Advertisement

“தென்கலம் பஸ் அப்பவே போயிருச்சே சார்?”, என்றான் சரவணன்.

“போச்சா? பாப்பா இன்னைக்கு லேட்டா தான் ஸ்கூல்க்கு போவா போல? சரி நீ எங்கப்பா கிளம்பிட்ட?”

“டவுனுக்கு போறேன் சார்”

“அப்படின்னா வெண்மதியை ஸ்கூல்ல இறக்கி விட்டுறியாப்பா?”, என்று அவர் கேட்டதும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள் வெண்மதி. அவனுக்கும் அதிர்ச்சி தான். அது மட்டுமில்லாமல் அவள் அதிர்ச்சியை வேறு கவனித்து விட்டான்.

அவளுடைய அதிர்ச்சியை மனதில் குறித்துக் கொண்டு “அவங்களுக்கு விருப்பம்னா கொண்டு போய் விடுறேன் சார்”, என்றான்.

“வெண்மதி, தம்பி ஸ்கூல் வழியா தான் போகுது. அவர் கூட போறியா மா?”, என்று குற்றாலம் மகளிடம் கேட்க தயக்கத்துடன் சரி என்னும் விதமாய் தலை அசைத்தாள்.

“பாப்பா சரின்னு சொல்லிட்டா. கொஞ்சம் விட்டுருங்க தம்பி”, என்று சொன்ன குற்றாலம் “ஏறு மா”, என்று மகளிடம் சொன்னார். அவள் அவன் பின்னே ஏறி அமர்ந்து பின் பக்க கம்பியைப் பிடித்துக் கொண்டாள். குற்றாலத்திடம் சொல்லி விட்டு அவன் வண்டியைக் கிளப்பினான்.

சிறிது தூரம் வந்ததும் “சாரி மதி, உன்னை வலுக்கட்டாயமா வண்டில ஏற வச்சதுக்கு”, என்றான் சரவணன்.

“நான் எங்க அப்படிச் சொன்னேன்?”, என்று குழப்பமாக கேட்டாள் வெண்மதி.

“சொன்னா தானா? என் கூட வர தயங்குன தானே?”

“தயக்கம் இருந்தது தான். ஆனா வர பிடிக்காம இல்லை”, என்று அவள் சொல்ல அவனுக்கு திருமண விசயத்தைப் பற்றி அவளிடம் கேட்கவா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது.

“எதனால் என்னை உனக்கு பிடிக்கலை?”, என்று அவனால் கேட்க முடியவில்லை. அதனால் அவன் அமைதியாக வண்டியை செலுத்த அப்போது எதிரே வந்தது ஒரு லாரி. இவன் ஓரமாக தான் சென்று கொண்டிருந்தான். லாரியைக் கண்டதும் ஏற்கனவே நடந்த ஆக்ஸிடெண்டின் தாக்கத்தில் அவனுடைய தோளைப் பற்றினாள் வெண்மதி. அவளுடைய திடீர் தொடுகையில் அவன் கைகளில் நிதானம் தப்பி போனது.

மூக்கு முட்டக் குடித்திருந்த லாரி டிரைவரும் காட்டு மிராண்டி போல வண்டி ஓட்டிக் கொண்டிருக்க கீறிச் என்ற சப்தம்….. அவ்வளவு தான் வண்டியும் லாரியும் நேருக்கு நேர் மோத இருவரும் தூக்கி எறியப் பட்டார்கள். வண்டி அப்படியே லாரிக்கடியில் சிக்கி நசுங்கிப் போனது. லாரிக்காரனும் லாரியினுள் மயங்கி கிடந்தான். அவனுக்குமே பயங்கர அடி தான்.

சரவணன் அதிக ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடக்க வெண்மதிக்கு தான் முதலில் உணர்வு இருந்தது. கஷ்டப் பட்டு முள்ளுக்குள் இருந்து எழுந்து வெளியே வந்தவள் அவனைத் தேடினாள்.

ரத்தம் ஆறாக பெருகிய படி பொம்மை போல சலனமற்று கிடந்தான் சரவணன். போய்ட்டானா? இவனும் என்னை விட்டுட்டுப் போய்ட்டானா? என்று மனதுக்குள் கதறியவள் வேகமாக அவனை நெருங்கினாள்.

