Advertisement

“என்னது நண்பனா? இவன் என் கிட்ட நடந்துக்கிட்டது எனக்கு பிடிக்கலையா?”, என்று திகைத்து நின்றாள் வெண்மதி.

வெளியே சென்ற சரவணன் “எனக்கு வெண்மதியை ரொம்ப பிடிச்சிருக்கு. சீக்கிரம் எங்க கல்யாணத்தை வைங்க”, என்று வெற்றிவேலிடம் சொல்ல அனைவரும் சந்தோஷப் பட்டார்கள்.

அதற்கு பின் அனைவரும் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருக்க சங்கடமான முக பாவத்துடன் அங்கே வந்தாள் வெண்மதி.

திருமணத் தேதி எல்லாம் முடிவானதும் அனைவரும் கிளம்பினார்கள். “போயிட்டு வரோம் மா”, என்று அனைவரும் அவளிடம் சொல்லி விட்டுச் செல்ல சரவணனோ அவளிடம் எதுவும் சொல்லாமல் வெளியே சென்று விட்டான்.

“எனக்கு சந்தோஷமா இருக்கு டி”, என்று அவளைக் கட்டிக் கொண்ட பூர்ணிமா அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டே அங்கிருந்து சென்றாள்.

“அண்ணனுக்கும் தங்கைக்கும் முத்தம் கொடுக்குறது தான் வேலையா?”, என்று வெண்மதி சிணுங்க “ஏன் அது உனக்கு பிடிக்கலையா?”, என்று கேட்டது அவள் மனசாட்சி.

வீட்டுக்குச் சென்ற சரவணனுக்கு இருப்பே கொள்ள வில்லை. தான் ஏன் அப்படி நடந்து கொண்டோம்? அவள் என்னைப் பத்தி என்ன நினைத்திருப்பாள் என்று எண்ணி கவலையாக இருந்தான். அந்த நேரத்தில் தன்னுடைய மனதில் அவள் தான் இருக்கிறாள் என்று புரிய வைத்துவிடும் வேகத்தில் தான் அவன் அப்படி நடந்து கொண்டிருக்கிறான் என்று புரிந்தது.

ஆனால் அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரியாமல் மனதில் பாரம் அழுத்தியது. தன்னுடைய செய்கையில் ஒரு எதிர்ப்பு கூட இல்லாமல் தன்னுடைய கைகளுக்குள் அவள் ஒடுங்கி இருந்த விதம் அவன் மனதில் இருந்தாலும் அதைப் பற்றி அவன் அதிகம் யோசிக்க வில்லை.

தன்னுடைய போனை எடுத்து மீண்டும் “சாரி மதி”, என்று அனுப்பி வைத்தான். ‘சாரி’ என்ற வார்த்தையை அந்த நிமிடம் அறவே வெறுத்தாள் வெண்மதி.

அவனால் ஒரு பொட்டு கூட தூங்க முடிய வில்லை. விழிகளை மூடிக் கொண்டாலும் விழிகளுக்குள் அவள் வந்து நிற்கும் உணர்வு தான் வந்தது. அப்போது அவனைத் தேடி வந்த செந்தில் “என்ன மச்சான் ஒரு மாதிரி இருக்குற?”, என்று கேட்டான்.

“அது… அது வந்து ஒண்ணும் இல்லை டா”

“சொல்லு டா, இன்னும் எதையும் மனசுக்குள்ள வச்சு குழம்பாத. இது வரை உன் ஆசையை எல்லாம் நீ மறைச்சு வச்சு பட்ட கஷ்டம் போதும் டா மச்சான்”

….

“இப்ப சொல்லப் போறியா இல்லையா டா?”

“ஒரு சின்ன தப்பு பண்ணிட்டேன். இல்லை இல்லை பெரிய தப்பு பண்ணிட்டேன்”, என்று உளறினான் சரவணன்.

“என்ன பண்ணித் தொலைச்ச?”

“வெண்மதி கிட்ட தனியா பேசப் போனப்ப…”

“போனப்ப?… என்ன ஆச்சு? ஆமா நீ ஏன் அவ கிட்ட தனியா பேச போன?”

