Advertisement

அத்தியாயம் 13

நெஞ்செங்கும் நுண் பூகம்பத்தை

உணர்ந்தேன் உந்தன் அருகில்!!!

அவனை அப்படிப் பார்க்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது. என்னால தான் இவனுக்கு இப்படி ஆச்சோ என்று அவள் உள் மனம் பயம் கொண்டது. கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. மெதுவாக அவன் முகம் நோக்கி குனிந்தவள் அவனுடைய நெற்றியில் தன்னுடைய இதழைப் பதித்தாள். 

இதற்கு மேல் இங்கே இருந்தால் ஏங்கி ஏங்கி அழுது விடுவோம் என்று எண்ணி எழுந்து அங்கிருந்து செல்லப் பார்த்தாள். அப்போது அவள் கையைப் பற்றித் தடுத்தான் சரவணன்.  

அவள் அதிர்வாக அவன் முகம் பார்க்க அவனோ கண்களை மூடி உறங்கிக் கொண்டிருந்தான். உறக்கத்தில் எப்படி தன்னுடைய கையைப் பற்றினான் என்று குழம்பியவள் சிறிது நேரம் அவனைப் பார்த்த படி அமர்ந்து விட்டாள். 

“எனக்கு நீங்க வேணும். நீங்க மட்டும் தான் வேணும். இனி யாருக்காகவும் உங்களை என்னால இழக்க முடியாது. ஆனா பயமா இருக்கு”, என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே இருந்தாள். சிறிது நேரத்தில் அவள் வெளியே சென்று விட்டாள். 

அன்று வீட்டுக்கு வந்த பூர்ணிமா குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள். “என்ன பூர்ணி? ஏன் ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டான் செந்தில்.

வெண்மதி பேசியதை எல்லாம் சொன்னவள் “அவளுக்கு அண்ணனைப் பிடிக்கும்னு எனக்கு தெரியாதுங்க”, என்றாள். 

இப்போது சரவணனும் குழம்பிப் போனான். அவன் குழப்பத்தை உணராமல் அவளே பேசினாள். 

“நம்ம வீட்ல இருந்தும் வெண்மதியை பொண்ணு கேட்டுருக்காங்க தெரியுமா?”

“என்ன டி சொல்ற?”

“அப்பாவும் பெரியப்பாவும் சேந்து தான் பொண்ணு கேக்க போனாங்களாம். அதுவும் அண்ணாவோட சம்மதத்தால”

“ஓ”

“ஆனா அவ மாப்பிள்ளை என் அண்ணான்னு தெரியாம மறுத்துட்டா. நீங்க என்ன யோசிக்கிறீங்க?”

“உங்க அண்ணன் எப்படி ரெண்டாவது கல்யாணத்துக்கு சம்மதிச்சான்னு யோசிக்கிறேன். பூர்ணி நீ எனக்கு ஒரு விஷயம் சொல்றியா?”

“என்னங்க?”

“வெண்மதி கல்யாணம் நடந்தப்ப உங்க அண்ணன் எப்படி இருந்தான்? கவலைப் பட்டானா? கோபப் பட்டானா? ஏதாவது ஒரு உணர்வு அவன் கிட்ட இருந்து வெளிப்பட்டுச்சா? நல்லா யோசிச்சு சொல்லு பூர்ணி”

“அவளுக்கு கல்யாணம்னு சொன்னப்ப அவன் பெருசா ஒண்ணுமே கண்டுக்கலையே? நான் வெண்மதி கல்யாணத்துக்கு போயிட்டு வந்து போட்டோ காட்டினப்ப கூட ரெண்டு பேரும் அழகா இருக்காங்கல்லன்னு சொன்னான். மத்த படி அவன் பீல் எல்லாம் பண்ணலையே?”

“அவன் பீல் பண்ணிருந்தாலும் வெளிய காட்டிருக்க மாட்டான் பூர்ணி”

“ஏன் அப்படிச் சொல்றீங்க?”

“உங்க அண்ணனுக்கு முதலும் கடைசியுமா பிடிச்ச பொண்ணு வெண்மதி தான்”

“என்ன உளறீங்க? அப்படி எல்லாம் கிடையாது. அப்படி அவன் லவ் பண்ணிருந்தா தைரியமா நம்ம எல்லார்க் கிட்டயும் சொல்லிருப்பான். நம்ம வீட்ல யார் அவன் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசப் போறாங்க?”

