தனக்கு அருகில் இருந்த பெண்ணிடம் “இங்க பாரு டி கீதா, நாம எல்லாம் ஒரு தாலி கட்டிட்டு அடக்க ஒடுக்கமா இருக்கோம். ஆனா இங்க ரெண்டு தாலி கட்டிக்கிட்டாலும் சந்தோஷமா உலாத்துறாங்க. இது தான் காலக் கொடுமை”, என்று சொல்லி விட்டாள்.

அனைவருக்குமே அந்த பேச்சு காதில் விழுந்து விட்டது. வெண்மதி முகம் சுருங்கி அழுவதற்கு தயாராக நின்றாள். சரவணன் வேகமாக அவளை நெருங்கினான்.

“ஏமா, எங்க வீட்டுக்கே வந்து என்ன பேசுற நீ? எங்க வீட்டுப் பொண்ணை தப்பா பேசின நீ இங்க ஒரு நிமிஷம் இருக்க கூடாது. வெளிய போ”, என்றாள் சாந்தி.

“நான் ஏன் போகணும்? நான் என்ன இல்லாததையா சொன்னேன்? இந்த பொண்ணுக்கு இது ரெண்டாவது கல்யாணம் தானே?”

“என் மருமகளை ஏதாவது பேசின நாக்கை இழுத்து வச்சு அறுத்துருவேன். உன்னை எல்லாம் மனுசியா நினைச்சு நாங்க பேச கூட விரும்பலை. நீ வெளிய போ மா”, என்றாள் வசந்தா. 

சரவணன் வெண்மதியை அணைத்த படி இறுகிப் போய் நிற்க குற்றாலத்துக்கோ அந்த பெண்ணின் மேல் கொலை வெறியே வந்தது. அவர் கையை பற்றி அவருடைய கோபத்தை குறைக்க முயன்றாள் விசாலம்.

“என்ன ஆள் ஆளுக்கு வெளிய போன்னு சொல்றீங்க? நான் செந்திலுக்கு சொந்த சித்தி. இது எங்க வீட்டு விஸேஷம்”, என்றாள் அந்த பெண். அவள் அப்படிச் சொன்னதும் அடுத்து யாரும் எதுவும் பேச வில்லை. என்ன பேச என்றும் தெரிய வில்லை. அவள் சொன்னது உண்மை தானே? இது செந்தில் வீட்டு விஸேஷம். அவள் அவனுடைய சித்தி. அப்படி இருக்க மற்றவர்கள் எப்படி அவளை வெளியே விரட்ட முடியும்? அப்படிச் செய்தால் அது செந்திலை அவமதிப்பது போல ஆகி விடும். அப்படி என்றால் அவள் வெண்மதியை பேசியதற்கு நியாயம் கிடைக்காதா என்று எண்ணி அமைதியாக நின்றார்கள். 

“சொந்த சித்தியா? யாருக்கு யார் சித்தி? சித்தின்னா அம்மா மாதிரின்னு சொல்லுவாங்க. ஆனா நீங்க எங்க அப்பா அம்மா செத்தப்ப கண்டுக்காம போனவங்க தானே? அப்புறம் எப்படி நீங்க என் சொந்த சித்தி ஆவீங்க? இத்தனை வருஷம் நான் இருக்கேனா செத்தேனான்னு கூட கவலைப் படாதவங்க எப்படி என் சொந்த சித்தியா இருப்பீங்க? வெற்றிவேல் மாமா உங்களை எல்லாம் கூப்பிடச் சொன்னதுனால தான் கூப்பிட்டேன். ஆனா எங்க வந்து யாரை பேசுறீங்க? வெண்மதி என்னோட தங்கச்சி. அவளை பேசுனா நான் சும்மா இருப்பேனா? முதல்ல வெளிய போங்க நீங்க”, என்று கத்தினான் செந்தில்.

“என்ன டா, பொண்டாட்டியோட சொந்தம் வந்துருச்சுன்னு எங்களை ஒதுக்குறியா?”

