Advertisement

அத்தியாயம் 14 

உயிர் வரை தாக்கத்தை

ஏற்படுத்துமோ உந்தன் வாசனை?!!!

வெண்மதியைத் திரும்பிப் பார்த்தவனுக்கு அவள் பார்வையில் இருந்த உணர்வுக்கு என்ன அர்த்தம் புரிய வில்லை. அவள் உதடுகள் அவனிடம் எதுவோ பேச துடித்தது.

அவள் பார்வையில் இருந்த ஏக்கத்தைக் கண்டவனுக்கு அவளை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. அந்த துடிக்கும் இதழ்களை முத்தமிட்டு அதன் துடிப்பை நிறுத்த வேண்டும் போல இருந்தது. இங்கேயே இருந்தால் நிச்சயம் அதை செய்து விடுவோம் என்று புரிந்ததால். “இங்கிருந்து ஓடி விடு”, என்று அவன் மூளை எச்சரிக்கை வேறு செய்தது. வெண்மதி அவனை மொத்தமாக சோதித்துக் கொண்டிருந்தாள்.

“ஆண்டவா ஏன் இப்படி என்னை சோதிக்கிற? இவ கண்ணுல இருக்குற உணர்வை என்னால ஈஸியா கடக்க முடியலையே? அவ மனசுல என்ன இருக்குனு தெரியாம நான் ஏன் இப்படி தடுமாறிப் போறேன்? இங்கயே இருந்தா கண்டிப்பா அவளை நெருங்கிருவேன். அப்படி ஏதாவது விபரீதமா ஆகி அவளோட வெறுப்பை என்னால சம்பாதிக்க முடியாது. நான் இங்க இருந்து போயிரணும்”, என்று எண்ணியவன் முகத்தில் எதையும் காட்டாமல் சாதாரணமாக அவளைப் பார்த்தான்.

அவள் அப்போதும் அமைதியாக இருக்க திரும்பி நடக்க ஆரம்பித்தான். “மதி அவன் போறான் டி, போய் இந்த கல்யாணத்தை நிறுத்தப் போறான். இப்ப போல அமைதியா இருக்க. பேசு டி. இப்ப விட்டா மறுபடியும் நீ அவனை இழந்துருவ”, என்று அவள் மனது அவளைத் தூண்டி விட்டது.

அவன் கதவருகே செல்லும் போது “ஒரு நிமிஷம்”, என்று தைரியத்தைக் கூட்டி அழைத்து விட்டாள்.

அவள் அழைத்ததும் அது தான் சாக்கென்று மீண்டும் அவள் அருகே வந்து நின்றான். அவளே பேசட்டும் என்று எண்ணி அவன் அமைதியாக இருக்க “ஏன் நீங்களும் என்னை ராசி இல்லாதவன்னு நினைக்கிறீங்களா? என்னைக் கல்யாணம் பண்ணினா உங்களுக்கும் ஏதாவது … ஆகிரும்னு பயப்படுறீங்களா? அதனால தான் இந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு நினைக்கிறீங்களா?”, என்று கலங்கிய குரலில் கேட்டாள் வெண்மதி.

அவள் அப்படிக் கேட்க அடுத்த நொடி அவனுக்கு வந்ததே கோபம். தன்னுடைய மனதை அவளுக்கு புரிய வைக்க அவன் அப்படிச் சொன்னால் அவளோ தவறாக புரிந்து கொண்டாள் என்று புரிந்தது. அந்த நிமிடம் அவள் மனதில் இருக்கும் காயத்தை விரட்டி அடிக்க வேண்டும் என்ற உந்துதல் வர கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை நெருங்கியவன் தன்னுடைய கரங்களால் அவளுடைய கன்னங்களைத் தாங்கி அவள் முகத்தைப் பார்த்தான்.

இப்போதும் அவள் அவனையே ஏக்கமாக பார்க்க அதற்கு பின் அவனிடம் எந்த தயக்கமும் இல்லை. லேசாக அவளது தலையை சாய்த்து தன்னுடைய இதழ்களால் அவளுடைய இதழ்களை அழுத்தமாக பூட்டிக் கொண்டான்.

