Advertisement

அதைக் கவனிக்காத மாதிரி காட்டிக் கொண்டு “ஏன் சீக்கிரமா எந்திரிச்ச? கூடக் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே? சரி இந்தா, டீ குடிச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கு”, என்று சாதாரணமாக பேச்சுக் கொடுத்து விட்டு கீழே வந்து விட்டாள் வசந்தா.

அங்கேயே நின்றால் ஏதாவது பேசி மகனின் மனக் காயத்தை கீறி விட்டுவிடுவோம் என்ற பயம் அவளுக்கே இருந்தது. அன்னை கொடுத்த டீயைப் பருகியவன் விடியத் துவங்கவும் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான். ஆனால் உறக்கம் தான் அவன் கிட்டே நெருங்க வில்லை.

சரவணன் ஆறடிக்கும் மேல் உயரம், அதற்கேற்ப உடல் அமைப்பு… மாநிறம்… களையான முகம்…. கிராமத்துக்கே உரிய முகவெட்டு… அளவான மீசை…. இயல்பிலே சிவந்த அழுத்தமான உதடுகள்… நிஜ ஹீரோ போன்ற தோற்றம்… பார்த்த உடனே பெண்கள் சைட் அடிக்க நினைக்கும் அழகு…. அவனை அந்த ஊரில் பலர் இப்போதும் சைட் அடித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். பலர் மணக்க நினைத்தனர்.

ஆனால் அவனோ தூக்கம் அவனை விட்டு விடை பெற்றுச் சென்றிருந்ததால் இப்போது தலைக்கு மேலே தொங்கிய மின்விசிறியை பார்த்த படி படுத்துக் கிடந்தான். எப்படி தூங்க முடியும்? அவன் மறக்க நினைக்கும் இருண்ட காலம் அவன் நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கும் போது அவனால் எப்படி உறங்க முடியும்? அவன் உறங்கி கிட்டத்தட்ட பல நாட்கள் ஆகி விட்டது.

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்

கண் மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்

என்னானதோ எதேனாதோ சொல் சொல்… என்ற பாடல் பக்கத்து வீட்டு டிவியில் ஓடிக் கொண்டிருக்க எரிச்சலாக வந்தது அவனுக்கு.

“இந்த சுந்தரி டி‌வியைப் போட்டுட்டாளா? இனி லவ் சாங்கா போட்டு பாடாய்ப் படுத்துவாளே?”, என்று எண்ணி அவனுக்கு எரிச்சலாக இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு அவனும் அதையே தான் செய்வான். வீட்டில் எப்போதும் டி‌வியில் பாடல் ஓடிக் கொண்டிருக்கும். அது மட்டுமில்லாமல் இரவில் மொட்டை மாடியில் நடை பயிலும் போதும் இளையராஜா பாடல்களைக் கேட்டுக் கொண்டு தான் இருப்பான். சில நேரம் பாடல்களை கேட்டுக் கொண்டே தூங்குவது கூட உண்டு.

ஆனால் இப்போது பாடல் கேட்க அவனுக்கு பிடிக்க வில்லை. பாடல்கள் மேல் வெறுப்பு வந்து விட்டது என்று சொல்ல முடியாது. வேண்டாத சிந்தனைகளில் அவன் மனம் மூழ்கி இருந்ததால் அவனால் பாடல்கள் பற்றி எண்ண முடியவில்லை என்று சொல்லலாம்.

ஒரே ஒரு விசயத்தால் அவன் மொத்த வாழ்க்கையே ஆடிப் போனது. அதனால் அவன் மட்டுமா பாதிக்கப் பட்டான்? அவனுடைய மொத்த குடும்பமுமே இடிந்தல்லவா போய் விட்டது. பணக்காரர்கள் இல்லாமல் போனாலும் நடுத்தரமான குடும்பம் தான் அவர்களுடையது. எப்போதும் அவர்களுக்கு பணத்துக்கு தட்டுபாடு வந்ததில்லை. அந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ள குடும்பம் இப்போது அந்த மதிப்பை இழந்து விட்டது என்று சொன்னால் சரியாக இருக்கும்.

