Advertisement

காதல் தருவாயா காரிகையே 30

                                காரைக்கால் மணல் கடற்கரையின் ஒரு பகுதியில் கைகளை உடலுக்கு குறுக்காக இறுக்கமாக கட்டிக் கொண்டு நின்றிருந்தாள் தேவா.. அவளின் பின்னால் அவளை அணைத்த நிலையில் ரகு.. எதிரே நீண்டு விரிந்திருந்த கடல் கண்களை கொள்ளையிட, மறைந்து கொண்டிருந்த ஆதவன் அந்த நிலையிலும் அங்கு நின்றிருந்த அத்தனை பேரையும் தன் அழகால் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான்.

                             இவர்களை போலவே இன்னும் நிறைய பேர் அந்த சூரிய அஸ்தமனத்தை காண கடற்கரைக்கு வந்திருக்க, யாரும் யாரையும் கவனிக்கும் நிலையில் இல்லை. ரகுவுக்கும் அதுவே வசதியாக போக, தன் காதல் கவிதையை லேசாக அணைத்து பிடித்து அவள் கையேடு கைகளை கோர்த்துக் கொண்டு நின்றுவிட்டான்.

                            தேவாவின் கவனம் முழுமையாக எதிரில் மறைந்து கொண்டிருந்த சூரியனிடம் இருக்க, ரகு மொத்தமாக தன் மனைவியிடம் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தான் அந்த நொடிகளில். பச்சை நிறத்தில் இருந்த அந்த மெல்லிய ஷிபான் சேலை, அவள் உடலின் வளைவுகளை அழகாக காட்சிப்படுத்தி கொண்டிருக்க, அவளின் தங்க நிறத்திற்கு அத்தனை பொருத்தமாக இருந்தது.

                               ரகு அவளையே பார்த்திருப்பது தெரிந்தாலும் அவன் புறம் திரும்பாமல் நின்றிருந்தாள் அவள். தன்னையே சுற்றி வரும் ரகுவின் இந்த பார்வைகள் அவளுக்கு புதியது அல்ல, ஆனால் எப்போதும் முதல் முறை போலவே உள்ளுக்குள் ஒரு சிறு படபடப்பையும், சிறு வெட்க புன்னகையையும் ஏற்படுத்தி விடுவான்.

                 அவள் சிணுங்கல்களில் அவளை சிறையெடுத்து தானும் அவன் சிறைப்பட்டு போவது அவர்களுக்குள் வாடிக்கையாகி இருந்தது… சமீப காலங்களில் ரகு இன்னமும் நந்தனாவிற்கு பழகி விட்டிருக்க, அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்பது போன்ற ஓர் உன்னத நிலையில் தான் இருந்தான் அவன்.

                ஆனால் இன்னமும் பெரிதான காதல் பாஷைகளோ, நீ இல்லாமல் நான் இல்லை என்பது போன்ற ஒப்புக் கொடுத்தல்களோ எதுவுமே இருக்காது.. ஆனால் வார்த்தைகளில் பரிமாறி கொள்ளப்படாத ஒரு அழகியல் அவர்களை நிறைத்திருந்தது என்றே கூறலாம்.

                   இன்றுவரை நந்தனாவின் முகத்தை பார்க்காமல் ரகுவின் பொழுதுகள் துவங்காது. முடிவும் அப்படியே.. இரவுகளில் இளமைக்கான தேடல் தொலைத்த நேரங்களில் கூட, தொட்டுக் கொள்ள அவள் வேண்டும் ரகுவுக்கு.

                    நந்தனாவும் அவனுக்கு சற்றும் குறையாத தேடல் நிறைந்தவள் தான். இப்போதும் சில நேரங்களில் ரகு தன் முன்கோப குணத்தை சட்டென காட்டி விடுவதுண்டு. ஆனால் அவர்கள் வாழ்வின் ஆரம்பத்தில் இருந்தது போல அழுது கரையாமல் அவனை கட்டி வைக்க கற்றுக் கொண்டிருந்தாள்.

               இருவருமே ஒருவருக்காக மற்றவர் வாழும் விதையை கற்று தெரிந்திருக்க, இதோ அவர்களின் திருமண வாழ்வு ஓராண்டு  நிறைவை நெருங்கி கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் அவர்களின் திருமண நாள்..

