Advertisement

அத்தியாயம் 10

உந்தன் வாசனை கூட

எந்தன் உயிரை உருக்குவதை

நீ அறிவாயோ?!!!

அவள் இன்று ஸ்பெஷலாக எந்த அலங்காரமும் செய்ய வில்லை தான். ஆனால் தான் ஓரளவுக்காவது பார்க்கும் படி இருக்கிறோமா என்று எண்ணி அடிக்கடி கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாள். 

“வெண்மதி போகலாமா? போய்ட்டு வந்து தான் மாவு அரைக்கணும். வா”, என்று விசாலம் அழைத்த பிறகு தான் கீழே இறங்கி வந்தாள்.

மருது காரை எடுக்க இருவரும் ஏறிக் கொண்டார்கள். “பூர்ணிக்கு கூப்பிட்டு வரோம்னு சொல்லிரு டி”, என்றாள் விசாலம். 

“சரி மா”, என்று சொன்ன வெண்மதி பூர்ணிமாவை அழைத்தாள். 

“சொல்லு வெண்மதி, எப்படி இருக்க? அண்ணா எல்லாம் சொல்லுச்சு டி”

“நல்லா இருக்கேன் பூர்ணி. இப்ப உன் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கோம். ரெண்டு நிமிசத்துல வந்துருவோம்”, என்று அவள் சொல்ல பூர்ணிமாவிடம் சட்டென்று ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

“வறேன்னு ரொம்ப சீக்கிரம் சொல்லிட்ட டி. சரி வா வா”, என்று புன்னகையுடன் அழைத்தாள்.

“நாங்க இப்ப எங்க வரட்டும்? உங்க வீட்டுக்கா? உங்க பெரியப்பா வீட்டுக்கா?”

“அண்ணா வீட்டுக்கு வேண்டாம் டி. அங்க போனா எல்லார் கவனமும் நம்ம மேல திரும்பும். எங்க வீட்டுக்கு வந்தா நீ என்னைப் பாக்க வந்துருக்கன்னு சாதாரணமா பேசிட்டு போய்ருவாங்க. நான் இப்ப அண்ணா வீட்ல தான் இருக்கேன். எங்க வீட்டுக்கு கிளம்பிட்டேன். நீ வா”, என்று சொல்லி போனை வைத்தாள்.

“யாரு மா?”, என்று கேட்டாள் வசந்தா.

“என் பிரண்டு வெண்மதி வராளாம் பெரியம்மா. நான் வீட்டுக்கு போறேன்”

“சரி மா, கொழுக்கட்டை வெந்துட்டு இருக்கு. வாங்காம போறியே?”

“நீங்க அப்புறமா கொடுத்து விடுங்க பெரியம்மா. அவ கிட்ட வந்துட்டாளாம்”, என்று சொன்ன பூர்ணிமா செந்திலையும் அழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்குச் சென்றாள். 

வெண்மதி இங்கே வருவாள், தானும் அவளைப் பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த சரவணனுக்கு இப்போது ஏமாற்றமாக இருந்தது. மாடிக்குச் சென்று நின்று கொண்டான். அவளைக் கண்ணிலாவது பார்க்கலாம் என்று எண்ணி.

அவளும் அவளுடைய அன்னையும் காரில் இருந்து இறங்குவதும் பூர்ணிமா, செந்தில், சாந்தி மூவரும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்வதும் அவன் கண்ணில் பட்டது.

வெண்மதி முகம் சரியாக தெரியவில்லை என்றாலும் அவள் சுடிதார் போட்டிருப்பது மட்டும் தெரிந்தது. அவளைப் பார்க்க கொடுத்து வைக்க வில்லையே என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அதே நேரம் அவனைக் காணலாம் என்று எண்ணி வந்த வெண்மதிக்கும் ஏமாற்றம் தான். மனதில் எழுந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு பூர்ணிமாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். செந்திலும் அவளிடம் நன்கு பேசினான். சாந்தி மற்றும் விசாலம் இருவரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். 

