Advertisement

அத்தியாயம் 11

எந்தன் விழித்திரையில்

நீ விழும் நேரமே

எந்தன் வசந்த காலம்!!!

அவன் உள்ளே சென்றதும் “உக்காரு பா. வீட்டம்மா ஊருக்கு போயிருக்கா. உனக்கு டீ போடவா?”, என்று கேட்டார். 

“அதெல்லாம் வேண்டாம்”, என்று சொன்னவனின் கண்களில் விழுந்தது ஆனந்தின் புகைப்படம்.

மாலை போட்டு பொட்டு வைத்து ஊதுபத்தி ஏற்றி வைக்கப் பட்டிருந்தது. அந்த புகைப்படத்துக்குள் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தான். சரவணனை விட சிறிய வயது தான் ஆனந்த்க்கு இருக்கும். ஏனோ அவன் இழப்பு அவன் மனதை அழுத்தியது. இப்போது சரவணனுக்கு ஏதோ புரிவது போல இருந்தது. 

“ஆனந்த் உங்க பையனா?”, என்று பாண்டியனிடம் கேட்டான். 

“ஆமா தம்பி, என் மகன் தான். என்னோட ஒரே மகன். அவன் எனக்கு கொல்லி வைப்பான்னு ஆசையா இருந்தேன். ஆனா நான் அவனுக்கு ஈமச் சடங்கு செஞ்சிருக்கேன். ஒத்த மகனை பரி கொடுத்துட்டு நானும் என் பொண்டாட்டியும் அனாதையா நிக்குறோம்”, என்று கண்ணீருடன் சொன்னார். 

“அப்படின்னா மதியை நீங்க கடத்தினது…”

“புத்திர சோகத்தை நான் அந்த குற்றாலத்துக்கு கொடுக்க கொடுக்கணும்ல? அதுக்கு தான் கடத்துனேன்”

“அப்படின்னா மதி கல்யாணம் அன்னைக்கு அவளுக்கு ஆக்ஸிடெண்ட் நடந்து நிர்மல் சாவுக்கு காரணமானது நீங்க தானா?”

“ஆமா, அதுக்கு நான் தான் காரணம். அந்த பொண்ணைக் கொன்னு குற்றாலத்துக்கு என் வேதனையைப் புரிய வைக்கணும். அப்ப தான் என் மகனோட ஆத்மா சாந்தி அடையும்னு நினைச்சு தான் அப்படிச் செஞ்சேன். ஆனா அந்த பொண்ணு சாகலை”

“மதியோட அப்பா உங்க மகனைக் கொன்னாரு. நீங்க அவர் மகளைக் கொல்ல முடிவு பண்ணிட்டீங்க. இதெல்லாம் சரி தான். ஆனா இடைல செத்துப் போன நிர்மலோட அப்பா அம்மாவுக்கு நீங்க என்ன நியாயம் செய்ய போறீங்க? அவங்களுக்கும் நிர்மல் ஒரே புள்ளை தான். அவங்களுக்கு நீங்க செஞ்சதுக்கு பேர் என்ன?”, என்று அவன் கேட்க அதிர்ந்து போய் அவனைப் பார்த்தார் பாண்டியன்.

அவர் கையை பற்றியவன் “நீங்க எனக்கு அப்பா மாதிரி தான். என்னால உங்க வலியை புரிஞ்சிக்க முடியுது. ஆனா பழிக்கு பழி வாங்குறது தான் தீர்வா? அது பாவம். உங்க மகனோட ஆயுள், நிர்மலோட ஆயுள் எல்லாம் முடிஞ்சிருச்சு. அவங்க திரும்பி வரப் போறது இல்லை. அதையே நினைச்சிட்டு நல்லா வாழப் வேண்டிய பொண்ணு வாழ்க்கையை இப்படி சிதைச்சிட்டீங்க? அது பத்தாதுன்னு அவ உயிரையும் வாங்கணும்னு நினைக்கிறீங்க? உங்க பையன் செத்ததுக்கு காரணம் உண்மையான காதல் தான். அவன் விரும்பின பொண்ணை அவன் உண்மையா நேசிச்சதுனால தான் அந்த பொண்ணோட அப்பா அவனைக் கொல்ல ஆள் வச்சிட்டார். அந்த பொண்ணும் உங்க பையன் மேல இருந்த லவ்வால செத்துருச்சு. அப்படி உண்மையான லவ்வுக்கு இரண்டு சாவு நடந்திருக்கு. அது மட்டுமில்லாம அந்த பொண்ணோட அப்பா சாவுக்கும் நீங்க தான் காரணமா இருக்க முடியும். அப்புறம் நிர்மல். இன்னும் எத்தனை பேரைக் கொன்னா உங்க பழி உணர்ச்சி போகும்? நீங்க மதியைக் கொன்னீங்கன்னா உங்க பையனோட ஆன்மா கூட உங்களை மன்னிக்காது”, என்றான். 

