அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் படுத்து விட அவன் மீண்டும் எழுந்து விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டான். அவனுக்கு தன்னைப் பிடித்திருக்கிறது என்றால் எதற்காக இந்த விலகல் என்று குழம்பிப் போனவளுக்கு அவனிடம் போர்வை கேட்க வேண்டும் என்றும் நினைவில் இல்லை. தன்னுடைய பேகில் இருந்து போர்வையை எடுக்க வேண்டும் என்றும் நினைவில் இல்லை.
வெகு நாட்கள் கழித்து இருவரும் நிம்மதியாக உறங்கினார்கள் என்று சொல்லலாம். காலையில் முதலில் கண் விழித்தது சரவணன் தான். அவனே அறைக்குள் சூரிய ஒளி வந்த பிறகு தான் கண் விழித்தான்.
எழுந்து அமர்ந்து அவளைப் பார்க்க அவள் இருந்த கோலத்தைக் கண்டு சற்று தடுமாறித் தான் போனான். என்ன தான் அவள் மனதுக்காக பார்க்க வேண்டும் என்று முடிவு எடுத்தாலும் கணுக்கால் வரை விலகி இருந்த சேலையையும் அந்த வெளுப்பான வாழைத் தண்டு போன்ற கால்களையும் பார்த்தவனுக்கு சித்தம் கலங்கியது மட்டும் நிஜம்.
அவளது கால்களையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அது தவறு என்று புரிய தயக்கத்துடன் தன்னுடைய கையை நீட்டி அவளது சேலையை இழுத்து விட்டான். அப்போது தான் அவள் காலில் கொழுசு இல்லாதது தெரிந்தது.
அதைப் பற்றி கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு குளிக்கச் சென்று விட்டான். குளித்து முடித்து வந்த பிறகு அவளை தொந்தரவு செய்யாமல் அவன் வெளியே சென்று விட அவளோ நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
பூர்ணிமா வந்து எழுப்பவும் தான் திகைத்து எழுந்து அமர்ந்தாள். “ஐயோ சாரி பூர்ணி, ரொம்ப நேரம் தூங்கிட்டேனா?”, என்று அவள் படபடப்பாக கேட்க “இல்லை டி, மணி ஜஸ்ட் ஒன்பது பத்து தான் ஆகுது”, என்று சிரித்தாள் பூர்ணிமா.
“என்னது ஒன்பதா?”, என்று கேட்டவளின் கண்கள் கலங்கி விட்டது. அதைப் பார்த்த பூர்ணிமா “வெண்மதி, இப்ப எதுக்கு இவ்வளவு உணர்ச்சி வசப் படுற? இத்தனை நாள் நீ நிம்மதியா தூங்கிருக்க மாட்ட. அதான் இன்னைக்கு அசந்து தூங்கிட்ட. இது என்ன கொலைக் குத்தமா? இது உன் வீடு டி. நீ தான் இங்க மகாராணி. உன்னை யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க. பெரியம்மாவும் பெரியப்பாவும் உன்னை மகளா தான் பாக்குறாங்க. இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகலாமா?”, என்று கேட்டாள்.
“அத்தை மாமா எல்லாம் என்ன நினைப்பாங்க? அதுவும் முதல் நாளே இப்படி தூங்கினா?”
“யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க வெண்மதி. எங்க அம்மா என்னை எழுப்பும் போது தூங்குற பிள்ளையை எதுக்கு எழுப்புறேன்னு பெரியம்மா அம்மாவைத் திட்ட தான் செய்வாங்க தெரியுமா? சரி அதை விடு. நைட் எல்லாம் ஓகே தானே?”, என்று கேட்டு கண்ணடித்தாள் பூர்ணிமா.
“உங்க அண்ணன் எனக்கு பிரண்டாம், அதைச் சொல்லிட்டு தூங்கிட்டார் டி”, என்று வெண்மதி சிறிது கோபத்துடன் சொல்ல “அண்ணா சொதப்பிட்டானா?”, என்று கேட்டாள் பூர்ணிமா.
“அதை விடு பூர்ணி, நீ வரும் போது என்ன கோலத்துல நான் இருந்தேன்?”, என்று தயக்கமாக கேட்டாள்.
“என்ன கேக்குற நீ?”
“இல்லை டி, நீ வரும் போது நான் எப்படி படுத்திருந்தேன்?
