மகள் மற்றும் மருமகன் முகத்தில் இருந்த குழப்பத்தைக் கண்ட குற்றாலம் “நாங்களே இன்னைக்கு வெண்மதியை இங்க கூட்டிட்டு வரணும்னு தான் நினைச்சோம் மாப்பிள்ளை. அதுக்குள்ள நீங்களே கூட்டிட்டு வந்துட்டீங்க? அவ மட்டும் இங்க இருக்கட்டும். நீங்க மட்டும் போய்ட்டு வாங்க”, என்று மீண்டும் சொன்னார்.
இருவரும் அவரைத் திகைப்பாக பார்க்க “இன்னைக்கு ஆடி ஒண்ணு. இந்த மாசம் வெண்மதி எங்க வீட்ல தான் இருக்கணும். அதை தான் உங்க மாமா அப்படிச் சொல்லிட்டு இருக்கார் மாப்பிள்ளை”, என்று விசாலம் சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டார்கள்.
அவர்களிடம் முகம் மாறாமல் “சரி மாமா”, என்று சொன்னவன் தனியே அவளை முறைக்கத் தவற வில்லை. அவளுக்கு தான் அவனைக் கண்டு சிரிப்பாக வந்தது. “சிரிக்கிரியா டி? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?”, என்று சொல்லி விட்டுச் சென்றான். இந்த பிரிவை எண்ணி அவளுக்கும் கஷ்டமாக தான் இருந்தது. அங்கிருந்து கோபப் பட்டு பிறந்த வீட்டுக்கு வந்தது அவள் தான். ஆனால் அவன் இல்லையென்றால் அவள் ஏது?
இருவரின் வீட்டுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கூட குறைவு தான். நினைத்த நேரத்தில் அவளைப் பார்க்கலாம் தான். ஆனால் அவள் தூரத்தில் இருப்பது போல அவனுக்கு தோன்றியது.
அவளை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவனுக்கு நிம்மதியே இல்லை. “கவலைப் படாதே சரவணா, என் மருமகளுக்கு ரொம்ப நாள் எல்லாம் கோபப் படத் தெரியாது. ரெண்டு நாள்ல வந்துருவா டா”, என்று ஆறுதல் சொன்னாள் வசந்தா.
“அட போ மா, நான் அங்க இருந்து கிளம்பும் போதே அவ என் கூட வறேன்னு தான் சொன்னா”
“அப்புறம் ஏன் டா அவளை விட்டுட்டு வந்த?”
“நானா விட்டுட்டு வரேன்? மாமாவும் அத்தையும் தான் அவளை என் கூட அனுப்பலை”
“அதெல்லாம் இல்லை மா. இன்னைக்கு ஆடி மாசம் ஆரம்பிக்குதாமே? அதான். இந்த ஆடி மாசத்தை கண்டு பிடிச்சவன் என் கையில் கிடைச்சான்…?”, என்று அவன் புலம்ப வசந்தாவுக்கும் மகனைக் கண்டு சிரிப்பு தான் வந்தது.
சாந்தி தன்னுடைய பேச்சால் தான் வெண்மதி அங்கே சென்று விட்டாள் என்று சக்திவேலிடம் கவலைப் பட்டுச் சொல்ல அவர் மனைவியைக் கடிந்து கொண்டார். பூர்ணிமாவும் அன்னையை திட்டினாள்.
சரி ஆடி மாதம் முடியட்டும், பிறகு பேசிக் கொள்ளலாம் என்று பெரியவர்கள் விட்டு விட்டார்கள். ஆனால் செந்திலும் பூர்ணிமாவும் விட வில்லை.
“அம்மா, ஏதோ தெரியாம பேசிட்டாங்க. அதுக்கு கோபப் பட்டு உன் வீட்டுக்கு போவியா? அம்மாவை திருப்பி திட்டிருக்கலாம்ல?”
“அத்தை மேல எனக்கு கோபமே இல்லை டி”
“அப்படின்னா என் அண்ணன் மேல கோபமா?”
“கோபம்னு இல்லை டி. அவங்க மேல எனக்கு எப்படி கோபம் வரும்? ஏதோ ஒரு வருத்தம் அவ்வளவு தான். அதான் கிளம்பி வந்தேன். ஆனா அவங்க கூட திரும்பி வர ரெடியா தான் டி இருந்தேன். ஆனா அப்பா அம்மா விடலை. அப்ப உங்க அண்ணா முகத்தைப் பாக்கணுமே? பாவமா இருந்துச்சு”
“கொஞ்ச நாள் தானே? சரி என் அண்ணா மேல உனக்கு என்ன வருத்தம்? அதைச் சொல்லு முதல்ல”
அவள் அமைதியாக இருக்கவும் “இப்ப நீ சொல்லியே ஆகணும் வெண்மதி”, என்றாள் பூர்ணிமா.
