Advertisement

அத்தியாயம் 2 

அனுதினமும் உன்னை

உணர்கிறேன் உயிரே

காதல் வலியால்!!!

அவளுடைய தந்தையிடம் சொன்னால் அவளுக்கு என்று கார் வாங்கிக் கொடுத்து விடுவார். இல்லை என்றால் வீட்டில் இருக்கும் காரில் அவளை கொண்டு போய் விடுவார். ஆனால் அதை எல்லாம் மறுத்து விட்டாள். அவளுக்குள் இருக்கும் தனிமை உணர்வு பேருந்தில் சென்றால் அவளை விட்டு நீங்குவது போல இருக்கும். திருமணத்திற்கு முன்னும் கூட அவள் பஸ்ஸில் தான் சென்று வருவாள்.

அமைதியாக வெண்மதி பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்க அவளைக் கண்டு சிலர் பரிதாபப் பட்டனர். சிலர் அவளுடைய தந்தை மேல் இருந்த காழ்ப்புணர்ச்சியில் “கடவுள் இருக்க தானே செய்றான்?. இவ அப்பன் ஆடின ஆட்டம் என்ன? அதுக்கு இந்த பிள்ளை பாவத்தை அனுபவிக்குது….. அழகு இருந்து என்ன செய்ய? இந்த வயசுலே விதவையா இருக்கணும்னு இந்த பிள்ளையோட தலையெழுத்து…… பாவம் தான்…. காலைலே மாடு பிடிக்க போகணும்னு நினைச்சேன். இவ முகத்துல முழிச்சிட்டேனே?… இன்னைக்கு என்ன நடக்கப் போகுதோ?… ரொம்ப அழகா இருக்கால்ல?”, இப்படியாகப் பட்ட பேச்சுக்கள் அவள் காதில் விழுந்தது. யாரையும் அவள் நிமிர்ந்து பார்க்க வில்லை. யார் பேசுகிறார்கள் என்று கூட அவள் கவனிக்க வில்லை.

இவர்கள் பேசுவது குற்றாலத்துக்கு மட்டும் தெரிந்தால் அவர்கள் இந்நேரம் உயிரோடு இருக்க மாட்டார்கள். குற்றாலம் முன்பு போல் இல்லாவிட்டாலும் மகள் என்று வந்து விட்டால் முன்பு போல அரிவாள் எடுக்கவும் தயங்க மாட்டார். குற்றாலம் செய்யாத கொலைகளா? ஆனால் இவர்களின் பேச்சைப் பற்றி வெண்மதி தந்தையிடம் சொல்ல மாட்டாள். இப்போது திருந்தி இருக்கும் தந்தையை மீண்டும் அரிவாளை எடுக்க வைப்பாளா என்ன?

அவள் பஸ் ஸ்டாண்ட்க்கு வந்த போது அவளது தோழியும் சரவணனின் தங்கையுமான பூர்ணிமா அங்கே அவளுக்காக காத்திருந்தாள்.

“பஸ் போயிடுச்சா பூர்ணி?”

“இல்லை டி, வர நேரம் தான். அதோ வந்துடுச்சு பாரு”, என்று சொல்ல அவளும் திரும்பிப் பார்த்தாள்.

திருநெல்வேலி என்று பெயர் போட்டு வந்து கொண்டிருந்தது அந்த பஸ். அவர்கள் ஸ்டாப்பில் பஸ் நின்றதும் இருவரும் ஏறி அமர்ந்தார்கள்.

காலேஜ் படிக்கும் ஆண்கள், பெண்கள், பள்ளிப் பிள்ளைகள் என அந்த பஸ் நிறைந்திருந்தது. கண்டக்டர் காதல் பாடல்களை ஓட விட தன்னாலே மனதுக்குள் ஒரு அமைதி வந்தது அனைவருக்கும்.

சில காதல் கதைகளும் அந்த பஸ்ஸில் அரேங்கேற அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தோழிகள் இருவரும் கதை பேச ஆரம்பித்தார்கள்.

“சாப்பிட்டியா வெண்மதி?”, என்று கேட்டாள் பூர்ணிமா.

“சாப்பிட்டேன். சாப்பிடலைன்னா அம்மா அழுவாங்க”

“எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போற வெண்மதி?”

“எனக்கு என்ன? நான் நல்லா தானே இருக்கேன்?”

“அதோ அந்த கண்ணாடில என்னையும் உன்னையும் பார். உனக்கே அந்த வித்தியாசம் தெரியும்”, என்று பூர்ணிமா சொல்ல வெண்மதியும் திரும்பிப் பார்த்தாள்.