“இல்லை பூர்ணி, அவன் நம்ம எல்லார்க் கிட்டயும் சொல்லணும்னு நினைக்கிறதுக்குள்ள வெண்மதி கல்யாணம் முடிவாகிருக்கணும். அதனால தான் சொல்லாம இருந்திருப்பான். அப்படி இல்லைன்னா அவன் மனசை அவனே உணராம இருந்துருக்கலாம்”

“என்னங்க என்னல்லாமோ சொல்றீங்க?”

“ஏன்னா உங்க அண்ணன் என் கிட்ட ஒரு பொண்ணு பத்தி பேசினான்னா அது வெண்மதி பத்தி மட்டும் தான்”

“அப்படியா? என்ன பேசினான்?”

“அது யாருன்னு கேட்டான்”

“என்னது? எங்க அண்ணன் அப்படி கேட்டுச்சா? இவன் அப்படி எல்லாம் பொண்ணுங்களை பத்தி கேக்க மாட்டானே?”

“அது தான் எனக்கு சந்தேகமே. வெண்மதி கல்யாணம் முடிஞ்சதும் அமைதியா இருந்துருப்பான். நாம கவனிச்சிருக்க மாட்டோம். சரி அதை விடு. வைஷ்ணவி கூட அவனுக்கு கல்யாணம் பேசினப்ப அவன் கிட்ட ஏதாவது சேஞ்சஸ் தெரிஞ்சதா?”

“அப்படி ஒண்ணும் தெரியலையேங்க. சொந்த மாமா பொண்ணு அப்படிங்குறதுனால வேண்டாம்னு சொன்னான். இருங்க இருங்க… இல்லைங்க. அவன் சொன்னான் விதவைக்கோ ஆதரவற்ற பொண்ணுக்கோ தான் வாழ்க்கை கொடுக்க போறேன்னு சொன்னான். அப்படின்னா அவன் வெண்மதியை மனசுல வச்சிட்டு தான் அப்படி சொன்னானா?”

“கண்டிப்பா அப்படி தான் இருக்கணும். அவன் அவளை நினைச்சு தான் அப்படிச் சொல்லிருக்கான். ஆனா நீங்க எல்லாரும் சேந்து அவனைக் கட்டாயப் படுத்திருப்பீங்க. இப்ப அவனுக்கு மூணாவது முறையா அவளைக் கல்யாணம் பண்ண வாய்ப்பு கிடைச்சதும் தயங்காம சரின்னு சொல்லிருக்கான்”

“ஆமாங்க”

“ரெண்டு பேருக்கும் இடையே ஏதோ ஒரு லிங்க் இருக்கு பூர்ணி. அன்னைக்கு இனிப்பு வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த வெண்மதி கொழுக்கட்டை சாப்பிட்டா தெரியுமா? எனக்கு அப்பவே ஒரு சந்தேகம். கண்டிப்பா சரவணன் தான் ஏதோ பேசி அவளை சாப்பிட வச்சிருக்கணும்”

“அப்படி தான் எனக்கும் தோணுது”

“சரி அவன் மனசுல அவ இருக்கான்னு தெளிவாகிருச்சு. இப்ப வெண்மதி கிட்ட வருவோம். அவளுக்கு எப்ப அவனை பிடிக்க ஆரம்பிச்சிருக்கும்?”

“தெரியலையே? இன்னைக்கு தான் அவ அழுறதையே நான் பாத்துருக்கேன்”

“இல்லை பூர்ணி, நல்லா யோசிச்சு பாரு. உனக்கு ஏதாவது வித்தியாசம் தெரிஞ்சிருக்கும்”, என்று செந்தில் கேட்க பூர்ணிமா யோசித்தாள். ஆனால் அவளுக்கு எதுவும் நினைவில் இல்லை.

“வெண்மதி கல்யாணம் நடந்தப்ப உன் கிட்ட வெண்மதி என்ன பேசினான்னு நினைவு இருக்கா பூர்ணி”

“இருக்குங்க. மாப்பிள்ளை எப்படி இருப்பார்னு கேட்டேன். உங்க அண்ணன் மாதிரி இருப்பார்னு சொன்னா”

“என்னது?”

