Advertisement

அத்தியாயம் 1

நித்தமும் என்னை நனைக்கும்

உந்தன் நினைவு என் சித்தத்தை

கலங்க தான் வைக்கிறது!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முடிவை என்ற அழகான கிராமம். பூஞ்செடிகளும் வயல்வெளிகளும் செழித்து விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழகான ஊர். வெள்ளை மனம் கொண்ட மனிதர்கள் இருந்தாலும் ஜாதிப் பெருமையை பேசிக் கொண்டு திரிபவர்களும் இங்கே உண்டு. எல்லா ஊரிலும் அப்படி இருப்பவர்கள் உண்டு தானே?

கிராமம் என்பதால் அங்கு அனைவரையும் மாமா, அத்தை, சித்தப்பு, அண்ணே, மதினி என்று உறவு சொல்லி தான் அழைப்பார்கள். அண்ணன் தம்பி பிள்ளைகள் என்றாலும் கூட பிறந்தது போல அண்ணன் தம்பிகளாக தான் வளர்வார்கள்.

விடியக் காலையில் கண் விழித்த வசந்தா வெளியே வந்து சாணி தெளித்து முத்தம் தெளித்தாள். வீட்டு வாசலில் கோலம் போட அவளுக்கு ஆசை தான். ஆனால் அதை செய்ய தான் அவளுக்கு மனதில்லை.

அதற்கு பின்னர் தொழுவுக்குச் சென்று மாடுகளை மாற்றிக் கட்டி விட்டு தொழுவைச் சுத்தம் செய்தாள். அப்போது தெருவிளக்கு வெளிச்சத்தில் ஒரு நிழல் அவள் கண்களுக்கு தெரிந்தது. அந்த நிழல் எங்கிருந்து வருகிறது என்று அண்ணாந்து பார்த்தாள். அந்த நிழல் மாடியில் நின்றிருந்த அவளது மகன் சரவணனின் நிழல் தான்.

பள்ளி கல்லூரி படிக்கும் காலங்களில் இருந்து சூரிய உதயத்தையே அவன் பார்த்தது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் கடந்த சில  நாட்களுக்கு முன்பு கூட அவன் விடியும் முன் எழ மாட்டான்.

அப்படிப் பட்டவன் இன்று உறங்கப் பிடிக்காமல் மாடியில் வானத்தில் தெரிந்த விடிவெள்ளியை வெறித்து பார்த்த படி நின்றதைக் கண்டு அந்த தாயின் கண்கள் கலங்கியது. “என் மகனை மட்டும் ஏன் கடவுள் வஞ்சித்தார்?”, என்று அவள் உள்ளம் குமுறியது.

அப்போது “ஏட்டி என்ன பராக்கு பாத்துட்டு இருக்க? இப்ப பால் கரக்க ராமன் வந்துருவான். சீக்கிரம் அதுக்கான ஏற்பாடு பண்ணு. தொழுவை சுத்தம் பண்ணி பாத்திரத்தை எடுத்து வைக்காம வானத்தை முறைச்சிட்டு இருக்க?”, என்று கேட்ட படி வந்தார் வசந்தாவின் கணவர் வெற்றிவேல்.

“தூங்க முடியாம என் பிள்ளை தவிச்சு கிடக்காங்க. எவ்வளவு நேரமா இப்படி நிக்குறான்னு தெரியலை. நைட் முழுக்க இவன் தூங்கவே இல்லையா? எனக்கு மனசே ஆற மாட்டிக்குங்க”, என்று வசந்தா புலம்பும் போதே அவள் கண்கள் கலங்கத் துவங்கி விட்டது. மனைவியின் கண்ணீரும் மகனின் நிலைமையும் அவருக்கும் வேதனையாக தான் இருந்தது.

