Advertisement

“என் மகன் வேண்டாம் வேண்டாம்னு சொன்னானே? அதுவும் வாழ்க்கை இழந்த ஏதாவது ஒரு பொண்ணுக்கு ரெண்டாந்தாரமா வாழ்க்கை கொடுக்க போறேன்னு சொன்னானே? இப்ப அவனே ரெண்டாந்தாரமா ஆகிட்டானே?”, என்று வசந்தா அழ “எதுக்கு மச்சான் இப்படி பண்ணினீங்க? வைஷ்ணவி உங்க கிட்ட அவ காதலைப் பத்தி சொன்னா தானே?”, என்று கேட்டார் வெற்றிவேல்.

“ஆமா மாப்பிள்ளை”, என்று மூர்த்தி தயக்கத்துடன் சொல்ல “அப்புறம் ஏன் யா இப்படி பண்ணின? அங்க பாருயா என் பிள்ளையை? இனி அவன் எப்படி வீட்டை விட்டு வெளிய போவான்? நாலு பேர் அவனைப் பத்தி என்னல்லாம் பேசுவாங்க? என் பொண்டாட்டியோட சொந்தத்தையும் என் சொந்தமா தானே பாத்தேன்? ஆனா இப்படி எங்க கழுத்தை அறுத்துட்டியே?”, என்று கேட்டார் வெற்றிவேல்.

“ஏன் மாமா இப்படி பண்ணின? அவ காதலைப் பத்தி என் கிட்ட சொல்லிருந்தா நான் வேற ஏதாவது முடிவு எடுத்துருப்பேனே? உன்னை என்னோட இன்னொரு அப்பா மாதிரி தானே நினைச்சேன்? என் அப்பா, சித்தப்பாவை விட மாமா மாமானு உன் மேல தானே உயிரா இருந்தேன். நீ ஏன் மாமா எனக்கு இப்படி ஒரு கெடுதல் செஞ்ச? இந்த ஊர்க்காரங்க, என் கல்யாணத்துக்கு வந்த என்னோட பிரண்ட்ஸ், நான் கிளாஸ் எடுக்குற என்னோட ஸ்டுடண்ட்ஸ் எல்லாரும் இனி என்னை அசிங்கமா பாப்பாங்களே மாமா. சொல்லு மாமா ஏன் இப்படி பண்ணின?”, என்று குமுறிய படி கேட்டான் சரவணன்.

“அந்த வெறும் பய நம்ம ஜாதி இல்லை மாப்பிள்ளை. அதனால தான்”, என்று மூர்த்தி தயங்க “உன் ஜாதி வெறிக்கு என் வாழ்க்கை தான் உனக்கு கிடைச்சதா? இனி எப்படி நான் வெளில தலை காட்டுவேன்? எல்லாரும் என்னை எப்படி பேசுவாங்கன்னு தெரியுமாயா உனக்கு? நான் ஆம்பளையே இல்லை, அதான் உன் பொண்ணு என் கூட வாழ முடியாம போய்ட்டானு பேசுவாங்க. ஆனா கெட்டதுலயும் ஒரு நல்லதா எனக்கு நடக்க வேண்டிய சாந்தி முகூர்த்தத்தை தள்ளிப் போட்டீங்க. அப்படி மட்டும் இல்லாம நான் அவ கூட வாழ்ந்த பிறகு அவ இப்படி செஞ்சிருந்தா இந்த நிமிசமே நாண்டுகிட்டு செத்துப் போயிருப்பேன். அந்த விசயத்துல கடவுள் எனக்கு நியாயம் செஞ்சிட்டார். தாய் மாமா இன்னொரு தாய்க்கு சமம். ஆனா நீ… போயா வெளிய? இன்னும் அக்கா மாப்பிளைன்னு சொல்லிட்டு வீட்டு பக்கம் வந்த மரியாதை இருக்காது சொல்லிட்டேன்”, என்று வெறிபிடித்தவன் போல கத்திய சரவணன் அறைக்குள் சென்று விட்டான்.

கண்ணீருடன் கை கூப்பி மன்னிப்பு கேட்டு விட்டு வெளியே சென்றார்கள் மூர்த்தியும் மங்கையும். மற்றவர்கள் இடிந்து போய் அமர யாருக்கு யாரைத் தேற்ற என்று கூட தெரிய வில்லை. சாந்தி தான் நிலைமையை கையில் எடுத்தாள். “பூர்ணி நீ ஸ்கூலுக்கு போ, இங்க நாங்க பாத்துக்குறோம்”, என்று சொல்லி மகளை அனுப்பி வைத்தவள் வசந்தாவிடம் பேச ஆரம்பித்தாள்.