              அதனை முன்னிட்டே இந்த பயணமும் கூட.. அதுவும் சம்பந்தப்பட்ட இரண்டு பேர் எந்த வகையிலும் திட்டமிட்டே இராத ஒரு பயணம். திருமணம் முடிந்த இந்த ஓராண்டு காலத்தில் ரகுவுடன் பெரிதாக எங்கும் வெளியில் சென்றதே கிடையாது நந்தனா..

               ஆனால், அதைப்பற்றிய சிறு வருத்தம் கூட அவளுக்கு ஏற்பட்டது கிடையாது. ரகுவுடன் கைகோர்த்துக் கொண்டு பகல் நேரங்களில் வயலிலும், தோப்பிலும் சுற்றி வருபவள் இரவு நேரங்களில் அவன் தோள் வளைவில் புதைந்து கொள்வாள்.

               அந்த நேரங்களே அன்றைய நாள் முழுவதற்குமான இனிமையை வழங்கி விடும் என்பதால், இருவரும் வெளியில் எங்கும் செல்ல நினைத்தது இல்லை என்பதே உண்மை. இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால் இருவரும் ஓடிக் கொண்டே இருப்பதால் பெரிதக நேரமும் கிடையாது அவர்களுக்கு.

                 ரகுவின் தொழில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்க, பாண்டிச்சேரியில் புதிதாக ஒரு சூப்பர் மார்க்கெட் தொடங்கும் முதற்கட்ட வேலைகளை தொடங்கி இருந்தான். பிரசன்னா படிப்பை முடித்து வரவும் அவனும், ரகுவும் சேர்ந்து பார்ப்பதாக திட்டம் போட்டிருந்தனர்.

                சந்திரனும் உரக்கடையை விரிவு செய்திருக்க, விதைகள், விவசாயத்திற்கான நவீன மோட்டார்கள், என்று அதனையும் சேர்த்து  கொண்டிருந்தான். தொழிலில் ரகுவும், தேவாவும் சில யோசனைகளை சொல்லி இருக்க, அதை கேட்டுக் கொண்டவன் தனிப்பட்ட வாழ்வில் எப்படியோ, ஆனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண தொடங்கி இருந்தான்.

                 இரண்டு பேரை வேலைக்கு அமர்த்திக் கொண்டிருக்க, அவர்களிடம் கடையை விட்டுவிட்டு இடையில் வயலுக்கும் அவ்வபோது சென்று வர தொடங்கி இருந்தான். அவன் வருவது ரகுவுக்கும் உதவியாக இருக்க, அவனிடம் சில வேலைகளை கொடுத்துவிட்டு இவன் அடுத்த வேலையை பார்க்க முடிந்தது.

                முத்து மாணிக்கமும், வேலு மாணிக்கமும் எப்போதாவது வயலுக்கு வருவதோடு சரி.. மற்ற நேரங்களில் எல்லாம் இருவரும் அவர்களின் சூப்பர் மார்க்கெட்டில் தான். அதன் மொத்த பொறுப்பையும் பெரியவர்கள் ஏற்றுக் கொண்டிருக்க, மகன் விவசாயம் பார்ப்பதாக தான் நினைத்துக் கொண்டிருந்தனர் அவர்கள்.

                ஆனால், அவன் விவசாயத்தை தாண்டி தன் அண்ணனை கூட்டு சேர்த்துக் கொண்டு அடுத்த கடைக்கான வேலைகளை தொடங்கி விட்டது அதிர்ச்சி தான் பெரியவர்களுக்கு. கூடவே நம்மால் எப்படி பார்க்க முடியும் என்ற யோசனையும்.. ஆனால், ரகு அத்தனைக்கும் அழகாக பதில் வைத்திருந்தான்.

              பிரசன்னாவுக்கு ஒரு தொழில் வேண்டும் என்று காரணம் கூறினாலும், அவனின் இயற்கை அங்காடியை தமிழ்நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்பதே அவனின் நோக்கமாக இருக்க, அதன் முதற்கட்டமே இந்த பாண்டிச்சேரி கிளை.

                பெரியவர்களை திருப்தி படுத்தியவன் முழு மூச்சாக அதற்கான பணிகளில் இறங்கிவிட, பிரசன்னா இப்போதே அவனிடம் கற்க தொடங்கி இருந்தான். கல்லூரி நேரம் போக, மீதி நேரங்களில் பெரும்பாலும் அண்ணனோடு தான் இருப்பான் அவன்.

