Advertisement

காதல் தருவாயா காரிகையே 29

                      செந்தில்குமரன்- வானதியின் நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, இன்னும் அரைமணி நேரத்தில் இருவருக்கும் நிச்சயிக்க படுவதாக இருந்தது. ராக்காயி இறந்து மூன்று மாதங்கள் மட்டுமே முடிந்திருக்க, ஊரை கூட்டி செய்ய விருப்பமில்லை யாருக்கும்..

                     வீட்டோடு செய்து கொள்ள முடிவெடுத்து இருக்க, பூங்கோதை தன் மகனுடனும், மற்றும் தன் நெருங்கிய உறவுகளுடனும் வந்து விட்டிருந்தார்.. வெளியே பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, காவேரி வானதியை தயார் செய்து கொண்டிருந்தாள்.. தேவா அத்தனை நேரம் அங்கு இருந்தவளை சற்று முன்னர் பார்வதி வந்து அழைத்து சென்றிருக்க, அக்காவும், தங்கையும் மேட்டுமே இருந்தனர் அந்த அறையில்.

                    லேசான ஒப்பனை, அளவான நகைகள் இளஞ்சிவப்பு வண்ண பட்டு சேலை என்று முழுதாக கல்யாண பெண்ணாக மாறி அமர்ந்திருந்தாள் வானதி. முகத்தில் குடி கொண்டிருந்த வெட்கம் அவளை இன்னும் அழகாக செய்திருக்க, சற்றே படபடப்புடன் தான் அமர்ந்திருந்தாள்.

                      சங்கரி உள்ளே வந்தவர் வானதியின் முகத்தை பார்த்து சிரித்தவர், கைகளை மடித்து நெட்டி முறித்து, திருஷ்டி கழித்தார். கூடவே அவளை அணைத்து அவள் நெற்றியிலும் முத்தமிட, வானதி சற்றே ஆச்சரியமாக பார்த்தாள் அவரை.

                      காவேரிக்கும், செந்திலுக்கும் திருமணம் பேச வந்த அன்று அவர் ஆடிய ஆட்டத்தை நேரில் பார்த்திருந்தாள் அல்லவா.. இன்று அவர் மாறி இருக்கிறார் என்றாலும், இந்த அணைப்பும், முத்தமிடலும் நம்ப முடியவில்லை.. கூடவே செந்திலுடன் நடக்க இருக்கும் நிச்சயத்திற்கு இவர் வாழ்த்துகிறாரா என்று அதிசயமாக தான் இருந்தது வானதிக்கு.

                       ஆனால், சங்கரியின் கணக்கு அவளுக்கு புரியவில்லை. உண்மையில் சங்கரி நிம்மதியாக இருந்தார் இப்போது. என்னதான் அவர் மாறி இருந்தாலும், இன்னும் அவரின் சுயநலம் கொஞ்சமே கொஞ்சம் ஒட்டிக் கொண்டு தான் இருந்தது அவரிடம். வேலுமாணிக்கம் உடல்நலமில்லாமல் இருந்த நேரத்தில் உறவுகள் தன்னை தாங்கி கொண்டதில் சற்றே மாறி இருக்கிறார் அவ்வளவு தான்.

                     அதற்காக அவரால் தன் மகளின் வாழ்வை பணயம் வைக்க முடியாது. வேலுமாணிக்கம் மீண்டு வந்தவர் எங்கே தன் மகளின் திருமண பேச்சை எடுத்து விடுவாரோ என்று அவர் பயந்து கொண்டிருந்தது அவருக்கு தான் தெரியும்.. அவருக்கு அவர் மகள் தன் அண்ணன் மகளோடு வாழ்ந்தால் தான் நன்றாக வாழ்வாள் என்ற எண்ணம் இப்போதும் அப்படியே தான் இருந்தது.

                        எங்கே யாரும் மகளின் திருமணப்பேச்சை மீண்டும் எடுத்து விடுவார்களோ என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்து கொண்டிருந்தவருக்கு இப்போது விடுதலை உணர்வு தான். காவேரியும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தாயின் போதனைகளில் அவளுக்கும் மாமன் மகனின் மீது நாட்டம் வந்திருக்க, வயல், தோப்பு என்று சுற்றிக் கொண்டிருக்கும் செந்திலை நினைப்பதை கூடவிரும்பவிலை அவள்.