அவன் தலையைத் தூக்கி தன்னுடைய மடியில் கிடத்திக் கொண்டவள் தன்னுடைய சேலை முந்தானையை கிழித்து அவன் தலையில் இருந்து ரத்தம் வரும் இடத்தில் கட்டுப் போட்டாள். பின் அவன் நெஞ்சில் காது வைத்து அவனுடைய இதயத் துடிப்பைக் கேட்டாள். அது கொஞ்சம் பலவீனமாக கேட்க உடனே தன்னுடைய போனைத் தேடினாள்.

அவள் பையே காணாமல் போயிருக்க அவனது போன் அவன் அருகே எந்த அடியும் படாமல் கிடந்தது. அதை எடுத்தவள் அதில் இருக்கும் ஸ்கிரீன் லாக் எடுக்க தெரியாமல் திணறி பின் அவன் பெருவிரல் ரேகையை அழுத்த அது உடனே திறந்து கொண்டது.

அவசரமாக தந்தையின் எண்ணுக்கு அழைத்தாள். அவர் அப்போது தான் வேலு கொண்டு வந்த காரில் ஏறினார். மருது ரிப்பெயர் ஆன காரை பழுது பார்க்க அதே இடத்திலே நின்றான். சரவணன் அழைக்கவும் “ஹலோ சொல்லுப்பா சரவணா. வெண்மதியை ஸ்கூல்ல விட்டுட்டியா?”, என்று கேட்டார் குற்றாலம்.

“அப்பா… அப்பா… இங்க ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு பா. உடனே வாங்கப் பா. அப்பா அவருக்கு… கண்ணைத் திறக்காம கிடக்குறார் பா. எனக்கு பயமா இருக்கு பா”, என்று அவள் கதற “ஐயோ”, என்று அதிர்ந்து போனவர் “இதோ இப்ப வந்துறேன் மா”, என்றவர் “வேலு காரைத் திருப்பு. மருது அந்த கார் அப்படியே கிடக்கட்டும். நீயும் எங்க கூட கார்ல ஏறு. பாப்பா ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சுன்னு சொல்றா”, என்று சொன்னதும் வேலு வண்டியை வேகமாக செலுத்தினான்.

.

அரை மணி நேர தூரத்தை பத்தே நிமிடத்தில் வேலு கடக்க அங்கே வெண்மதி இருந்த கோலத்தைக் கண்டு குற்றாலத்தின் ஆவி துடித்தது. அவர் செய்த பாவங்கள் எல்லாம் அவர் கண் முன்னே விரிந்தது. சரவணனை மடியில் போட்டுக் கதறிக் கொண்டிருந்தாள் வெண்மதி. அவள் தலையில் இருந்தும் கை கால்களிலும் இருந்தும் ரத்தம் கசிந்து கொண்டு தான் இருந்தது.

“வெண்மதி”, என்று கத்திய படி அவளை நெருங்கினார். “வேலு லாரி டிரைவரை பாரு. உயிர் இருந்தா அவனையும் கார்ல தூக்கிப் போடு”, என்று சொன்ன மருதுவும் வெண்மதியை நெருங்கினான்.

சரவணன் மயக்கத்தில் கிடக்க “ஒண்ணும் ஆகாது டா பாப்பா. நீ கார்ல ஏறு”, என்று மகளிடம் சொன்ன குற்றாலம் “மருது சரவணனை கார்ல ஏத்து”, என்றார். சரவணனை கைத்தாங்களாக தூக்கி காருக்குள் ஏற்றினான் மருது. குற்றாலமும் அவனுக்கு உதவினார். அதற்குள் லாரி டிரைவரையும் வேலு காரில் ஏற்றி இருந்தான்.

“வேலு நீ இங்கயே இருந்து போலிஸ்க்கு தகவல் சொல்லிரு. அவங்க கிட்ட விவரம் சொல்லி ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு வா. நம்ம பாப்பா பேக் எங்கயோ கிடக்கு தேடி எடுத்து வை”, என்று குற்றாலம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மருது காரை எடுத்தான்.