“அவ முகம் ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் கல்யாணம் வேணுமா வேண்டாமான்னு கேக்க போனேன்”

“லூசா டா நீ? அவ பெர்மிசன் இல்லாமலா நாம பொண்ணு பாக்க போனோம்?”

“டேய் மாப்பிள்ளை, எல்லா உணர்வுகளையும் சாதாரணமா எடுக்க அவளுக்கு இது முதல் கல்யாணம் இல்லை. அவளுக்கு நிர்மலை ரொம்ப பிடிக்கும். அவனை விரும்பி தான் கல்யாணம் பண்ணிருக்கா. அப்படி இருக்க அவனை அவளால மறக்க முடியாது. அதான் அவளுக்கு டைம் கொடுக்கலாம்னு நினைச்சேன். அவ கிட்ட கல்யாணத்தை தள்ளிப் போடலாமான்னு கேட்டதுக்கு அவ ராசி அது இதுன்னு பேசி என்னை டென்ஷன் பண்ணிட்டா. அதனால….”

“அதனால என்ன டா? என்ன பண்ணித் தொலைச்ச? அடிச்சு கிடிச்சு வச்சிட்டியா?”

“இல்லை டா, நான் அவளைப் பிடிக்காம தான் கல்யாணத்தை தள்ளிப் போடுறேன்னு நினைச்சு அப்படிக் கேட்டாளா? அவளுக்கு என்னைப் பிடிக்கும்னு புரிய வைக்க நினைச்சு…”

“நினைச்சு…”

“கட்டிப் புடிச்சு…. முத்தம் கொடுத்துட்டேன் டா”

“என்னது?”

“ஆமா டா”, என்று சங்கடமாக சொன்னான்.

தன்னுடைய அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்த செந்தில் “சரியான காரியம் தானே பண்ணிருக்க? அதுக்கு எதுக்கு இப்படி வந்து அழுது வடிஞ்சிட்டு உக்காந்துருக்க?”, என்று கேட்டான்.

“சரியான காரியமா? போடா. நான் அப்படி செஞ்சிட்டு வந்தது ரொம்ப தப்பு டா. மதி என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாளோன்னு கவலையா இருக்கு. ஆமா நீ என்ன இந்நேரம் இங்க வந்துருக்க? என் தங்கச்சி அங்க தனியா இருப்பா. நீ போ”

“அவ எங்க தனியா இருக்கா? அவ வீட்ல தானே இருக்கா? அதான் அத்தை மாமா எல்லாம் இருக்காங்களே?”

“இருந்தாலும் நீயும் அங்க இருக்கணும்ல?”

“நான் போய்க்கிறேன். முதல்ல நான் சொல்றதைக் கேளு மச்சான். வெண்மதி பிள்ளைக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டா”

“நான் எப்ப அவளுக்கு என்னைப் பிடிக்கலைன்னு சொன்னேன்? அவ பாக்குற பார்வையிலே அவளுக்கு என் மேல அன்பு இருக்கா வெறுப்பு இருக்கான்னு எனக்கு தெரியாதா?”

“அப்புறம் ஏன் டா பீல் பண்ணிட்டு இருக்க? கல்யாணத்தை தள்ளிப் போடணும்னு வேற சொல்லிருக்க?”, என்று செந்தில் கேட்க அதற்கு விடையாய் ஒரு வார்த்தை சொன்னான் சரவணன் “நிர்மல்”, என்று.

“மச்சான்”, என்று செந்தில் அதிர்வாக அழைக்க “ஆமா டா, நிர்மல் அவ மனசுல இருக்குற வரைக்கும் அவளால என்னை ஏத்துக்க முடியாது”, என்றான் சரவணன்.