                        அந்த காரணத்தால் தான் சங்கரி இப்போது வானதியின் மீது பாசமழை பொழிவது.. ஆனால் இவர்களே வலிய போய் பேசி இருந்தாலும், பூங்கோதை இவர்களை திரும்பிக்கூட பார்த்திருக்கமாட்டார் என்பதை அவர்கள் இருவரும் மறந்து இருந்தனர்.

                       என்று அவர் வானதியை மருமகளாக ஏற்றுக் கொண்டாரோ, அந்த நிமிடமே அவர் இவர்களை மொத்தமாக மறந்து போயிருந்தார். வானதியின் குணத்திற்கு முன் காவேரி ஒன்றுமே இல்லை என்பது இந்த இடைப்பட்ட நாட்களில் புரிந்து போக, ஏதிலிருந்தோ தப்பித்த உணர்வு தான் பூங்கோதைக்கு.

                      இப்போதும் அவர் மிகுந்த மனநிறைவுடனே தன் அண்ணன்களுடன் அமர்ந்திருக்க, ஊரின் பெரிய மனிதர்கள் சிலரும் வந்திருந்தனர்.. அவர்கள் மத்தியில் வானதி- செந்தில் குமரனின் நிச்சயம் அரங்கேற, பூங்கோதையின் சார்பில் வேலுமாணிக்கமும், சங்கரியும் தான் தட்டை வாங்கி கொண்டனர்.

                     இதற்காவது உடன் நிற்கிறாளே என்று அந்த அளவில் நிம்மதியாக நினைத்துக் கொண்டார் பூங்கோதை. நிச்சயம் முடிந்ததும் பெண் மாப்பிளைக்கு நலங்கு இட்டு முடிக்க, சந்திரன் செந்திலுக்கு மூன்று பவுனில் செயின் ஒன்றை அணிவிக்க, பார்த்திருந்த சஞ்சனா தான் புகைந்து கொண்டிருந்தாள்.

                      ஏற்கனவே நிலத்திற்கு பத்து லட்சம் அவன் கொடுத்திருந்ததை பற்றி கேட்டதற்கே, அவளை அடித்து வைத்திருந்தான் சந்திரன்.. இப்போது இதை கேட்க போய் மீண்டும் கையை நீட்டி விட்டால், அந்த பயத்திலேயே வாயை திறக்கவில்லை அவள்.

                      அடுத்ததாக தேவா நலங்கிட்டு முடிக்க, ரகுநந்தன் தன் தங்கைக்கு செயின் அணிவித்தவன்,  செந்திலின் கையில் ஒரு மோதிரத்தை போட்டுவிட்டான். தொடர்ந்து பிரசன்னா ஒரே டிசைனில் இருந்த இரண்டு மோதிரங்களை வாங்கி இருக்க, ஆளுக்கு ஒன்றாக மாப்பிளை பெண்ணிடம் கொடுத்து மாற்றிக் கொள்ள சொன்னான்.

                     வானதியின் கைகள் லேசாக நடுங்கி கொண்டே இருக்க, பிரசன்னா அவளை விட்டு விலகாமல் அவளின் அருகிலேயே நின்றிருந்தான். உடன் பிறந்தவர்கள் ரகுவும், சந்திரனும் தான் என்றாலும், வானதிக்கு பிரசன்னாவுடன் தான் நெருக்கம் அதிகம். பிரசன்னாவும் எப்போதும் அவளுடன் தான் சுற்றிக் கொண்டிருப்பான். இப்போது வானதியின் பிரிவை நினைத்து அதிகமாக வருந்தி கொண்டிருப்பதும் பிரசன்னா தான்..

