அவள் தயங்கி வாசலில் நிற்பதைப் பார்த்த சரவணன் “ஏய் மதி, வா வா, முதல் முறையா என்னோட ரூமுக்கு வந்திருக்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல் முதலா என்னோட ரூமுக்கு வர என்னோட பொண்டாட்டியை வருக வருக என வரவேற்கிறேன்”, என்று சிறு சிரிப்புடன் வரவேற்க அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது. அவள் சிரித்த படியே உள்ளே வந்து அந்த அறையை நோட்டம் விட்டாள்.

அவனது பொருள்கள் ஆங்காங்கே இருக்க நடுவில் ஒரு பெரிய கட்டில் போடப் பட்டிருந்தது. ஹேங்கரில் அவனது திருமண சட்டை, ஒரு டீசர்ட்ஸ் தொங்கிக் கொண்டிருந்தது. அவளது பைகளும் ஒரு ஓரத்தில் வீற்றிருந்தது. இனி இது தான் அவள் வாழப் போகும் அறை என்பதால் அவள் கண்கள் ஆசையுடன் அந்த அறையைப் பார்த்தது.

“ரூம் புடிச்சிருக்கா மதி?”, என்று அவன் அவளின் வெகு அருகே நின்று கேட்க திகைத்து அவனை திரும்பி பார்த்தாள். அவன் மூச்சுக் காற்று அவள் முகத்தில் வந்து மோதும் தூரத்தில் அவன் நிற்க அவன் அருகாமையில் அவளது இதயம் தாறுமாறாக துடித்தது. அவள் திகைத்து நிற்பதைப் பார்த்தவனுக்கு அப்படியே அவளை இழுத்து அனைத்துக் கொள்ள வேண்டும் போல வேகம் எழுந்தது.

அப்போது “சரவணா இங்க வா பா. வெண்மதி குளிக்கட்டும். நீ சித்தி வீட்டுக்கு போய் பூர்ணிமாவை கூட்டிட்டு வா”, என்று வசந்தாவின் குரல் கேட்க சிறு சிரிப்புடன் “இதோ வரேன் மா”, என்று குரல் கொடுத்தவன் அவளைப் பார்த்தான்.

அவள் தலை குனிந்த படி இருக்க “சோப் எல்லாம் அங்க இருக்கு மதி. எது வேணும்னாலும் எடுத்துக்கோ. புது சோப்பும் போடலாம். இல்லை நான் போட்ட சோப்பைக் கூட போடலாம். இனிமே உன்னோடது எல்லாம் என்னோடது. என்னோடது எல்லாம் உன்னோடது. இது நம்ம ரூம். இங்க நான் தான் ராஜா. நீ தான் ராணி. எந்த தயக்கமும் இல்லாம சுதந்திரமா இருக்கலாம்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான். அதற்கு பின்னர் தான் அவளுக்கு மூச்சு வந்தது. ஆனாலும் அவன் பேச்சு அவளுக்கு சற்று படபடப்பைத் தான் தந்தது.

பாத்ரூமுக்குள் சென்றதும் அவன் உபயோகப் படுத்திய சோப்பைப் பார்க்கும் போது அவளுக்கு சிரிப்பு வந்தது. அதையே எடுத்து போட்டுக் கொண்டாள். அவளுக்கும் இனி அவன் தானே உலகம்?

அவள் குளித்து முடித்து சேலையை எடுத்து கட்ட ஆரம்பிக்க அப்போது “ஹாய் அண்ணி”, என்ற படி அங்கே வந்தாள் பூர்ணிமா.

“என்னது அண்ணியா? ஏய் எப்பவும் போல கூப்பிடு டி”, என்று சிரித்தாள் வெண்மதி.

“சரி டி, அப்புறம் வெண்மதி மேடம். நம்ம வீடு பிடிச்சிருக்கா? அதை விட எங்க அண்ணனை உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று சிரிப்புடன் கேட்டாள்.

