Advertisement

அப்போது அவன் கண்களும் அந்த பேப்பரில் நிலைக்க அதை விரித்துப் பார்த்தவன் ஆனந்தமாக அதிர்ந்து போனான். தான் எந்த அளவுக்கு அவள் மனதில் பதிந்திருந்தால் இப்படி தன்னை வரைந்திருப்பாள் என்று அவனுக்கு வியப்பாக இருந்தது .

கண்களில் கண்ணீரும் உதட்டில்‌ உறைந்த புன்னகையுமாக அவன் அதைப் பார்க்க பூர்ணிமாவும் சந்தோஷமாக அவனைப் பார்த்தாள்.

அப்போது தான் தங்கை அங்கே அமர்ந்திருப்பது நினைவு வர அவளைப் பார்த்து ஒரு சங்கடமான சிரிப்பை சிரித்தான். “வெண்மதியை உனக்கு பிடிக்குமா அண்ணா?”, என்று கேட்டாள் பூர்ணிமா. 

“ஆமா”, என்று உண்மையை ஒத்துக் கொண்டான் சரவணன். இனி மறைக்க என்ன இருக்கிறதாம்?

“எப்ப இருந்து?”

“அவளைப் பாத்ததுல இருந்து”

“அவளை எப்ப பாத்த?”

“ரொம்ப நாளுக்கு முன்னாடியே?”

“அப்படின்னா வைஷ்ணவி கூட உனக்கு கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடியே அவளை உனக்கு பிடிக்குமா அண்ணா?”

“வெண்மதிக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே அவளை எனக்கு பிடிக்கும்”

“அப்படின்னா சொல்லிருக்கலாம்ல அண்ணா?”

“சொல்ல தான் நினைச்சேன். அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்க. அப்புறம் எங்க சொல்றது?”

“அவ விதவை ஆன அப்புறமாவது சொல்லிருக்கலாம்ல?”

“சொன்னேன்ல, ஒரு விதவையை தான் கல்யாணம் பண்ணுவேன்னு. ஆனா அம்மா கேக்கலை”

“அது வெண்மதியா? அவ பேரைக் சொல்லிருக்கலாம்ல?”

“அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியாம எப்படி அவ பேரைச் சொல்ல? அது மட்டுமில்லாம அம்மா பேசினதைப் பாத்த தானே? அவங்க சம்மதிக்காதப்ப இந்த விஷயத்தைச் சொல்லி என்ன செய்யன்னு விட்டுட்டேன்”

“இப்ப அவங்க வீட்ல பேசச் சொல்லட்டுமா?”

“அதான் பேசினாங்களே? அவ வேண்டாம்னு சொல்லிட்டாளாம்”

“அது நீ தான் மாப்பிள்ளைன்னு தெரியாம சொல்லிட்டா. நான் வீட்ல சொல்லி பேசச் சொல்றேன்”

“ஹிம், ஆனா யாரும் அவளை கஷ்டப் படுத்திறக் கூடாது”, என்று சொல்ல அவன் மனது அவளுக்கு புரிந்தது. 

அங்கிருந்து வெளிய வந்து கணவனை கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள் பூர்ணிமா. அவளின் ஆனந்த கண்ணீரைக் கண்ட செந்தில் என்னவென்று விசாரிக்க அனைத்தையும் சொன்னாள். 

அனைத்தையும் கேட்ட செந்தில் உடனடியாக மூர்த்தியை அழைத்தான்.

“சித்தப்பா நான் செந்தில் பேசுறேன்”

“சொல்லுப்பா செந்தில், என்ன விஷயம்?”

“சரவணன் கல்யாண விஷயம் பேசணும்”

“நானும் அதுக்கு தான் அலைஞ்சிட்டு இருக்கேன். பொண்ணு அமைய மாட்டிக்கே பா”

“வெண்மதி வீட்ல பேசலாம்ல?”

“நானும் ரொம்ப ஆசைப் பட்டேன் பா. ஆனா அந்த பொண்ணு விருப்பம் இல்லைன்னு சொல்லிருச்சாம்”

“மாப்பிளை நம்ம சரவணன்னு தெரியாம கூட அந்த பொண்ணு சொல்லிருக்கலாம். நீங்க இன்னொரு தடவை சிரமம் பாக்காம அவங்க வீட்ல பேசுறீங்களா?”

“சரவணனுக்கு நல்லது செய்யுறதுல என்ன சிரமம் பா இருக்கப் போகுது? அவனுக்காக நான் என்னவேனாலும் செய்வேன். நான் இப்பவே போய் பேசுறேன். அவங்க வீட்ல அவனமானப் படுத்தினா கூட வாங்கிக்குவேன்”, என்று சொல்லி வைத்து விட்டு குற்றாலம் வீட்டுக்குச் சென்றார். 

“அடடே மூர்த்தி வாங்க. வாங்க. நானே உங்களைப் பாக்க வரனும்னு நினைச்சேன்”, என்று வரவேற்றார் குற்றாலம்.