                முது மாணிக்கமும், பார்வதியும் ஒரு நெகிழ்ந்த நிலையிலேயே நின்றிருந்தனர் அங்கே.. சிறு பெண் என்று நினைத்திருந்தவள் இன்று ஒரே நாளில் சேலை கட்டி திருமண பெண்ணாக மாறி நிற்க, எப்படி அவளை பிரிந்து இருக்க போகிறோம் என்பதே அவர்கள் கவலையாக இருந்தது. திருமணத்தை மகன்கள் இருவரும் நடத்தி விடுவார்கள் என்ற நம்பிக்கை அகிகமாக இருக்க, அதை பற்றிய எந்த பயமும் அவர்களுக்கு இல்லை.

                இவர்கள் இப்படி இருக்க வேலுமாணிக்கம் நிச்சயம் இப்போது தான் சற்றே நிம்மதியாக உணர்ந்தார். தன் தங்கையின் மறைவிற்கு பிறகு பூங்கோதையை உடன்பிறந்தவளாகவே நினைத்து வந்தவருக்கு மனைவியின் அன்றைய பேச்சு நிச்சயம் அதிர்ச்சி தான். வெளியில் கட்டி கொள்ளாமல் இருந்தாலும் அதை பற்றிய சிந்தனையிலேயே தான் அவர் உடலை கெடுத்துக் கொண்டதும் கூட, இப்போது தங்கை மகன் தங்கள் வீட்டுக்கே மருமகனாகி இருந்ததில் கூடுதல் மகிழ்ச்சி.

                       இப்படியான கலவையான உணர்வுகளுடனே நிச்சயம் நடந்து முடிந்திருக்க, அங்கே மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் இருந்தது. தேவா பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். சஞ்சனா வழக்கம் போல் சஞ்சய்யை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவனும் ஒரு கட்டத்தில் அவளிடம் இருந்து நெளிந்து இறங்கி கொண்டவன் தேவாவின் பின்னால் செல்ல, உள்ளே கொதித்தாலும் வெளிப்படையாக காட்டிக் கொள்ள முடியாத நிலை சஞ்சனாவுக்கு.

                   தேவா அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், சஞ்சையையும் கையில் வைத்துக் கொண்டு அலுக்காமல் அலைந்து கொண்டிருக்க, தூரமாக நின்று அவளை கவனித்திருந்த ரகு ஒரு சாக்லெட்டை காட்டி சஞ்சய்யை தான் வாங்கி கொண்டான். தேவா சிறு சிரிப்புடன் அவனை பார்த்திருக்க, “என்னடி..” என்று கள்ள சிரிப்புடன் நின்றான் நந்தன்.

                   தேவா அவனை குறும்பாக பார்த்தவள் “என்ன இவ்ளோ கரிசனம்…” என்று புருவங்களை ஏற்றி இறக்க, அந்த செயலில் கொள்ளை போனவனாக சுற்றிலும் பார்த்தான் ரகு. இவர்கள் இருந்த இடத்தில யாரும் இல்லாமல் போக, அவளை நெருங்கியவன் அவளை அணைப்பது போல் கையை எடுத்து செல்ல, பதறி விலகியவள் “ரகு சார்… இன்னிக்கு உங்க தங்கச்சிக்கு நிச்சயம்.. உங்க கல்யாணம் இல்ல… நீங்கதான் புது மாப்பிளை போல இருக்கீங்க.. போய் வேலையை பாருங்க..” என்று சட்டென்று தோன்றிவிட்ட முறுவலுடன் சொல்ல

                  “உனக்கு எப்பவுமே நாந்தான் புது மாப்பிளை.. இப்போகூட என் வேலையை தான் பார்க்கிறேன்…” என்றவன் மீண்டும் நெருங்க

                   “ரகு.. வேலை இருக்கு..விளையாடம தள்ளி போங்க..” என்று பயத்தோடும், படபடப்போடும் அவள் விலகி நிற்க

                 “புது மாப்பிள்ளைன்னு சொல்லிட்ட… நான் நிரூபிக்கணும் இல்ல..” என்றவன் மீண்டும் நெருங்க

                 “தெரியாம சொல்லிட்டேன் சாமி.. இனி வாயையே திறக்க மாட்டேன்…” என்று அவள் வாயில் கையை வைத்து  மூடிக் கொண்டாள். அவளின் செயலில் திருப்தியாக புன்னகைத்தவன் லேசாக தலையசைத்து சிரிப்புடன் நகர, அங்கே வந்து கொண்டிருந்த சந்திரன் மீது மோதிக் கொண்டான்.