“ரொம்ப சீக்கிரமா இந்த கேள்வியை கேட்டுட்ட?”, என்று வெண்மதி சிறு சிரிப்பும் நக்கலுமாக கேட்க “ஏய் நீ இப்படி எல்லாம் ஜாலியா பேசு எவ்வளவு நாள் ஆச்சு டி?”, என்று கேட்டாள் பூர்ணிமா. அதைக் கேட்டு வெண்மதி அமைதியாக இருக்க “சாரி டி”, என்றாள் பூர்ணிமா.

“சாரி எல்லாம் கேக்க கூடாது நாத்தனாரே. இனி அப்படி சாரி கேட்டால் அண்ணி கொடுமையை நான் காட்ட வேண்டியது இருக்கும்”, என்று வெண்மதி சொல்ல சிரிப்பில் பூர்ணிமா முகம் மலர்ந்தது. வெண்மதியை அப்படிப் பார்க்க அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.

“நீயாவது என்னை கொடுமை செய்யுறதாவது? நீ தேவதை டி. எங்க அண்ணனை ரட்சிக்க வந்த தேவதை”

“அதையே நானும் சொல்லலாம்ல? உங்க அண்ணனால தான் என்னோட வாழ்க்கை இவ்வளவு அழகா மாறிருக்கு?”

“சரி நீ அவனுக்கு தேவதை. அவன் உனக்கு ஆண் தேவதை போதுமா? சரி எனக்கு ஒரு டவுட். எனக்கு மட்டும் அந்த சீக்ரட் சொல்லு. நான் கண்டிப்பா யார்க் கிட்டயும் சொல்ல மாட்டேன்”, என்று கிசுகிசுப்பாக கேட்டாள் பூர்ணிமா.

“என்னது டி? என்ன சீக்ரெட்?”

“எங்க அண்ணனை உனக்கு பிடிக்கும்னு இப்ப தெரியும். ஆனா அவனை உனக்கு எப்ப பிடிக்க ஆரம்பிச்சதுன்னு தெரியாது? அவனை உனக்கு எப்ப பிடிச்சது?”, என்று அவள் கேட்க “ஆன் அது… அது வந்து… இப்ப கல்யாணம் நிச்சயம் ஆன பிறகு தான்”, என்று உளறினாள் வெண்மதி.

“அப்படீங்களா அண்ணியாரே. நீங்க சொன்ன பொய்யை நாங்க நம்பிட்டோம் நம்பிட்டோம்”, என்று சிரித்தாள் பூர்ணிமா.

“ஏன் டி இப்படிச் சொல்ற?”

“ஒண்ணும் இல்லை சும்மா தான். சரி டி. நீ குளிச்சு கிளம்பிட்டியான்னு தான் பாக்க வந்தேன். அப்படியே கதை பேச ஆரம்பிச்சிட்டேன். நேரம் ஆகிருச்சு. நான் கிளம்புறேன். காலைல பாக்கலாம். நாளைல இருந்து ஜாலியா அரட்டை அடிக்கலாம். இன்னைக்கு நைட்… நீ நீயா இரு வெண்மதி. பழைய விசயங்களை எல்லாம் ரெண்டு பேரும் மறந்துருங்க. உடனே உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கச் சொல்லலை. அதே நேரம் பழைய விஷயங்கள் இந்த வாழ்க்கையை பாதிச்சிற விட்டுறாதீங்க. நான் வரேன் மதி… சாரி சாரி வெண்மதி. எங்க அண்ணா மட்டும் தானே உன்னை மதின்னு சொல்லுவாங்க?”

“சும்மா கிண்டல் பண்ணாத டி பூர்ணி, ஸ்டெப்ஸ் இறங்கும் போது பாத்து இறங்கு”, என்று வெண்மதி சொல்ல “சரி டி”, என்று சொல்லி விட்டு நகர்ந்த பூர்ணிமா ஒரு நொடி அவளைத் திரும்பிப் பார்த்து “எங்க அண்ணனை கல்யாணம் நிச்சயம் ஆனதுக்கு அப்புறம் தான் பிடிச்சதுன்னா எதுக்கு டி அவன் கல்யாணத்துக்கு அவனை அச்சு அசலா வரைஞ்சு கிஃப்டா கொடுத்த? காதல் இல்லைன்னா அப்படி ஒரு உருவத்தை யாராலயும் வரைய முடியாது. காலைல உன் லவ் கதையை சொல்லணும்”, என்று சிரிப்புடன் சொல்ல வெண்மதி முகம் வெட்கத்தால் சிவந்தது.

