Advertisement

வீட்டுக்கு சென்ற மூர்த்தி முதலில் வெற்றிவேலிடம் பேசுவோம் என்று எண்ணி அவரை போனில் அழைத்தார்.

“சொல்லுங்க மச்சான்”, என்றார் வெற்றிவேல். 

“ஒரு விஷயம் பேசணும் மாப்பிள்ளை. ஆனா ஒரு தடவை செஞ்ச தப்பால அதை உரிமையா பேச முடியலை”

“நடந்ததுல நீங்க என்ன செய்வீங்க மச்சான்? எல்லாம் விதி. எங்க யாருக்கும் உங்க மேல எந்த வருத்தமும் கோபமும் இல்லை. என்னன்னு சொல்லுங்க”

“என் மாப்பிள்ளையோட கல்யாண விஷயம் பேசணும்”

“வைஷ்ணவி இறந்து இன்னும் வருஷம் கழியலையே மச்சான்”

“அது திர்ஸ்டி போன மாதிரி போயிருச்சு. இனி என் மருமகன் வாழ்க்கை நல்லா இருக்கணும். சூட்டோட எல்லாம் முடிச்சிறலாமே?”

“பேசிப் பாப்போம் மச்சான். ஆனா என்னால சரவணனை வற்புறுத்த முடியாது. ஏற்கனவே வேண்டாம்னு சொன்னவனை…. சரி பொண்ணு யாரு?”

“நம்ம குற்றாலம் அண்ணனோட பொண்ணு. நாம கூட அந்த பொண்ணு கல்யாணத்துக்கு போனோமே?

“அந்த வீட்லயா? குற்றாலம் பழி பாவத்துக்கு அஞ்சாதவனாச்சே மச்சான்?”

“பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. அழகும் கூட. நம்ம பூர்ணியோட பிரண்டு வேற. அந்த பொண்ணு நம்ம சரவணனுக்கு பொருத்தமா இருப்பா. கட்டி வைப்போம் மாப்பிள்ளை. சந்தோஷமா இருக்கட்டுமே?”

“சரி உங்க தங்கச்சி கிட்டயும் உங்க மாப்பிள்ளை கிட்டயும் பேசுறேன் மச்சான்”

“சரி மாப்பிள்ளை. அவங்க சம்மதம் சொன்னா சொல்லுங்க. நானே பேசி முடிக்கிறேன். எனக்கு என் மருமகன் நல்லா வாழுறதைப் பாக்கணும். கேட்டுட்டுச் சொல்லுங்க”, என்று சொல்லி போனை வைத்தார் மூர்த்தி.

மூர்த்தி பேசியதைப் பற்றி எண்ணிக் கொண்டே வெற்றிவேல் ஏதோ யோசனையில் இருந்தார். 

“என்னங்க? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”, என்று கேட்டாள் வசந்தா.

“இல்லை ஒரு விஷயம் மனசைப் போட்டுக் குழப்புது”

“என்ன விஷயம்?”

“மச்சான் இப்ப எனக்கு கால் பண்ணினார்”

“எங்க அண்ணனா?”

“வேற எனக்கு எந்த மச்சான் டி இருக்கார்?

“தெரியாம கேட்டுட்டேன். சரி என்னவாம்?”

“நம்ம குற்றாலம் இருக்கார் தெரியுமா?”

“ஆமா”

“அவர் மகளை நம்ம மகனுக்கு பாக்கலாமானு உன் அண்ணன் கேக்குறார்”

“என்னங்க சொல்றீங்க?”

“ஆமா, அவர் அப்படி தான் சொன்னார். உங்க அண்ணனுக்கு சரவணன் வாழ்க்கை பாழாப் போனதுல இருந்து அதை நேர் செய்யணும்னு ஆசை. அதான் அவருக்கு இப்படி தோணிருக்கு போல?”

“நீங்க என்ன சொன்னீங்க?”

“நான் உன் கிட்ட கேக்குறேன்னு சொன்னேன். நீ என்ன சொல்ற?”

“நான் சொன்னாலும் சரவணன் ஒத்துக்கணுமே?”

“பொண்ணு அந்த பொண்ணுன்னு சொன்னா சரவணன் ஒத்துக்குவான்னு சொல்றார்”

“ஏன் அப்படி?”

