வெண்மதி அமைதியாக வரவும் “மதி”, என்று அழைத்தான் சரவணன்.
மதி என்று உருகிய குரலில் அவன் அழைத்ததும் “ஆன்”, என்ற படி அவனைப் பார்த்தாள்.
“நாம இப்ப பாத்தோமே, அவர் யாருன்னு உனக்கு தெரியுமா?”, என்று சரவணன் கேட்டதும் “தெரியும்”, என்று சொல்லி அவனையே அதிர வைத்தாள் வெண்மதி.
“தெரியுமா?”, என்று அவன் அதிர்ச்சியாக கேட்க “என்னைக் கடத்தினவர் தானே இவர்?”, என்று அவள் கேட்க சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி விட்டான்.
“மதி”, என்று அவன் திகைப்பாக அழைக்க “அன்னைக்கு நானும் அவரைப் பாத்தேன். அப்பாக்கு தெரிஞ்சா இவரை உயிரோட விட மாட்டார்னு தெரிஞ்சு தான் நான் கடத்தினவங்களைப் பாக்கலைன்னு சொன்னேன். இப்ப சொல்லுங்க. இவர் யார்? இவர் எதுக்கு என்னைக் கடத்தணும்? இவரை எப்படி உங்களுக்கு தெரியும்?”, என்று கேட்டாள் வெண்மதி.
வண்டியை ஓட்டிக் கொண்டே ஆனந்த் பற்றி பாண்டியன் பற்றி எல்லாம் சொன்னான் சரவணன். எல்லாவற்றையும் கேட்ட வெண்மதிக்கு இப்போது பாண்டியன் மேல் எந்த கோபமும் இல்லை. தன்னுடைய தந்தையால் அவர்களுக்கு ஏற்பட்டது பெரிய இழப்பு என்று புரிந்து கொண்டாள். அதை அவனிடம் சொல்லவும் செய்தாள்.
பின் “நான் உங்க கிட்ட ஒண்ணு கேக்கவா?”, என்று கேட்டாள் வெண்மதி.
“என் கிட்ட என்ன தயக்கம்? கேளு”, என்று அவன் சொன்னாலும் அவள் தயங்க தான் செய்தாள். ஆனால் அவன் மீண்டும் கேட்கவும் “இல்லை எங்க அப்பா கொலைக்காரர்ன்னு நீங்க என்னை வெறுத்துருவீங்களா?”, என்று கேட்டாள்.
“நீயே கொலை செஞ்சா கூட என்னால உன்னை வெறுக்க முடியாது மதி. அப்படி இருக்க உங்க அப்பா செஞ்ச தப்புக்கு நான் உன்னை எப்படி வெறுப்பேன்?”, என்று அவன் கேட்க அதற்கு பிறகு அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
அவளை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு விசாலம் கையால் டீ குடித்து விட்டே அவனது வீட்டுக்குச் சென்றான் சரவணன்.
அதற்கு பின் வந்த நாட்கள் பத்திரிக்கையை உறவுக்காரர்களுக்கு கொடுப்பது, திருமணத்துக்கான உடை எடுப்பது என்று கழிந்தது. இது வரை வெண்மதி லீவ் எடுக்காததால் மொத்தமாக லீவ் எடுத்துக் கொண்டாள்.
சரவணன் வேலை பார்க்கும் கல்லூரியில் செமஸ்டர் எக்ஸாம் நடப்பதால் அவனுக்கும் கிளாஸ் இல்லை. வைஷ்ணவியுடன் நடந்த திருமணத்தின் போது அவள் என்ன உடை அணிந்திருந்தாள் என்று கூட கவனிக்காதவன் வெண்மதிக்கு பார்த்து பார்த்து முகூர்த்த சேலையை தேர்வு செய்தான். ஒவ்வொரு சேலையாக அவளுக்கு அவன் வைத்து வைத்து பார்க்க பெரியவர்கள் நிம்மதியுடன் ஒதுங்கிக் கொண்டார்கள்.