அவர் அமைதியாக இருக்கவும் “இதுக்கப்புறமும் நீங்க வெண்மதியைக் கொல்லணும்னு நினைச்சா அது என்னைத் தாண்டி தான் நடக்கணும். நான் உங்களை அதைச் செய்ய விட மாட்டேன். இப்ப நான் பேசினதுக்கு என் மேல கோபம் வந்தா என்னைக் கொன்னுருங்க. என்னைக் கொன்னதுக்கு என் அப்பா சித்தப்பா எல்லாம் உங்களை வெட்ட வரட்டும். ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு தீர்வாகாது. மதியோட அப்பா முன்னாடி மாதிரி கிடையாது. மதி வாழ்க்கை வீணாப் போனதுல இருந்து அவர் எந்த தப்பான தொழிலும் செய்யுறது இல்லை. அவருக்கு சப்போர்ட் பண்ணி நான் இப்ப பேசலை. மதி வாழ வேண்டிய பொண்ணு. கழுத்துன கட்டின தாலி காயுறதுக்குள்ள அதோட வாழ்க்கையை சோழி முடிச்சிட்டீங்க. ஏற்கனவே நடைபிணமா தான் வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருக்கு. அதோட மீதி இருக்க உசுரையும் எடுத்துறாதீங்க. மகனை இழந்த அம்மாவுக்கு…. அதான் உங்க மனைவிக்கு நீங்க தான் ஆறுதலா இருக்கணும். இதுக்கு மேல உங்க இஷ்டம்”, என்றான் சரவணன். 

“தம்பி. அந்த பொண்ணை நான் கொல்லணும்னு நினைச்சது உண்மை தான். ஆனா என்னால அது முடியலை. செல்வியோட அப்பா சாப்பாடுல என்னால விஷம் கலக்க முடிஞ்சது. லாரி வச்சு ஆக்ஸிடெண்ட் பண்ணவும் முடிஞ்சது. ஆனா அன்னைக்கு கடத்திட்டு அந்த பொண்ணு கழுத்துல கத்தியை வச்ச பிறகு என்னால அதைக் கொல்ல முடியலை. இல்லைன்னா அப்பவே அதை செஞ்சிருக்க மாட்டேனா? எல்லாத்தையும் அந்த கடவுளே பாத்துக்கட்டும்னு எல்லாத்தையுமே நான் விட்டுட்டேன். இனி நான் எதுவும் செய்ய மாட்டேன். அந்த பொண்ணை நெருங்க கூட மாட்டேன். நானும் ஒண்ணும் கெட்டவன் இல்லை தம்பி. சாதாரண விவசாயி தான். மகனை இழந்த கோபத்துல தான் அப்படிப் பண்ணிட்டேன்”

“நீங்க சாதாரண ஆள் தான். ஆனா உங்க பையனோட இழப்பு உங்களை ரெண்டு கொலை செய்ய வச்சிருக்கு. ஒண்ணு உங்க பையன் விரும்பின பொண்ணோட அப்பா, இன்னொன்னு நிர்மல். இதை உங்களால உங்க மனைவி கிட்ட தைரியமா சொல்ல முடியுமா? அவங்களுக்கும் மகன் போனது வேதனையா இருந்தாலும் அவங்க புருஷன் கொலைக்காரனா ஆகுறதை அவங்க விரும்புவாங்களா? இன்னைக்கு எனக்கு தெரிஞ்ச விஷயம் நாளைக்கு வேற யாருக்கும் தெரிஞ்சா? என்னால யாருக்கும் தெரிய வராது. ஆனா நீங்க மதியைக் கொலை செஞ்சா அந்த விஷயம் வெளிய தெரிஞ்சு நீங்க ஜெயிலுக்கு போகணும். அப்படி நீங்க ஜெயிலுக்கு போய்ட்டீங்கன்னா மகனும் இல்லாம நீங்களும் இல்லாம அம்மா எப்படி உயிரோட இருப்பாங்கன்னு மட்டும் யோசிங்க”

“சரிப்பா, நான் இனி எதுவும் செய்ய மாட்டேன். இது செத்துப் போன என் மகன் மேல சத்தியம்”, என்றார் பாண்டியன். 