“நம்ம பூர்ணிமாவோட உயிர் தோழில? அதான் அப்படிச் சொல்லிருப்பார்”

“எனக்கும் ஆசையா தான் இருக்கு. அன்னைக்கு நம்ம பூர்ணி வீட்டுக்கு கூட வந்துச்சு. அருமையான பிள்ளையா தான் இருக்கு. அவ அம்மாவும் நல்லாவே பேசினாங்க. ஆனா சரவணன் என்ன சொல்லுவானோன்னு பக்குன்னு இருக்கு”

“அவன் கிட்ட பேசிப் பாரு டி. அவன் தனியா இருக்கும் போது பேசு. பொண்ணு யாருன்னு அவன் கிட்ட சொல்லியே சம்மதம் கேளு. பேசுற விதத்துல பேசு டி. உனக்கு பேசவா சொல்லிக் கொடுக்கணும்?”, என்று கேட்க கணவனை முறைத்து விட்டு மகனைத் தேடிச் சென்றாள். 

“சரவணா”

“என்ன மா?”

“அம்மா உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும் பா”

“என்ன? சொல்லு மா”

“உன் கல்யாண விஷயம் யா”

“என்ன விளையாடுறியா? என்னைப் பத்தி என்ன நினைக்கிற? இப்பவே என் முதுகுக்கு பின்னாடி என்னை ஆம்பளை இல்லைன்னு சொல்றாங்க. இதுல மறுபடியும் கல்யாணம் பண்ணி கேவலப் படச் சொல்றியா?”, என்று எரிந்து விழுந்தான்.

“இல்லை கண்ணு, இன்னொரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கச் சொல்றேன்”, என்று சாமர்த்தியமாக பதில் சொன்னாள் வசந்தா.

“என்ன மா சொல்ற?”

“நம்ம பூரணி பிரண்டு இருக்காளே”, என்று ஆரம்பிக்க அவன் கண்கள் மின்னியது. அவன் அமைதியாக இருக்கவும் அவள் தொடர்ந்தாள். 

“அந்த பிள்ளை கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே புருஷனை இழந்துட்டு நிக்குது”

“ஏன் மா அந்த பொண்ணு இன்னைக்கு தான் விதவையாச்சா? அது புருஷனை இழந்து ரெண்டு வருசமாகிருச்சே? அப்ப ஏன் நீ என் கிட்ட அவளை கல்யாணம் பண்ணிக்கலையான்னு கேக்கலை? அப்ப அவ உனக்கு ரெண்டாந்தாரமா தெரிஞ்சிருப்பா. இப்ப நானும் ரெண்டாந்தாரம்னு ஆனதும் இப்ப வந்து கேக்குறியா?”, என்று கேட்டான் சரவணன். அவன் கேள்விக்கான அர்த்தத்தை வசந்தாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

முன்பே ஏன் அவளை இவனுக்கு திருமணம் செய்து வைக்க வில்லை என்று கேட்கிறானா? இல்லை இப்போது ஏற்கனவே கல்யாணம் ஆன பெண்ணை இவனுக்கு பார்த்ததற்கு இப்படிச் சொல்கிறானா என்று அவளுக்கு தெரிய வில்லை.

“தம்பி நீ சொல்ல வரது அம்மாவுக்கு புரியலைப்பா. அந்த பொண்ணு வேண்டாமா?”, என்று வசந்தா வெகுளியாக கேட்க அவனுக்குமே ஏன் அப்படிச் சொன்னான் என்று தெரிய வில்லை.

வசந்தா அவன் முகம் பார்த்த படி இருக்கவும் “ஒண்ணும் இல்லை. விடு மா”, என்று சொன்னான் சரவணன்.

“அந்த பொண்ணு…. உனக்கு கேக்கவா டா? நீயும் எத்தனை வருஷம் தனியாவே இருக்க முடியும்? எங்க காலத்துக்கு பிறகு உனக்கு துணை வேணுமே? அந்த பிள்ளையும் பாவம் டா. நம்ம வீட்டுக்கு வந்தா அவளை தங்கமா வச்சிக்குடுவோம்? ஏற்கனவே உன்னைக் கட்டாயப் படுத்தி பாழுங்கிணத்துல தள்ளி விட்டுட்டோம். மறுபடியும் உன் வாழ்க்கையை கெடுக்க எங்களுக்கு மனசில்லை. அதே நேரம் உன்னை அப்படியே விடவும் மனசில்லை. அப்படியே பேர…”, என்று சொல்ல வந்தவள் அப்படியே வாயை மூடிக் கொண்டாள்.