அவன் கையை விட்டுச் சென்றது பணமும் நகையுமாக இருந்திருந்தால் கவலை கொண்டிருக்க மாட்டான். அதை அவன் எப்போது வேண்டும் என்றாலும் சம்பாதித்துக் கொள்வான்.

ஆனால் அவன் இழந்தது மானத்தையும் மரியாதையையும். தலையை சிலுப்பி அந்த எண்ணத்தை உடைத்தெறிய முயன்றான். ஆனால் அதுவோ அவன் மனதை விட்டு நீங்காமல் அவனை படுத்தி எடுத்தது.

அவன் காலை ஏழு மணி வரை அப்படியே படுத்துக் கிடக்க அவனைக் காண வந்தாள் பூர்ணிமா.

தங்கையைக் கண்டதும் எழுந்து அமர்ந்து “வா பூர்ணி”, என்று சொன்னான்.

“நைட் தூங்கலையா அண்ணா?”, என்று கலக்கமாக கேட்டாள்.

“ம்ம்”

“இன்னுமா அந்த சனியனை நினைச்சிட்டு இருக்க? காலைச் சுத்தின பாம்பு கண்ணைக் கொத்தலையேன்னு சந்தோஷப் படுண்ணா”

“ம்ம்.. நீ ஸ்கூல்க்கு கிளம்பிட்டியா?”, என்று கேட்டு பேச்சை மாற்றினான்.

“கிளம்பிட்டேன் அண்ணா. நீ காலேஜ்க்கு கிளாஸ் எடுக்க போகலையா?”

“இன்னைக்கு கிளாஸ் இல்லை பூர்ணி. அப்படியே இருந்தாலும் போகலை”

“ஏன்?”

“போக மனசில்லை”

“மனசில்லையா? அப்ப இப்படியே கிடந்து சாகப் போறியா? உன் முகத்தை கண்ணாடில பாத்தியா அண்ணா? நீ ஷேவ் பண்ணி பத்து நாள் ஆச்சு. என் அண்ணன் இப்படி இருந்தா நல்லாவா இருக்கும்? முதல்ல இந்த ரூமை விட்டு வெளிய வாண்ணா”

“என்னை விடு பூர்ணி. மாப்பிளை கால் பண்ணினானா? பேசுனியா? எப்ப வரான்?”, என்று மீண்டும் பேச்சை மாற்றினான். கணவனைப் பற்றிப் பேசியதும் கொஞ்சம் பூர்ணிமா முகம் தெளிந்தது.

“பேசினாங்க. நேத்து உனக்கு கால் பண்ணினாங்களாம். நீ எடுக்கலை போல?”, என்று கேட்டவளின் பார்வை அண்ணனைக் குற்றம் சாட்டியது.

“அவன் கிட்ட பேசுற மன நிலைல நான் இல்லை மா. அதனால தான் பேசலை”

“சரி விடுண்ணா. அவங்க புரிஞ்சிப்பாங்க. சரி நான் கிளம்புறேன். ஸ்கூல்க்கு நேரம் ஆச்சு”

“சாப்பிட்டு போ போ பூர்ணி”, என்று அவன் அக்கறையாக சொல்ல அவன் அக்கறையில் துளிர்த்த கண்ணீரை அடக்கிய படி கீழே வந்தாள்.

பூர்ணிமாவைக் கண்டதும் “எந்திச்சிட்டானா டி?”, என்று கேட்டாள் வசந்தா.

“உக்காந்துருக்கான் பெரியம்மா. ஆனா இப்படி இருக்குறவன் எப்படி மாறுவான்னு தெரியலை. அந்த தறுதலை ஓடிப் போயிட்டு என் அண்ணன் உயிரைக் குடிக்குது”, என்று கோபத்தில் பொரிந்தவள் பின் பெரியம்மாவிடம் திரும்பி “என்னை மன்னிச்சிருங்க பெரியம்மா. என்ன இருந்தாலும் அவ உங்க அண்ணன் பொண்ணு. அவளை தருதலைன்னு சொல்லிட்டேன்”, என்றாள் பூர்ணிமா.