“ஆமாங்க. அவ அப்படித் தான் சொன்னா. அது மட்டுமில்லாம அன்னைக்கு நிர்மல் அண்ணாவைப் பாக்க போகும் போது உங்க அண்ணா மாதிரியே இருக்காங்கல்லன்னு கேட்டா”

“பூர்ணி அவ நிர்மல் கிட்ட உங்க அண்ணனைத் தான் தேடி கண்டு பிடிச்சிருக்கா. உனக்கு புரியுதா? அவளுக்கும் உங்க அண்ணனைப் பிடிச்சிருக்கு. சரவணன் அவ கிட்ட காதலைச் சொல்லிருந்தா அவளும் அவ மனசை புரிஞ்சிட்டு இருந்துருப்பா. இல்லைன்னா அவங்க அப்பாக்கு பயந்து சம்மதிச்சிருப்பா. அதுவும் நிர்மல் சரவணன் ஜாடைல கொஞ்சம் இருந்ததுனால தான் அவ கல்யாணமே பண்ணிருக்கா. அப்படி இல்லாம போயிருந்தா கண்டிப்பா வெண்மதி அவனைக் கல்யாணம் பண்ணிருந்துருக்க மாட்டா”

“அப்படி தான் போலங்க”

“சரி உங்க அண்ணனுக்கு கல்யாணம் நடந்தப்ப வெண்மதி ரியாக்ஷன் எப்படி இருந்தது பூர்ணி?”

“அவனோட கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுத்தப்ப சாதாரணமா தான் வாங்கிக் கிட்டா. அவனுக்கு கொடுக்கச் சொல்லி ஒரு கிஃப்ட் கொடுத்தா?”

“கிஃப்டா? என்ன கிஃப்ட்”

“அதை நானே மறந்துட்டேங்க. அண்ணன் கிட்ட கொடுக்கவே இல்லை. இங்க தானே எங்கயோ இருந்துச்சு?”, என்று அவளுடைய அறை முழுவதும் தேடினாள். செந்திலும் அவளுக்கு உதவி செய்தான். ஒரு வழியாக அதை தேடி எடுத்து அவன் கையில் கொடுத்தாள். 

வெளியே இருந்த கவரில் அன்புடன் வெண்மதி என்று இருந்தது. ஆர்வமாக அதைப் பிரிக்க போனான் செந்தில். 

அவன் கையைப் பற்றி தடுத்த பூர்ணிமா “இதை அண்ணா தான் பிரிக்கணும்”, என்றாள். 

“இல்லை டி, சரவணனுக்கும் வெண்மதிக்கும் ஏதாவது இருந்ததான்னு இந்த கிஃப்ட் நமக்கு புரிய வைக்கும். இரு வெண்மதி அவனுக்கு என்ன கிஃப்ட் கொடுத்துருக்கான்னு பாப்போம்?”, என்று சொல்லி அதைப் பிரித்தான்.

உள்ளே ராதா கிருஷ்ணன் சிலை ஒன்று இருந்தது. இது தானா என்று அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவன் முகத்தைப் பார்த்த பூர்ணிமா “என்னங்க? என்ன யோசிக்கிறீங்க?”, என்று கேட்டாள். 

“இல்லை, நான் வேற எதையோ எதிர் பாத்தேன்”

“என்ன எதிர் பாத்தீங்க?”

“இல்லை வெண்மதியோட மனசை சொல்ற மாதிரி ஏதாவது உள்ள இருக்கும்னு நினைச்சேன்”

“அண்ணா அவ மனசுல இருந்துருந்தாலும் அண்ணனுக்கு இன்னொரு பொண்ணு கூட கல்யாணம் ஆகப் போகுறப்ப அதை கிஃப்ட் மூலமா அவ வெளிபடுத்துவாளா?”, என்று பூர்ணிமா கேட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த பார்சலை நன்கு பிரித்தான்.

அதற்குள் சுருளாக ஒரு பேப்பர் இருந்தது. “இது என்ன பேப்பர்?”, என்று எடுத்து பார்த்தான்.

“திருமண வாழ்த்து ஏதாவது எழுதிருப்பாளா இருக்கும்?”, என்று பூர்ணிமா சொல்ல அதை விரித்து பார்த்த செந்தில் அதிர்ந்து போனான். 

அவன் திகைத்துப் போய் நிற்பதைப் பார்த்தவள் “என்ன ஆச்சுங்க?”, என்று கேட்டாள். 

