Advertisement

வெண்மதிக்கு வயது கொஞ்சம் தான் என்றாலும் அதற்குள் பார்க்க கூடாதது எல்லாம் பார்த்து விட்டாள். இந்த வயதில் அனுபவிக்க கூடாத அனைத்து வலிகளையும் அனுபவித்து விட்டாள்.

மனதில் வெறுமை இருந்தாலும் அதை அவள் முகத்தில் காட்ட மாட்டாள். மனதை அழுத்தும் பாரம் அவளை கொன்று கொண்டிருந்தாலும் அவள் கண்களில் கண்ணீர் என்பது வராது. மொத்தத்தில் உணர்வுகள் செத்த மரக்கட்டை அவள். அந்த மரக்கட்டைக்கு என்று உணர்வு வருமோ?

“பாப்பா இன்னைக்கு ஸ்கூல்க்கு சீக்கிரம் போகணும்னு சொன்னியே? எந்திச்சி கிளம்பலையா?”, என்ற அன்னை விசாலத்தின் குரல் கேட்டதும் எழுந்து அமர்ந்தாள். விசாலம் அவளை கஷ்டப் பட்டு எல்லாம் எழுப்ப வில்லை. தன்னுடைய ஒரே குரலில் மகள் எழுந்து விடுவாள் என்று அவளுக்கு தெரியும். அதனால் தான் கீழே இருந்தே குரல் கொடுத்தாள்.

எழுந்து அமர்ந்த வெண்மதி அவளுடைய அறைக்குள்ளே இருந்த குளியல் அறையில் பல் துலக்கி விட்டு சவரின் அடியில் போய் நின்றாள். அந்த குளிர்ந்த நீர் கூட அவள் மனதில் இருக்கும் வெம்மையைத் தணிக்க வில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் என்ற ஒன்றை எப்போது அவளது வீட்டில் அவளுக்கு செய்து வைத்தார்களோ அப்போதில் இருந்து அவள் சரியாக உறங்குவதில்லை.

திருமணம் ஆகி இந்த இரண்டு வருடங்களில் அவள் அனுபவிக்காத வேதனை இல்லை. கேட்க கூடாத அவச் சொல் இல்லை. கண் முன்னால் அவளிடம் நன்றாக பேசும் மக்கள் பின்னால் அவளைப் பற்றி என்ன பேசுவார்கள் என்று அவளுக்கு தெரியும். அதனால் அடுத்தவர்களிடம் பேசுவதைக் கூட அவள் குறைத்துக் கொண்டாள். மற்றவர்களின் பார்வையில் இந்த நிமிடம் அவள் ஒரு இளம் விதவை.

தலையில் தண்ணீர் விழும் போது கடந்த கால கசப்புகளை அடியோடு மறக்க முயன்றாள். ஆனால் அவளால் அது முடியத் தான் இல்லை. இனி மீதம் இருக்கும் காலத்தை எப்படி ஓட்டப் போகிறோம் என்று அவளுக்கு தெரியவே இல்லை. அன்னை தந்தை இருக்கும் வரை தனக்கு ஆதரவாக இருப்பார்கள். அதன் பிறகு தனக்காக யார் இருப்பார்கள் என்ற மிகப் பெரிய கேள்விக் குறி அவளுக்கு எழுந்தது. இப்போதே சில ஆண்களின் கழுகுப் பார்வை அவள் மீது விழத் தான் செய்கிறது.

அவளுடன் வேலை பார்க்கும் ஒருவன் மரியாதையாக அவளிடம் திருமணம் செய்து கொள்வோமா என்று கேட்டான். இன்னொருத்தனோ பார்வையாலே அவனது அழுக்கு மனதை அவளுக்கு உணர்த்தினான்.

வேலி இல்லாத பயிரை யார் வேண்டுமானாலும் மேயலாம் என்பது போல இருந்தது அவர்களது செய்கை. அனைத்தையும் ஒவ்வொரு நாளும் கடந்து வருவதற்குள் வெகுவாக கலங்கிப் போவாள்.

குளித்து முடித்து ஒரு காட்டன் சேலை அணிந்து தயாராகினாள். அவளது டீச்சர் வேலை மட்டுமே அவளுக்கு ஆறுதல் தரும் விஷயம். பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் போதும் அவர்களிடம் கதை பேசும் போதும் அவள் அவளையே மறந்து விடுவாள்.