                தன் மகனை தனித்து விட்டு விடுவார்களோ என்று பயந்த சங்கரி கூட, ரகுவின் செயல்களில் திருப்தியாக உணர்ந்தார். இப்போதெல்லாம் அவரும் சஞ்சனாவிடம் இருந்து தள்ளியே நிற்க,  குடும்பத்தில் இவர்களால் ஏற்படும் குழப்பம் பெருமளவில் குறைந்து  இருந்தது.

               வீட்டின் மொத்த நிர்வாகமும் இப்போதும் பார்வதியிடம் தான். சங்கரி அதில் எப்போதுமே அக்கறை காட்டிக் கொள்ள மாட்டார். ஆனால் தேவைப்படும் இடங்களில் தன் உரிமைக்கு மட்டும் தவறாமல் குரல் கொடுக்க அவர் பழகி இருக்க, இப்போதெல்லாம் பார்வதி அவரை பெரிதாக கண்டு கொள்வது இல்லை.

                 பார்வதியின் பொறுப்புகளில் பெரும்பங்கு இப்போது தேவாவை சார்ந்தது. பார்வதி செய்வதாக பெயர் இருந்தாலும், எப்போதும் அத்தையுடன் தான் இருப்பாள் அவள். மேலும் இந்த இடைப்பட்ட நாட்களில் சந்திரனின் உரக்கடை கணக்கையும் அவளே பார்த்துக் கொள்ள தொடங்கி இருக்க, முழு நாளும் கூட பிசி தான்…

                  அரசியலில் ஒரு வார்த்தை அடிக்கடி இடம் பெறுமே ஒருங்கிணைந்த வளர்ச்சி என்று.. அப்படிதான் வளர்ந்து கொண்டிருந்தது முத்து மாணிக்கத்தின் குடும்பம். யாரையும் விட்டு விடாமல், யாரையும் நோகடித்து விடாமல், தாங்களும் வாழ்ந்து முன்னேறி, தன்னுடன் இருப்பவர்களையும் ஒருசேர முன்னேற்றிக் கொண்டிருந்தனர் நந்தனும், நந்தனாவும்..

               அந்த வகையில் பெற்றவர்களுக்கு பெருமை தான். பிள்ளைகளின் ஒற்றுமையை காட்டிலும் வேறு என்ன பெரிய வேண்டுதல் இருந்து விடும் பெற்றவர்களுக்கு.. சந்திரன், ரகுநந்தன், பிரசன்னாவின் ஒற்றுமையும், அவர்களின் முன்னேற்றமும் பெரிய நிம்மதியை கொடுத்தாலும், ரகுவும், நந்தனாவும் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருப்பதில் வருத்தம் தான்.

                  அவர்களின் விடாத வற்புறுத்தலின் பேரில் தான் நந்தனாவை அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தான் ரகு. எங்கே செல்வோம் என்று அவன் நந்தனாவிடம் கேட்க, அவளோ “உங்ககூட இருக்க போறேன்.. அவ்ளோதான்.. எங்கே என்ன எல்லாம் நீங்களே முடிவு பண்ணுங்க” என்று ஒரு வாக்கியத்தில் முடித்து விட்டாள்.

                  ரகு “உனக்கு எங்கே போகணும்ன்னு ஐடியா இல்லையாடி.. எங்கே போகணும்ன்னு ஏதாவது ஆசை இருக்கும்ல..” என்று மீண்டும் ஒருமுறை கேட்க

            லேசான சிரிப்புடன் “ரகு சார்… எனக்கு உங்களோட இருந்தா போதும்.. நம்ம ரூம் போதும்.. இவங்களுக்கு தான் புரியல.. நாம ஏன் தனியா ஹனிமூன் போகணும்…” என்று எதிர்கேள்வி கேட்க, ரகுவுக்கு தான் லேசாக வெட்கம் வந்து தொலைத்தது அவள் பேச்சில்.

              அவள் மண்டையில் தட்டி சிரித்தவன் “பைத்தியமாக்குறடி நீ..” என்றவன் லேசாக சலித்து கொள்ள

                “நாந்தான் பைத்தியக்காரி ஆகிட்டேன்… மொத்தமா ரகு பைத்தியம் பிடிச்சுடுச்சு..” என்று சிரிப்புடன் அவள் சொல்லிக் கொள்ள, அதே சிரிப்புடன் லேசாக அவள் கன்னத்தில் முத்தமிட்டு நிமிர்ந்தவன் மறுபடியும் “ஒரு ஹனிமூன் போக இந்த பாடு.. உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு..” என்று கிண்டலாக அலுத்து கொண்டான்.