“இது பிடிச்சிருக்கா? இல்லை வேண்டாமா?”, என்று அவன் பல கேள்விகள் கேட்க அவள் தான் அவன் அன்பில் தவித்துக் கொண்டிருந்தாள். ஒரு வழியாக அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த அவர்களின் திருமண நாளும் வந்தது.
சரவணன் வெட்ஸ் வெண்மதி என்ற பெயர் பலகையே அவ்வளவு அழகாக இருந்தது. மண்டபம் பல வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
“நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்
பேரு விளங்க இங்கே வாழனும்
சோலைவனத்தில் ஒரு சோடிக் கிளி போலத் தான்
காலம் முழுக்க சிந்து பாடனும்…”, என்று கல்யாண வீட்டில் ஸ்பீக்கர் அலறிக் கொண்டிருந்தது.
பெரிய அளவில் செய்ய வில்லை என்றாலும் ஊரில் இருந்த அனைவரையும் திருமணத்திற்கு அழைத்திருந்தனர். மணப்பெண்ணை அழைத்து வரும் போது அவள் வருகையை ஆவலாக எதிர் பார்த்தான் சரவணன். வெண்மதி பழைய வெண்மதியாக பட்டுடுத்தி தலை நிறைய பூச்சூடி அவ்வளவு அழகாக இருந்தாள்.
திருமாங்கல்யத்தை அவள் கழுத்தில் கட்டும் போது மனதுக்கு நிறைவாக இருந்தது சரவணனுக்கு. இவள் என்னவள், எனக்கு மட்டுமே சொந்தமானவள். அதனால் தான் பல தடைகள் வந்தாலும் எனக்கு கிடைத்திருக்கிறாள் என்று அவன் மனம் சொன்னது. அவளுக்குமே சந்தோசத்தில் கண்களில் கண்ணீர் அரும்பியது.
அனைவரும் அவர்கள் ஜோடிப் பொருத்தம் கண்டு வியந்தார்கள். நிர்மலின் பெற்றோர் திருமணத்துக்கு வராமல் போனாலும் பாண்டியனும் மரகதமும் வந்திருந்தார்கள்.
அவர்களை முதலில் பார்த்த மூர்த்தி “வாங்க அண்ணே”, என்று சொல்லி வரவேற்று குற்றாலத்திடம் “அண்ணே, இவர் தான் பாண்டியன். எனக்கு கூட பிறந்த அண்ணன் மாதிரி. இவர் தான் இந்த கல்யாணம் நடக்கவே காரணமாக இருந்தார்”, என்று அறிமுகப் படுத்தினார்.
குற்றாலத்தை அருகில் கண்டதும் அவரை அறியாமலே ஒரு குமுறல் எழுந்தது பாண்டியனுக்கு. அதை சரவணனுக்காக மறைத்து விட்டு கை கூப்பினார். அவர் கையைப் பற்றிய குற்றாலம் அவருக்கு தன்னுடைய நன்றியைச் சொல்ல இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு சரவணன் மற்றும் வெண்மதி இருவரும் திகைத்துப் போய் நின்றார்கள். இந்த நிமிடம் பாண்டியன் அவர்கள் மனதில் மிகவும் உயர்ந்தவராக தெரிந்தார். குற்றாலத்தை மன்னித்து அவருடன் பேச அவருக்கு எப்படி ஒரு பெரிய மனது இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்கள்.
பாண்டியனும் மரகதமும் மேடைக்கு வரும் போது சரவணனுடன் அவர்களின் காலில் விழுந்து வணங்கினாள் வெண்மதி. பாண்டியனுக்கு மட்டும் கேட்கும் வகையில் “எங்க அப்பா செஞ்ச பாவத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் பா”, என்று சொன்னாள்.
அவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தவர் சரவணனையும் வாழ்த்தி விட்டு அங்கிருந்து உடனே மனைவியை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். அவர் மனநிலை வெண்மதி மற்றும் சரவணனுக்கு நன்கு புரிந்தது.
