Advertisement

ஆனால் அதைக் கேட்டு சங்கடப் படுத்தக் கூடாது என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டு வேறு பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த வசந்தா “டேய் உன்னை உடனே வரச் சொன்னேன்ல? சரி சரி வா வயலுக்கு போயிட்டு வா”, என்று சொல்ல அவளிடம் கண்களால் விடை பெற்று விட்டுச் சென்றான் சரவணன். 

நேரம் ஆவதை உணர்ந்த விசாலமும் “சரி நாங்க கிளம்புறோம். வெண்மதி போகலாமா?”, என்று கேட்டாள்.

“சரி மா”, என்று அவள் எழுந்து கொள்ள “நல்லா இருக்கே? முதல் தடவை வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம போவாங்களா? இருங்க டிபன் செஞ்சிறேன். சாப்பிட்டு போகலாம். நைட் சாப்பாடு கொடுக்கணும்னு தான் நான் காபி போட்டுக் கொடுக்கலை”, என்றாள் சாந்தி.

“அதனால என்ன சாந்தி? இன்னொரு நாள் வரோம்”, என்று விசாலம் மறுக்க சாந்தி விட வில்லை. வசந்தாவும் பூர்ணிமாவும் வற்புறுத்தியதால் வேறு வழி இல்லாமல் இருந்தார்கள். வசந்தா மற்றும் சாந்தி இருவரும் இரவு உணவை செய்யப் போக மற்றவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது தான் சரவணனுக்கு நன்றி சொல்லாதது வெண்மதிக்கு நினைவு வந்தது. “உங்க அண்ணா எப்ப வருவாங்க?”, என்று கேட்டாள்.

“வயல்ல அறுப்பு வேலை நடக்குது பாத்தியா? அதனால இன்னைக்கு நைட் வர நேரம் ஆகும். அண்ணா, அப்பா, சித்தப்பா எல்லாம் அங்கயே தூங்க கூட செய்வாங்க”

“அப்ப நைட் சாப்பாடு?”

“எங்க வீட்டுக்காரர் கொண்டு போவார். ஏன் கேக்குற?”

“என்னைக் காப்பாத்தினதுக்கு உங்க அண்ணனுக்கு தேங்க்ஸ் சொல்ல மறந்துட்டேன் டி. சொல்லணும்”

“இது பெரிய விஷயமா?”

“இது பெரிய விஷயம் இல்லாம வேற என்னதாம்? உனக்கும் சொல்லணும். அண்ணனும் தங்கச்சியும் சேந்து தானே என்னைக் காப்பாத்திருக்கீங்க?”

“நான் என்ன செஞ்சேன்?”

“நீ அப்பா நம்பர் கொடுக்கலைன்னா, உங்க அண்ணா என்னை பாலோ பண்ணி வரலைன்னா என் நிலைமை என்ன ஆகிருக்குமோ? இப்ப உயிரோட இருக்குறதே அதிசயம் தான்”

“அதை விடு டி. உன் நல்ல மனசுக்கு எதுவும் தப்பா நடக்காது. சரி யார் டி உன்னைக் கடத்தினது? ஏதாவது கண்டு பிடிக்க முடிஞ்சதா?”

“யாருன்னு தெரியலை. ஆனா யாரா இருந்தாலும் அவங்க எங்க அப்பாவால பாதிக்க பட்டவங்களா தான் இருக்கும்”

“நீ அவங்களை பாக்கலையா?”

“பாக்கலை”, என்று பொய் சொன்னாள் வெண்மதி. 

“சரி நீ நாளைல இருந்து பஸ்ல ஸ்கூல்க்கு போகாத டி?”

“இனி எப்படி பஸ்ல விடுவாங்க. அப்பாவே கார்ல கொண்டு வந்து விடுவாங்க. உன் அண்ணாவுக்கு தேங்க்ஸ் சொல்லணும் டி”

“சரி நீ சொன்னேன்னு சொல்லிறேன்”

“நானே சொல்லணும். அவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்திருக்காங்க”

“போன் பண்ணித் தரேன், அவன் கிட்ட பேசுறியா?”

“ம்ம்”, என்று சொன்னாலும் பூர்ணிமா முன்னிலையில் அவனிடம் பேச அவளுக்கு தயக்கமாக தான் இருந்தது.