அவன் முத்தமிட்ட நொடியை ஆழ்ந்து அனுபவித்தாள் வெண்மதி. அவன் அவளை நெருங்குவதற்கு முன் அவள் மனதில் பல போராட்டங்கள் இருந்தது. தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது சரியா? ஊர் உலகம் என்ன சொல்லும்? நிர்மலின் பெற்றோர் என்ன சொல்வார்கள்? சரவணன் வீட்டில் தன்னை எப்படி பார்ப்பார்கள்? தான் இரண்டாவது திருமணம் செய்தால் நிர்மல் ஆத்மா தன்னை மன்னிக்குமா? இது எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி சரவணனுக்கு என்னை பிடிக்குமா? தன்னை திருமணம் செய்தால் அவனுக்கு எதுவும் ஆகுமோ? இப்படி பல கேள்விகள் அவளுக்குள் இருந்தது..

அவள் அந்த பயத்தில் இருக்க அவனோ திருமணத்தை தள்ளிப் போடலாம் என்பது போல பேச உடனே அவள் அப்படிக் கேட்டு விட்டாள். அவள் மனதில் இருக்கும் ஏக்கம் வார்த்தையாக வெளியே வர அது தவறு என்று செயலில் அவளுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தான் சரவணன்.

“அவனுக்கு என்னைப் பிடிக்குமா?”, என்பது தான் அவள் மனதின் கேள்வி. அதற்கு அவன் விடை சொல்லிக் கொண்டிருக்க அவள் வாகாக அவனிடம் ஒட்டிக் கொண்டாள். அவள் மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் அவளிடம் இருந்து விடை பெற்றுச் சென்றிருந்தது.

இந்த பிறவியில் அவள் வாங்கும் முதல் முத்தம். அவள் கன்னத்தில் இருந்து கரங்களை எடுத்தவன் அவளது இடையை இறுக கட்டிக் கொண்டான். ஆனால் அவள் இதழ்களில் இருந்து மட்டும் விலகவே இல்லை.

அவள் கண்ணைத் திறந்து அவனைப் பார்க்க அவனோ இமை மூடி முத்தத்தில் மூழ்கி இருந்தான். அவ்வளவு நெருக்கத்தில் இமைகள் மூடி தன்னுடைய இதழ்களுக்குள் மூழ்கி இருந்தவனை பார்த்தவளுக்கு அவனை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை.

அவன் முத்தமிட்டதும் அடி வயிற்றில் கிளம்பிய உணர்வு, தேகம் முழுவதும் அலையாய் பரவ அவள் கரம் உயர்ந்து அவனுடைய முதுகில் பதிந்தது. இப்போது அவள் மனதில் எந்த குழப்பமும் இல்லை. அவன் மட்டுமே நிறைந்திருந்தான். நிர்மலைப் பற்றிய நினைவுகள் கூட பின்னோக்கிச் சென்றிருந்தது.

அவள் பேசியதைக் கேட்டு கோபத்தில் தான் சரவணன் அவளை முத்தமிட்டான். ஆனால் சிறிது நேரத்தில் கோபமெல்லாம் விலகிப் போய் அவனது உணர்வுகள் விழித்துக் கொள்ள ஆரம்பித்தது. அவளை விட்டு அவனால் விலகவே முடியவில்லை. அவளுக்குள்ளே புதைந்து விட மாட்டோமோ என்று ஏக்கமாக இருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு தான் ஆசைப் பட்ட பொருள் கிடைத்தால் குழந்தை இறுக்கிப் பிடித்திருக்குமே? அப்படி ஒரு நிலை தான் அவனுக்கு. அவளுடைய அருகாமையில் தான் ஒரு முழுமையான ஆண்மகன் என்று உணர்ந்து கொண்டிருந்தான் சரவணன்.