“உங்க அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அவங்க விலகி விலகிப் போறது எனக்கு பிடிக்கலை. அதான் வருத்தம் போதுமா? நீ தப்பா நினைச்சாலும் பரவால்ல. என்னை அலையுறேன்னு சொன்னாலும் பரவால்ல”
“லூசா டி நீ? புருஷன் கிட்ட பொண்டாட்டி இதை எல்லாம் எதிர் பார்க்க தான் செய்வா. இதுக்காக உன்னை நான் தப்பா நினைப்பேனா? சரி நான் ஒண்ணு கேக்கவா? உனக்கு எங்க அண்ணாவை பிடிக்கும்னு நீ அவன் கிட்ட சொன்னியா?”
“இல்லை டி பூர்ணி”
“இங்க பாரு வெண்மதி, உனக்கு அவனை ரொம்ப பிடிக்கும்னு அவனுக்கும் தெரியும். அதே மாதிரி அவனுக்கு உன்னைப் பிடிக்கும்னு உனக்கும் தெரியும். அப்படித் தானே?”
“ஆமா, ஆனா இந்த விலகல்…..”
“அதுக்கு காரணம் நீ தான் வெண்மதி”
“நானா?”
“ஆமா, நீ நிர்மல் அண்ணாவை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணின? அப்படின்னா நிர்மல் அண்ணா உன் மனசுல இருக்காங்கன்னு தானே எங்க அண்ணன் நினைப்பான்? நீ புது வாழ்க்கைக்கு தயாராகி எங்க அண்ணனை முழு மனசா விரும்புறேன்னு அவனுக்கு எப்படி தெரியும்?”
“பூர்ணி, நானே அதை எப்படிச் சொல்ல முடியும்?”
“அப்ப அவனும் எப்படி அவன் மனசுல உள்ளதை வெளிய சொல்லுவான்? அவன் ஒரு அடி எடுத்து உன் பக்கம் வந்தா நீ உன் தயக்கத்தை உதறி ரெண்டு அடி எடுத்து வச்சு அவன் பக்கம் போ. அவனே வராட்டி கூட நீ அவனை இழுத்து வச்சிக்கோ. கணவன் மனைவிக்குள்ள இதெல்லாம் சகஜம் டி. இங்க ஈகோ பாக்குறதுல அர்த்தமே இல்லை. உன்னை விட்டு விலகுறான்னு வருத்தப் படுற நீ அவன் சட்டையைப் பிடிச்சு அதை அவன் கிட்டே கேட்டுருந்தா இந்த பிரச்சனை முடிஞ்சிருக்கும்”
“தயக்கமா இருந்துச்சு டி”
“அதே தயக்கம் தான் அவனுக்கும் இருக்கு. அப்புறம் அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உன்னைக் கஷ்டப் படுத்திறக் கூடாதுன்னு தான் விலகி இருக்கான். உனக்கும் நிர்மல் அண்ணாவுக்கும் கல்யாணம் முடியலைன்னா அவன் உன் கிட்ட வந்து காதலைச் சொல்லிருப்பான். இல்லைன்னா எங்க பெரியப்பா கிட்ட சொல்லி உன்னை பொண்ணு கேக்க வச்சிருப்பான்”
“என்ன டி சொல்ற?”
“ஆமா, உனக்கு கல்யாணம்னு தெரிஞ்ச அப்புறம் தான் அவன் விலகி இருந்தான். நிர்மல் அண்ணா இறந்த பிறகும் அவன் உன்னைத் தான் கல்யாணம் பண்ணணும்னு நினைச்சான்? ஆனா பேசத் தெரியாம பேசி வீட்ல சொதப்பிட்டான். இப்ப நீயும் சொதப்பாத மதி. ஆடி மாசம் முடியுற வரைக்கும் தான் உனக்கு டைம். அதுக்குள்ள அவனை முழுசா புரிஞ்சிக்கப் பாரு. அப்படி புரிஞ்சிக்க முடியலைன்னாலும் உன் மனசை அவனுக்கு புரிய வை. அவனை தொடணும் போல இருந்தா தொடு. அடிக்கணும் போல இருந்தா அடி. முத்தம் கொடுக்கணும் போல இருந்தா கொடு. கடிக்கணும் போல இருந்தா கடிச்சு வை. கொஞ்சம் உன் தயக்கத்தை அவனுக்காக விட்டுக் கொடு வெண்மதி”
“சரி டி, செக்கப் போனியே? டாக்டர் என்ன சொன்னாங்க?”
“பேபி நல்லா இருக்குனு சொன்னாங்க டி. சரி, எங்க அண்ணன் கால் பண்ணி பேசினா நீ முறுக்கிக்கிட்டு இருக்காம அவன் கிட்ட நல்லா பேசு. பழைய விஷயங்களை எல்லாம் மறந்துருங்க. இப்ப நீயும் அவனும் மட்டும் தான். அவனை புதுசா இப்ப தான் பாக்குறேன்னு நினைச்சு வாழ்க்கையை ஆரம்பி”, என்று சொல்லி போனை வைத்தாள்.