                 சந்திரன் ரகுவை பிடித்து நிறுத்தியவன் தேவாவையும் பார்த்துவிட, “டேய்.. இன்னிக்கு அவனுக்கு தாண்டா நிச்சயம்..  நீங்க தான் புதுஜோடி போல சுத்திட்டு இருக்கீங்க..” என்று அவன் கிண்டலடிக்க

              அவன் தோளில் கையை போட்டு அணைத்து அவனை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான் ரகு. அங்கே பிரசன்னா இப்போதும் வானதியுடன் நின்றிருக்க, செந்தில் கொலைவெறியோடு அவனை பார்வையிட்டு கொண்டிருந்தான்.

                ரகுவுக்கு அவர்களை பார்த்ததும் சிரிப்பு வந்துவிட, சந்திரனுக்கும் அங்கு நடப்பது புரிந்து போக, இருவரும் செந்திலின் அருகில் சென்று நின்றனர். அவர்களை வெளிப்படையாகவே முறைத்தவன் “எங்கே இருந்துடா புடிச்சீங்க இவனை.. விடாம காவல் காக்கிறான்.. உங்களுக்கு மேல இருக்காண்டா…” என்று அலுத்து கொள்ள

                     பிரசன்னா “இவதான் என்னை பிடிச்சு வச்சுருக்கா ரகுன்னா… இவரு மூஞ்சியை பார்த்தா பயமா இருக்கு போல.. நான் என்ன செய்யட்டும்..” என்றான்.

                    வானதி “அடப்பாவி.. போட்டு கொடுத்துட்டானே..” என்பது போல் முழிக்க, செந்திலும் அந்த நேரம் அவளைத்தான் பார்த்திருந்தான்… வானதி அவன் பக்கம் திரும்பாமலே அவன் முறைப்பதை கண்டு கொண்டவள் தலையை குனிந்து நின்றுவிட,

                 “தயவு செஞ்சு மூணு பேரும் கிளம்புங்கடா… உங்களுக்கு புண்ணியமா போகும்..” எண்டு அவர்களை துரத்தி விட பார்க்க, வானதிக்கு பயத்தில் வியர்த்து போயிருந்தது.. துளைத்தெடுக்கும் அவன் பார்வைகளை எதிர்கொள்ள முடியாமல் திணறி போயிருந்தாள் அவள். அதன் பொருட்டே இந்த நடுக்கம்..

                    ரகு ஒருவழியாக பிரசன்னாவுடன் அங்கிருந்து நகர, அது வீட்டின் முன் கட்டில் இருந்த ஹால் என்பதால் ஆள்நடமாட்டம் எப்போதும் இருக்கும்.. சந்திரன் யோசித்தவன் இருவரையும் வீட்டின் பின்கட்டுக்கு அழைத்து வந்தான்.. வீட்டின் பின்புறம் இருந்த திண்ணையில் செந்திலையும், வானதியையும் விட்டவன் “அரைமணி நேரம் யாரும் வராம பார்த்துக்கறேன்.. அதுக்குள்ள பேசி முடிச்சுக்கோ..” என்று செந்திலிடம் கூறிவிட்டு நகர்ந்து கொண்டான்.

                    பின்கட்டுக்கு செல்லும் வழியில் பிரசன்னாவை காவலுக்கு அமர்த்திவிட, வெளியே அவர்களுக்கு யாரின் தொந்தரவும் இல்லாமல் போனது.. செந்தில் “அப்படி என்ன பயம் உனக்கு.. உன்னை கடிச்சா தின்னுடுவேன்..” என்று எடுத்த எடுப்பில் காய

                       வானதிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. ஆனால் அவன் கோபம் அவளுக்கும் முணுக்கென்று ஒரு கோபத்தை கிளப்பிவிட, நிமிர்ந்து அவனை முறைக்க ஆரம்பித்தாள் அவள். செந்திலுக்கு அவளின் முறைப்பு அப்படி ஒரு சிரிப்பை கொடுக்க, அவளின் கையை பிடித்து இழுத்தவன் “என்னடி முறைக்கிற..” என்று மிரட்ட

