Advertisement

சிறிது தூரம் சென்றதும் “நைட் நல்லா தூங்குனியா மதி?”, என்று கேட்டான் சரவணன்.

“நீங்க பேசுற வரைக்கும் தூக்கம் வரலை. அப்புறம் நல்லா தூங்கினேன்”, என்று உண்மையை அவள் அப்படியே சொல்ல “எனக்கும் தான். ஆனால் காலைல நீ இல்லாம ரூம் நல்லாவே இல்லை”, என்றான். 

பள்ளி முன்பு வண்டியை நிறுத்தியவன் அவளைப் பார்த்தான். அவன் பின்னால் இருந்து இறங்கி நின்று அவனைப் பார்த்தவள் “போயிட்டு வரேன்”, என்றாள்.

“மதி”

“ஆன்”

“உன் கிட்ட ஒண்ணு கேக்கலாமா? நீ பீல் பண்ணக் கூடாது”

“கேளுங்க”

“உனக்கு நிர்மலை ஏன் பிடிக்கும்?”, என்று கேட்டவனுக்கு படபடப்பாக இருந்தது. அவளோ ஒரு நொடி கூட யோசிக்க வில்லை. “நிர்மல் உங்களை மாதிரியே இருப்பாங்க. அதான் பிடிக்கும்”, என்று பட்டென்று வந்தது அவள் பதில். 

அவள் சொன்னதைக் கேட்டு அவன் அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான். சத்தியமாக இப்படி ஒரு பதிலை அவன் அவளிடம் இருந்து எதிர் பார்க்க வில்லை. அவன் அமைதியாக இருக்க “நான் போகட்டா?”, என்று கேட்டாள் வெண்மதி.

“இன்னும் ஒரே ஒரு கேள்வி. நிர்மல் கிட்ட உனக்கு பிடிச்ச விஷயம் என்னது மதி?”, என்று சங்கடமாக கேட்டான். அவனுக்கு உண்மையிலே அவளிடம் நிர்மல் பற்றி பேச சங்கடமாக தான் இருந்தது.

அதற்கும் அவள் எதுவும் யோசிக்கவே இல்லை. “நிர்மலோட கண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா அவங்க கண்ணு உங்க கண்ணு மாதிரியே இருக்கும். உங்களை மாதிரியே என்னை மதின்னு கூப்பிடுவாங்க. அதுவும் பிடிக்கும். நீங்க சிரிக்கிற மாதிரியே அவங்களும் சிரிப்பாங்க. அதுவும் பிடிக்கும். சரி நேரம் ஆச்சு? வேற கேள்வி இருந்தா சாயங்காலம் கேளுங்க. நான் போறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

பிரம்மை பிடித்தது போல நின்றவன் அடுத்த பத்து நிமிடம் கழித்து தான் வண்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றான். அங்கு சென்ற பின்னரும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. உடனே செந்திலை அழைத்து அவள் சொன்னதைச் சொல்ல “இப்பவாது உனக்கு புரியுதா? அவளை பொண்ணு பாக்க வந்த நிர்மல் உன்னை மாதிரி இருந்ததுனால தான் அவ ஓகே சொல்லிருக்கா. இன்னொரு காரணம் அவ அப்பாக்கு பயந்து சரின்னு சொல்லிருப்பா. ஆனா அவ விரும்பினது உன்னைத் தான். அதான் அவ அச்சு அசலா உன்னையே வரைஞ்சது. அவ அடி மனசுல நிர்மலைப் பத்தி நினைப்பு இருந்தாலும் அவ அதை மறந்துட்டு உன் கூட தான் வாழ நினைக்கிறா. நீ தான் நிர்மலை பிடிச்சு தொங்கிக்கிட்டு அவளை விட்டு விலகி இருக்குற? இனியாவது அவ கிட்ட மனசு விட்டுப் பேசு மச்சான்”, என்று சொல்லி போனை வைத்தான். 

சரவணனுக்கு அன்று சந்தோஷமாக இருந்தது. தன்னுடைய மனைவியும் தன்னைப் போலவே தன்னை விரும்பி இருக்கிறாள் என்று புரிந்தது. இனி அவளிடம் பேச அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை. அவளை நெருங்கவும் அவனுக்கு சங்கடமோ தயக்கமோ இல்லவே இல்லை. அவள் அவனுக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற உண்மை புரிய அவன் மனதில் பல காதல் பூகம்பங்கள். 