“அக்கா நடந்தது மிகப் பெரிய விஷயம் தான். ஆனா இப்ப தான் நாம தைரியமா இருக்கணும். நம்ம சரவணனுக்காக நாம நம்மளை மாத்திக்கணும் அக்கா. இல்லைன்னா அவன் அவனுக்குள்ளயே ஒடுங்கிப் போயிருவான். போனவ செத்துட்டான்னு நினைச்சிக்கலாம். நம்ம மகனுக்காக நாம நம்ம துக்கத்துல இருந்து வெளிய வந்து தான் அக்கா ஆகணும்”, என்று சொன்ன சாந்தி சமையல் செய்ய சென்றாள். மற்றவர்களை சமையல் செய்து சாப்பிட வைத்து தேற்றியதில் அவள் ஒரு வழியாகிப் போனாள்.

இது வரை அவனும் வைஷ்ணவியும் இருந்த அறைக்குச் செல்லாமல் மாடிக்கு சென்ற சரவணனுக்கு வாழவே பிடிக்கவில்லை. அவனுடைய அறைக்குள் வந்ததும் கட்டிலில் விழுந்தவன் ஒரு ஆண் மகனாக இருந்தும் கண்ணீர் விட்டு கதறி அழுதான். அவனது தலையணை அவனுடைய கண்ணீரால் நனைந்தது.

“நான் என்ன தவறு செய்தேன்? கடவுள் ஏன் என்னைத் தண்டித்தார்? எதனால் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?”, என்ற அவனின் கேள்விகளுக்கு விடை இல்லை. அவள் மனதில் என்ன இருக்கிறது என்று முன்பே தெளிவு படுத்தி இருக்க வேண்டுமோ? என்று அவனுக்கு குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் அவன் மனதில் ஊர்க்காரர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் மட்டும் தான் இருந்ததே தவிர வைஷ்ணவி இல்லாமல் அவனால் வாழவே முடியாது என்ற எண்ணம் அவனுக்கு வரவே இல்லை.

சாப்பிட தோன்றாமல் உறங்க தோன்றாமல் வயலுக்கு செல்ல கூட தோன்றாமல் படுத்து கிடந்தான். இன்று அவனுக்கு கல்லூரியில் கிளாஸ் இருக்க அங்கு கூட அவன் செல்ல வில்லை. உடம்பு சரி இல்லை என்று தகவல் மட்டும் அனுப்பி வைத்தான். பூர்ணிமா மூலம் விஷயம் கேள்விப் பட்ட செந்தில் அவனை அழைத்த போது கூட சரவணன் அவனுடைய அழைப்பை எடுக்க வில்லை. அவனது கண்ணின் ஓரம் கண்ணீர் ஆறாக பெருகி ஓடிக் கொண்டிருந்தது.

அன்று அழுது அழுது முகம் வீங்கிப் போய் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பூர்ணிமாவைக் கண்டு திகைத்தாள் வெண்மதி.

“பூர்ணி என்ன ஆச்சு டி? அழுதியா என்ன? செந்தில் அண்ணா கூட சண்டையா?”, என்று கேட்க “பஸ் வந்ததும் சொல்றேன் டி”, என்று சொன்ன பூர்ணியின் கண்கள் மீண்டும் கலங்கியது.

பஸ் வந்து ஏறி அமர்ந்த பிறகு மீண்டும் வெண்மதி கேட்க வைஷ்ணவி ஓடிப் போனதைப் பற்றிச் சொன்னாள் பூர்ணிமா.

அதைக் கேள்விப் பட்டு அதிர்ந்து போனாள் வெண்மதி. “அவனாவது நல்லா இருப்பான்னு நினைச்சேனே? இப்ப அவனோட வாழ்க்கையும் போச்சா?”, என்று எண்ணி அவள் கண்களும் கலங்கியது.

சரவணன் அடுத்து வந்த நாட்களில் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. மகனின் நிலையை கண்டு துடித்தார்கள் வசந்தாவும் வெற்றிவேலும். துக்கம் தொண்டையை அடைத்தது அவர்களுக்கு. அவனுக்கு இப்போதைக்கு உணவை விட தனிமையே முக்கியம் என்று புரிய அவனை அப்படியே விட்டார்கள்.

அந்த வீட்டில் இருந்த வைஷ்ணவியின் புடவைகள், பாத்திரங்கள் மற்ற பொருள்கள் அப்படியே மூர்த்தியின் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். விஷயம் வெளியே மெல்ல கசியத் துவங்கியது. கசிந்தாலும் பரவாயில்லை. காது மூக்கு வைத்து வேறு வேறு கதைகள் சரவணனைப் பற்றி உலாவத் துவங்கியது.

