Advertisement

“ஆமா வெண்மதி, உன் மனசுல எந்த சங்கடமும் வேண்டாம், தயக்கமும் வேண்டாம். நீ எடுத்துருக்குற முடிவு சரியானது தான். மனசுல எந்த சஞ்சலமும் இல்லாம உன் வாழ்க்கையை ஆரம்பி. எங்க ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு இருக்கும் டா”, என்றார் சுந்தர்.

அவர்களின் பெருந்தன்மையைக் கண்டு முதன் முதலாக நிர்மலை நினைத்து ஏங்கி ஏங்கி அழுதாள் வெண்மதி. “ஏன் அவர் என்னை விட்டுப் போனார் மா? என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல? உங்க ரெண்டு பேருக்காகவாது அவர் உயிரோட இருந்துருக்கலாம். யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு அப்பா அம்மா?”, என்று அவள் அழ அவளைக் கட்டிக் கொண்டு சாரதாவும் அழுதாள்.

சுந்தருக்கும் கண்கள் கலங்கியது தான். அதை மறைத்துக் கொண்டவர் “சாரதா, இது சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம். அவ தான் சின்னப் பொண்ணு. நீயும் அவ கூட சேந்து கண்ணை கசக்கிக் கிட்டு இருக்க? நீ அழுததும் அவ இன்னும் அழுறா பார்”, என்று மனைவியைக் கடிந்து கொண்டார்.

அவர் அப்படிச் சொன்னதும் நடப்புக்கு வந்த சாரதா “அழாத கண்ணு, நீ நல்லா இருப்ப டா. உனக்கு ஒரு குறையும் வராது. எங்க கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லாம கூட நீ கல்யாணம் பண்ணிட்டு போயிருக்கலாம். ஆனா எங்களையும் ஆளா மதிச்சு எங்க கிட்ட கேக்குற பாத்தியா? அதுவே எங்களுக்கு போதும் மா. அடுத்த ஜென்மத்துல நீ எங்களுக்கு மகளா வரணும். எங்க மகனுக்கு தான் உன் கூட வாழக் கொடுத்து வைக்கலை. சரி இப்ப என்ன? உன் புருஷன் எங்களுக்கு மகன் தான். சரி மாப்பிள்ளை பத்தி சொல்லு. பையன் என்ன பண்ணுறான்?”, என்று கேட்டாள்.

“அவங்க பேர் சரவணன். எங்க ஊர் தான். அக்ரி காலேஜ்ல வேலை பாக்குறார். நான் அவங்களை இங்க வரச் சொல்லட்டா மா? எனக்கு அவங்களை உங்க கிட்ட காமிக்கணும் போல இருக்கு”

“தாராளமா வரச் சொல்லு மா”, என்று சாரதா சொல்ல “ஆமா மா, எங்களுக்கும் மாப்பிள்ளையைப் பாக்கணும்”, என்றார் சுந்தர்.

உடனே தன்னுடைய போனை எடுத்து சரவணனை அழைத்தாள். வெண்மதி அழைக்கவும் திகைத்து போய் போனை எடுத்தான் சரவணன்.

“ஹலோ மதி, ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”, என்று அவன் பதட்டத்துடன் கேட்க “இல்லை, அதெல்லாம் ஒண்ணும் இல்லை”, என்றாள்.

“என்ன மதி, சொல்லு”

“நீங்க கொஞ்சம் குறிச்சி வரைக்கும் வர முடியுமா? அதுவும் இப்பவே?”

“வரேன். ஆனா அங்க எதுக்கு?”

“வாங்க சொல்றேன்”

“அங்க எங்க வரணும்?”

“நிர்மல் வீட்டுக்கு”, என்று அவள் சொல்ல ஒரு நொடி திகைத்தாலும் “வரேன். வீட்டு அட்ரஸ் அனுப்பி வை”, என்று சொல்லி போனை வைத்தான்.

இன்னும் அவனுக்கு வண்டி வாங்காததால் செந்திலின் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். ஆனால் மனம் முழுக்க நிம்மதி இல்லாமல் தவித்தது. “இவ அங்க எதுக்கு போனா? நிர்மல் அப்பா அம்மா என்ன சொல்லுவாங்க? ஒரு வேளை அவங்களுக்காக இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிருவாளோ? என்னை எதுக்கு அங்க வரச் சொன்னா?”, என்று இப்படி பல கேள்விகள் அவனுக்குள் உதயமானது. ஆனால் அவளே இன்னும் திருமணத்தை மறுத்தாலும் தன்னால் அவள் இல்லாமல் வாழ முடியாது என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.

நிர்மலின் வீட்டைக் கண்டு பிடித்து அவர்கள் வீட்டுக்குச் சென்ற போது மூவருமே அவன் வரவுக்காக வாசலில் தான் காத்திருந்தார்கள்.

வண்டியை வெளியே நிறுத்தி விட்டு அவன் தயக்கத்துடன் உள்ளே செல்ல சாரதா மற்றும் சுந்தர் இருவருக்கும் அவனிடம் தங்களின் மகன் சாயல் இருப்பது போல தோன்றியது.

“வாப்பா, அப்படியே உன்னைப் பாக்க எங்க மகன் மாதிரியே இருக்கு”, என்று சொன்னாள் சாரதா.

அவன் திகைத்துப் போய் நிற்க “உள்ள வா பா”, என்று சொல்லி அவன் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு சென்றார் சுந்தர்.

ஒரு மாதிரி சங்கடமாக அவர்கள் காட்டிய இருக்கையில் அமர்ந்தவன் வெண்மதியைப் பார்த்தான். அவளைப் பார்த்தாலே தெரிந்தது நன்கு அழுதிருக்கிறாள் என்று.