மதிய உணவு இடைவேளையில் அவளை அழைத்தான் சரவணன். இந்த நேரம் எல்லாம் அவன் அழைக்க மாட்டான் என்பதால் அவன் அழைப்பு அவளுக்கு திகைப்பாக தான் இருந்தது.

அதை எடுத்து “சொல்லுங்க”, என்றாள்.

“சாப்பிட்டியா டி?”

“இந்த டியை விட மாட்டீங்களா?”, என்று அவள் சலிப்புடன் கேட்க “ஏன் நான் டி சொல்லக் கூடாதா?”, என்று குழைந்து வந்தது அவன் குரல். 

அவன் குரல் அப்படிக் கேட்கவும் உதட்டைக் கடித்து தன்னுடைய உணர்வுகளை அடக்கியவள் “கூப்பிடலாமே? யார் வேண்டாம்னு சொன்னது?”, என்றாள். 

“கண்டிப்பா இனி அப்படி தான் கூப்பிடுவேன். சரி நீ வேலையைப் பாரு. சாயங்காலம் பாப்போம்”, என்று சொல்லி போனை வைத்தான். இருவரின் உதடுகளிலும் அழகான புன்னகை உதயமானது. எதற்கு அழைத்தான் என்று அவனும் சொல்ல வில்லை. அதை அவளும் கேட்க வில்லை. 

அன்று மாலை அவளை அழைக்க வந்திருந்த சரவணனை தயக்கமாக ஏறிட்டுப் பார்த்தாள் வெண்மதி. பார்த்தவள் அதிர்ந்து தான் போனாள். ஏனென்றால் அவன் பார்வை அவளையே தான் தின்று விடுவது போல பார்த்தது.

“கடவுளே இது என்ன புதுசா இப்படி எல்லாம் பாக்குறார்?”, என்று எண்ணியவளுக்கு படபடப்பாக இருந்தது. 

“மதி”, என்று அவன் உருக்கமாக அழைக்க அவனை வெட்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். “ஏறு டி போகலாம்”, என்று சொல்ல வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைத்த படி அவன் பின்னே ஏறி அமர்ந்தாள். 

“தள்ளி உக்காரு டி. அப்ப தான் வண்டி நகரும்”, என்று அவன் சொல்ல “இதுக்கு மேல தள்ளி உக்கார பின்னாடி இடம் இல்லை”, என்றாள் வெண்மதி.

“நான் பின்னாடி தள்ளி உக்காரச் சொல்லலை. முன்னாடி தள்ளி உக்காரச் சொன்னேன்”, என்று அவன் சொல்ல திகைத்து போனாள் வெண்மதி.

“விளையாடாதீங்க, வண்டியை எடுங்க”

“நான் என் விளையாட்டை ஆரம்பிக்கவே இல்லை டி? இப்ப நீ தள்ளி உக்காந்தா தான் வண்டி நகரும்”

“ஐயோ, ஸ்கூல் முன்னாடி வச்சு எதுக்கு இப்படி வம்பு பண்ணுறீங்க?”

“என் பொண்டாட்டி கிட்ட எங்க வச்சும் வம்பு பண்ணுவேன். நீ தள்ளி உக்காரு”, என்று அவன் நிலையாக நிற்க கொஞ்சம் அவன் பக்கமாக தள்ளி அமர்ந்தவள் “தள்ளி உக்காந்துட்டேன் போதுமா? வண்டியை எடுங்க”, என்றாள். கூடவே அவன் வம்பை ரசிக்கவும் செய்தாள். 

“இது பத்தாது டி, இன்னும் ஒட்டிக்கோ”, என்று அவன் சிணுங்க “பிளீஸ், எனக்கு என்னவோ போல இருக்கு”, என்று சொன்னாள். அவள் கையை எடுத்து தன்னுடைய வயிற்றைச் சுற்றி படர விட்டவன் அதற்கு பின்னே தான் வண்டியை எடுத்தான். 

அவளது மேனி முழுவதும் அவன் மீது ஒட்டி இருக்க அவளுக்கு படபடப்பாக இருந்தது. பத்தாத குறைக்கு வயிற்றில் இருந்த அவளது கையை சற்று தூக்கி அதில் முத்தம் வைக்க வெண்மதி இந்த உலகத்திலே இல்லை.

அவளை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு டீ குடித்து விட்டு கிளம்பும் போது “என் கூடவே வந்துறியா டி? எனக்கு உன் கூடவே இருக்கணும் போல இருக்கு? இந்த நிமிசமே உன்னைக் கட்டிப் புடிச்சு உன் கூட வாழனும் போல இருக்கு”, என்று மனதில் இருப்பதை சொல்லியே விட்டான்.