“உங்களை ஒதுக்கலை,. உங்க உறவையே இந்த நிமிஷம் வெட்டி விடுறேன். வெளிய போங்க முதல்ல. இப்ப போகலைன்னா கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ள வேண்டியது இருக்கும். உங்க மூச்சு காத்து இங்க பட்டா கூட விஸேஷம் நல்லா நடக்காது. மனசுல பொறாமையும் வஞ்சமும் இருக்குற நீங்க வாழ்த்தினா நாங்க நல்லா இருக்க மாட்டோம். அதே மாதிரி நீங்க சாபம் கொடுத்தாலும் அது பலிக்காது. வெளிய போங்க முதல்ல”

“செந்தில்”

“அட, போ மா வெளிய. திருப்பி திருப்பி சொல்ல வச்சிக்கிட்டு”, என்று அவன் மரியாதை இல்லாமல் பேச அவள் வெளியே சென்று விட்டாள். அவள் குடும்பமும் வெளியே சென்று விட்டது.

அனைவரும் வெண்மதியை சூழ்ந்து ஆறுதல் சொல்ல வெண்மதியும் கொஞ்சம் தெளிந்து விட்டாள். அவளை அனைவருமே தாங்குவது குற்றாலம் மற்றும் விசாலத்துக்கு சந்தோஷமாக இருந்தது.

மீண்டும் பங்ஷன் ஆரம்பிக்க பூர்ணிமா மற்றும் செந்திலுக்கு நலங்கு வைத்தார்கள். பின் அனைவரும் உண்ண ஆரம்பிக்க இரண்டு வாய் உணவை உண்ட வெண்மதி அடுத்த நொடி ஓடிச் சென்று வாந்தி எடுத்தாள். சரவணன் அவளை வந்து தாங்கி கொண்டான்.

“மதி, என்ன செய்யுது டா?”

“தலை சுத்துதுங்க”

“என்ன மா ஆச்சு? சாப்பாடு ஒத்துக்கலையா?’, என்று கேட்டாள் வசந்தா.

“அப்படி எல்லாம் இல்லை அத்தை. சாப்பாடு நல்லா தான் இருந்துச்சு. ஆனா ஏன் வாந்தின்னு தெரியலை”

“வெண்மதி நாள் தள்ளிப் போயிருக்கா டி?”, என்று விசாலம் கேட்க “ஆமா மா”, என்றவள் சந்தோசத்துடன் கணவனை ஏறிட்டாள்.

அதைக் கேட்டு அனைவரின் முகமும் மலர்ந்தது. சரவணன் சந்தோஷமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். “மச்சான் நீயும் அப்பா ஆகப் போற டா”, என்று சிரித்த செந்தில் சரவணனை கட்டிக் கொண்டான்.

வயதில் மூத்த ஒரு பாட்டி வந்து அவள் நாடியைப் பிடித்து சோதித்து “ஆமா ரெட்டை நாடித் துடிப்பு இருக்கு. பிள்ளை மாசமா தான் இருக்கு”, என்று சொன்னார்.

அந்த வீட்டில் இரட்டை சந்தோஷமாக இருந்தது. வளைகாப்பு நல்ல படியாக முடிந்து பூர்ணிமாவை அவளுடைய பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். சிறிது நேரம் கழித்து செந்திலும் மனைவியைத் தேடி வந்து விட்டான். 

சரவணன் மனைவியுடன் கிடைக்க போகும் தனிமைக்காக ஏங்கினான். ஆனால் குற்றாலம் மற்றும் விசாலம், மற்ற சொந்தங்கள் என அனைவரும் இருக்க வெண்மதி அவர்களுடனே தான் இருந்தாள். கணவனின் தேடல் புரிந்தாலும் அவளால் அவனுக்கு பதில் கொடுக்க முடிய வில்லை. அன்று இரவு வெண்மதி அறைக்குள் வந்ததும் அவன் கரங்கள் அவளை இழுத்து அணைத்துக் கொண்டது. 

Advertisement