Advertisement

மெல்ல ரகுவின் புறம் திரும்பியவள் அவன் நெஞ்சில் முகம் புதைக்க போக, அவள் கன்னங்களை பிடித்து தள்ளி நிறுத்தியவன் “இன்னிக்கு நீ ஒளிஞ்சிக்கவே முடியாது.. மரியாதையா ஒரே ஒரு கிஸ் கொடு… விட்டுடறேன்..” என்று வாய் பேச

                  புருவம் உயர்த்தி அவனை நக்கலாக பார்த்தவள் “முடியாதுன்னு சொன்னா…” என்று அவள் சொல்லும் முன்பே “நீ சொல்ல போறது இல்ல..” என்று அவள் வாயை மூடி இருந்தான் ரகு.

                அவன் அடாவடியில் தேவா அவனை முறைக்க, “அவளிடம் தன் கன்னத்தை காட்டி நின்றான் ரகு. அவனை கண்டுகொள்ளாமல் தேவா முகம் திருப்ப, அவள் கன்னத்தில் முத்தம் வைத்தவன் அவளை நகரவிடாமல் இழுத்து நிறுத்தினான்.

                     அவள் மெல்லிய குரலில் “ரகு…” என்று செல்ல சிணுங்களாக இழுக்க

                  “ரகுவே தான்… ஒரே ஒரு முத்தத்துக்கு எவ்ளோ பேச வைக்கிற நீ…  ரொம்ப பண்ற நந்து..” என்று பொய்யாய் முறைக்க

                  “பொண்டாட்டிகிட்ட முத்தம் கேட்கிற மூஞ்சிய பாரு… இதுல ரொமான்ஸ் வரலையா ன்னு கேள்வி வேற… இப்படி மிரட்டினா எல்லாம் கிடையவே கிடையாது.. .கிளம்புங்க..” என்றுவிட்டு நகர்ந்து கொண்டாள் அவள்.

                   ரகு செல்லும் அவளை சிரிப்போடு பார்த்து நிற்க, அவன் பின்தொடர்ந்து வராமல் போனதில் தேவா நின்று திரும்பி பார்த்தாள். ரகுவின் முகத்தில் இருந்த சிரிப்பை கண்டவள் கேள்வியாக அவனை பார்த்துவிட்டு, பெட்டியில் இருந்த தன் உடையை கையில் எடுத்துக் கொண்டு குளிக்க செல்ல, ரகு கட்டிலில் இருந்த ஒரு துண்டை தோளில் போட்டுக் கொண்டவன் தானும், அவளுடன் உள்ளே நுழைய முற்பட, திகைத்து அவனை திரும்பி பார்த்தாள் தேவா…

                     “டைம் வேஸ்ட் பண்ணாத நந்து… வா சீக்கிரம் குளிச்சுட்டு வருவோம்.. நிறைய வேலை இருக்கு…” என்று ரகு அவசரம் காட்ட

                  “என்ன.. குளிச்சுட்டு வருவோமா…” என்றவள் வாயை பிளந்து நின்று விட்டாள்.

                 ரகு அவளுக்கு பின்னால் நின்றிருக்க, “ரகு போங்க.. “என்று அவனை தள்ளி விட பார்த்தவள் அது முடியாமல் போகவும், “நீங்களே குளிச்சுட்டு வாங்க.. நான் அப்புறம் போறேன்..” என்று நகர்ந்து கொள்ள பார்க்கையில், அவளை தரையிலிருந்து மூன்றடி உயரத்திற்கு தூக்கி இருந்தான் ரகு.

             தேவா “ரகு..” என்று பயந்து போனவளாக அலற, அதை கண்டு கொள்ளாமல் அவளை தூக்கி கொண்டு குழையாறைக்குள்  நுழைந்திருந்தான் அவன். அடுத்த சில நிமிடங்களில் அவன் கேட்டது மொத்தமும் அவனுக்கு கிடைத்திருக்க, இந்த முறை கெஞ்சலோ, கொஞ்சலோ எதுவுமே இல்லாமல் லஞ்சமாக முத்தத்தையும் பெற்று முடித்திருந்தான்.