“என்ன கேக்குற? எனக்கு புரியலை”
“இல்லை டி, என் டிரஸ் எல்லாம் விலகி இருந்துச்சா டி?”
“ஏன் அப்படிக் கேக்குற?”
“தூக்கத்துல கண்டிப்பா டிரஸ் மேல போயிருக்கும் டி. நேத்து உன் அண்ணா மேல இருந்த கோபத்துல போர்வை கூட எடுக்கலை. நீ வரும் போது எப்படி படுத்திருந்தேன். பிளீஸ் சொல்லு”
“நான் வரும் போது சரியா தான் படுத்திருந்த. சும்மா எல்லாத்துக்கும் பயப்படாத மதி. அப்படி ஒரு வேளை விலகி இருந்திருந்தா எங்க அண்ணா கூட சரி பண்ணிருக்கலாம்”, என்று அவள் சிறு சிரிப்புடன் சொல்ல அதிர்ந்து போய் அவளைப் பார்த்தாள் வெண்மதி.
“சும்மா சொன்னேன் டி. புது இடம்ல? அதனால அலர்ட்டா படுத்திருப்ப? சரி போய் குளிச்சிட்டு வா”, என்று சொல்ல அரை மனதாக குளிக்கச் சென்றாள். அவள் குளித்து வந்ததும் பூர்ணிமாவுடனே கீழே சென்றாள். வசந்தா ஏதாவது சொல்வாளோ என்று பயம் வந்தது தான். ஆனால் அவள் ஒன்றும் சொல்லாதது மட்டும் இன்றி அவளை பாசமாக கவனித்துக் கொண்டதும் கொஞ்சம் சகஜமாக உணர்ந்தாள் வெண்மதி.
அதற்கு பின் சரவணன் அவளை அழைத்துக் கொண்டு மறு வீட்டுக்கு அவளது வீட்டுக்குச் சென்றான். குற்றாலம் மற்றும் விசாலம் இருவரும் அவர்களை நன்கு கவனித்துக் கொண்டார்கள். மகளின் முகத்தில் இருந்த சந்தோஷம் அவர்கள் மனதையும் நிறைத்தது.
அன்று இரவு அங்கேயே தங்கினார்கள். அவளது அறையில் அவன் இருக்க அவளுக்கு அனைத்துமே பிரம்மிப்பாக இருந்தது. படுக்கும் போது ஒரு போர்வையை எடுத்து அவள் மூட “இந்த வெக்கைக்குள்ள எதுக்கு மூடுற மதி?”, என்று கேட்டான்.
“அது… அது வந்து…”, என்று திணறியவளுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.
“எனக்கு புரிஞ்சிருச்சு. விடு”, என்று அவன் சிறு சிரிப்புடன் சொல்ல “என்னது?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டாள்.
“இப்ப எதுக்கு இப்படி அதிர்ச்சியாகுற? காலைல நல்ல தரிசனம் கிடைச்சது. நாளைக்கு தான் கிடைக்காது”, என்ற படி அவன் போர்வையை முறைக்க அவளுக்கு தான் வெட்கமாக போனது..
“ரொம்ப மோசமான நிலைமைல இருந்தேனா?”, என்று அவள் தயக்கத்துடன் கேட்க “பெருசா ஒண்ணும் தெரியலை மதி. குட் நைட்”, என்று சொல்லி படுத்து விட்டான். அவளுக்கு தான் வெட்கமாக இருந்தது.
அடுத்த நாள் அங்கு விருந்தை முடித்து விட்டு அவனது வீட்டுக்கு வந்தார்கள். அன்றைய நாள் முழுவதும் அவளுடைய உடைகளை பூர்ணிமாவுடன் சேர்ந்து அடுக்குவதிலே அவள் நேரம் கழிந்தது. சரவணன் செந்திலுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தான்.
அவர்கள் வாழ்க்கை இன்னும் நேராக வில்லை என்று செந்திலுக்கு புரிந்தது தான். ஆனால் அதில் எப்படி தான் தலையிட முடியும் என்று அமைதியாக இருந்தான்.
அவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு வாரம் ஆகி இருந்தது. வெண்மதி மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள். சரவணன் தான் அவளை பள்ளிக்கு அழைத்துச் சென்றான். அது போக அவனுக்கும் கல்லூரியில் வேலை நிரந்தரம் ஆகி விட்டதால் அவளை பள்ளியில் விட்டுவிட்டு கல்லூரிக்குச் செல்பவன் காலேஜ் முடிந்து வரும் போது அவளை அழைத்து வருவான்.