அப்போது வசந்தா அவர்களை சாப்பிட அழைக்க “பெரியம்மா கூப்பிடுறாங்க டி. சரி என் அண்ணா நம்பரை உனக்கு அனுப்பி வைக்கிறேன். அப்புறமா நீயே பேசிக்கோ. அப்புறம் அவன் நம்பரை சேவ் பண்ணிக்கோ. என் வீட்டுக்காரர் நம்பரையும் தரேன். ஏதாவது ஆபத்துன்னா ரெண்டு பேரையும் கூப்பிடு”, என்று சொன்ன பூர்ணிமா அவர்கள் இருவரின் நம்பரையும் அனுப்பி வைத்தாள். பின் சாப்பிட சென்றார்கள். மருதுவை அழைத்ததற்கு அவன் பசி இல்லை என்று சொல்லி விட்டான்.

சாப்பிட்டு முடித்து விசாலம் மற்றும் வெண்மதி இருவரும் கிளம்பிச் சென்றார்கள். போகும் போது வெண்மதி கையோடு சரவணன் கொழுக்கட்டை கொண்டு வந்திருந்த பாத்திரத்தை எடுத்துச் சென்றாள். அதை மற்றவர்கள் கவனிக்காமல் போனாலும் செந்தில் கவனித்து விட்டான். ஆனால் எதுவும் சொல்ல வில்லை. 

காரில் போகும் போது தான் வெண்மதி கையில் இருந்த பாத்திரத்தைப் பார்த்து விட்டு “என்ன டி இது? அவங்க வீட்டுப் பாத்திரத்தை கையோட எடுத்துட்டு வந்துட்ட?”, என்று கேட்டாள் விசாலம். 

“அது… அது மா… பூர்ணி தான் எடுத்துட்டு போகச் சொன்னா”, என்று நெஞ்சார பொய் சொன்னாள்.

“கொண்டு வந்தா மட்டும் நீ சாப்பிடவா போற?”

“மூணு கொழுக்கட்டை சாப்பிட்டேன் மா. சூப்பரா இருந்துச்சு”, என்று வெண்மதி சொல்ல “வெண்மதி உண்மையாவா சொல்ற? நீ சாப்பிட்டியா?”, என்று கேட்டாள்.

“ம்ம்”, என்று அவள் முணுமுணுக்க விசாலத்துக்கு சந்தோஷமாக இருந்தது. இரண்டு வருடமாக இனிப்பை தொடாமல் இருந்த மகள் இன்று மாறினால் அவளுக்கு சந்தோஷமாக இருக்காதா? ஆனால் ஏனென்று தூண்டித் துருவ வில்லை. அதைப் பற்றி கேட்டால் மீண்டும் மகள் மாறி விடுவாளோ என்று எண்ணி அமைதியாக இருந்து கொண்டாள்.  

விசாலம் மற்றும் வெண்மதி இருவரும் வீட்டுக்குச் செல்லும் போது வாசலிலே அவர்களுக்காக காத்திருந்தார் குற்றாலம். மனைவியையும் மகளையும் கண்ணால் கண்ட பிறகு தான் அவருக்கு நிம்மதியாக மூச்சு வந்தது.

“இவ்வளவு நேரமா? சீக்கிரம் வர வேண்டியது தானே?”, என்று எரிந்து விழுந்தார்.

“ஒரு இடத்துக்கு போனா முன்ன பின்ன தான் ஆகும்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள் விசாலம். வெண்மதியும் கொழுக்கட்டையை கையோடு எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்று விட்டாள். 

வயலுக்கு சென்ற சரவணன் ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வந்தான். வெற்றிவேல் அவனை வீட்டுக்கு போகச் சொல்லி விட்டார். செந்தில் கொண்டு வந்த உணவை வயலில் வைத்தே உண்டு விட்டதால் தன்னுடைய அறைக்குச் சென்றான். அறைக்குள் புழுக்கமாக இருக்கவே மொட்டை மாடிக்கு வந்து காற்று வாங்கினான். 

அதே நேரம் அவனுக்கு அழைக்கவா வேண்டாமா என்று மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்மதி. அவனிடம் பேச வேண்டும் போலவும் இருந்தது, அதே நேரம் தயக்கமாகவும் இருந்தது.

நன்றி சொல்ல வேண்டும் என்று ஆசை ஜெயிக்க அவனுடைய நம்பருக்கு அழைத்தாள். ஏதோ ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வரவும் குழப்பத்துடன் பார்த்தான் சரவணன். 