“தேங்க்ஸ் பா”, என்று சரவணன் நெகிழ்வுடன் சொல்ல “என்ன சொன்ன?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டார். அவருக்கு ஆனந்தே அவரிடம் பேசுவது போல இருந்தது.  

“அப்பான்னு சொன்னேன். அதான் சொன்னேனே? நீங்களும் என் அப்பா மாதிரி தான்னு”, என்று சொன்னான் சரவணன். அவர் உதடுகளில் அழகான புன்னகை உதயமானது. 

“சரி நான் கிளம்புறேன். அம்மாவைப் பாத்துக்கோங்கப் பா”, என்றான் சரவணன். 

“உன் பேர் என்னப்பா?”

“சரவணன்”

“நீ அடிக்கடி வீட்டுக்கு வரணும் பா”, என்று சொல்லி அவனுக்கு விடை கொடுத்தார் பாண்டியன். 

இந்த விஷயம் நடந்து ஒரு வாரம் முடிந்த நிலையில் ஒரு நாள் மூர்த்தியைப் பார்த்தார் பாண்டியன். பாண்டியன் மூர்த்தி இருவரும் இரண்டு முறை பேருந்தில் வரும் போது சந்தித்திருக்கிறார்கள். அந்த பழக்கம் தான் இருவருக்கும் இடையில். 

“எப்படி இருக்க மூர்த்தி? என்னை நினைவு இருக்கா?”, என்று கேட்டார் பாண்டியன்.

“அடடே நீங்களா? நான் நல்லா இருக்கேன் அண்ணே. நீங்க நல்லா இருக்கீங்களா? மகனும் மதினியும் எப்படி இருக்காங்க?”, என்று கேட்டார் மூர்த்தி.

“மகன் இப்ப உயிரோட இல்லை மூர்த்தி. ஒரு காதல் விவகாரத்துல அவனைக் கொன்னுட்டாங்க. நீ கூட நியூஸ்ல பாத்துருப்பியே?”

“பாத்தேண்ணே. ஆனா அது உங்க பையனா இருக்கும்னு எதிர் பாக்கலை. மனசுக்கு கஷ்டமா இருக்குண்ணே”

“விடுப்பா எல்லாம் விதி. சரி உனக்கு ஒரு பொண்ணு இருக்குனு சொன்னீயே? எப்படி இருக்கா? கல்யாணம் பண்ணி வச்சிட்டியா? எந்த ஊரு மாப்பிள்ளை?”

“அவளும் இப்ப உயிரோட இல்லைண்ணே”

“என்னப்பா சொல்ற?”, என்று பாண்டியன் கேட்டதும் நடந்ததைச் சொன்னார் மூர்த்தி. அதைக் கேட்ட பாண்டியனுக்கு மனம் மேலும் பாரமானது. 

இருவரும் ஒரு நொடி மௌனமாக நின்றார்கள். யாருக்கு யார் ஆறுதல் சொல்ல என்று தெரிய வில்லை. 

“இப்படி எல்லாம் நடந்துருக்கும்னு நான் எதிர் பாக்கவே இல்லைப்பா”, என்றார் பாண்டியன். 

“விதிண்ணே, வேற என்ன சொல்ல? அவ இறந்து போனது எனக்கு கவலை உண்டு தான். ஆனா அதுல சின்ன சந்தோஷமும் உண்டு”, என்றார் மூர்த்தி.

“சந்தோஷமா? என்ன பா சொல்ற?”

“அவளை நம்பி என் மருமகன் வாழ்க்கையவே நான் வீணாக்கிட்டேனே? அவனைப் பாக்கும் போதெல்லாம் என் நெஞ்சை அறுக்குதுண்ணே. அவனுக்கு ஒரு நல்லது செய்யணும்னு துடிக்கிறேன். ஆனா எங்கயும் பொண்ணு சரியா அமைய மாட்டிக்குது. ரெண்டாவது கல்யாணம் பாத்தீங்களா? அதனால கஷ்டமா இருக்கு”

“உன் மருமகன் யாருப்பா? என்ன வேலை செய்றார்? போட்டோ ஏதாவது இருந்தா கொடு. அப்படியே உன் நம்பரையும் கொடு. எங்க ஊர்ல பொண்ணு இருந்தா தகவல் சொல்றேன்”

“இதோ அனுப்புறேன்”, என்று சொன்னவர் சரவணனின் புகைப்படத்தை அவருக்கு அனுப்பி வைத்தார். 