சில நேரம் அவன் வரத் தமாதமானால் அவளுக்கு அழைத்துச் சொல்லி விடுவான். அவள் பஸ்ஸில் வீட்டுக்குச் சென்று விடுவாள். வெண்மதி அந்த வீட்டில் இயல்பாக பொருந்திப் போனாள். வெற்றிவேல் அவளிடம் அன்பாக பேசினார். அவரின் நகைச்சுவையான பேச்சுக்கு அவள் அடிமை என்று கூட சொல்லலாம்.
வசந்தா அவளுக்கு இன்னொரு அம்மா தான். விசாலம் எப்படி வெண்மதியை ஒரு வேலை செய்ய விட மாட்டாளோ அது போல வசந்தாவும் அவளை ஒரு வேலையும் செய்ய விட வில்லை.
அவள் ஒரு முறை வசந்தாவிடமே “அத்தை எல்லா வேலையும் நீங்களே செய்யுறீங்க? எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நான் செய்யட்டுமா?”, என்று கேட்டாள். அதற்கு “நான் நல்லா தானே டா இருக்கேன்? எனக்கு எப்பவாது உடம்பு சரியில்லைன்னா நீ செய். அது வரை நானே பாத்துக்குறேன். நீ எனக்கு மக மாதிரி. அதனால மத்த மாமியார் மாதிரி நீ வேலை செய்யலைன்னு எல்லாம் நான் நினைக்க மாட்டேன்”, என்று சொல்லி விட்டாள்.
அதே போல சக்திவேலும் அவளிடம் அன்பாக தான் பேசினார். சாந்தியும் பூர்ணிக்கு ஏதாவது வாங்கினால் அவளுக்கும் அதே போல வாங்கிக் கொடுத்தாள். அவ்வப்போது வரும் மூர்த்தி மற்றும் மங்கை கூட அவளிடம் அன்பாக தான் இருந்தார்கள். சில நேரம் மங்கை முகத்தில் இது தங்கள் மகள் வாழ வேண்டிய வாழ்க்கை என்ற எண்ணம் வந்து போகும். ஆனால் அதை வெளியே காட்டிக் கொண்டதில்லை.
பூர்ணிமா பற்றிச் சொல்லவே வேண்டாம். எங்கு சென்றாலும் வெண்மதியை விட மாட்டாள். செந்தில் அவளை உண்மையான தங்கையாக தான் பார்த்தான்.
மொத்தத்தில் சரவணனுடன் வாழும் வாழ்க்கையை தவிர மற்ற அனைத்தும் சரியாக தான் சென்றது. இரவில் வெண்மதி போர்வையை இழுத்து மூடிக் கொண்டதால் வேறு எந்த சங்கடமும் நிகழ வில்லை. அதே போல குளித்து முடித்து கல்லூரிக்கு தயாராகி அவன் வெளியே சென்ற பின்னர் தான் அவள் புடவை கட்டி தயாராகுவாள் என்பதால் அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.
இடையில் ஒரு நாள் மட்டும் “வெண்மதி உன்னோட கொலுசு எங்க?”, என்று கேட்டான் சரவணன். “முன்னாடி கழட்டினது, அப்புறம் அதைப் போடவே இல்லை. நகையோட தான் இருக்கும்”, என்று அவள் சொல்ல “உடனே அதை எடு”, என்றான்.
அவள் தேடி அதை எடுக்க “அதை இங்க கொடு”, என்று வாங்கினான்.
அவள் அவனிடம் அதை நீட்ட அதை வாங்கியவன் “இது அன்னைக்கு கோவில்ல கழண்டு விழுந்தது தான?”, என்று கேட்டான்.
“ஆமா”, என்று சொல்லி அவனைப் பார்த்தாள். அன்றைய நாளின் நினைவு இருவருக்கும் வந்தது போல? சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு அவள் காலருகே மண்டியிட்டு அமர்ந்தான்.
“என்ன பண்ணுறீங்க? எதுக்கு கீழே உக்காருறீங்க?”, என்று பதறினாள். அவனது செய்கையை அவளால் ஒரு நொடி கூட ஜீரணிக்க முடிய வில்லை.