சரவணனை தன்னுடைய மடியில் சாய்த்திருந்த வெண்மதி  “மருதண்ணா சீக்கிரம் போங்க. அப்பா வேகமாக போகச் சொல்லுங்கப்பா. ஏன் பா எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது? நிர்மலும் இப்படி தான் பா என்னை விட்டு போய்ட்டார். இப்ப இவரும். என்னால தாங்க முடியலை பா. சீக்கிரம் போகச் சொல்லுங்கப்பா”, என்று கதறினாள்.

”பாப்பா அமைதியா இரு டா, ரெண்டு நிமிசத்துல போயிறலாம். சரவணனுக்கு ஒண்ணுமே ஆகாது மா. நீ பயப்படாத டா”, என்று மகளுக்கு ஆறுதல் சொன்னார் குற்றாலம்.

“எனக்கு பயமா இருக்கு பா. இவருக்கும் ஏதாவது ஆச்சுன்னா நான் உயிரோட இருக்க மாட்டேன். ஏன் பா எனக்கு புடிச்சவங்க எல்லாம் என்னை விட்டு போறாங்க?”, என்று அவள் கதற அவரால் மகளின் பேச்சைக் புரிந்து கொள்ள முடியவில்லை. “என்ன சொல்றா இவ? பிடிச்சவங்களா? அப்படின்னா சரவணனை இவளுக்கு பிடிக்குமா?”, என்று குழம்பினார்.

“அப்பா, இவருக்கு ரத்தம் ரொம்ப போகுதுப்பா. எனக்கு பயமா இருக்குப்பா”, என்று சொன்னவள் மீண்டும் தன்னுடைய சேலையைக் கிழித்து அவன் முகத்தை துடைத்த படி அழ அவருக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. “மருது வேகமா போ”, என்று அவனிடம் கத்தினார்.

“எந்திரிங்க, கண்ணு முழிச்சு என்னைப் பாருங்க. என்னைப் விட்டு போயிராதீங்க. நீங்க இந்த உலகத்துல இல்லைன்னா நான் என்ன ஆவேன்னே தெரியலை. முழிச்சு என்னைப் பாருங்க. என் கூட நல்லா தானே பேசிட்டு வந்தீங்க? நிர்மலும் என் கூட நல்லா பேசிட்டு தான் வந்தாங்க. கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிற? இன்னொரு இழப்பை என்னால தாங்க முடியாது. என் உயிரை எடுத்துட்டு இவரை காப்பாத்து. அப்பா வேகமா போகச் சொல்லுங்க பா”, என்று பிதற்றியவள் அதிக ரத்த இழப்பினால் அப்படியே மயங்கிச் சரிந்தாள். குற்றாலம் துடித்து போனார்.

எத்தனை பேரின் ரத்தத்தைப் பார்த்து சந்தோஷப் பட்டிருக்கிறேன்? அதற்கு தான் என்னை விதி இப்படி துரத்துகிறதா என்று அவர் எண்ணும் போதே மருத்துவமனை வந்திருந்தது. மருதுவும் அவரும் சேர்ந்து மூன்று பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தார்.

மூவருக்கும் டிரீட்மென்ட் ஆரம்பிக்க முதலில் மூர்த்திக்கு அழைத்து தகவல் சொன்னார். அதைக் கேட்டு துடித்துப் போன மூர்த்தி உடனே வருகிறோம் என்று சொல்லி விட்டு வெற்றிவேலுக்கு அழைத்து தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் அனைவரும் இங்கே வந்து விட்டார்கள்.

குற்றாலம் மனைவிக்கும் விஷயத்தைச் சொல்ல அவளோ துடித்துப் போனாள். “உன்னை விடாம கும்பிடுறதுனால தான் என்னை இப்படி சோதிக்கிறியா?”, என்று கடவுளை நினைத்துக் கத்தியவள் அவர்கள் தோட்டத்தில் பணி புரியும் கோபால் என்பவனை வண்டியை எடுக்கச் சொல்லி அவனுடன் வந்தாள்.

Advertisement