அவளுக்கு அவன் சொன்னதைக் கேட்டு வியப்பாக இருந்தது. தர்மசங்கடமாக அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுக்கும் ஆசையாக தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய என்று தெரியாமல் அமைதியாக இருக்க “நீ இல்லாம எனக்கு நம்ம ரூம்ல இருக்கவே பிடிக்கலை டி. தினமும் மொட்டை மாடில தான் படுக்குறேன், தெரியுமா?”, என்றான்.

“ஆமா இருக்குறப்ப கண்டுக்கலை. இப்ப வந்து…”, என்று உளறி நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“அதுக்கு பழி வாங்குறியா டி?”

“அப்படி எல்லாம் இல்லை. ஆடி முடியட்டும். வந்துறேன்”

“சரி டி, நான் கிளம்புறேன்’

“நைட் கால் பண்ணுவீங்களா?”

“பண்ணுவேன் டி. உன் கிட்ட பேசினா தான் எனக்கு தூக்கம் வரும்”, என்று சொன்னவன் ஒரு பறக்கும் முத்ததைக் கொடுத்து வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தை பார்த்து விட்டே அங்கிருந்து சென்றான். 

தனிமை கிடைத்திருந்தால் அந்த பறக்கும் முத்தம் அவள் உதடுகளுக்கு நேராக சென்றிருக்கும். ஆனால் குற்றாலமும் விசாலமும் வீட்டில் இருக்கும் போது என்ன செய்வது? அதனால் தான் கிளம்பி விட்டான்.

இரவு அவன் அழைப்பதற்கு முன்பே அவள் அழைத்து விட்டாள். அவள் அழைப்பில் அவன் மனம் உவகை கொண்டது. அவள் தேடலில் சிறு கர்வம் கூட உண்டானது. 

“சாப்பிட்டியா டி?”, என்று ஆரம்பித்து வெகு நேரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான். அவளும் அவளுடைய தயக்கம் உதறி அவனிடம் நிறைய பேசினாள். முதல் நாள் சந்திப்பை, டிக்கட் எடுத்திருப்பானா என்று பயந்ததை அவள் சொன்னாள் என்றால் அவன் அவளை சைட் அடித்ததையும் அவள் அப்போது அணிந்திருந்த உடைகளைப் பற்றியும் அவன் சொன்னான். 

பஸ்ஸில் அவள் விழப் போகும் போது தடுக்கி விழுந்து அவன் அணைப்பில் நின்றது, கோவிலில் அவன் அவளை பாலோ செய்தது, ஒவ்வொரு நாளும் அவள் அவனுக்காக ஏங்கி அவனைத் தேடியது, அவன் உருவத்தை படமாக வரைந்தது, திருமணம் முடிந்த அடுத்த நாள் காலை அவள் உடை விலகி இருந்தது என அனைத்தையும் பேசினார்கள். இருவரும் மனம் திறந்து வெகு நேரம் பேசி விட்டு படுக்கச் சென்றார்கள். 

அந்த பேச்சில் ஒரு முறை கூட நிர்மல் பெயர் வரவே இல்லை. இருவருமே மனதளவில் நிர்மலை மறக்க முயன்றார்கள். அவர்களை பொறுத்தவரை நிர்மல் மற்றும் வைஷ்ணவி என்பவர்கள் முடிந்து போன அத்தியாயங்கள். அதை மீண்டும் புரட்டிப் பார்க்க இருவருமே விரும்ப வில்லை. 

இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க ஒரு நாள் மாலை பள்ளியில் இருந்து வெண்மதியை அவளுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றான். இப்போதெல்லாம் அவன் சொல்லாமலே அவள் அவனை நெருங்கி அமர்ந்து கொள்கிறாள். அது சந்தோஷமாக இருந்தாலும் அவனுக்குள் தாபம் எழுந்து அவனை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது. 

அன்றும் அவன் மேல் சாய்ந்தவாறு அவள் அமர்ந்திருக்க அவனோ அமைதியாக வந்தான். “என்ன ஆச்சு புரபஸர் சார், அமைதியா வரீங்க?”, என்று சிரிப்புடன் கேட்டாள். இப்போதெல்லாம் வெண்மதி அவனிடம் சகஜமாக தான் பேசுகிறாள்.