மிதமான ஒப்பனையும் சின்னதாக இருந்த கருப்பு பொட்டும் வைத்துக் கொண்டு அவள் அறையை விட்டு வெளியே வர அவளைக் கண்ட அவளது அன்னை விசாலத்தின் மனம் வேதனை கொண்டது.

முன்பெல்லாம் பள்ளிக்கு வேலைக்கு போகும் போது. கழுத்தில் பெரியது ஒன்றும் சின்னது ஒன்றுமாக இரண்டு செயின்களும், கைகளில் அவளுடைய சேலைக்கு ஏற்றார் போன்ற வளையல்களும், காதில் குடை சிமிக்கியும், தலை நிறைய மல்லிக்கைப் பூவும், அதை தூக்கி காட்ட ஒரு சிவப்பு ரோஜாவையும் வைத்துக் கொண்டு கிளம்பிச் செல்லும் மகள் என்று இப்படி வெறுமையாக இருப்பது வேதனையை தந்தது. தான் பூவும் பொட்டும் வைத்திருக்க மகளை அந்த கோலத்தில் அந்த தாயால் பார்க்க முடியவில்லை.

அன்னையின் வேதனையை அவளுடைய விழி வழியே கண்டவளுக்கு எரிச்சல் தான் வந்தது. தான் என்ன தான் எல்லாவற்றையும் மறக்க முயன்றாலும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தும் இவர்களை என்ன செய்ய என்று வேதனையாக எண்ணிக் கொண்டாள் வெண்மதி.

எளிமையான ஒப்பனையில் இருந்தால் கூட அழகாக இருந்த மகளைக் காண்ட விசாலம் “சாப்பிட வா டா”, என்று சொல்லி அவளுக்கு காலை உணவு பரிமாறினாள்.

ஐந்தரை அடி உயரத்தில் கோதுமை நிறத்தை விட கொஞ்சம் அதிகமான நிறத்தில்… வட்ட முகமும்… பிறை போன்ற நெற்றியும்… குண்டு கண்களும்… அதற்கு மேல குடை போன்ற புருவங்களும்…. கூரான நாசியும்… செதுக்கி வைத்த சிவந்த அதரங்களும் அவளுக்கு தனி அழகு தான். அந்த காட்டன் புடவையை அவள் கட்டி இருந்த பாங்கும், இடையை தாண்டிய கூந்தலை கொண்டையில் அடக்கி இருந்த பாங்கும் அவளை டீச்சர் என்று சொல்லும் வகையில் இருந்தது.

இட்லி, தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, சாம்பார் என்று விசாலம் செய்திருக்க அவளோ இரண்டு இட்லியையே கசப்பு மருந்து போல உண்டு கொண்டிருந்தாள். முன்பு எல்லாம் சப்பு கொட்டி சாப்பிடும் செல்ல மகள் இப்போதெல்லாம் உயிர் வாழவே உண்கிறாள். அவள் உடல் எடையும் முன்பை விட குறைந்து விட்டது என்று பார்த்தாலே தெரிந்தது. என்றாவது பழைய மாதிரி அவள் உண்டு விட மாட்டாளா என்று நினைத்து தான் தினமும் அவளுக்கு பிடித்த உணவுகளைச் செய்கிறாள். ஆனால் எல்லாம் வீண் தான்.

விசாலம் அவளுக்கு இன்னொரு இட்லியை வைக்கப் போக “இதுவே போதும் மா”, என்றாள் வெண்மதி. அப்போது “ஸ்கூல்க்கு கிளம்பிட்டியா மா?”, என்று கேட்ட படி அவள் அருகே அமர்ந்தார் அவளது தந்தை குற்றாலம்.

“ஆமா பா”, என்று தந்தைக்கு பதில் சொன்னவள் இரண்டு இட்லியை முடித்து விட்டு எழுந்து சென்று கை கழுவினாள்.

தாய் மற்றும் தந்தையிடம் சொல்லி விட்டு வெளியே வந்தவள் செருப்பை மாட்டி விட்டு அந்த தெருவில் நடந்தாள்.

குற்றாலம் மகளையே பார்த்துக் கொண்டிருக்க “டிபன் வைக்கவா?”, என்று கேட்டாள் விசாலம்.