“இப்ப கவலைப் பட்டு என்ன செய்ய வசந்தா? சொந்தம் சொந்தம்னு குதிச்ச. இப்ப வினையை இழுத்து விட்டுக்கிட்ட. அவன் வாழ்க்கை நாசமா போனது போனது தான். அதை யார் என்ன செய்ய முடியும்? உன்னைச் சொல்லி என்ன செய்ய? நீயும் இப்படி நடக்கும்னு எதிர் பாத்தியா? எல்லாம் நாம வாங்கிட்டு வந்த வரம். நம்ம மகனுக்கு ஏதாவது ஒரு வழியை அந்த கருப்பன் காட்டுவான் டி. நீ வேலையைப் பாரு. நான் வயலுக்கு போயிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.

அவர் வீட்டைத் தாண்டி நாலு வீடு தள்ளி நடக்கும் போது வெற்றிவேலின் தம்பி சக்திவேல் அவருடன் இணைந்து கொண்டார். சக்திவேலின் வீடு அங்கே தான் இருக்கிறது.

அண்ணன் தம்பி இருவரும் அமைதியாக நடந்து சென்றார்கள். முன்பெல்லாம் இருவரும் அந்த விடியக் காலையிலே கதை பேசிய படி தான் செல்வார்கள். ஆனால் இப்போது இருவரின் வாயும் பூட்டு போட்டிருந்தது போல ஒட்டிக் கொண்டது. மனதில் இருக்கும் அழுத்ததால் அவர்களால் சகஜமாக பேச முடியவில்லை.

வெற்றிவேல் வசந்தா தம்பதிக்கு ஒரே ஒரு மகன் தான். பெயர் சரவணன். வயது இருபத்தி ஒன்பது. விவசாயத்தில் முதுகலைப் படிப்பு படித்தவன். தந்தையுடன் சேர்ந்து விவசாயம் பார்ப்பது தான் அவன் வேலை. அவன் படித்த விவசாயக் கல்லூரியில் அவ்வப்போது சிறப்பு ஆசிரியராக சென்று வகுப்பு எடுத்து விட்டு வருவான்.

வெற்றிவேலின் உடன் பிறந்தவர் தான் சக்திவேல். சக்திவேல் மற்றும் சாந்தி தம்பதியினருக்கு ஒரே ஒரு மகள். பெயர் பூர்ணிமா. அவளுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது. அவளது கணவன் செந்தில் இப்போது வெளிநாட்டில் இருக்கிறான். திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் போனவன் தான் வருடம் இரண்டு ஆகியும் இன்னும் வரவில்லை.

செந்தில் வேறு யாரும் அல்ல. சரவணனின் நெருங்கிய நண்பன். செந்திலுக்கும் அதே ஊர் தான். சரவணனை காண வரும் போதெல்லாம் பூர்ணிமாவை பார்த்து காதல் கொண்டு அதை நண்பனிடம் சொன்னான்.

சரவணனும் செந்திலைப் பற்றி உயர்வாக சக்திவேல் மற்றும் வெற்றிவேலிடம் சொன்னான். செந்திலுக்கு அப்போது எந்த வேலையும் இல்லாமல் இருக்க பூர்ணிமாவை எப்படி வேலை இல்லாதவனுக்கு கட்டி வைக்க என்று சரவணனின் அப்பாவும் சித்தப்பாவும் வெகுவாக யோசித்தார்கள். கூடவே செந்திலுக்கு தாய் தந்தையும் கிடையாது. செந்தில் சிறு வயதாக இருக்கும் போதே இருவருமே இறந்து போனார்கள்.

அவனுக்கு ஊரின் மத்தியில் வீடு இருந்தது. ஆனால் விவசாய நிலங்களை எல்லாம் பாக்க முடியாமல் அதை விற்று அந்த பணத்தை தன்னுடைய பெயரில் டெபாசிட் செய்திருந்தான். அதில் இருந்த வட்டியை வைத்து தான் அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். அடிக்கடி சரவணன் வீட்டிலே அவன் உணவும் முடிந்து விடும். கல்லூரி முடித்திருந்தாலும் வேலைக்கு முயற்சி செய்து கொண்டு தான் இருந்தான். ஆனால் அது தான் கிடைத்த பாடில்லை.