“வெண்மதி உங்க கல்யாண விஷயம் சொன்னா. எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பா”, என்றாள் சாரதா.

“ரொம்ப நன்றி மா. உங்க மகன் இடத்துக்கு வந்துட்டேன்னு என் மேல கோபப் படுவீங்கன்னு நினைச்சேன்”, என்று உண்மையைச் சொன்னான் சரவணன்.

“நீயும் எங்க மகன் தான் பா. வெண்மதி, தம்பி பக்கத்துல உக்காரு மா”, என்று சொன்னார் சுந்தர். தயக்கத்துடன் சரவணன் அருகே சென்று அமர்ந்தாள் வெண்மதி. இருவரையும் ஜோடியாக பார்க்கும் போது பெரியவர்கள் மனது நிறைந்தது.

வீட்டுக்குள் சென்ற சாரதா ஒரு தாம்பூலத் தட்டில் ஒரு பட்டுப் புடவை, பூ, ஒரு பெரிய ஆரம் எல்லாம் கொண்டு வந்து வெண்மதியிடம் கொடுத்தாள்.

“எதுக்கு மா இதெல்லாம்?”, என்று கேட்டாள் வெண்மதி.

“எங்க பொண்ணுக்கு நாங்க செய்றோம். கல்யாணத்துக்கு வர முடியுமான்னு தெரியலை. அதனால தான் இப்பவே தரேன். வாங்கிக்கோ டா”

“நகை எல்லாம் வேண்டாம் மா”

“மூச், எதுவும் சொல்லக் கூடாது”, என்று அவள் உரிமையாக அரட்ட அதை வாங்கிக் கொண்டாள் வெண்மதி.

அவர்களின் உண்மையான அன்பு புரிய “எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க மா”, என்று சொன்ன சரவணன் எழுந்து நிற்க அவனுடன் மதியும் நின்றாள். சுந்தர் மற்றும் சாரதா இருவரும் ஜோடியாக நிற்க அவர்கள் காலில் விழுந்து வணங்கினார்கள் இருவரும்.

மேலும் சிறிது நேரம் இருந்து விட்டு “அடிக்கடி மதியை கண்டிப்பா இங்க கூட்டுட்டு வருவேன் மா. வரேன் பா”, என்று அவர்களிடம் சொல்லி விட்டே அங்கிருந்து கிளம்பினான் சரவணன்.

அவன் வண்டியைக் கிளப்ப இன்று எந்த தயக்கமும் இல்லாமல் அவன் பின்னே ஏறி அமர்ந்தாள் வெண்மதி. அவள் மனது இன்று தெளிவாக இருந்தது. நிர்மலைப் பற்றி எந்த குழப்பமும் இப்போது அவள் மனதில் இல்லை.

சிறிது தூரம் சென்றதும் அவள் கையை இழுத்து தன்னுடைய தோளில் வைத்தான் சரவணன். அவள் திகைப்பாக அவனைப் பாக்க “அன்னைக்கு திடீர்னு இப்படி கை வைக்கவும் தான் பேலன்ஸ் இல்லாம போயிருச்சு. எப்பவும் கை இங்கயே இருந்தா எனக்கு பேலன்ஸ் மிஸ் ஆகாது”, என்று கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

அவனைக் கண்டு அழகாக புன்னகைத்தாள் வெண்மதி. இப்போது ஏனோ அவள் முகம் எல்லாம் தெளிந்து பழைய வெண்மதியைப் பார்ப்பது போலவே அவனுக்கு தோன்றியது.

சிறிது தூரம் வந்ததும் “மதி, உன் கிட்ட எக்ஸ்ட்ரா பத்திரிக்கை இருக்கா? இங்க ஒருத்தருக்கு கொடுக்கணும். நீயும் கூட இருக்க. இப்ப போய்க் கொடுத்தா சரியா இருக்கும். போகலாமா?”, என்று கேட்டான்.

“சரி”, என்று சொன்னாள். அடுத்து அவன் வண்டியை நிறுத்தியது பாண்டியன் வீட்டின் முன்பு தான். அவர்களைக் கண்டு பாண்டியன் சந்தோஷமாக வரவேற்க அவருடைய மனைவி மரகதம் கேள்வியாக கணவரைப் பார்த்தாள்.

“நம்ம ஆனந்தோட பிரண்டு மா”, என்று மனைவியிடம் சொல்லி சமாளித்தார் பாண்டியன். ஆனால் வெண்மதியோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் எனலாம்.

ஆனால் சரவணன் “எப்படி இருக்கீங்க பா? அம்மா உங்க உடம்புக்கு எல்லாம் சரியாகிருச்சா?”, என்று நலம் விசாரித்து திருமண விஷயத்தைச் சொல்லி அவர்களிடம் பத்திரிக்கையைக் கொடுத்தான். அவர்களும் சந்தோஷப் பட்டார்கள்.

“இவங்க எனக்கு அப்பா அம்மா மாதிரி தான் மதி. வா அவங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கலாம்”, என்று அழைத்தான் சரவணன். வெண்மதி உடனே அவன் அருகே சென்று நின்றாலும் அவர்கள் காலில் விழ தயங்கத் தான் செய்தாள்.

“ஏய் அதெல்லாம் வேண்டாம் பா. கல்யாணத்துக்கு வருவோம்ல? அப்ப ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க”, என்று சொல்லி விட்டார் பாண்டியன்.

மீண்டும் அவர்களை திருமணத்துக்கு அழைத்து விட்டு இருவரும் கிளம்பினார்கள். போகும் போது வெண்மதி அமைதியாக வந்தாள். சிறிது நேரத்துக்கு முன்பு அவள் முகத்தில் இருந்த உற்சாகம் இப்போது அவளிடம் இல்லை.

காதல் வெடிக்கும்…..

Advertisement