“தருதலை எல்லாம் நல்ல வார்த்தை பூர்ணி. அந்த வார்த்தைக்கு எல்லாம் அவளுக்கு அருகதை இல்லை. என் அண்ணன் பொண்ணுன்னாலும் என் மகன் வாழ்க்கையை சீரழிச்சிட்டு போனவ என்னைப் பொறுத்த வரை விஷ செடி தான். அவ நல்லாவே இருக்க மாட்டா”

“சரி பெரியம்மா, எல்லாம் கடவுள் பாத்துக்குவார். நான் ஸ்கூல்க்கு கிளம்புறேன்”

“அதான் நேரம் இருக்கே. வா நாலு இட்லி சாப்பிட்டு போ”, என்று அவள் கை பிடித்து அழைத்துச் சென்று அவளுக்கு பரிமாறினாள். பெரியம்மாவிடம் பேசிய படியே நான்கு இட்லிகளை உண்டு விட்டு பள்ளிக்கு கிளம்பினாள் பூர்ணிமா.

அவள் சென்ற பிறகு மகனுக்கு ஒரு தட்டில் நான்கு இட்லியை எடுத்து வைத்து தேங்காய் சட்னி அவனுக்கு பிடிக்காததால் தக்காளி சட்னி வைத்து இட்லி பொடியில் நல்லெண்ணைய் ஊற்றி எடுத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்றாள் வசந்தா. அவன் அப்போது தான் பல் துலக்கி கொண்டிருக்க “சாப்பிடுப்பா”, என்று சொல்லி விட்டு கீழே வந்து விட்டாள்.

பல் துலக்கி வந்தவனுக்கு மனம் உணவில் செல்ல வில்லை தான். ஆனால் யாரோ ஒருத்தருக்காக நான் ஏன் பட்டினியாக கிடக்க வேண்டும் என்ற வீம்பு எழ ஒரே மூச்சில் இட்லிகளை விழுங்கினான். ஆனால் அவனால் அந்த வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை.

பத்து நாட்களுக்கு முன்பு அவன் வீட்டிலே தங்க மாட்டான். அப்படிப் பட்டவன் இன்று வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தடுமாறினான். அதுவும் அவன் தாலி கட்டிய மனைவியால் என்பதால் மற்றவர்களின் பார்வையில் விழ அவன் விரும்ப வில்லை. மீண்டும் அதே கட்டிலில் படுத்து விட்டான்.

காலை வேளையில் சரவணன் வீடு இந்த மாதிரி என்றால் அதே ஊரில் மேலத் தெருவில் இருக்கும் வெண்மதியின் வீடு வேறு மாதிரி இருந்தது. சரவணனுக்கு பத்து நாட்களாக கவலை என்றால் வெண்மதி இரண்டு வருடங்களாவே இடிந்து போய் தான் இருக்கிறாள். அந்த ஊரிலே அவள் வீடு தான் பெரிய வீடு. மிகவும் பணக்காரர்கள்.

தன்னுடைய அறையில் படுக்கையில் படுத்திருந்த வெண்மதி கீச் கீச் என்ற பறவைகளின் சத்தத்தில் கண் விழித்தாள். அவள் அறையின் ஜன்னல் வழியாக பார்க்கும் போது கிழக்கு வானம் வெளுக்கத் துவங்கி இருந்தது. தன்னுடைய போனில் மணியைப் பார்க்க காலை ஐந்து மணியைக் காட்டியது.

இப்போதே எழுந்து என்ன செய்ய? என்று எண்ணி மீண்டும் படுத்து விட்டாள். இரவு நன்கு தூங்கி இருந்ததால் இப்போது அவளால் மீண்டும் தூங்க முடிய வில்லை. அவள் முகத்தில் கவலையோ கண்ணீரோ தெரிய வில்லை என்றாலும் அவள் மனதில் வெறுமை நிறைந்திருந்தது. அவளுக்கு வயது இருபத்தி ஆறு தான். பூர்ணிமா வேலை பார்க்கும் பள்ளியில் தான் இவளும் வேலை செய்கிறாள்.

Advertisement