“அதான் பொண்ணு பிடிக்கலன்னு சொல்லிருச்சே? அப்புறம் எதுக்கு இங்க வந்தீங்க? என்று அவர் கேட்பார் என்று எதிர் பார்த்த மூர்த்தி அந்த வரவேற்பில் திகைத்தார்.

“அது வந்து நான்… உங்க பொண்ணு கல்யாண விஷயமா”, என்று ஆரம்பித்தார் மூர்த்தி. 

“நானும் அதை பத்தி தான் நினைச்சேன். உங்க மருமகன் சரவணன் தான் என் பொண்ணுக்கு மாப்பிள்ளை. அவங்க வீட்ல இருந்து எல்லாரையும் வரச் சொல்லுங்க. முறையா எல்லாம் பேசிறலாம்”, என்று அவர் சொல்ல மூர்த்தி வியந்து போனார்.

“பாப்பாக்கு பிடிக்கலைன்னு சொன்னீங்களே?”

“நான் ஒரு கூறு கெட்டவன் மூர்த்தி. மாப்பிள்ளை சரவணன்னு சொல்லாமலே பிள்ளை கிட்ட பேசிட்டேன். யாரோ எவரோன்னு தெரியாம பிள்ளையும் வேண்டாம்னு சொல்லிருச்சு. இப்ப அவளுக்கும் சம்மதம் தான்”

“நிஜமாவா?”

“நீங்க நம்பலையா? ஒரு நிமிஷம்”, என்று மூர்த்தியிடம் சொன்னவர் “வெண்மதி இங்க வா டா”, என்றாள். 

குத்து விளக்கின் அழகுடன் வந்து நின்றவளை அவர் ஆர்வமாக பார்க்க இவர் யார் என்னும் விதமாக பார்த்த வெண்மதி அவருக்கு வணக்கம் சொன்னாள்.

“இது நம்ம சரவணனோட தாய் மாமா மா. உனக்கும் சரவணனுக்கும் கல்யாணம் பண்ணுறது விஷயமா பேச வந்துருக்கார். உன்னோட சம்மதம் வேணும். நீயே அவர் கிட்ட சொல்லு மா”, என்றார் குற்றாலம் . 

என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள். எல்லாரும் அவளையே ஆர்வமாக பார்க்க அவளால் பட்டென்று சம்மதம் சொல்ல முடிய வில்லை. ஏதோ ஒரு உறுத்தல் அவளை ஆட்கொண்டது. 

“இங்க பாரு டி, இது தான் உனக்கு கிடைச்சிருக்குற கடைசி சந்தர்ப்பம். இப்ப விட்டேன்னா உனக்கு அவன் கிடைக்க மாட்டான்”, என்று அவளுக்கு எடுத்துரைத்தது அவள் மனசாட்சி. 

“எனக்கு சம்மதம் பா”, என்று தலை குனிந்த படியே அவள் சொல்ல அனைவரின் முகமும் மலர்ந்தது.

“ரொம்ப சந்தோஷம் மா. நான் நாளைக்கே எங்க வீட்டு ஆட்களை கூட்டிட்டு வரேன். பேசி முடிச்சிறலாம்”, என்று சொல்லி விட்டுச் சென்றார் மூர்த்தி. 

“இப்ப தான் எனக்கு சந்தோஷமா இருக்கு”, என்று சொன்ன விசாலம் மகளைக் கட்டிக் கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள். ஆனால் வெண்மதி தான் நிம்மதி இல்லாமல் தவித்தாள். 

அங்கிருந்து கிளம்பி மூர்த்தி நேராக சென்று நின்றது சரவணன் வீட்டில் தான். அவரைக் கண்டதும் “வாங்க மச்சான்”, என்றார் வெற்றிவேல். 

“நம்ம சரவணன் கல்யாண விஷயம் பேச வந்தேன் மாப்பிள்ளை”

“பொண்ணு யாரு?”

“அந்த வெண்மதி பிள்ளை தான்”

“அவங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டாங்களே?”

“இல்லை மாப்பிள்ளை, நான் அவங்க வீட்ல இருந்து தான் இப்ப வரேன். அந்த பிள்ளை சம்மதம் சொல்லிருச்சு. நாளைக்கு முறைப்படி போய் பேசி முடிக்கணும்”

“உண்மையாவா? வசந்தா இங்க வா வா”, என்று சொல்லி அவளிடம் விஷயத்தைச் சொல்ல வீட்டில் இருந்த அனைவருக்குமே சந்தோஷம்.

அடுத்த நாள் அனைவரும் அங்கே கிளம்பிச் சென்றார்கள். சம்பர்தாயமாக பேசி விட்டு “எங்க மருமகளைக் கூப்பிடுங்களேன்”, என்றாள் வசந்தா.

அவளை அழைத்து வந்து நிறுத்தினாள் விசாலம். சாதாரண சேலையில் தான் வந்து நின்றாள். வெண்மதிக்கோ படபடப்பாக இருந்தது. அவளால் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவனுக்கோ அவளை விட்டு பார்வையைத் திருப்ப முடியவில்லை. அலங்காரமே இல்லாமல் போனால் கூட அவளை அவனுக்கு பிடிக்குமே? 