                   முத்தம் பெற்றவன் அவளை மொத்தமாக கொள்ளையிட தொடங்க, அவர்களின் அந்த காரைக்கால் பயணம் அந்த நிமிடம் முதல் காதலர்களுக்கானதாக மாறி இருந்தது. அடுத்த நாள் காலையில் அவளை எழுப்பி அரைகுறையாக கிளம்பி, அவளை கடற்கரைக்கு அழைத்து வந்தவன் சூரிய உதயத்தை அவளுக்கு காண்பிக்க, அவள் முகத்தில் இருந்த ரசிப்பு தன்மையில் கரைந்து போயிருந்தான்..

                    அதன் பின்னான நேரங்கள் அந்த ஊரின் முக்கிய இடங்களை சுற்றி வருவதில் கழிய, இதோ மாலை நேரம் மீண்டும் அதே இடத்தில் சூரியன் அஸ்தமிப்பதை ரசித்துக் கொண்டிருந்தனர் இருவரும். இருவருக்கும் அந்த நேரம் அத்தனை ரம்யமாக அமைந்து விட, தேவா தானாகவே ரகுவின் கைகளை பற்றிக் கொண்டு நின்றிருந்தாள்..

          ஓசையில்லா மௌனங்களும், சத்தமில்லாத மெல்லிய கண்ணோடு கண் கலந்த சிரிப்பும் மட்டுமே துணையாக கொண்டு தங்களை கட்டி வைத்திருந்தனர் இருவரும். வெகுநேரம் கழித்தே அங்கிருந்து கிளம்பியவர்கள் தங்கள் அறைக்கு வந்து சேர, பெரிதாக பேச்சுக்கள் இல்லாமலே உணவு நேரம் முடிந்திருந்தது.

                அவளை அழைத்துக் கொண்டு அந்த அறையின் வெளியே இருந்த பால்கனியில் வந்து அவன் அமர, அவன் கேட்காமலே அவன் மடியில் அமர்ந்து கொண்டாள் தேவா. அவன் கழுத்தை சுற்றி கைகளை போட்டுக் கொண்டவள் இம்முறை அவன் கேட்காமலே முத்தமிட தொடங்க, அவன் நெற்றி, கண்கள், கன்னம் என்று மெல்ல மெல்ல அவனை போலவே இறங்கி கொண்டிருந்தாள் தேவா.

                  இதழ்களை அடைந்தவள் முத்தமிடாமல் அவன் முகம் பார்க்க, என்ன என்பது போல் அழகாக அவன் புருவம் உயர்த்தினான். ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தவள் அவன் தலைமீதே தன் தலையை சாய்த்து கொள்ள,

                   “என்னடா..” என்று கனிந்து வந்தது ரகுவின் குரல்..

                 தேவாவுக்கு வார்த்தைகள் வராமல் தடுமாற, மொத்த தமிழும் மறந்தவள் போல கண்மூடி சாய்ந்திருந்தாள் அவள். ரகு அவள் முகம் பார்க்க, அவனை பார்த்து சிரித்தவள் “சந்தோஷமா இருக்கேன் ரகு..” என்று தானாகவே உரைக்க

                “மாமாவால தானே..” என்று சிரிப்புடன் ரகு கேட்க

               “ம்ம்ம்ம்… அப்படியும் சொல்லலாம்…” என்று இழுத்தவள் “நன்றியும் சொல்லலாம்.. என்னை விட்டுடாம இழுத்துட்டு வந்திங்களே..அதுக்கு… ரொம்ப பயப்பட வச்சிருக்கீங்க, ரொம்ப மிரட்டி இருக்கீங்க… ரொம்ப கோபப்பட்டு இருக்கீங்க, எப்பவும் முறைச்சிட்டே இருக்கீங்க….