அதைப் பார்த்த பாண்டியன் அதிர்ந்து தான் போனார். “சரவணனா உன்னோட மருமகன்?”, என்று அவர் கேட்க “ஆமா, சரவணனை உங்களுக்கு தெரியுமா?”, என்று கேட்டார் மூர்த்தி.

“தெரியும். ரெண்டு மூணு டைம் பாத்துருக்கேன். இந்த நல்ல பையனையா உன் பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டுப் போனா?”

“ஆமாண்ணே, சரவணன் ரொம்ப நல்ல பையன். அவன் கூட வாழ அந்த கழுதைக்கு கொடுத்து வைக்கலை. சரி நான் கிளம்புறேன். நீங்க நல்ல சம்மந்தம் வந்தா சொல்லுங்க”

“ஊருக்குள்ளே பொண்ணை வச்சிக்கிட்டு வெளிய தேடுறியேப்பா?”

“என்ன அண்ணே சொல்றீங்க?”

“உங்க ஊர்ல உள்ள குற்றாலம் பொண்ணுக்கும் ரெண்டாவது கல்யாணம் தானே? கல்யாணம் முடிஞ்ச முதல் நாளே அவ வாழ்க்கை போச்சு. அவளை உன் மருமகனுக்கு கேக்கலாமே?”, என்று சொன்னவருக்கு தான் செய்த பாவம் நெஞ்சை அறுத்தது. 

“அந்த பொண்ணா? அவ அப்பன் கொஞ்சம் ஒரு மாதிரி”, என்று தயக்கமாக சொன்னார் மூர்த்தி. 

“அவன் எப்படி இருந்தா நமக்கு என்னய்யா? நமக்கு பொண்ணு தான் முக்கியம். பிள்ளை அருமையான பிள்ளை”

“ஆமாங்கண்ணே, என் சின்ன மாப்பிள்ளையோட பொண்ணு கூட தான் அந்த பொண்ணும் வேலைக்கு போகும் வரும். அருமையான பிள்ளை. அழகும் கூட. இவ்வளவு நாள் அவங்க அப்பாக்கு பயந்து தான் எதுவும் யோசிக்கலை”

“இப்ப பேசிப் பாரு யா. கண்டிப்பா சரவணனுக்கு கொடுப்பாங்க”

“அவங்க கொடுத்தாலும் இந்த பய ஒத்துக்குவானு தெரியலையே? முதல் கல்யாணத்தையே பிடிச்சு வச்சு செஞ்சு வச்ச மாதிரி தான். அப்பவே வேண்டாம்னு சொன்னான். இப்ப என்ன சொல்லுவானோ?”

“பொண்ணு அவ தான்னு சொல்லு. கண்டிப்பா ஒத்துக்குவான்”

“அண்ணே, என்ன சொல்றீங்க?”

“எல்லாருக்கும் அந்த பொண்ணை பிடிக்கும். அவனுக்கு மட்டும் பிடிக்காம போகுமா? அதான் அப்படிச் சொன்னேன். ஒரு வேளை அவன் மறுத்தா கூட திருப்பியும் பிடிச்சு வச்சு கட்டி வைங்க. ரெண்டு பேரும் வாழ வேண்டியவங்க. வாழட்டுமே?”, என்று சொன்னார் பாண்டியன். 

“கண்டிப்பா பேசுறேன் அண்ணே. சரி நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு மூர்த்தி அங்கிருந்து செல்ல பாண்டியன் முகம் புன்னகையால் மலர்ந்தது.

ஏதோ பாவத்துக்கு பிராயசித்தம் செய்த நிம்மதி அவருக்கு வந்தது. நிம்மதியாக அங்கிருந்து கிளம்பினார். அவருக்கு நன்கு தெரியும் சரவணனுக்கு வெண்மதியைப் பிடிக்கும் என்று. அதனால் தான் இருவருக்கும் முடிச்சு போட முடிவு எடுத்தார்.

Advertisement