“மன்னிச்சிக்கோங்க. இப்ப என் மகளுக்கு எந்த அலங்காரமும் பண்ணலை. பண்ணலாமா வேண்டாமான்னு தெரியலை. அதான்”, என்று சொன்னாள் விசாலம்.

உடனே தன்னுடைய இடத்தில் இருந்து எழுந்து நின்ற வசந்தா தான் வாங்கி வந்திருந்த பூவை எடுத்துக் கொண்டு வெண்மதி அருகில் வந்தாள். வெண்மதி தயக்கத்துடன் அவளை நிமிர்ந்து பார்க்க “ரொம்ப அழகா இருக்க மா. இனி நீ எங்க வீட்டுப் பொண்ணு. உன்னோட புருஷன் சரவணன் தான். அவன் உயிரோட இருக்குறப்ப நீ எல்லா அலங்காரமும் பண்ணிக்கலாம்”, என்று சொல்லி அவள் தலையில் அந்த பூவைச் சூடினாள். மல்லிகை தலையில் பட்டதும் ஏதோ ஒரு சிலிர்ப்பு அவளுக்குள் வந்தது. அது அவளுக்கு பிடித்த விசயமாயிற்றே. 

“கல்யாண தேதி குறிச்சிறலாமா?”, என்று கேட்டார் மூர்த்தி. குற்றாலம் சரி என்று சொல்லப் போக “ஒரு நிமிஷம். எனக்கு வெண்மதி கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்று சொன்னான் சரவணன். 

அனைவரும் திகைப்புடன் பார்க்க வெண்மதிக்கும் அதிர்ச்சி தான். “பாப்பா மாப்பிளையை உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ”, என்று குற்றாலம் சொல்ல அவள் அறைக்குச் சென்றாள். அவள் பின்னே அவனும் நடந்தான். 

உள்ளே சென்றதும் அவள் அவனை குழப்பமாக பார்க்க அவனும் அவளையே தான் பார்த்திருந்தான். ஒரு நொடிக்கு மேல் அவன் பார்வையைத் தாங்க முடியாமல் தலை குனிந்து கொண்டாள். அவன் அவளையே பார்ப்பது அவளுக்கு படப்பையும் குறுகுறுப்பையும் ஒருங்கே தந்தது.

“மதி”, என்று மென்மையாக அழைத்தான்.

“ஆன்”, என்ற படி அவனைப் பார்த்தாள். 

“உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”

“வாங்க உக்காருங்க”, என்று சொல்லி அவள் கட்டிலைக் காட்ட அதில் அமர்ந்து கொண்டான்.

”நீயும் உக்காரு”, என்று அவன் சொல்ல அவன் அருகே ஒரே கட்டிலில் அமரும் தைரியம் எல்லாம் அவளுக்கு இல்லை. அதனால் “பரவால்ல”, என்றாள். 

பேச வேண்டும் என்று வந்த சரவணனுக்கு சட்டென்று எப்படி ஆரம்பிக்க என்று தெரிய வில்லை. அதனால் அங்கே கனமான அமைதி நிலவியது. “வெளிய நமக்கு கல்யாண தேதி பிக்ஸ் பண்ணப் போறாங்க. உனக்கு இதுல சம்மதமா?”, என்று கேட்டான் சரவணன்.

“எனக்கு சம்மதம் தான்”, என்று சொன்னாலும் அவள் முகத்தில் எந்த சந்தோஷமும் இல்லை என்பதை உணர்ந்தான். கூடவே அவள் முகத்தில் இருந்த இறுக்கமும் அவனுக்கு புரிந்தது. 

“எனக்கு உன் முழு சம்மதம் வேணும் மதி. நீ முழு மனசா தான் இதுக்கு சரின்னு சொல்றியா? ஏன் கேக்குறேன்னா உன் மனசுல ஏதோ குழப்பம் இருக்கு. அது நிர்மல் பத்தினதா கூட இருக்கலாம். உன் மனசுல என்ன இருக்குனு சொல்லு”, என்று அவன் கேட்க அவளோ அமைதியாக இருந்தாள். அவளுக்கே மனதில் குழப்பம் சூழ்ந்திருக்க அவளாலே அவள் மனதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

“உன்னால என்னை முழு மனசா ஏத்துக்க முடியலை தானே மதி? உன்னை நான் சின்ன அளவுல கூட கஷ்டப் படுத்தக் கூடாதுன்னு நினைக்கிறேன். அதனால நீ இப்ப எந்த முடிவையும் சொல்ல வேண்டாம். பொறுமையா உக்காந்து யோசி. இப்ப இந்த கல்யாண விஷயம் பேச வேண்டாம். நான் எல்லார்க் கிட்டயும் சொல்லிக்கிறேன்”, என்று சொன்னவன் எழுந்து கொண்டான். அவள் அப்போதும் அமைதியாக இருக்க அவன் அங்கிருந்து விலகிச் செல்ல முயன்றான். பரிதவிப்பாக அவனை ஏறிட்டாள் வெண்மதி.

காதல் வெடிக்கும்…..

Advertisement