பின் எடுத்து “ஹலோ யாருங்க?”, என்று அவன் கேட்க அந்த பக்கம் அவளால் பேச முடியவில்லை

அவளுடைய பள்ளியில் வேலை பார்க்கும் ஆண் ஆசிரியர்களிடம் அதிகமாக இல்லை என்றாலும் அளவாக அவர்கள் முகத்தைப் பார்த்து எந்த தயக்கமும் இன்றி பேசி இருக்கிறாள் தான். இத்தனைக்கும் வேணு என்ற ஆசிரியர் அவருடைய மனைவி இறந்ததால் அவளை இரண்டாவதாக மணக்க கூட கேட்டிருந்தார்.

அவரிடம் கூட நிதானமாக அவர் மனம் நோகாத படி தன்னுடைய மறுப்பை சொல்லி விட்டு வந்தாள். இன்று செந்திலிடம் கூட நன்கு தான் பேசினாள். சரவணனிடமும் பேசினாள் தான். அப்போதெல்லாம் தயங்காமல் பேசியவள் இப்போதோ அவனிடம் போனில் பேசுவதற்கு வெகுவாக தயங்கினாள்.

அதுவும் அவனுடைய குரல் அவள் காதில் ஒலிக்க அவன் வெகு அருகாமையில் இருப்பது போல திணறிப் போனாள்.

“ஹலோ யாருங்க? கால் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க?”, என்று மீண்டும் கேட்டான் சரவணன்.

அப்போதும் பேச முடியாமல் போக போனைக் கட் பண்ணி விட்டாள். ஒரு வேளை போன் செய்தவர்களுக்கு டவர் கிடைக்காமல் தான் கட் ஆகி விட்டதோ என்று எண்ணிய சரவணன் மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தான். படபடத்த மனதுடன் ஒரு ரிங்கிலே போனை எடுத்து விட்டாள். 

“ஹலோ கேக்குதா? நீங்க யாரு? ஹலோ லைன்ல இருக்கீங்களா? ஹலோ பேசுங்க”, என்று சரவணன் சொல்ல “ஹலோ”, என்று தன்னுடைய செப்பு இதழைத் திறந்தாள்.

அந்த ஒற்றை வார்த்தை அவனுக்கு அவள் யார் என்று உணர்த்தியது. முதன்முதலாக அவன் மனதை தீண்டிய குரலாயிற்றே.

“மதி”, என்று அவன் கேள்வியும் குழப்பமும் படபடப்புமாக அழைக்க அவன் தன்னைக் கண்டு பிடித்ததே ஒரு அதிர்வு என்றால் அவனுடைய குழைந்த அழைப்பு அவளை அடுத்த வார்த்தை பேச விட வில்லை. 

இது என்ன மாதிரியான உணர்வு என்று இருவருக்குமே அந்த நிமிடம் புரிய வில்லை என்று சொல்லலாம்.

அவள் அமைதியாக இருக்கவும் அவள் அமைதிக்கு மரியாதை கொடுத்து அவனும் அமைதியாக இருந்தான். அந்த நேரத்தில் அந்த அமைதி கூட அழகாக தான் இருந்தது.

ஆனால் எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும்? “நான் தான்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?”, என்று கேட்டே விட்டாள்.

“சில பேரோட வாய்ஸ் எப்படி மறக்க முடியும்?”

“ஓ”

“சரி எதுக்கு கால் பண்ணின மதி? ஏதாவது பிரச்சனையா? வீட்ல எல்லாம் ஓகே தானே? ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”, என்று கேட்டான்.

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்க தான் என்னைக் காப்பாத்தினீங்கன்னு அப்பா சொன்னாங்க. அதான் நன்றி சொல்லணும்னு கால் பண்ணுனேன். நேர்ல சொல்ல முடியலை. சாரி”

“பரவால்ல மதி”

“ஹிம்”, என்று அவள் சொல்ல அடுத்து இருவருக்குமே என்ன பேச என்று தெரிய வில்லை. அப்போதும் இருவரும் அமைதியாக தான் இருந்தார்கள்..

“நன்றி சொல்லத் தான் உங்க நம்பர் வாங்கினேன். வைக்கவா?”, என்று கேட்டாள் வெண்மதி. 

