Advertisement

மகள் முகத்தில் இருந்த உற்சாகம் உடனே வற்றி விட அதை எப்படி அந்த தாயால் காண முடியும்? “சும்மா சொன்னேன் டா? உன்னை மாப்பிளை கூட அனுப்ப தான் பலகாரம் எல்லாம் செஞ்சிட்டு இருக்கேன். இங்க பாரு”, என்று சொல்ல அவள் முகம் மலர்ந்தது.

“மாப்பிள்ளை கூட போறது சரி தான். ஆனா சீக்கிரம் எங்களை பாட்டி தாத்தா ஆக்கிரு சரியா?”, என்று விசாலம் சொல்ல “போ மா”, என்று சிணுங்கினாள் மகள்.

“சரி சரி நீ ரூம்ல போய் என்ன சேலை கட்டன்னு பாரு. நான் குறை வேலையை முடிக்கிறேன்”, என்று விசாலம் சொன்னதும் அறைக்குச் சென்றாள் வெண்மதி.

அடுத்த ஒரு மணி நேரம் கழித்து விசாலம் மகளைத் தேடிச் சென்ற போது அவளோ பீரோவில் இருந்த எல்லா சேலைகளையும் கட்டிலில் பரத்தி போட்டுக் கொண்டிருந்தாள்.

“என்ன டி இதெல்லாம்?”

“எதைக் கட்டன்னு தெரியலை மா. இது நல்லா இருக்குமா? இல்லை இதுவா? இந்த கலர் நல்லா இருக்கும்ல?”, என்று வெண்மதி கேட்க மகளை புன்னகையுடன் ஏறிட்டாள் விசாலம்.

“நீ எதுவும் செலக்ட் பண்ண வேண்டாம். இரு, நானே உனக்கு எடுத்து தரேன்”, என்று சொன்ன விசாலம் மகளுக்கு என வாங்கி வைத்திருந்த புதுப் புடவையை எடுத்துக் கொடுத்து “இதைக் கட்டு”, என்றாள். விசாலம் அந்த சேலையை அவளது பிறந்த நாளுக்கு கொடுக்க தான் வைத்திருந்தாள். ஆனால் மதி முகத்தில் இருந்த சந்தோஷத்தை அதிகப் படுத்த எண்ணி அப்போதே தந்து விட்டாள்.

அன்னை எடுத்துக் கொடுத்து விட்டுச் சென்றதும் மீண்டும் சேலைகளை எல்லாம் அடுக்கி வைத்தவள் அந்த சேலையை எடுத்துக் கட்ட ஆரம்பித்தாள்.

சேலையை அணிந்து தயாராகி கண்ணாடி முன்பு போய் நின்றாள். அவள் படபடப்பாக இருப்பது அவளுக்கே தெரிந்தது. “ஏன் டி ரொம்ப எக்ஸைட் ஆகுற? அவன் உன்னை இது வரை புடவையில பாத்தது இல்லையா? உன்னைப் பாத்த அத்தனை தடவையும் அவன்  உன்னை புடவைல தான் பாத்துருக்கான் அப்புறம் என்ன? நேத்து சாயங்காலம் கூட உன் கிட்ட பேசிட்டு தானே போனான்? அப்புறம் எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற? அவன் யாரு, உன் புருஷன் தானே? நார்மலா இரு”, என்று குரல் கொடுத்தது அவள் மனசாட்சி.

மனசாட்சியின் கேள்விக்கு அவளால் பதில் கொடுக்க முடியவில்லை. என்னவோ அன்று தான் அவனை முதல் முறையாக பார்க்க போவது போல ஒரு உணர்வு. ஏதேதோ எதிர்பார்ப்புகள் அவளுக்குள் எழுந்தது. ஆனால் அவனுடைய அருகாமைக்கு அவள் மனம் ஏங்கியது மட்டும் நிஜம்.

சரவணன் வண்டி வீட்டின் முன் நிற்க மாடியில் இருந்தே எட்டிப் பார்த்தாள் வெண்மதி. அவன் அவளைத் தேடிய படி உள்ளே வருவதும் அவனை குற்றாலம் வரவேற்பதையும் பார்த்தவள் அவசரமாக கீழே ஓடினாள்.

“மெதுவா டி, விழுந்து வராத”, என்று சொன்ன விசாலமும் அவள் பின்னே சென்றாள்.

அவள் அவனை ஏக்கமாக பார்க்க அவனும் அவளை தவிப்புடன் பார்த்தான்.

“உள்ள வாங்க மாப்பிள்ளை. பாப்பா மாப்பிள்ளையை உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ”, என்று குற்றாலம் சொல்ல “வாங்க”, என்றாள்.

அவள் முதலில் மாடி ஏற அவன் அவள் பின்னே அவளுடைய வெட்கத்தை ரசித்த படியே சென்றான். அறைக்குள் வந்ததும் அவள் படபடப்புடன் நிற்க சிறு சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.

ஏனோ என்றும் இல்லாமல் இன்று அவள் அழகு பல மடங்கு உயர்ந்ததாக தெரிந்தது. அதுவும் அவள் முகத்தில் இருந்த செம்மையைக் கண்டவனுக்கு இந்த நொடியே அவளுடன் வாழ்ந்து விட வேண்டும் போல இருந்தது.

“மதி”, என்று மென்மையாக அழைக்க “ஆன்”, என்ற படி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க டி”, என்று அவன் குரல் குழைந்து வெளியே வர அவளுக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் சிறு அவஸ்தையாகவும் இருந்தது.