அப்போது “டேய் சரவணா இங்க வா”, என்று அழைத்தாள் வசந்தா. 

“என்ன மா?”, என்ற படி வந்தான் அவன்.

“பூர்ணியோட பிரண்டுக்கு கொழுக்கட்டை ரொம்ப பிடிக்கும்னு அடிக்கடி சொல்லுவா டா. இப்ப அந்த பிள்ளை வந்துருக்கு போல? இதைப் போய் கொடுத்துட்டு வாயேன். நான் அடுத்த ஈடு எடுத்து வைக்கணும். சீக்கிரம் போ, அவங்க கிளம்பிறப் போறாங்க”

மற்ற நேரமாக இருந்திருந்தால் “நீயே போ மா”, என்று சொல்லி இருப்பான். இப்போது அப்படிச் சொல்வானா என்ன? “சரி மா கொண்டு போறேன்”, என்று சொல்லி விட்டு அந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டான். 

“அங்க கொடுத்துட்டு சீக்கிரம் வந்துரு டா. அப்படியே உங்க அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் வயலுக்கு கொண்டு போகணும்”, என்றாள் வசந்தா. 

“நீ எடுத்து வை மா, நான் வந்து கொண்டு போறேன்”, என்று சொல்லி விட்டு அவசரமாக அங்கே சென்றான். அவளை வெகு அருகில் காணப் போவதை நினைத்து அவனுக்கு படபடப்பாக இருந்தது. ஏதோ டீனேஜ் பையன் போல உணர்வு எழுந்தது.  

விசாலம் மற்றும் சாந்தி இருவரும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இவனைக் கண்டதும் “வாப்பா சரவணா”, என்று சொன்ன சாந்தி விசாலத்திடம் “இவன் என் மச்சான் மகன். பேர் சரவணன். அக்ரி காலேஜ்ல வேலை பாக்குறான். இவன் எங்களுக்கும் பிள்ளை தான்”, என்று அறிமுகப் படுத்தினாள்.

“வணக்கம் மா”, என்று சரவணன் விசாலத்திடம் சொல்ல விசாலமும் அவனைக் கண்டு சந்தோஷமாக புன்னகைத்தாள்.

“சித்தி, அம்மா கொழுக்கட்டை கொடுத்து விட்டாங்க”, என்று சொல்லி பாத்திரத்தை நீட்டினாலும் அவன் எண்ணம் எல்லாம் வெண்மதி கண்ணில் படுவாளா என்பதிலே இருந்தது. 

அதை வாங்கிய சாந்தி அதை திறந்து அதில் இருந்து இரண்டை எடுத்து விசாலத்திடம் கொடுத்தாள். தானும் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.

“நான் அப்புறம் வரேன் சித்தி”, என்று சொல்லி விட்டு அவன் செல்லப் போக “சரவணா இதை பூர்ணி கிட்ட கொடுத்துடுப்பா. வெண்மதிக்கும் ரொம்ப பிடிக்கும்”, என்று அவனிடம் பாத்திரத்தைக் கொடுத்தாள்.

சந்தோசத்துடன் அதை வாங்கியவன் “சரி சித்தி”, என்ற படி வீட்டுக்குள் சென்றான். அப்போது “அவ எங்க இப்ப எல்லாம் கொழுக்கட்டையை விரும்பிச் சாப்பிடுறா? இனிப்பு பண்டம்ன்னா அப்படி உயிரை விடுவா. இப்ப இனிப்பை தொடுறதே இல்லை. அவ வாழ்க்கையை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு”, என்று விசாலம் சாந்தியிடம் சொல்வது அவனுக்கு கேட்டது. 

எப்படியாவது அவளை இன்று இந்த கொழுக்கட்டையை சாப்பிட வைத்து விட வேண்டும் என்ற வேகத்தில் உள்ளே சென்றவனுக்கு அங்கே யாரும் தெரிய வில்லை. 