                  தேவாவோ “கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் கழிச்சு இப்போதான் வெளியே கூட்டிட்டு போறேன் ன்னு உங்க வாயில வந்திருக்கு.. இதுல ஹனிமூனாம்… இதுக்கு பேர் டூர்.. ஹனிமூன் இல்ல, உங்கள வச்சுக்கிட்டு…” என்று தன் தலையில் அடித்துக் கொள்ள போனவள், கையை திருப்பி அவன் நெற்றியிலே அடித்து விட்டாள்.

                அவள் செயலில் சிரித்தவன் “எதுக்குடி அடிச்ச..” என்று முறைக்க, எதுவும் பேசாமல் சிரித்தவள் அவன் மீது சாய்ந்து படுத்துக் கொண்டாள்.

                 ரகு அவள் வயிற்றில் கைகொடுத்து இறுக்கி கொண்டவன் “எங்கே போகலாம் நந்தும்மா.. நீயே சொல்லேன்… நீ ஏதாவது பெருசா நினைச்சு நான் சொதப்பிட்டேன்னா..” என்று கேட்க

                 அவன் கைவளைவிலேயே திரும்பி அவனை பார்த்தவள் “ரகும்மா.. எனக்கு நிஜமா எந்த எதிர்பார்ப்பும் இல்ல… ரெண்டு நாள் எந்த டென்ஷனும் இல்லாம, ஜாலியா உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ண போறேன் அவ்ளோதான்.. இந்த ரகுப்பையன் என்கூட இருந்தா போதும்..” என்றவளை தன்னோடு சேர்த்து இறுக்கியவனுக்கு அவள் மனநிலை புரிய, அந்த நாள் முடியும் நேரம் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பி இருந்தான்.

                இந்த ராத்திரியில் எங்கே அழைத்து செல்கிறான் என்று அவள் பார்க்க, அவர்கள் வந்து சேர்ந்த இடம்தான் காரைக்கால். பாண்டிச்சேரிக்கு மிக அருகில் இருக்கும் சுற்றுலாத்தலம். தேவா இதற்குமுன் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என்று சுற்றி இருந்தாலும் காரைக்கால் வந்ததே இல்லை.

               அதுவும் ரகு இரவு நேரத்தில் அழைத்து வந்தவன் அங்கிருந்த ரிசார்ட்டில் ஏற்கனவே ஒரு அறையை முன்பதிவு செய்திருக்க, இவர்கள் செல்லும் நேரம் அறை தயாராக இருந்தது.. சுற்றிலும் மெழுகு வர்த்திகள், ரோஜா இதழ்கள், மெல்லிய வெளிச்சம், வெள்ளை விரிப்பில் இதய வடிவ தலையணைகள் என்று அறை ஒரு தினுஸாகவே இருக்க, தேவா கதவை திறந்து உள்ளே நுழைந்தவள் ஒருநொடி அதிர்ந்து நின்றுவிட்டாள்.

                அவள் திரும்பி ரகுவை ஒரு பார்வை பார்க்க, “ஹேய்.. நான் சொல்லலடி.. கப்புள் ரூமா ன்னு கேட்டானுங்க.. ஆமா ன்னு மட்டும்தான் சொன்னேன்..” என்று அப்பாவியாக உரைத்தான் அவன்.

                 “அதானே.. என் புருஷன் ரொமான்டிக்கா மாறிட்டான் ன்னு ஒரு நிமிஷம் சந்தோஷப்பட்டுட்டேன்… உங்களை எல்லாம்..” என்றவள் மீண்டும் அவன் தலையில் அடித்து விட்டு உள்ளே நுழைய, கையில் இருந்த பையை அங்கிருந்த சோஃபாவின் அருகில் வைத்தவன் அவளை ஒரே இழுப்பில் தன்னோடு இணைத்துக் கொண்டான்.

                 “எனக்கு ரொமான்ஸ் வரலையா…” என்று அவள் காதோரம் இதழ்களால் அவன் லேசாக உரச, அவன் கைகள் சேலை மறைக்காத அவளின் உடலை அளந்து கொண்டிருந்தது.. மெல்ல அவன் கைகள் அங்குமிங்கும் உலா வர, தேவா மெல்ல மெல்ல அவன் கைகளில் உருகி கொண்டிருந்தாள்.

Advertisement