“நேத்து ஏன் அழுத மதி?”, என்று அவன் கேட்க “உன் கூட வாழணும்னு எனக்கும் தவிப்பா இருக்கு? அந்த தவிப்பை அடக்க முடியாமல் தான் அழுதேன் என்றா சொல்ல முடியும்?”, என்பதால் அமைதியாக நின்றாள்.

அவள் கையைப் பற்றி இழுத்து வந்து கட்டிலில் அமர்ந்தவன் அவளையும் தன்னருகே அமர வைத்துக் கொண்டான். எந்த தயக்கமும் இல்லாமல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவன் கரங்களும் அவளை வாகாக அணைத்துக் கொண்டது.

“எனக்கும் உங்களை தேடத் தான் செய்யுது தெரியுமா? ஆனா நீங்க எனக்கு ஆசை இல்லைன்னு பேசவும் அழுகை வந்துருச்சு”, என்று அவன் சட்டைக் காலரைப் பற்றியவாறே கேட்டாள். அவன் மூச்சுக்காற்று அவள் மேல் மோத அதை ரசித்தவாறே அவன் முகத்தை ஏறிட்டாள்.

அவ்வளவு அருகில் தெரிந்த அவளது ஈரமான இதழ்கள் அவனை இம்ஸித்தது. அவளது இதழ் தேனை பருகும் ஆசையை அடக்க முடியாமல் அவள் முகம் நோக்கிக் குணிந்தான். சிறிது நேரம் கழித்து விசாலம் சாப்பிட அழைக்கவும் கீழே வந்தார்கள்.

மதியம் அங்கே விருந்தை முடித்து விட்டு மனைவியை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டுக்குச் சென்றான். வசந்தா அவளை பாசமாக அணைத்துக் கொள்ள பூர்ணிமாவும் அவளைக் கட்டிக் கொண்டாள்.

“வா மா”, என்று சாந்தியும் வரவேற்க சாந்தியைப் பார்த்த வெண்மதி “இந்த விஷயத்தை எப்படி மறந்தேன்?”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.

அன்று இரவு அவன் ஆசையாக அறைக்குள் வர அவளோ திகிலடைந்து போய் இருந்தாள். அவள் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “மதி என்ன ஆச்சு மா?”, என்று கேட்டான் சரவணன்.

“நாம நாம… அந்த ஜோசியரைப் பாக்க போவோமா?”, என்று திக்கித் திணறிக் கேட்டாள் வெண்மதி.

“என்ன டி உளறுற? நாம எதுக்கு அங்க போகணும்?”

“எனக்கு பயமா இருக்குங்க. பிளீஸ் நாம அங்க போகலாமே? உண்மையிலே என்னோட ராசி உங்களை பிடிச்சிருச்சுன்னா? அதனால உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்கவே முடியாது”

“இத்தனை நாள் நல்லா தானே இருந்த? இன்னைக்கு என்ன பேய் புடிச்சிருச்சா?”

“ஏதோ ஒண்ணு. எனக்கு இதுல ஒரு முடிவு தெரியாம உங்க கூட சந்தோஷமா இருக்க முடியாதுங்க“

“நீ பேசுறது அபத்தமா இல்லையா மதி? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“எனக்கு தெரியுது. ஆனா எனக்கு நீங்க வேணும். உங்க விசயத்துல நான் முட்டாள் தான். நாம அங்க போகலாமே? பிளீஸ்”, என்று அழுதாள்.

அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான். பின் அவன் அதை பெற்றோர்களிடம் சொல்ல சாந்திக்கு தான் தேவையில்லாமல் வெண்மதியை குழப்பி விட்டோமோ என்று கஷ்டமாக இருந்தது.

“அவ மனசுல நெருடல் வந்துருச்சு சரவணா. அது சரியாகாம அவ நிம்மதியா இருக்க மாட்டா. நாம நாளைக்கு அங்க போயிட்டு வந்துறலாம்”, என்றார் வெற்றிவேல்.

“வேண்டாங்க, அங்க போய் அவர் ஏதாவது சொன்னா அது வேற ரொம்ப கஸ்டாமா போயிரும். அப்பவும் நம்ம மருமக எப்படி நிம்மதியா இருப்பா?”, என்று சொன்னாள் வசந்தா.

“அதெல்லாம் ஒண்ணும் நடக்காது. கடவுள் மேல பாரத்தைப் போட்டு போவோம். அப்புறம் இது வெண்மதி வீட்டுக்கு தெரிய வேண்டாம். சும்மா கோவிலுக்கு போன மாதிரி சொல்லிக்கலாம். தெரிஞ்சா அவங்க ஏதாவது வருத்தப் படுவாங்க”, என்று சொன்னார் வெற்றிவேல்.

அடுத்த நாளே செந்தில் பூர்ணிமாவைத் தவிர மற்ற அனைவரும் அந்த ஜோசியரைக் காணச் சென்றார்கள். வெண்மதி திக் திக்கென்ற மனதுடன் அமர்ந்திருந்தாள். அவள் மன நிலை உணர்ந்த சரவணன் அவள் கையை இறுகப் பற்றி இருந்தான். அவனுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை தான். ஆனால் அவர் ஏதாவது தவறாக சொல்லி அது மனைவியை காயப் படுத்தி விடுமோ என்று பதறினான்.

“ஜாதகம் நல்லாவே பொருந்திருக்கு. இப்படி பொருந்துறது ஆயிரத்தில் ஒண்ணா தான் இருக்கும். இவங்களுக்கு முடிச்சு போட்டதுனால தான் கடவுள் இவங்களோட முதல் கல்யாணத்தை நிலைக்க விடலையோ என்னவோ? தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காதீங்க. எல்லாமே நல்லதுக்கு தான்”, என்று ஜோசியர் சொன்ன பிறகு தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.

Advertisement