பேரப் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று தான் சொல்ல வந்தாள். ஆனால் இப்போது அதை எல்லாம் பேச அவர்கள் திருமணம் என்ன சாதாரண திருமணமா என்று எண்ணி அமைதியாகி விட்டாள்.

அவனோ வெண்மதியைப் பற்றிய யோசனையில் இருந்தான். முதலில் அவள் மறுமணம் செய்வாளா? அப்படியே செய்தாலும் தன்னை திருமணம் செய்வாளா என்று பல கேள்விகள் எழுந்ததால் அன்னையின் பேச்சைக் கவனிக்க வில்லை. 

“தம்பி”, என்று தயக்கமாக வசந்தா அழைக்க “அந்த பொண்ணுக்கு விருப்பம்னா மட்டும் பேசுங்க மா”, என்று சம்மதம் கொடுத்தான் சரவணன். மணமகள் வெண்மதியாக இருக்கும் பட்சத்தில் அவன் எப்படி வேண்டாம் என்று சொல்வான்? 

சரவணன் அப்படிச் சொன்னதும் வசந்தா சந்தோஷமாக அங்கிருந்து செல்ல “தான் ஏன் சம்மதம் கொடுத்தோம்? வெண்மதி இடத்தில் வேறு ஒரு பெண் இருந்தால் இப்போது சம்மதித்திருப்போமா?”, என்று குழம்பிப் போனான் சரவணன்.

“என்னங்க… என்னங்க…?”, என்று ஓடி வந்தாள் வசந்தா.

“என்ன டி? இப்படி ஓடி வர?”, என்று கேட்டார் வெற்றிவேல். 

“நம்ம சரவணன் ரெண்டாவது கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்”

“என்ன டி சொல்ற? நிஜமாவா?”

“முதல்ல முடியாதுன்னு ஏதேதோ பேசினான். எனக்கு ஒண்ணும் புரியலை. கடைசில அந்த பொண்ணுக்கு விருப்பம்னா பேசுங்கன்னு சொல்லிட்டான்”

“ரொம்ப சந்தோஷம் டி. எனக்கு அவன் சம்மதிச்சது ஆச்சர்யமா இருக்கு”

“பேசினது நான் ஆச்சே?”

“அது தான் ஆச்சர்யமா இருக்கு? நீ பேசியும் அவன் சரின்னு எப்படிச் சொன்னான்?”

“என்ன கிண்டலா? அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுன்னு பேசினேன். சரின்னுட்டான்”

“ஏன் டி அறிவிருக்கா உனக்கு? கல்யாணம் அப்படிங்குறது வாழ்க்கை கொடுக்குற விஷயமா டி? அது அவன் மனசுல அப்படியே பதிஞ்சு போயிறாதா? அவன் அவளுக்கு வாழ்க்கை கொடுக்குறேன்னு நினைச்சு அது அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா அந்த பொண்ணு மனசு என்ன பாடுபடும்?”

“ஏங்க, அதெல்லாம் கல்யாணம் முடிஞ்சதும் சரியாப் போயிரும். அந்த பொண்ணும் இவனுக்கு வாழ்க்கை கொடுக்குதுல்ல? அதனால அந்த பேச்சு அடிபட்டுப் போகும். இப்ப அவனை சம்மதிக்க வைக்க இப்படிச் சொன்னா தானே முடியும்? அதான் சொன்னேன்”

“சரி சரி, நான் உன் அண்ணன் கிட்ட சொல்லி பேசச் சொல்றேன்”

“அண்ணன் கிட்ட பேசுறதுக்கு முன்னாடி என் கொழுந்தனார் கிட்ட பேசணும். பூர்ணிமா கல்யாணத்தப்ப நம்ம கிட்ட கேட்டு தானே எல்லாம் செஞ்சாங்க? அப்ப நாமளும் கேக்கணும்ல? வாங்க போய் பேசிட்டு வருவோம்”, என்று வசந்தா சொன்னதும் இருவரும் பூர்ணிமா வீட்டுக்குச் சென்றார்கள். 