கண்டிப்பாக வித்தியாசம் தெரிந்தது தான். பூர்ணிமா நெற்றியில் சிவப்பு பொட்டு அதற்கு மேல் கீற்றாக திருநீறு, நெற்றி வகிட்டில் குங்குமம், கை நிறைய வளையல்கள், கழுத்தில் தாலிசெயின், கொண்டையைச் சுற்றி மல்லிகை சூடி மங்களகரமாக இருந்தாள் என்றால் வெண்மதியோ கருப்பு பொட்டும் கழுத்தில் குட்டிச் செயினும் ஒரு கையில் வாட்ச் மட்டும் அணிந்திருந்தாள்.

“பழகிடும், விடு பூர்ணி. சரி வைஷ்ணவி பத்தி தகவல் வந்துச்சா? சரவணன் எப்படி இருக்காங்க?”, என்று கேட்டாள் வெண்மதி.

“எப்படி இருப்பான்? பித்து பிடிச்சது மாதிரி இருக்கான். ரூமுக்குள்ளே அடைஞ்சு கிடக்கான். காலேஜ்க்கு போறதில்லை. வயலுக்கு போறதில்லை. ரூம்ல தான் எல்லாம். அதுக்கு காரணமா இருந்த அந்த நாயைப் பத்தி எந்த தகவலும் வரலை. அவ எக்கேடு கெட்டு ஒளிஞ்சா நமக்கென்ன?”, என்று படபடவென்று பொரிந்தாள் பூர்ணிமா.

வெண்மதிக்கும் சரவணனை நினைத்து கஷ்டமாக இருந்தது. “என்னை விட அவங்க நிலைமை ரொம்ப மோசம் பூர்ணி. எனக்காவது விதவைக் கோலம். ஆனால் அவருக்கு…”, என்று சொன்ன வெண்மதியின் மனம் அவனுக்காக வேதனை கொண்டது.

அடுத்து என்ன பேச என்று தெரியாமல் இருவரும் அமைதியாக வர அப்போது தான் பூர்ணிமா வைஷ்ணவி மேல் எழுந்த கோபத்தை விட்டுவிட்டு வெண்மதியைப் பார்த்தாள். அவள் முகத்தில் கவலை அதிகம் இருக்க அவளை மாற்ற வேண்டி பேச்சு கொடுத்தாள்.

அதை உணர்ந்த வெண்மதியும் தோழியுடன் பேசினாள். அப்போது பூர்ணிமாவுக்கு போன் வந்தது. செந்தில் தான் அவளை அழைத்திருந்தான். ஆனால் பூர்ணிமா அவன் அழைப்பை கட் செய்து விட்டாள்.

“என்ன ஆச்சு டி? போனை எதுக்கு கட் பண்ணின? செந்தில் அண்ணா தானே பேசுறாங்க? பேச வேண்டியது தானே?”, என்று வெண்மதி கேட்க “அப்புறம் பிரீ ஹவர்ஸ்ல பேசிக்கிறேன் டி”, என்று சொல்லி விட்டாள் பூர்ணிமா. அவள் செய்கை புரியாமல் பார்த்த வெண்மதி தன் முன்னால் கணவனிடம் பேச கூச்சப் படுகிறாளோ என்று எண்ணிக் கொண்டாள்.

வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த செந்தில் பூர்ணிமா போனைக் கட் பண்ணவும் “சே”, என்று எரிச்சலுடன் அமர்ந்தான். செந்திலுக்கு பூர்ணிமாவை மிகவும் பிடிக்கும். அதனால் தான் நண்பனிடம் கெஞ்சி கூத்தாடி அவளை திருமணம் செய்திருந்தான்.

திருமணம் செய்து அன்றைய இரவில் ஆசையோடு அவன் அவளை நெருங்கினால் அவளோ பயத்தில் அழுது ஊரைக் கூட்ட ஆரம்பித்தாள். அப்போதைக்கு அவள் வாயைப் பொத்தி அவளை சரி கட்டி அமைதி படுத்தினான். அதற்கு பிறகும் அவள் அவனை நெருங்க விட வில்லை. அவள் பயத்தை விரட்டி அவன் அவளுடன் வாழ ஆரம்பித்த போது கிட்டத்தட்ட மூன்று வாரம் ஓடி இருந்தது.