பின் பக்க தோட்டத்தில் பூர்ணியின் சத்தம் கேட்க அங்கே சென்றான். அங்கே தான் பூர்ணிமா மற்றும் வெண்மதி இருவரும் சேர் போட்டு அமர்ந்திருக்க செந்தில் ஒரு திண்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். 

வெண்மதியைக் கண்டதும் மனதில் எழுந்த சந்தோஷத்தை மறைத்த படி அவன் அங்கே சென்று நிற்க “அண்ணா வா வா. இங்க உக்காரு”, என்று சொல்லி எழுந்து கொண்டாள் பூர்ணிமா.

“நீ உக்காரு டா”, என்று தங்கையிடம் சொன்ன சரவணன் செந்தில் அருகே சென்று அமர்ந்து கொண்டான். இப்போது வெண்மதியும் சரவணனும் எதிர் எதிரே தான் அமர்ந்திருந்தார்கள். செந்தில் அவனிடம் எதுவோ கேட்க அதற்கு பதில் சொன்னாலும் அவன் கண்கள் அவளைத் தான் பார்த்தது. முதல் முறையாக அவளை சுடிதார் அணிந்து பார்க்கிறான். பார்க்க சிறு பெண் போல இருந்தது அவளது தோற்றம். 

வெண்மதி பார்வையும் அவனை ஆசையாக தழுவ அவனும் அவளைப் பார்த்தான். அவளுக்கு அவனிடம் பேச நிறைய விஷயம் இருக்கிறது. காலையில் அவளுக்கு அறிவுரை சொன்னதற்கு, அவளைக் காப்பாற்றியதற்கு என பல நன்றிகள் சொல்ல வேண்டும். ஆனால் செந்தில் மற்றும் பூர்ணிமா முன்பு பேச சங்கடமாக இருந்தது. 

பூர்ணிமா அனைவருக்கும் கொழுக்கட்டையை எடுத்துக் கொடுக்க “எனக்கு வேண்டாம்”, என்று சொன்னாள் வெண்மதி. 

தோழியைப் பற்றி தெரியும் என்பதால் பூர்ணிமா அவளைக் கட்டாயப் படுத்த வில்லை. மற்ற அனைவருக்கும் கொடுத்து விட்டு பாத்திரத்தை செந்தில் அருகே வைத்தாள். 

நண்பனின் கவனம் வெண்மதி மீது பதிவதைக் கண்ட செந்திலுக்கு அப்போது தான் முன்பு ஒரு நாள் கோவிலில் வைத்து சரவணன் வெண்மதியைப் பற்றி கேட்டது நினைவில் ஆடியது.

“சரவணன் இவளைப் பத்தி தானே ஒரு நாள் பேசினான்”, என்று எண்ணிய செந்தில் இருவரையும் ஆராய்ச்சியாக பார்க்க அவர்கள் இருவர் முகத்தில் இருந்த உணர்வுகளைக் கண்டு அவனுக்கு குழப்பம் தான் வந்தது. 

அவர்களை தனியே பேச விட வேண்டும் என்று எண்ணியவன் “பூர்ணி, நீ மாத்திரை போடணும்”, என்று சொல்லி அழைத்தான்.

“ஒரு நிமிஷம் இரு டி. அண்ணா வெண்மதி கிட்ட பேசிட்டு இரு. நான் இப்ப வரேன்”, என்று சொன்ன பூர்ணிமா உள்ளே செல்ல “நானும் போறேன். இல்லைன்னா மாத்திரை போடாம டிமிக்கி கொடுத்துருவா”, என்று சொன்ன செந்தில் உள்ளே சென்றான். 

“நீங்களும் என்ன என் பின்னாடியே வந்துட்டீங்க?”, என்று கேட்டாள் பூர்ணிமா.