அங்கே அவர்கள் செல்லும் போது செந்தில் பூர்ணிமாவை மருத்துவமனைக்கு செக்கப்புக்காக அழைத்துச் சென்றிருந்தான். சாந்தி மற்றும் சக்திவேலிடம் விஷயத்தைச் சொன்னதும் சக்திவேல் சந்தோஷப் பட்டார். “ரொம்ப சந்தோஷம் அண்ணே, நம்ம மகனுக்கு ஒரு நல்லது நடக்காதான்னு இருக்கு. நீங்க தைரியமா பேசுங்க அண்ணே”, என்றார் சக்திவேல். சாந்தியும் சந்தோஷமாக சரி என்று சொன்னாள்.

“சரி அப்படினா நான் மூர்த்தி மச்சான் கிட்ட சொல்லிறேன். அவர் விசாரிச்சிட்டு சொல்லுவார்”, என்றார் வெற்றிவேல். 

“ஏங்க நீங்களும் ஒரெட்டு போய் அண்ணன் கூட சேந்து அந்த பொண்ணு வீட்ல பேசிட்டு வாங்க. நம்ம பிள்ளைக்காக நாமளும் அலைஞ்சா தப்பில்லை”, என்றாள் வசந்தா.

“சரி டி, இப்பவே போறேன். சக்தி நீயும் வா”, என்று சொல்லி தம்பியையும் அழைத்துக் கொண்டு சென்றார். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் வெற்றிவேல், சக்திவேல் மற்றும் மூர்த்தி மூவரும் குற்றாலத்தைக் காண வந்தார்கள். அவர்களை வரவேற்ற குற்றாலம் விசாலத்தை டீ போடச் சொன்னார். “அதெல்லாம் வேண்டாம் மா. தண்ணி மட்டும் கொண்டு வா போதும்”, என்று சொல்லி விட்டார் வெற்றிவேல்.

அவள் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதைக் குடித்தவர்கள் அமைதியாக இருந்தார்கள். 

“வராதவங்க வந்துருக்கீங்க? என்ன விஷயம்? ஒரே ஊர்ல இருந்தாலும் நமக்குள்ள அவ்வளவா ஒற்றுதல் இல்லை”, என்று பேச்சை ஆரம்பித்தார் குற்றாலம். 

“ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வந்தோம். ஆனா எப்படி ஆரம்பிக்கன்னு தெரியலை”, என்றார் மூர்த்தி.

“என்ன தயக்கம்? சொல்லுங்க?”

“எங்க மாப்பிள்ளைக்கு…”, என்று மூர்த்தி ஆரம்பிக்க “சரவணனுக்கு என்ன?”, என்று பதறினார் குற்றாலம். 

“அவனை உங்களுக்கு தெரியுமா?”, என்று கேட்டார் சக்திவேல்.

“தெரியுமாவா? ரொம்ப நல்லாவே தெரியும். என் மகளை ஒரு ஆபத்துல இருந்து காப்பாத்த அந்த தம்பி தான் காரணமா இருந்துச்சு. தம்பிக்கு என்ன?”

“இல்லை…. அவன் கல்யாண வாழ்க்கை….”, என்று தயக்கமாக இழுத்தார் மூர்த்தி.

“ஆமா, கேள்விப் பட்டேன். நான் இப்ப எல்லாம் எந்த நல்லது கெட்டதுக்கும் போறது இல்லை. அதான் துஷ்டி கேக்க கூட வர முடியலை”

“பரவால்லைங்க… நாங்க இப்ப பேச வந்ததை நீங்க தப்பா எடுக்க கூடாது. உங்களுக்கு பிடிச்சிருந்தா மட்டும் மேற்கொண்டு பேசுவோம். இல்லைன்னா அப்படியே திரும்பிப் போயிருவோம்”

“நான் தப்பா எல்லாம் எடுக்க மாட்டேன். சொல்லுங்க”, என்று குற்றாலம் சொன்னதும் “எங்க பையனுக்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிறலாமா?”, என்று மூர்த்தி கேட்க குற்றாலத்தால் தன்னுடைய காதுகளையே நம்ப முடியவில்லை. அதிர்ச்சியாக மனைவியை திரும்பிப் பார்த்தார். 

காதல் வெடிக்கும்…..

Advertisement