“நீ தப்பா புரிஞ்சிக்கிற டா. உன்னைப் பிடிச்சதுனால தான் அவளுக்கு நிர்மலை புடிச்சிருக்கும். நான் சொல்ல வரதை நீ கொஞ்சம் கேளேன்”

“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். நீ வீட்டுக்கு கிளம்பு”

“மச்சான் வெண்மதிக்கு உன்னை மட்டும் தான் டா ரொம்ப பிடிக்கும். நீ தேவையில்லாம யோசிச்சு அந்த பிள்ளையை விலக்கி வச்சிறாத? உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத. அவ கிட்ட மனசு விட்டு பேசு. அவளே அவ மனசுல இருக்குறதைச் சொல்லுவா”

“முதல்ல கல்யாணம் முடியட்டும். அப்புறம் பேசிக்கலாம்”, என்று சரவணன் சொல்ல செந்திலுக்கும் அது சரி என்று பட அங்கிருந்து கிளம்பி விட்டான்.

பத்திரிக்கை எல்லாம் அடிக்கப் பட்டு வந்தது. அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு நிர்மலின் பெற்றோரைப் பார்க்கச் சென்றாள் வெண்மதி. எப்போதும் அவர்களைப் பார்க்க போகும் போது சந்தோஷமாக தான் போவாள். ஆனால் இன்றோ அவளுக்கு சங்கடமாக இருந்தது.

அவர்கள் மகன் இறந்த துக்கத்தில் அவர்கள் இருக்க அவள் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டாளே என்று அவர்கள் நினைப்பார்களோ என்று கவலையாக இருந்தது.

“அடடே வெண்மதி, வா மா”, என்று அவளை பாசமாக அணைத்துக் கொண்டாள் சாரதா. சுந்தரும் அவளை வரவேற்று அமர வைத்தார்.

வந்ததில் இருந்து வெண்மதி அமைதியாக இருக்க அவர்களுக்கு குழப்பமாக இருந்தது. “என்ன டா ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டாள் சாரதா.

“ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும் மா. ஆனா அதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை”, என்று தயக்கத்துடன் சொன்னாள்.

“நீ எங்க பொண்ணு டா. உன்னை நாங்க தப்பா நினைப்போமா?”, என்று சாரதா கேட்க தயக்கத்துடன் கல்யாணப் பத்திரிக்கையை அவர்களிடம் நீட்டினாள்.

அதை திகைப்புடன் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும். “உங்க கிட்ட நான் முன்னாடியே இதைச் சொல்லிருக்கணும். ஆனா என்னால முடியலை. ஏதோ தப்பு பண்ணுறோம்னு உறுத்துது. உங்களை பாக்க வரதுக்கு கூட எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருந்தது. கண்டிப்பா உங்களுக்கும் கஷ்டமா இருக்கும்ல? ஆனா எனக்கு….. நீங்களே சொல்லுங்களேன். நான் என்ன செய்யட்டும்? என் முழு மனசோட தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். ஆனா இப்ப எனக்கு முடியலை. தப்பு பண்ணுறோம்னு உறுத்துது”, என்று சொன்னவள் கலக்கமாக அவர்களைப் பார்த்தாள்.

“எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லிருக்க. இதுக்கு நாங்க வருத்தப் படுவோமா டா? எங்களுக்கு உண்மையாவே சந்தோஷமா இருக்கு”, என்றாள் சாரதா.

“ஆமா டா, நீ இப்படியே இருந்துருவியோன்னு நாங்க அடிக்கடி கவலைப் பட்டிருக்கோம். இப்ப உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையப் போறது எங்களுக்கு சந்தோஷமான விஷயம் தான் மா”, என்றார் சுந்தர்.

அவர்கள் அப்படிச் சொல்லவும் அவர்களை திகைப்புடன் பார்த்த வெண்மதி “இது தப்பு இல்லையா?”, என்று கேட்டாள்.

“இதுல தப்பு என்ன இருக்கு? எங்க மகனுக்கு வாழக் கொடுத்து வைக்கலை. அதுக்காக உன் வாழ்க்கையை கெடுக்கணுமா? காத்துல கலந்துருக்குற நிர்மல் ஆத்மா கூட இதுக்கு சந்தோஷம் தான் மா படும்”, என்றாள் சாரதா.

Advertisement