“காரணமா தான்”, என்று சொன்ன செந்தில் பின் பக்கமாக இருந்து அவளைக் கட்டிக் கொள்ள “என்னங்க இது எல்லாரும் வந்துருக்கும் போது…”, என்று சிணுங்களாக கேட்டாள்.

“எனக்கு தோணுச்சு, கட்டி பிடிக்கிறேன். உனக்கு என்ன டி?”, என்று அவளிடம் வம்பு பேசினான்.

இங்கே அவர்கள் இருவரும் சென்றதும் அங்கே சங்கடமான அமைதி நிலவியது. இருவரும் தயக்கமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவள் கொழுக்கட்டை சாப்பிட வில்லை என்பது அப்போது நினைவில் வர “நீ எதுக்கு மதி கொழுக்கட்டை சாப்பிடலை?”, என்று கேட்டான் சரவணன்.

“அது…”, என்று அவள் தயங்க “நான் கொண்டு வந்ததுனால சாப்பிடலையா?”, என்று கேட்டான்.

“ஐயோ. அப்படி எல்லாம் இல்லை. நிர்மல் போனதுல இருந்தே நான் இனிப்பு சாப்பிடுறது இல்லை”, என்று தயக்கமாக பதில் சொன்னாள்.

“உனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயத்தை நீ விட்டா அது நிர்மலுக்கு பிடிக்குமா?”, என்று அவன் கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“நிர்மல் எப்பவும் நீ சந்தோஷமா இருக்கணும்னு தான் நினைப்பாங்க. உனக்கு பிடிச்சதை செய்ய தான் நினைப்பாங்க. அப்படி இருக்குறப்ப உனக்கு பிடிச்ச இனிப்பை நீ விட்டா அவங்க ஆத்மா கூட சந்தோஷமா இருக்காது”, என்று அவன் சொல்ல அவனை வியப்பாக பார்த்தாள்.

“என்ன நான் சொல்றது சரி தானே?”, என்று அவன் கேட்க ஆம் என்று தலையசைத்தாள். ஏனென்றால் முதல் நாள் அவள் ஹோட்டலில் சாப்பிட்டதைப் பார்த்த நிர்மல் அடிக்கடி அவளுக்கென்று ஸ்நாக்ஸ் வாங்கி அவனுடைய பெற்றோரிடம் கொடுத்து விடுவான். 

அவன் போன் பண்ணும் போது அவள் “எதுக்கு இவ்வளவு?”, என்று கேட்பாள். “உனக்கு பிடிச்சதை வாங்கிக் கொடுக்கணும்னு ஆசையா இருக்கு மதி. அது மட்டும் இல்லை. உன் கூடவே இருக்கணும். உன் கிட்ட நிறைய கதை பேசணும். இப்படி நிறைய ஆசை இருக்கு. கல்யாணத்துக்கு பிறகு பாரு ஐயாவோட கவனிப்பை”, என்று சொல்வான். அதை எண்ணி இப்போது வெண்மதி கண்கள் கலங்கியது. 

அவள் மன நிலை உணர்ந்த சரவணன் “நிர்மலை உனக்கு பிடிக்கும்னா இதை எடுத்து சாப்பிடு”, என்று சொன்னான். 

அதற்கு மேல் மறுப்பு சொல்லாமல் அவள் அந்த பாத்திரத்தைப் பார்க்க அதை எடுத்து அவள் முன்பு நீட்டினான். அதில் இருந்து ஒன்றை எடுத்துக் கொண்டவள் அவனைப் பார்த்தவாறே உண்ண ஆரம்பித்தாள். அதை புன்னகையுடன் பார்த்திருந்தான் சரவணன். அப்போது அங்கே வந்த பூர்ணிமா மற்றும் செந்தில் இருவருக்குமே அவள் கொழுக்கட்டை உண்பது திகைப்பைக் கொடுத்தது. 

Advertisement