நண்பர்கள் வீட்டுக்கு வந்து சந்தித்து ஆறுதல் சொல்லி விட்டுப் போனார்கள். அவர்கள் மூலம் தான் அந்த கதைகள் எல்லாம் அவன் காதுக்கு வந்தது.

அதிலும் ஒரு சொந்தக்காரர் வந்து “பேசாம கொஞ்ச நாள் வெளியூர்ல இருந்துட்டு வரியா சரவணா? ஊர்ல ரொம்ப தப்பா பேசுறாங்க பா. உன்னால அந்த பொண்ணை திருப்தி படுத்த முடியலைன்னு…”, என்று சொன்னவர் அவன் பார்வையில் இருந்த கனலில் அப்படியே வாயை மூடிக் கொண்டு சென்று விட்டார்.

“நான் ஏன் ஊரை விட்டு போகணும்? நான் என்ன தப்பு செஞ்சேன் ஊரை விட்டு போறதுக்கு? இது என் வீடு, என் ஊர். நான் இங்க தான் இருப்பேன்”, என்று மனதில் வீம்பு வந்தாலும் அவனால் ஊர் ஜனங்களை எதிர்க் கொள்ள முடியவில்லை.

இன்றோடு வைஷ்ணவி ஓடிப் போய் பத்து நாட்கள் ஆகி விட்டது. இந்த விஷயங்களை எண்ணிய படியே வானத்தை பார்த்து நின்றிருந்தான் சரவணன். அதே நேரம் வெண்மதியும் அவனைப் பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தாள். அவன் எப்படியாவது இந்த காயத்தில் இருந்து விடுபட்டு பழைய சரவணனாக மீண்டு வர வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

இவர்கள் இருவரும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்க பூர்ணிமாவுக்கோ தூக்கம் கண்களைச் சுழற்றியது. எப்போதும் எட்டு மணிக்கு சாப்பிட்டு விட்டு ஒன்பது மணிக்கு தூங்கி விடும் அவள் இன்று பன்னிரெண்டு மணி வரை விழித்திருந்தால் எப்படி இருக்குமாம்? அவளால் தூக்கத்தை அடக்க முடியவில்லை.

ஆனால் இன்று செந்தில் அழைக்கும் போது தூங்கி விடக் கூடாது என்பதற்காகவே விழித்திருக்க முயன்றாள். சரியாக இரவு ஒரு மணி ஆகும் போது செந்தில் அவளுக்கு அழைத்தான். எப்படியும் தூங்கி இருப்பாள் என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் தினமும் இந்த நேரத்தில் அவளை அழைத்து விடுவான்.

எப்படியும் எடுக்க மாட்டாள் என்று தெரிந்தே அவன் அவளை அழைக்க அவளோ ஒரு ரிங்கிலே அவன் போனை எடுத்தாள். அவள் எடுத்ததும் “பூர்ணி”, என்று குழைந்து அவன் அழைக்க “ம்ம்”, என்றாள் பூர்ணிமா.

“தூங்கலையா டி?”

“நீங்க பேசலைன்னு கவலைப் பட்டீங்கல்ல? அதான் கஷ்ட பட்டு முழிச்சிருக்கேன்”, என்று அவள் சொல்ல அவனுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.

“நீ ஒண்ணும் கஷ்டப் பட்டு முழிச்சிருக்க வேண்டாம். போய் தூங்குமா தூங்கு. தூக்கம் தானே உனக்கு முக்கியம்? நான் தான் பைத்தியக்காரன் மாதிரி உன் கிட்ட பேசணும்னு தவம் இருக்கேன். உனக்கு அந்த ஆசை எல்லாம் இருக்குமா என்ன?”, என்று அவன் கோபத்தில் கத்த அவள் தூக்கம் எல்லாம் மாயமாக மறைந்து போனது.

“ஏன் பேச மாட்டீங்க? இவ்வளவு நேரம் முழிச்சிருந்து உங்க கிட்ட திட்டு வாங்குறேன்ல? எனக்கு இது தேவை தான். எனக்கு ஒரு சந்தேகம், நீங்க என்னை உண்மையிலே லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?”, என்று சுள்ளென்று கேட்டாள் பூர்ணிமா.

“என்ன டி இப்படி கேட்டுட்ட?”, என்று அவன் பதற “பின்ன கேக்காம என்ன செய்வேன்? என் மேல அதே காதல் இருந்தா என்னை இப்படி கஷ்டப் படுத்துவீங்களா?”, என்று கேட்டாள்.

“நான் எங்க டி உன்னைக் கஷ்டப் படுத்துனேன்?”, என்று பாவமாக கேட்டான் செந்தில்.

காதல் வெடிக்கும்….

Advertisement