                 “ஆனாலும் என்னவோ இந்த ரகுப்பையனை பிடிக்குது… இன்னுமின்னும் பிடிக்குது.. என் மாமா பெத்த என் மாமா பையனை… இந்த ரகு இல்லாம போயிருந்தா, என் அப்பா பார்க்கிற எவனையோ கட்டிக்கிட்டு அவனோட சேர்ந்து நானும் பிசினஸ், பணம், அந்தஸ்து ன்னு ரோபோவா மாறி இருப்பேன்…

                இப்படி இந்த கெஞ்சல், கொஞ்சல்,சிணுங்கல் இதெல்லாம் இல்லாமலே போயிருக்கும்…இது எல்லாத்தையும் எனக்கு கொடுத்ததுக்கு நான் தேங்க்ஸ் சொல்லணும் தானே…” என்றவள் இன்னமும் கூட அவனை காதலாக பார்க்க

               “ஏன் சொல்லாம, நல்லாவே சொல்லலாம்.. ஆனா, எப்படி ன்னு மாமா சொல்லி தரேன்…” என்றவன் அவள் நெற்றியில் மெல்ல முத்தமிட, சிரிப்புடன் அவனை பார்த்து கொண்டிருந்தாள் தேவா.

                   அவள் நெகிழ்ந்திருப்பது புரிய, ‘நான் எல்லாம் தேங்க்ஸ் சொல்ல ஆரம்பிச்சா, இன்னிக்கு நாள் போதாது நந்தனா… உன்னை எவ்ளோ டார்ச்சர் பண்ணி இருக்கேன் ன்னு என் மனசாட்சிக்கு தெரியும் இல்லையா..

                   “நான் இல்லாம போயிருந்தா உன் வாழ்க்கை இதைவிட நல்லா கூட இருந்திருக்கலாம்..” என்றவனை  தேவா முறைக்க தொடங்க, அவள் தலையில் தட்டியவன் “முறைச்சாலும் அதுதான் நிஜம்… உன் அப்பா உன்னை விட்டிருக்க மாட்டாரு…

                  “உன் பாட்டிக்கு தான் நான் நன்றி சொல்லனும்.. எப்படியோ என்னை நம்பி உன்னை என்கிட்டே கொடுத்தாங்க.. ஆனா இன்னிக்கு அந்த நம்பிக்கையை காப்பாத்தி இருக்குறதும் கூட நீதான்.. நான் படுத்தின பாட்டுக்கு நீ கிளம்பி இருந்தா, மொத்தமும் முடிஞ்சிருக்கும்…”

                     “என்னை பொறுத்துகிட்டு, என்னையே காதலிச்சு, என் குடும்பத்தை பார்த்து, உன் வீட்லயும் என்னை விட்டு கொடுக்காம, இதோ இப்போகூட இப்படி என்னை சைட் அடிச்சுட்டு இருக்கியே… நான் எவ்ளோ தேங்க்ஸ் சொல்லட்டும்…” என்று ரகு கேட்க

                    “எனக்கு தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்..” என்று முறுக்கி கொண்டாள் மனைவி…

                   “அப்போ நான் மட்டும் உன்கிட்ட கேட்டேனா.. எனக்கு ஏண்டி தேங்க்ஸ் சொன்ன..” என்று அவன் முறைக்க

                    “எப்படி சொல்றது சொல்லி தரேன் ன்னு சொன்னிங்க..” என்றவள் புன்னகையை அடக்கி கொள்ள,

                 “சொல்லி தரேன்.. கூட வா…” என்றவன் அவளை அள்ளிக் கொண்டு எழ, அங்கிருந்த இரண்டு நாளுமே அத்தனை வேகமாக கடந்து போயிருந்தது… மூன்றாம் நாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் தாய் அவனுக்கு அழைத்து விட, போனை எடுத்தவன் “என்னம்மா..” என்று கேட்க

                  தேவாவை அழைத்துக் கொண்டு நேராக அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு வந்துவிட சொன்னார் அவர். அங்கே இவர்கள் இருவரின் பெயரிலும் சிறப்பு அபிஷேகத்திற்கும், அர்ச்சனைக்கும் சொல்லி இருக்க, இவர்கள் கோவிலை அடைந்த போது ஏழு மணி..