“டீச்சரம்மா கிட்ட இருந்து ஒரு முத்தம் கூட கிடைக்க மாட்டிக்குதுன்னு விரக்தி தான் வேற என்ன?”, என்று அவன் சொல்ல அவள் முகம் சிவந்தது. அதை கண்ணாடி வழியே ஆசையாக பார்த்தான்.

“என்ன டி அமைதியாகிட்ட? ஒண்ணே ஒண்ணு கொடுத்தா என்னவாம்?”, என்று அவன் வெளிப்படையாகவே கேட்க அவளுக்கு தான் வெட்கமாக இருந்தது.

“கேக்குற இடத்தையும் நேரத்தையும் பாரு”, என்று அவள் முணுமுணுக்க “என்ன செய்ய? நீ என்னை விட்டு போன பிறகு தான் எனக்கு பல்ப் எரிஞ்சிருக்கு. சரி இப்ப கேக்குறேன்ல? கொடேன்”, என்றான்.

அவன் கேட்டதும் அவளுக்கு கொடுக்க ஆசை தான். ஆனால் ரோட்டில் போய்க் கொண்டிருக்கும் போது கேட்டால் அவளால் என்ன செய்ய முடியுமாம்? 

“விளையாடாம வண்டியை நேராப் பாத்து ஓட்டுங்க”

“ஏன் டி, தர மாட்டியா?”, என்று ஏக்கமாக கேட்டான். அவன் குரலில் பொங்கி வழிந்த தாபம் அவளுக்குள் இறங்கியது, உதட்டைக் கடித்து தன்னுடைய உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள். 

“ரோட்ல வச்சா தர முடியும்?”, என்று அவள் தயக்கத்துடன் கேட்க “மனசு இருந்தா தரலாம்”, என்றான் அவன். வெட்கத்துடன் அவன் முதுகில் அழுத்தமாக தன்னுடைய இதழைப் பதித்தாள். அதுவே அவனுக்கு ஜிவ்வென்று இருந்தது. 

ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு “இது முத்தமா? எனக்கு இதெல்லாம் பத்தாது. லிப்ஸ்ல வேணும்”, என்று சொல்லி வம்பிழுக்க அவன் கெஞ்சிக் கேட்டும் அதை கொடுக்க முடியாத தன்னுடைய நிலையை எண்ணி அவள் கண்கள் கலங்கி விட்டது .

“ஏய் மதி, என்ன ஆச்சு? நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டி? பீல் பண்ணாத. எப்ப வசூல் பண்ணனுமோ அப்ப வட்டியும் முதலுமா வாங்கிக்கிறேன்”, என்று சொல்ல சிறு சிரிப்புடன் அவன் தலையில் கொட்டினாள்.

அன்று அவன் ஏக்கம் கடவுளை எட்டியதோ என்னவோ? அவனது ஆசையை நிறைவேற்ற கடவுள் சித்தமாக இருந்தார் போல? அவர்கள் வெண்மதியின் வீட்டுக்குப் போன போது வீட்டில் யாருமே இல்லை. மருது மட்டுமே அங்கே இருந்த தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.

அவர்களைக் கண்டதும் தோட்டத்தில் இருந்து வந்தவன் “பாப்பா ஐயாவும் அம்மாவும் உங்க சொந்தக்காரங்க வீட்டு விஸேசத்துக்கு போயிருக்காங்க. நீ வந்தா சொல்லச் சொன்னாங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவாங்களாம். உனக்கும் தம்பிக்கும் அம்மா காபி போட்டு பிளாஸ்க்ல வச்சிருக்காங்களாம். வடை வேற சுட்டு வச்சிருக்காங்க. தம்பிக்கு எடுத்து கொடுப்பியாம்”, என்றான் மருது.

“சரிண்ணா. நீங்க காபி குடிச்சிங்களா?”

“எனக்கு அம்மா கொடுத்துட்டு தான் போனாங்க மா. நான் உங்க கிட்ட தகவல் சொல்ல தான் இங்க இருந்தேன். சரி நான் வயலுக்கு போறேன்”, என்று அவளிடம் சொன்ன மருது “தம்பி அம்மா அப்பா வரைக்கும் பாப்பாக்கு துணையா இருக்கீங்களா? கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க”, என்று அவனிடமும் கேட்டான்.

“நான் பாத்துக்குறேன் அண்ணா நீங்க கிளம்புங்க. அத்தை மாமா வந்த பிறகே நான் போறேன்”, என்று சொன்ன சரவணன் வீட்டுக்குள் சென்றான். “பாப்பா போயிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான் மருது.

காதல் வெடிக்கும்….. 

Advertisement