“வேண்டாம் விசாலம். பசிக்கலை. நான் வயலுக்கு போறேன். வீட்ல இருந்தா மூச்சு முட்டுற மாதிரி இருக்கு”, என்று தளர்ந்து போய்ச் சொன்ன குற்றாலம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த ஊரே பயப்படும் ரவுடி.

வெள்ளை வேஷ்டி சட்டையில் முறுக்கு மீசையுடன் கூட நாலைந்து தடிப் பயில்களை வைத்துக் கொண்டு திரிபவர் இன்று ஆளே மாறி இருந்தார். அவரின் கண்ணசைவுக்கே வெட்டி சாய்க்கும் அவரது அடியாட்கள் இன்று அவரின் தோட்டத் தொழிலாளர்கள். மகளது வாழ்க்கை குற்றாலத்தை அடியோடு மாற்றி இருந்தது. பணத்துக்காக பல ஆணவக் கொலைகளைச் செய்தவர் இன்று அந்த ஆணவம் எல்லாம் அறுந்து விழ ஜடமாய் நடமாடிக் கொண்டிருந்தார்.

அப்போது “ஐயா”, என்ற படி வீட்டுக்குள் வந்தான் மருது. “வா மருது, சாப்பிட்டியா?”, என்று கேட்டார் குற்றாலம்.

“சாப்பிட்டேன் ஐயா”

“என்னல முகம் ஒரு மாதிரி இருக்கு. ஏதாவது பிரச்சனையா?”

“ஆமாங்க ஐயா. ஒரு கட்டப் பஞ்சாயத்து வேலை வந்திருக்கு. பக்கத்து ஊர் தான். உங்க கிட்ட பேசச் சொன்னாங்க”

“அந்த தொழிலைத் தான் விட்டாச்சேல? என் மக வாழ்க்கை இப்படி ஆனதுல இருந்தே எதுவும் செய்றது இல்லை தானே? அந்த மாதிரி போன் வந்துச்சுனா இனி அவங்க கிட்ட பேசாதல. பின் பக்கம் இறங்கிருக்குற உர மூட்டைகளை வயலுக்கு எடுத்துட்டு போய் ஆளை வச்சு தூவி விடணும். அதுக்கு ஏற்பாடு பண்ணு”

“சரிங்க ஐயா, நான் பாத்துக்குறேன்”

“மருது”

“ஐயா?”

“என் பொண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்குனது யாருன்னு ஏதாவது விவரம் தெரிஞ்சதால?”

“இல்லைங்க ஐயா. நடுக் காடுங்குறதுனால யாருக்கும் எந்த விவரமும் தெரியலை. அடிச்சிட்டு நிக்காம போய்ட்டான் போல? கண்டு பிடிக்க முடியலைன்னு போலீஸ் சொல்றாங்க ஐயா”

“சரில, நீ வேலையைப் பாரு”, என்று அவனை அனுப்பியவர் தன்னுடைய மகளை இந்த நிலையில் ஆக்கிய அவனை தேடிக் கொண்டிருந்தார். ஆனால் உருவமே தெரியாத நிலையில் இப்பூவுலகில் அவர் எப்படி அவனைக் கண்டு பிடிக்க முடியும்?

ஆனால் “கண்டு பிடிப்பேன். அவன் எங்க இருந்தாலும் அவனைக் கொன்னா மட்டும் தான் என் மனசுக்கு அமைதி கிடைக்கும். என் செல்ல மகளோட வாழ்க்கையை இப்படி நாசம் செஞ்சவனை நான் கொன்னே தீரனும்”, என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டார் குற்றாலம். ஆனால் அந்த உண்மை அவருக்கு கடைசி வரை தெரியவே போறதில்லை என்று அவருக்கு யார் சொல்வது.

வீட்டை விட்டு வெளியே வந்த வெண்மதி தெருவில் நடந்த போது சுற்றிலும் பார்வையை ஒரு நொடி சுழல விட்டாள். அனைவரின் கண்களும் அவள் மீதே தான் இருந்தது. அது அவளுக்கும் தெரியும் என்பதால் அவர்களைக் காணாமல் தலை குனிந்து கொண்டாள். அமைதியாக அதே நேரம் கொஞ்சம் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அந்த இடத்தில் இருந்து ஓடிச் சென்று விட வேண்டும் போல இருந்தது. அவளால் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

காதல் வெடிக்கும்….

Advertisement