                  கோவிலை சுற்றி இருந்த நிலத்தில் ஒரு போர்வையை விரித்து மொத்த குடும்பமும் அமர்ந்திருக்க, தேவாவின் அப்பா குணசேகரன், பாட்டி சுந்தராம்பாள், அவளின் சிற்றன்னை சாவித்திரியும் அதில் அடக்கம். வானதியும் அவள் கணவன் செந்தில், மாமியார் பூங்கோதையுடன் வந்திருக்க, பார்த்த இருவருக்கும் தான் ஆச்சரியமாக இருந்தது..

                 இவர்கள் வந்து சேரவும், அத்தனை பேரும் தனித்தனியாக வாழ்த்துக்களை தெரிவிக்க, முகம் முழுவதும் புன்னகையோடு நின்றனர் இருவரும்… தேவாவின் தந்தையும் இருவரையும் வாழ்த்த ரகு மட்டுமே அவரிடம் பேசினான். தேவா எப்போதும் போல் அமைதியாகவே நிற்க, அவள் தலையில் கைவைத்து ஆசிர்வதித்தவர் அவள் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

                  தன் மகள் தன்னை ஏற்றுக் கொண்டதே போதும் என்பது போல் தேவாவை சுற்றி வந்தார் அவர். மச்சான்கள் இருவரும் நல்லபடியாக அவரிடம் பேச தொடங்கி இருக்க, அதன் பொருட்டு வீட்டில் ஏதாவது சிறிய விசேஷம் என்றாலும் குணாவை அழைத்து விடுவார் வேலுமாணிக்கம்.

                குணாவும் அவர்கள் எப்போது அழைத்தாலும், அதை சாக்காக வைத்துக் கொண்டு மகளை பார்க்க கிளம்பி வந்து விடுவார். அவள் சொன்ன ஒருவார்த்தைக்காக சாவித்ரியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தவர் அதன் பிறகு இன்று வரை அவரை ஒரு வார்த்தை கூட கடிந்து கொண்டதில்லை.

                சாவித்ரியுமே தேவாவின் குணத்தால் ஒடுங்கி போயிருக்க, முந்தைய எண்ணங்களை ஒதுக்கி ஓரம்கட்டி விட்டு முழுதாக தன் மனதை தியானத்திலும், கடவுளிடமும் செலுத்த தொடங்கி இருந்தார்…

             அவரின் தியானமும், இறை நம்பிக்கையும் அவருக்கு ஒரு புது உலகை திறந்து வைக்க, அதன் வெளிச்சத்தில் தனது குறைகளை களைய தொடங்கி இருந்தார் சாவித்ரி. அந்த வகையில் அவரிடம் முன்னேற்றம் தான்..

                   சுந்தராம்பாள் தன் பேத்தியை கட்டி அணைத்து வாழ்த்தியவர் அவள் கன்னத்தில் முத்தமிட்டு கண் கலங்கியவராக அவள் கையை பிடித்துக் கொண்டார். அருகில் நின்றிருந்த ரகுவையும் அவர் கன்னம் தடவி கொஞ்ச இருவரும் இருபுறமும் அணைத்து கொண்டனர் அவரை.. அவரின் பிடிவாதமே இவர்களின் வாழ்வுக்கு அடித்தளம் அல்லவா…

                   இருவரும் சுந்தராம்பாளுடன் அப்படியே நிற்க, பார்வதிதான் அவர்களை களைத்து, கோவிலுக்குள் அழைத்து சென்றார். அங்கே மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நல்லபடியாக நடந்து முடிக்க, மேலும் சிறிது நேரம் அந்த கோவிலிலேயே கழித்து விட்டு மதியம் போல் வீடு திரும்பினர் அனைவரும்.

                 வீட்டிற்கு வந்ததும் பெண்கள் சமையலில் இறங்கிவிட, பூங்கோதை, சாவித்ரி இருவரும் பார்வதி, சங்கரியுடன் இனைந்து கொண்டதில் விரைவாக முடிந்து விட்டது.. டேபிளில் அல்லாமல் கீழே பாய் விரித்து அத்தனை பேரையும் அழகாக அமர்த்தி நான்கு பெண்களும் விருந்து பரிமாற, “தேவாம்மா..” என்று அழைத்துக் கொண்டு சஞ்சய் அவள் மடியில் அமர்ந்திருந்தான்.