அவளிடம் லேசாக மறுப்பு இருந்திருந்தால் விலகி இருப்பானோ என்னவோ? அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் இருக்க அவளுக்குள் ஒன்றிக் கொண்டான். மேலும் மேலும் முன்னேறத் தூண்டியது அவன் மனது. “டேய் என்ன டா பண்ணுற? இது தப்பு டா”, என்று அவனுக்கு எடுத்துச் சொன்னது அவன் மூளை.

பட்டென்று உணர்வுகள் அறுபட அவளை விட்டு அவசரமாக விலகி நின்றான். தன்னுடைய செய்கையை அவனாலே நம்பவே முடியவில்லை. தானா ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொண்டோம் என்று திகைத்து போனான். கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஒரே அறையில் இருந்த வைஷ்ணவியிடம் கூட தான் இப்படி நடந்து கொண்டது இல்லையே என்று எண்ணி அவனுக்கு வியப்பாக இருந்தது. அவள் அமைதியாக தலை குனிந்த படி நிற்க அவனால் அவளை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.

அவள் நிலை கண்டு தன்னுடைய தலையிலே அடித்துக் கொண்டவன் “சாரி மதி… வெரி சாரி… இப்படி எல்லாம்… என்னாலே என்னை நம்ப முடியலை. நீ அப்படிப் பேசியதும் ஏதோ கோபத்துல… இப்படி எல்லாம் பண்ணிட்டேன்… தப்பு தான். ரொம்ப ரொம்ப தப்பு தான்…. சாரி…”, என்று திணறலுடன் உளறினான். அவன் மன்னிப்பு கேட்பதை அவள் விரும்ப வில்லை. அதனால் அமைதியாக நின்றாள். அவனுடைய உரிமையான செய்கை அவளுக்கு பிடித்திருந்த போது அவன் மன்னிப்பு கேட்டால் அவள் என்ன சொல்வாளாம்?

“பரவால்ல விடுங்க”, என்று ஒற்றை வார்த்தை அவள் சொல்லி இருந்தால் அவன் தெளிந்திருப்பானோ என்னவோ? ஆனால் அவள் அமைதி அவனை அந்த நேரம் அதிகம் பாதித்தது.

“என்னை மன்னிச்சிரு மதி.. அப்புறம் நீ சொன்ன மாதிரி எனக்கு இந்த ராசி அதுல எல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லை. ஒரு வேளை அது உண்மையா இருந்தா கூட உன்னால என் உயிர் போனா சந்தோஷம் தான். உன்னால சாகுறதோ, உனக்காக சாகுறதோ எனக்கு கிடைக்கிற பெரிய வரம். ஆனா கவலைப் படாதே. எனக்கு அப்படி எதுவும் நடக்காது. அப்படி ஒரு நிலை வந்தா உன்னையும் என்னோட கூட்டிட்டு போயிருவன். இனி என்னால உன்னை தனியா விட முடியாது. நீ என்னோடவள். உனக்கு அது புரியுதா? உன் மனசுல ராசி பத்தின குழப்பம் இருக்கு. இன்னும் என்ன குழப்பம் இருந்தாலும் இனி நான் நம்ம கல்யாணத்தை தள்ளிப் போடுறதா இல்லை. நம்ம கல்யாணம் உடனே நடக்கணும். அம்மா சொன்ன மாதிரி நீ என் பொண்டாட்டி தான். சரி நான் கிளம்புறேன். நான் இப்ப உன் கிட்ட நடந்துக்கிட்டது தப்பு தான். என்னை மன்னிச்சிரு. இனி உன்னோட அனுமதி இல்லாம உன்னை நெருங்க மாட்டேன். இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டேன். வாழ்க்கையில ஏற்கனவே மனசால ரொம்ப நொந்து போய் இருக்குற உன்னை நான் இனி காயப் படுத்த மாட்டேன். இன்னைல இருந்து உனக்கு நல்ல நண்பனா இருப்பேன். சரி கல்யாணத்துல பாப்போம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

Advertisement