அவள் வெட்கத்தைக் கண்ட பூர்ணிமா “ரொம்ப அழகா இருக்க மதி. எங்க அண்ணா பாடு இன்னைக்கு திண்டாட்டம் தான். அந்த பூவை எடுத்து வச்சிக்கோ டி. உனக்கு பிடிச்ச மல்லிப்பூவுக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் டி? அதான் உன் கிட்டயே திரும்பி வந்துருச்சு. ஆனா காலைல எல்லாமே கசங்கி இருக்கணும்”, என்று சொல்லி விட்டு ஓடி விட்டாள் பூர்ணிமா.

“ஏய் பாத்துப் போ”, என்று பதறிய வெண்மதி “கடவுளே இவ்வளவு நாள்ல இதை இவ மறந்துட்டான்னு நினைச்சேனே? அப்படின்னா அவங்களுக்கும் நான் வரைஞ்சது தெரியும் தானே? அவங்க கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்? முதல்ல நான் எப்படி அவங்களை அப்படி வரைஞ்சேன்? அந்த அளவுக்கா அவங்க என் மனசுல பதிஞ்சு இருந்தாங்க?”, என்று திகைத்தவள் அவளுக்கு பிடித்த அந்த மல்லிகையை எடுத்து சந்தோஷமாக சூடிக் கொண்டாள்.

அன்றைய இரவை நினைத்து, சரவணனை தனி அறையில் எதிர்க் கொள்ளப் போவதை நினைத்து படபடப்புடன் அவள் அமர்ந்திருக்க அவனோ எந்த டென்சனும் இல்லாமல் இயல்பாக உள்ளே வந்தான். அவன் மனதில் எந்த சலனமும் இல்லை.

வெண்மதி நிர்மலை மறக்கும் வரை அவளை தொல்லை செய்யக் கூடாது என்று முடிவு எடுத்திருந்ததால் அவன் இயல்பாக இருந்தான்.

அவனைக் கண்டதும் அவள் எழுந்து நிற்க “என்ன டீச்சரம்மா, உங்களைப் பாத்து தான் பிள்ளைங்க எல்லாம் எழுந்து நிப்பாங்க. நீங்க என்ன என்னைப் பாத்ததும் எழுந்து நிக்குறீங்க?”, என்று சிரிப்புடன் கேட்டான்.

அதற்கு என்ன சொல்ல என்று தெரியாமல் அவள் அமைதியாக நிற்க “இங்க வந்து உக்காரு மதி”, என்று சொல்லி கட்டிலில் அமர்ந்தான். அவனுக்கு சற்று இடைவெளி விட்டு தயக்கத்துடன் அமர்ந்தாள்.

அவள் சேலை முந்தானையை திருகுவதிலே அவளது தடுமாற்றம் புரிய “மதி இப்ப எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? இது உன்னோட வீடு. இங்க நீ உன் வீட்ல எப்படி இருப்பியோ அப்படி இயல்பா இருக்கலாம். என்னை உன் பிரண்டா நினைச்சிக்கோ. சரி இன்னைக்கு முழுக்க பயங்கர டயர்ட். தூங்கலாமா?”, என்று கேட்டவன் கட்டிலின் ஒரு ஓரத்தில் சென்று படுத்தான்.

சிறு ஏமாற்றத்துடனும் சிறு கோபத்துடனும் அவள் அவனைப் பார்க்க “நீயும் படு மதி”, என்றான். அந்த ஏமாற்றம் அவன் விலகியதால் வந்தது. அந்த கோபம் அவன் அவளை தீண்டாததால் வந்தது. அதை அவன் எப்போது உணரப் போகிறானோ?