                மூன்று நாட்கள் அவளை காணாமல் வீட்டை சுற்றி சுற்றி வந்தவன், இப்போது அவளை கண்டதும் விடாமல் ஒட்டிக் கொண்டே சுற்றினான்.. தேவாவும் அவனிடம் பேசிக்கொண்டே அவனுக்கு உணவை ஊட்ட, சஞ்சனாவுக்கே அவர்களின் இந்த ஒட்டுதல் ஆச்சரியம் தான்.

               சாப்பிட்டு முடித்தவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, சந்திரனும், பிரசன்னாவும் வெளியில் சென்று விட்டனர்.. தேவா தன் அத்தையின் மடியில் தலைவைத்து படுத்திருக்க, அவளின் தொடையில் தலையை சாய்த்துக் கொண்டு அவளை போலவே படுத்திருந்தது குட்டி வாண்டு…

              அன்று மாலை வேளையில் பிரசன்னா ஒரு கேக்கை வாங்கி வந்தவன் தேவாவையும், ரகுவையும் வெட்ட சொல்ல, சற்றே கூச்சமாக தான் உணர்ந்தனர் இருவரும்… வெட்க சிரிப்போடு தேவாவின் கையை பிடித்து ரகு கேக் வெட்ட, தேவாவின் கைக்குள் சஞ்சய்யின் குட்டி கை..

                கேக் வெட்டி முடிக்கவும், அவள் சஞ்சய்யின் கையை விட, சஞ்சய் கேக்கை கையில் தொட்டு பார்க்கவும், அந்த கிரீம் கேக் அவன் கையில் மொத்தமாக ஒட்டி இருந்தது.. சரியாக அதே நேரம் பிரசன்னா “அண்ணி இங்கே பாருங்க…” என்று போட்டோ எடுக்க அழைக்க, தேவா அவனை பார்க்கவும், சஞ்சய் அவள் முகத்தில் அவன் கையிலிருந்த கேக்கை பூசி விடவும் சரியாக இருந்தது…

               “ஹேய் சஞ்சுமா… ” என்று தேவா கண்களை மூடி பின்னால் நகர, அவன் குட்டி கைகள் அவள் முகத்தில் இருக்கும்போதே அழகாக படமாகி இருந்தது அந்த தருணம்.. சஞ்சய் இரு கைகளையும் தட்டி சிரித்துக் கொண்டிருக்க, இப்படி செய்வது அவனுக்கு பழக்கமாகி போயிருந்தது இப்போது…

               ரகு தேவாவை முறைத்தவன் சஞ்சய்யின் கையை பிடிக்க முற்பட, மறுகையால் அவன் முகத்திலும் பூசி விட்டான் சஞ்சய்… அங்கிருந்த அத்தனை பேரும் சிரித்து விட, தேவா தன் கணவனை பார்த்தவள் தானும் சிரிக்க தொடங்க, சஞ்சய் மீண்டும் அவள் முகத்தை நெருங்க, அவளின் ஒருபுறம் சஞ்சய் மற்றொரு புறம் ரகு…

               தேவா முன்னால் இருந்த கேக்கை பார்த்தவள் லேசாக கையில் எடுத்து சஞ்சய்யின் கன்னங்களில் பூசியவள் தன் கணவனை நெருங்கி நின்று கொண்டாள்..” இப்போ எடு பிரசன்னா..” என்று கூற, மூவரின் முகங்களிலும், அந்த கிரீமையும் தாண்டிக் கொண்டு மலர்ந்திருந்தது புன்னகை…

                    அங்கிருந்த அத்தனை பெரும் அவர்களின் சிரிப்பில், மகிழ்ந்து பார்த்திருக்க, அதே நேரம் பிரசன்னா அவர்களின் சிரிப்பை அழகாக சிறை பிடித்திருந்தான் தன் அலைபேசியில்… க்ளிக்….

                   என்றும் இந்த புன்னகையோடே இந்த புது மலர்கள் வாசம் வீச, வாழ்த்தி விடைபெறுவோம்….

Advertisement