                        “இங்கே பாரு மாமா.. சும்மா மிரட்டற வேலை எல்லாம் வச்சுக்காதிங்க… நீங்க இப்படி பார்த்துட்டே இருந்தா என்ன செய்யறது நான்.. கொஞ்சம் பயமா இருக்கு…” என்று சிணுங்கி கொண்டே அவள் கூறிவிட

                         “இந்த வருஷத்தோட பெரிய காமெடி இதுதான்.. நீ எங்க அம்மாவையே அசால்ட்டா சமாளிப்ப.. எனக்கு பயப்படறியா…” என்று கிண்டலோடு கேட்டிருந்தான் செந்தில்.

                        வானதி ” கையை விடுங்க.. யாராவது வரப்போறாங்க..” என்று அவன் பிடியிலிருந்து கையை விடுவிக்க பார்க்க

                     “ஆமாண்டி.. உன் அண்ணன் பிளான் பண்ணி தான் இப்படி வெட்டவெளியில் பேச சொல்லிட்டு போயிருக்கான்.. இதுல நீ கையை கூட பிடிக்க விடாத.. உங்களை எல்லாம் வச்சுட்டு..” என்று அவன் இழுக்க

                    “அய்யோடா… ரொம்பத்தான் அலுத்துக்கறிங்க… போங்க..” என்று அவள் கையை இழுத்துக் கொள்ள,

                  “ஓவரா இருக்குடி..” என்றவன் மீண்டும் அவள் கைகளை பிடித்துக் கொண்டான். அருகில் இருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டவன் அவளை தன் பக்கத்தில் அமர்த்திக் கொள்ள, ஆழ்ந்த குரலில் பேச தொடங்கினான்.

                 “என் அம்மாவை மட்டும் பத்திரமா பார்த்துக்கணும் வானதி.. அவங்களுக்கு என்னை விட்டா யாருமே இல்ல.. இந்த நிமிஷம் நான் முழுசா உனக்குத்தான் சொந்தம்.. ஆனா, என் அம்மாகிட்ட நீ எப்பவும் மல்லுக்கு நிற்கக்கூடாது… ” என்று அவன் பேச, அவனை முறைத்தவள்

                    “என்னை பார்த்தா சண்டைக்காரி போல தெரியுதா.. ” என்று அவனை முறைத்தவள் “எனக்கும் என் அத்தைக்கும் நடுவுல சண்டையே வராது எல்லாம் நான் சொல்ல மாட்டேன்.. ஆனா என்ன சண்டை வந்தாலும் நீங்க உள்ளே வராதீங்க.. ரெண்டு பேருக்குமே சப்போர்ட் பண்ணாதீங்க.. அது போதும்.. நாங்களே தீர்த்துப்போம்..”

                    “அதோட எனக்கு என் அத்தையை தனியா விட ஐடியா இல்ல.. அவங்களை விட்டுட்டு உங்களோட நாள் முழுக்க தனியா…. நம்மால முடியாதுடா சாமி…” என்று கைகளை விரித்து அவள் சொல்ல, முழுதாக செந்தில் அவளிடம் வீழ்ந்து கொண்டிருந்தான்..

                      அடுத்தடுத்த நாட்களில் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொள்ள தொடங்கி இருக்க, இன்னுமின்னும் அவளிடம் தொலையத்தான் தோன்றியது. செந்தில் முழுமையாக வானதியின் வசமாக அடுத்து வந்த ஒரு நல்ல முகூர்த்தத்தில் அவளை தன் மனையாளாக ஏற்றுக் கொண்டிருந்தான் அவன்.

                        குடும்பத்தில் இருந்த அத்தனை பெரும் கண்ணீருடன் அந்த வீட்டின் கடைக்குட்டிக்கு விடை கொடுக்க, ஒரு குடும்பத்தின் மொத்த பொறுப்பையும் அந்த நிமிடம் ஏற்றுக் கொள்ள தயாராக நின்றிருந்தாள் அவள்..

                                                                                                                                                                                                                                        

Advertisement