“இங்க பாரு டி”, என்று சொல்லி அந்த பேப்பரை நீட்டினான். அதை வாங்கிப் பார்த்த பூர்ணிமாவுக்கும் திகைப்பு தான். ஏனென்றால் அந்த பேப்பரில் அச்சு அசலாக சரவணனை வரைந்து வைத்திருந்தாள் வெண்மதி. 

“எப்படிங்க இப்படி அச்சு அசலா அவனை வரைஞ்சிருக்கா? பிரிண்ட் பண்ண மாதிரி இருக்கு. ஆனா பென்சில் டிராயிங்க் தான். இத்தனைக்கும் அண்ணாவோட போட்டோ கூட அவ கிட்ட கிடையாது. அப்ப அண்ணனை அவ ரொம்ப பாத்துக்கிட்டதும் கிடையாது”

“தெரியலை பூர்ணி. அதுக்கு பதில் வெண்மதி கிட்ட தான் கேக்கணும். சரி இந்த கிஃப்ட்டை அப்படியே உன் அண்ணன் ஆஸ்பத்திரில இருந்து வந்ததும் அவன் கிட்ட கொடுத்துரு”, என்று சொன்னவன் மீண்டும் அதை பார்சல் செய்தான்.

அவளுக்கும் அது தான் சரி என்று பட்டது. வெண்மதி உடல் நிலை சரியாகி வீட்டுக்குச் சென்ற இரண்டு நாட்கள் கழித்து சரவணன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தான். சாந்தியும் வசந்தாவும் அவனை நன்கு கவனித்துக் கொண்டார்கள். காயங்கள் லேசாக ஆறிய போதும் உடலில் வலி இன்னும் மிச்சம் இருக்க வசந்தா கொடுத்த ஆட்டுக்கால் சூப்பைக் குடித்து விட்டு அவனுடைய அறையில் படுத்திருந்தான் சரவணன்.

அப்போது அவனைத் தேடிச் சென்ற பூர்ணிமா “அண்ணா”, என்று அழைத்தாள். 

“வா பூர்ணி”

“இப்ப வலி பரவால்லயா?”, என்று கேட்ட படி அவன் அருகே அமர்ந்தாள். 

“பரவால்ல மா. ஆமா அது என்ன கையில கிஃப்ட்? யாருக்கு?”

“உனக்கு தான் அண்ணா”

“எனக்கா? எனக்கு எதுக்கு? நீ வாங்கினியா?”

“இல்லை. இன்னொரு ஆள் உனக்கு கொடுத்தாங்க?”

“யாரு மா?”

“வெண்மதி”, என்று சொல்லி அவள் அண்ணனை நோட்டம் விட அவன் முகம் மட்டுமல்ல அவன் கண்களும் மலர்ந்தது. அவன் கண்கள் சந்தோஷமாக அந்த கிஃப்டையே பார்க்க அண்ணனின் மனது அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது.

“மதியா கொடுத்தா?”, என்று ஆர்வமாக கேட்டான்.

“ஆமாண்ணா, உன்னோட கல்யாணம் அப்ப உன் கிட்ட கொடுக்கச் சொன்னா. நான் தான் மறந்துட்டேன். இப்ப வீடு ஒதுங்க வைக்கும் போது தான் கண்ணுல பட்டுச்சு. இந்தா”, என்று அவனிடம் நீட்ட ஆர்வமாக அதை வாங்கிப் பிரித்தான். அவனையே பார்த்த படி அமர்ந்திருந்தாள் பூர்ணிமா.

சிறு குழந்தைகள் பரிசு பொருளைப் பிரிக்கும் போது அவர்கள் முகத்தில் ஒரு சந்தோஷம் இருக்குமே? அப்படி ஒரு சந்தோஷம் அவன் முகத்தில் இருப்பதைக் கண்டாள். 

உள்ளே இருந்த சிலையைக் கண்டவன் அதை கையில் எடுத்து ஆசையாக வருடினான். அந்த சிலையில் இருந்த ஆண் முகம் அவன் போலவும் பெண் முகம் வெண்மதி போலவே அவனுக்கு தோன்றியது.

ஆசையாக அதை வருடியவன் தன்னுடைய உதட்டால் அதற்கு முத்தம் வைக்க அண்ணனை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள் பூர்ணிமா. 

Advertisement