அங்கே எல்லா சடங்குகளும் முடிந்ததும் சரவணன் வீட்டுக்கு கிளம்பினாள் வெண்மதி. கார் அவர்கள் வீட்டுக்குள் சென்று நிற்க அந்த வீட்டின் அழகு அவளைக் கவர்ந்தது. பூர்ணிமா தான் அவர்களுக்கு ஆரத்தி சுற்றினாள். பூர்ணிமா சொல்ல சொல்ல பூஜை அறையில் விளக்கேற்றினாள் வெண்மதி. பின் அவளை கீழே இருந்த அறையில் ஓய்வு எடுக்கச் சொன்னார்கள். பூர்ணிமா கூடவே இருந்ததால் வெண்மதிக்கு பெரிய வித்தியாசம் எதுவும் தெரிய வில்லை.
இரண்டாவது திருமணம் என்பதால் முதலிரவுக்கு என பெரிய ஏற்பாடு எல்லாம் செய்ய வில்லை. எதையாவது செய்து பிள்ளைகளை காயப் படுத்தக் கூடாது என்று விட்டுவிட்டார்கள்.
அன்று இரவு அனைவரும் கிளம்ப வீட்டு ஆட்கள் மட்டும் இருந்தார்கள். கீழே இருந்த அறையில் வெண்மதி இருக்க “மதி..”, என்று வெளியே இருந்து அழைத்தான் சரவணன்.
“ஆன்…”, என்ற படி வெளியே வந்தாள்.
“மேல இருக்குறது தான் என்னோட ரூம். உன்னோட திங்க்ஸ் எல்லாம் நான் அங்க கொண்டு போகட்டா?”, என்று ஆர்வமாக கேட்டவன் “உனக்கு கீழ இருக்கணுமா?”, என்று தயக்கத்துடன் கேட்டான். அவன் முகத்தைப் பார்த்தே அவள் மேலே வர வேண்டும் என்று அவன் எதிர்பார்ப்பது அவளுக்கு புரிந்தது.
“மேலயே இருந்துக்கலாம்”, என்று அவள் சொல்ல அவன் முகத்தில் அவ்வளவு ஒரு நிம்மதி. சிறு சிரிப்புடன் அவளுடைய உடைகள் அடங்கிய இரண்டு பெரிய பைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான். “எதனால இவர் இப்படி கேட்டார்? இப்ப எதுக்கு இவருக்கு இவ்வளவு சந்தோஷம்?”, என்று குழப்பமாக எண்ணினாள் வெண்மதி.
அவள் திகைப்புடன் நிற்பதைப் பார்த்த வசந்தா “என்ன டா, ஒரு மாதிரி இருக்குற?”, என்று கேட்டாள்.
“ஒண்ணும் இல்லை அத்தை, யாரையும் காணுமா? அதான்”, என்று சொல்லி சமாளித்தாள்.
“வெளிய தான் காத்தாட உக்காந்துருந்தோம். சரி கசகசன்னு இருக்கும். குளிக்கிறியா மா?”, என்று கேட்டாள் வசந்தா.
“சரி அத்தை”
“அப்படின்னா இந்த ரூம்ல குளிக்கிறியா மா?”
“அது வந்து அத்தை… டிரஸ் எல்லாம் மேல….”, என்று அவள் தயக்கத்துடன் சொல்ல “பேக் எல்லாத்தையும் சரவணன் மேல கொண்டு போய்ட்டானா?”, என்று கேட்டாள்.
“ஆமா அத்தை”
“அதுவும் சரி தான். தப்பா எடுத்துக்காத மா. இந்த ரூம் வைஷ்ணவி இருந்த ரூம். அதான் அவனுக்கு பிடிக்கலை. அந்த ரூமுக்கே போக மாட்டான்”, என்றாள் வசந்தா.
“பரவால்ல அத்தை, மேலயே இருந்துக்குறோம். சில விஷயங்களை மறக்குறது தான் அவருக்கும் நல்லது”
“ஆமா மா. கடவுள் உங்களுக்குன்னு முடிச்சு போட்டுருக்கார் போல? நான் தான் எல்லாம் சொதப்பி வச்சிட்டேன். சரி மா, நீ மேல போய் குளி. அப்படியே அவனை இங்க வரச் சொல்லு”
“சரிங்க அத்தை”, என்று சொல்லி விட்டு தயக்கத்துடன் மாடிக்குச் சென்றாள்.