“ம்ம்.. அப்புறம் மதி”

“ஆன்…”

“டேக் கேர். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமா நீ பழைய விசயங்கல்ல இருந்து வெளிய வரணும்”

“நீங்களும் தான். என்னை விட உங்களுக்கு தான் மன வேதனை அதிகம்

“உன்னை விட எனக்கு பெரிய வலி இல்லை”

“வலி இல்லாம இருக்கலாம். ஆனா அவமானம் மனசுல விழுந்த வலியை விட பெருசு இல்லையா?”

“ம்ம்”, என்று அவன் முணுமுணுக்க மீண்டும் இருவருக்கும் இடையில் மௌனமே நிலவியது. 

“வைக்கவா”, என்று மீண்டும் கேட்டாள் வெண்மதி. 

“ஒரு நிமிஷம்”, என்று சரவணன் சொன்னதும் “என்ன? சொல்லுங்க”, என்றாள் வெண்மதி.

“நீ இப்படி இருக்குறது நல்லா இல்லை”

“புரியலை”

“எனக்கு பழைய மதி வேணும். கலகலன்னு சிரிச்சிட்டு தலை நிறைய பூ வச்சிட்டு…”, என்று அவன் சொல்ல வர “அந்த மதி திரும்பி வரதுக்கு வாய்ப்பே இல்லை. அது சாத்தியமும் இல்லை”, என்று பட்டென்று வந்தது அவள் பதில். 

“உனக்கு பூ ரொம்ப பிடிக்குமே மதி?”

“அதனால தான் அதுக்கு என்னைப் பிடிக்காம போயிருச்சோ என்னவோ?”

“பூ பொட்டு வைக்கிறதுனால என்ன? யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க”

“முன்னாடி சொல்ல மாட்டாங்க. ஆனா பின்னாடி பேசுவாங்க”

“அடுத்தவங்க பேசுறதுக்காக நாம வாழ முடியுமா?”

“அடுத்தவங்க பார்வைக்கு பயந்து தானே நீங்களும் ரொம்ப நாள் அந்த அறைக்குள்ள முடங்கி கிடக்குறீங்க? சில நேரம் நாம அப்படி தான். அடுத்தவங்களைப் பார்த்து வாழ்ந்து தான் ஆகணும்”

“ம்ம்”, என்று புரிதலுடன் கூடிய முணுமுணுப்பைத் தந்தான். 

மூன்றாவது முறையாக “வைக்கவா?”, என்று கேட்டாள் வெண்மதி.

“ஹ்ம் சரி, என்ன உதவின்னாலும் என் கிட்ட தயங்காம கேளு”

“சரி”, என்று சொல்லி அவள் போனை வைக்க இருவருக்குமே சொல்ல முடியாத ஒரு நிம்மதி உணர்வு மனதில் எழுந்தது.

அதற்கு அடுத்து ஒரு வாரம் கழித்து தன்னுடைய காலேஜுக்கு சென்று விட்டு வண்டியில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தான் சரவணன். அப்போது தான் அவன் பாண்டியனைப் பார்த்தான்.

வெண்மதியைக் கடத்தும் போது பார்த்த பாண்டியன் முகம் அவனுக்கு மறக்குமா என்ன? அவன் மனதில் அவர் முகம் நன்கு பதிந்து விட்டது. அதனால் இன்று அவரைப் பார்த்ததும் அவனுக்கு நன்றாகவே அடையாளம் தெரிந்தது. அவருடைய வண்டியை பின் தொடர்ந்தான்.

மார்க்கெட் சென்று விட்டு பாண்டியன் அவருடைய வீட்டுக்கு தான் சென்று கொண்டிருந்தார். பாண்டியன் வீட்டுக்குள் நுழையும் போது அவரின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் சரவணன். 

அவனைக் கண்டதும் ஒரு நொடி அதிர்ந்து போன பாண்டியன் அவனை தெரியாதது மாதிரி “யாருப்பா நீ?”, என்று கேட்டார்.

வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு அவரைப் பார்த்து நக்கலாக சிரித்தவன் அவரையே பார்க்க அவன் அன்று தன்னைப் பார்த்து விட்டான் என்று அவருக்கு புரிந்தது. ஒரு நொடி அமைதியாக இருந்தவர் “உள்ள வா பா”, என்று சொன்னார்.

காதல் வெடிக்கும்…..

Advertisement