அதற்கு பிறகும் மூன்று முறை மட்டுமே அவளுடன் அவனால் வாழ முடிந்தது. அதற்கு பின் பிளைட் ஏறி இங்கே வந்து விட்டான். அவள் மேல் பைத்தியமாக இருப்பவனுக்கு அந்த மூன்று நாட்கள் எப்படி பத்துமாம்? ஒவ்வொரு நாளும் தணலில் இடப் பட்ட புழு போல அவளது நினைவில் தவித்துக் கொண்டிருக்கிறான்.

ஒன்றும் அறியாதவன் என்றாலும் பரவாயில்லை. தினம் தினம் அவள் மேல் எழுந்த காதலிலும் அவளால் எழுந்த தாபத்திலும் வெந்து கொண்டிருப்பவனுக்கு அவளது குரல் மட்டுமே ஆறுதல். அதனால் அவனுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளிடம் பேச வேண்டும் போல இருக்கும்.

ஆனால் பூர்ணிமாவோ அருகில் அவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி அவனிடம் பேசுவதே இல்லை. இரவு அவன் வேலை முடிந்து பிரி ஆகும் போது அவளோ தூங்கி விடுகிறாள். அதனால் மனைவியை நினைத்து சலித்துக் கொண்டான். எங்கே இந்த ஏக்கம் அனைத்தும் அவள் மேல் கோபமாக வெறுப்பாக உருமாறி விடுமோ என்று அவனுக்கு பயமாக இருந்தது.

அவள் போனைக் கட் செய்ததும் உடனடியாக ஊருக்குச் சென்று அவள் சங்கு கழுத்தைப் பிடித்து “எதுக்கு டி என் போனைக் கட் பண்ணின?”, என்று கேட்க வேண்டும் போல இருந்தது. அப்படி அவன் கேட்டால் என்ன நடக்கும் என்று எண்ணிப் பார்த்தவனின் மனம் மென்மையானது. தயங்கி தயங்கி பதில் சொல்ல வரும் அவளது உதடுகளை சிறை செய்ய வேண்டும் என்ற ஆசை கிளர்ந்தது. கற்பனையில் வாழ்ந்து கொண்டிருந்தான் செந்தில்.

ஒரு பதினொரு மணி போல பூர்ணிமாவே அவனை அழைத்தாள். முக்கியமான வேலை செய்து கொண்டிருந்தான் செந்தில். வேறு யார் அந்த நேரத்தில் அழைத்திருந்தாலும் அவர்கள் அழைப்பை எடுத்திருக்க மாட்டான். ஆனால் பூர்ணிமா மேல் இருக்கும் காதல் வெல்ல உடனடியாக போனை எடுத்து விட்டான். ஆனால் அவள் காலையில் போனை கட் பண்ணிய கோபத்தில் அவளிடம் எதுவும் பேச வில்லை.

“அத்தான் கோபமா?”, என்று அவள் சிணுங்கல் குரலில் கேட்க “போ டி, கொலை வெறில இருக்கேன்”, என்றான் செந்தில். அவன் பேச்சில் நிச்சயம் கோபம் வெளிப்பட்டது.

“என்னை மன்னிச்சிருங்க”, என்று அவள் கலங்கிய குரலில் சொல்ல அவன் கோபம் கொஞ்சம் மட்டுபட்டது.

“ஏன் பூர்ணி இப்படி பண்ணுற? உனக்கு என்னோட உணர்வுகள் ஏன் புரிய மாட்டிக்கு. யாருமே தெரியாத ஊரில் ஏதோ கிடைக்குறதை சாப்பிட்டுட்டு வேண்டா வெறுப்பாக வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு நீ பேசுறது மட்டும் தான் ஆறுதல். நீயும் இப்படி பண்ணினா நான் என்ன பண்ணுறது?”, என்று ஆதங்கமாக கேட்டான் செந்தில்.

“எனக்கு உங்க நிலைமை புரியுதுங்க. ஆனா என்னையும் நீங்க யோசிச்சுப் பாக்கணும். பஸ்ல வரும் போது வெண்மதி கூட இருந்தா. கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே கணவனை இழந்துட்டு தனி மரமா இருக்குறவ முன்னாடி நான் உங்க கிட்ட பேசினா அது அவ மனசை பாதிக்காதா?”

“ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொல்ற பூர்ணி. எனக்கு என்னமோ நம்ம வாழ்க்கையைப் பத்தி பயமா இருக்கு. அடுத்தவங்களுக்காக பாத்து பாத்து நமக்குள்ள ஒண்ணுமே இல்லாம போகுமோன்னு பயமா இருக்கு”, என்று அவன் சொல்ல அவளுக்கும் எரிச்சல் வந்தது.

Advertisement