அதே நேரம் செந்தில் சரவணனிடம் “வெண்மதி எதுக்கு டா கோபப் பட்டு அவ வீட்டுக்கு போனா?”, என்று கேட்டான்.
“அது..”
“சாந்தி அத்தை சொன்னதுக்கா?”
“சித்தி சொன்னது அவளுக்கு வருத்தம் தான். ஆனா அவ அதுக்காக போகலை. எனக்கு அவளைப் பிடிக்கலைன்னு நினைச்சு போனா”
“ஆமா உனக்கு ஏன் அவளைப் பிடிக்கலை?”
“என்ன டா இப்படி கேக்குற? எனக்கு அவளை மட்டும் தான் டா பிடிக்கும்”
“இதை அவ கிட்ட நீ சொன்னியா மச்சான்?”
“உடனே எல்லாம் பேசிற முடியுமா? அவளுக்கு மனசு மாற கொஞ்சம் டைம் கொடுக்கணும்ல?”
“அவ கேட்டாளா உன் கிட்ட எனக்கு டைம் வேணும்னு? இல்லை என் மனசுல நிர்மல் இருக்காங்க. அவங்களை மறக்குற வரைக்கும் என் கிட்ட இருந்து விலகி இருங்கன்னு அவ சொன்னாளா?”
“இல்லை டா, நானா தான் அப்படி யோசிச்சு….”, என்று தயக்கத்துடன் சொன்னான் சரவணன்.
“லூசு, முதல்ல அவளுக்கு நிர்மலை ஏன் பிடிக்கும்னு தெரியுமா டா உனக்கு?”
“நல்லவனா இருந்துருப்பான். அழகாவும் இருக்கான். அதான் பிடிச்சிருக்கும்”, என்று சொல்லி தோளைக் குலுக்கினான்.
“ஓஹோ, சரி நாளைக்கு நீ அவளை ஸ்கூல்ல விடப் போவல்ல? போவ தானே?”
“கண்டிப்பா போவேன் டா. அவளைப் பாக்குற சான்ஸை எப்படி மிஸ் பண்ணுவேன்?”
“ரொம்ப சந்தோஷம். அப்ப அவ கிட்ட ரெண்டு கேள்வி கேளு. முதல் கேள்வி உனக்கு எதுக்கு நிர்மலை பிடிக்கும்னு கேளு. ரெண்டாவது கேள்வி நிர்மல் கிட்ட உனக்கு பிடிச்ச விஷயம் என்னதுன்னு கேளு. இந்த ரெண்டு கேள்வியையும் அவ கிட்ட கேட்டுட்டு அப்புறம் உன் மனசுல என்ன தோணுதோ அதை அப்படியே அவ கிட்ட பேசு. இந்த ரெண்டு கேள்விக்கும் எனக்கு விடை தெரியும். ஆனா அவ வாயால அதைச் சொல்லி நீ கேக்கணும்”, என்று அறிவுரை சொன்னான் செந்தில். சரி என்று கேட்டுக் கொண்டான் சரவணன்.
அன்று இரவு அவனுக்கு உறக்கம் வராமல் இருந்தது. உடனே தன்னுடைய தயக்கம் உதறி அவளை அழைத்து விட்டான். அவளுக்கும் அவன் அழைப்பு வந்ததும் சந்தோஷமாக இருந்தது.
அவள் அழைப்பை எடுத்ததும் “ஹலோ மதி”, என்றான்.
“ஆன் சொல்லுங்க”
“தூங்கிட்டியா?”
“இல்லை”
“சாப்பிட்டியா?”
“ஆமா, நீங்க சாப்டாச்சா?”
“சாப்பிட்டேன்”
“அத்தை மாமா என்ன பண்ணுறாங்க?”
“தூங்க போயிட்டாங்க. என்னோட அத்தை மாமா என்ன பண்ணுறாங்க?”
“இங்கயும் அப்படி தான்”
“நாளைக்கு காலைல கிளம்பி இரு. நானே உன்னை ஸ்கூல்ல கொண்டு போய் விடுறேன்”
“கண்டிப்பா வருவீங்களா?”, என்று அவள் ஆவலாக கேட்க அது அவனுக்கு புரிந்தது.
“கண்டிப்பா வருவேன் டி. சரி தூங்கு. காலைல பாப்போம்”, என்று சொல்லி போனை வைத்தான். அவளிடம் பேசிய பிறகு தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. அவளுக்கும் அப்படித் தான். அது வரை உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள் அவன் பேசியதும் நன்கு உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் அவளை அழைக்க அவளது வீட்டுக்கு வந்திருந்தான் சரவணன். குற்றாலம் அவனை வீட்டுக்குள் அழைத்தார். பள்ளிக்கு நேரம் ஆனதால் வெண்மதியே கிளம்பி வெளியே வந்து விட்டாள். பெரியவர்களிடம் சொல்லி விட்டு இருவரும் கிளம்பினார்கள்.