அதனால் அவனுக்கு பெண் கொடுக்க பெரியவர்கள் தயங்கினார்கள். சித்தப்பா மற்றும் அப்பாவின் தயக்கத்தை உணர்ந்த சரவணன் தனக்கு தெரிந்த ஆட்களிடம் பேசி செந்திலை வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலைகளைச் செய்தான்.

அங்கு செந்திலுக்கு வேலை கிடைத்த பிறகு தான் செந்திலுக்கு பூர்ணிமாவைக் கொடுக்க வெற்றிவேல் மற்றும் சக்திவேல் இருவரும் சம்மதித்தார்கள். அவனும் திருமணம் நடந்து இரண்டே மாதத்தில் பூர்ணிமாவை அவளுடைய பிறந்த வீட்டில் விட்டுவிட்டு வெளிநாடு சென்று விட்டான். அதற்கு பிறகு பூர்ணிமா மற்றும் செந்திலுக்கு இடையில் கிடந்து அல்லல் படுவது இருவரின் மொபைல் தான்.

சக்திவேலுக்கு தன்னுடைய அண்ணன் வெற்றிவேல் தான் உயிர் என்றால் பூர்ணிமாவுக்கு அவளுடைய அண்ணன் சரவணன் தான் உயிர். தன்னை எப்போதும் குறுகுறுவென்று பார்க்கும் செந்திலை அவள் திரும்பிக் கூட பார்க்காமல் தான் இருந்தாள். ஆனால் சரவணன் சொன்னான் என்ற ஒரே காரணத்துக்காக தான் செந்திலை திருமணம் செய்தாள். அந்த அளவுக்கு அவளுக்கு அண்ணனைப் பிடிக்கும். பூர்ணிமா மற்றும் சரவணனின் வீடு தள்ளி தள்ளி இருந்தாலும் இருவரின் குடும்பமும் ஒன்று தான்.

சரவணனும் பூர்ணிமாவும் ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகள் போல தான் அன்பாக இருப்பார்கள். சரவணனும் சித்தி சித்தப்பா என்று சாந்தி மற்றும் சக்திவேலிடம் அன்பாக இருப்பான்.

செந்தில் வெளிநாட்டுக்குச் சென்றதால் அவன் நினைவில் பூர்ணிமா துவண்டு போக அவளை பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் அறிவியல் டீச்சராக சரவணன் தான் சேர்த்து விட்டான். இப்போதைக்கு இது தான் சரவணனின் குடும்பம்.

பால்காரன் வந்து பால் கறந்து எடுத்து சென்று விட வீட்டுக்குள் வந்தாள் வசந்தா. அது ஒரு நான்கு கட்டு வீடு. நடுவில் வானவெளி வைத்துக் கட்டியிருந்தாலும் மாடியும் உண்டு, அங்கே ஒரு அறையும் உண்டு. கீழ் வீட்டில் பாத்ரூம் அறைகளுக்குள் இருக்காது. வெளியே மட்டுமே தனியாக இருக்கும். ஆனால் மாடி அறையில் அட்டாச் பாத்ரூமுடன் கட்டி இருந்தான் சரவணன். அவனது அறை அது தான்.

கீழே சமையல் அறை, பூஜை அறை, ஹால், அது போக நான்கு அறைகள் இருந்தாலும் தனக்காக அவன் பார்த்து பார்த்து மாடியில் கட்டியிருந்த அறை தான் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

வீட்டுக்கென்று எடுத்து வைத்திருந்த பாலைக் காய்ச்ச ஆரம்பித்தாள் வசந்தா. அந்த பால் போல அவளது மனமும் கொதித்தது. பால் நன்கு கொதித்ததும் அதை இறக்கி கீழே வைத்தவள் ஒரு டம்பளரில் மட்டும் பாலை எடுத்து மகனுக்காக டீ போட்டு எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள். அப்போதும் அதே நிலையில் வானத்தைப் பார்த்த படி தான் இருந்தான் சரவணன்.

“சரவணா”, என்று வசந்தா அழைக்க “அம்மா”, என்ற படி திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் இருந்த சிகப்பே சொன்னது அவன் இரவு முழுவதும் தூங்க வில்லை என்று.

Advertisement