Advertisement

காதல் தருவாயா காரிகையே 28

                                பார்வதி, தேவநந்தனாவின் பெயரில் வாங்கி இருந்த அந்த நிலத்தின் ஒரு பகுதியில் இருந்தனர் முத்து மாணிக்கம் குடும்பத்தினர். நிலத்தை வாங்கியதோடு அப்படியே விட்டிருக்க, இன்று நாள் நன்றாக இருப்பதால் ஒரு  ஏற்பாடு செய்திருந்தார் பார்வதி.

                              வயலிலும் நடவு செய்வதற்கான ஆயத்தங்களை ரகு ஏற்கனவே தொடங்கி விட்டிருக்க, அதற்கு முன்னதாக பூஜை செய்துவிட வேண்டும் என்று கிளம்பி வந்துவிட்டிருந்தார் அவர். ஐயரை அழைத்திருக்க தேவா, ரகுவை முன்னிறுத்தியே பூஜைகள் செய்யப்பட்டது.

                               பூஜைக்கு சஞ்சனாவின் பெற்றோர், முத்து மாணிக்கத்தின் தங்கை பூங்கோதை அவர் மகன் செந்தில்குமரன் என்று முக்கியமானவர்கள் அனைவரும் வந்திருக்க, இன்னும் சில நெருங்கிய உறவுகளை கூட அழைத்திருந்தார் வேலுமாணிக்கம்.

                                ஆம்.. அழைப்புகள் எல்லாம் வேலுமாணிக்கம் தான்.. தேவா,ரகுவின் திடீர் திருமணத்தை வைத்து ஊரில் நிறைய பேசி இருக்க, பார்.. என் மக்கள் வாழ்க்கையை என்று காண்பித்து விடும் வேகம் தான் அவருக்கு.

                                சொந்தங்கள் அங்கு கூடி நிற்க, பூஜை நல்ல முறையில் முடியவும், ரகு பார்வதியை அழைத்துக் கொண்டு வயலுக்கு அருகில் வந்தான். தேவா ஒவ்வொரு நிகழ்வையும் அதிசயமாக வேடிக்கை பார்க்க, பார்வதி விளக்கேற்றி கற்பூரத்தை பொருத்தியவர் சூரியனை வழிபட்டு முடிக்க, அடுத்ததாக சங்கரியும் அவரைப் போலவே செய்தார்.

                               சஞ்சனா இவர்களுடன் வராமல் அங்கே தோட்டத்திற்குள் மற்ற உறவுகளுடன் இருக்க, பார்வதி தேவாவை “நீயும் காட்டு..”என்று இழுத்து முன்னால் நிறுத்தினார். அவள் அவர்களை போலவே கும்பிட்டு முடிக்க, ரகு பார்வதியிடம் முதல் நாற்றை நட சொல்ல, வயலில் இறங்கினார் அவர்.

                                பார்வதிக்கு நாற்று நட தெரியும் என்பதே அப்போதுதான் தேவாவுக்கு தெரிய, அவரை எட்டாவது அதிசயமாக பார்த்திருந்தாள் அவர்.. அவர் கையிலிருந்த கட்டை முடிக்கவும், ரகு கைகொடுத்து அவரை மேலே ஏற்றிவிட, தேவாவின் பார்வை இன்னமும் அவர்களிடம் தான்.

                             ரகு வயலில் இருந்தவன் அவள் பார்வையை உணர்ந்து “வர்றியா..” என்பது போல் தலையசைக்க, வேகமாக மறுத்தாள். ரகு அவளை முறைத்து பார்க்க “என்னால அத்தை மாதிரி நடக்க முடியாது.. கீழே விழுந்துடுவேன்.. புடவை எல்லாம் வீணாகிடும்…” என்று அவள் வேகமாக கூற

                         “நான் இங்கேதான இருக்கேன்.. எப்படி விழுவ.. வா..” என்று அவன் அழைக்க

                     “என் புடவை எல்லாம் சேறாகிடும்.. போங்க..” என்று பின்னால் நகர்ந்து நின்று கொண்டாள் அவள்.

                  அங்கு நின்றிருந்த சந்திரனும் “அவதான் வரல ன்னு சொல்றா இல்ல.. விடேண்டா..” என்று தம்பியை கடிந்து கொள்ள

                 “ஏன் வரமாட்டா.. அதெல்லாம் வருவா..” என்றவன் “சேலைய துவைச்சுக்கலாம் நந்தும்மா.. வா..” என்று மீண்டும் வற்புறுத்த, அவனை முறைத்தாலும் சற்று முன்னால் வந்தாள்..

                   சங்கரி அங்கே நின்றிருந்தவர் தேவாவின் சேலையை நன்றாக மேலே ஏற்றி சொருகிவிட, முழங்கால் வரை ஏறி இருந்தது புடவை.. அது வேறு கூச்சமாக இருக்க, ரகுவை முறைத்து கொண்டே வயலில் இறங்கினாள் தேவா.

                    இதற்குள் பார்வதி கையை காலை கழுவிக் கொண்டு வர, முத்துமாணிக்கமும், வேலுமாணிக்கமும் கூட வயலுக்கு அருகில் வந்திருந்தனர். சகோதரர்கள் இருவரும் தேவா வயலில் நிற்பதை கண்டு “நீ ஏண்டா சேத்துல இறங்கின.. கீழே விழுந்திட போற.. மேல வா தேவாம்மா..” என்று பதற்றத்துடன் அழைக்க

                  தேவா திரும்பி ரகுவை பார்த்தாள்.. அவன் நக்கலாக தந்தையையும், சித்தப்பாவையும் பார்த்தவன் “ப்பா.. நாந்தான் இருக்கேன்ல.. எப்படி விழுவா. போய் மத்த இடத்துல வேலை ஒழுங்கா நடக்குதா பாருங்க.. போங்க..” என்று விரட்ட

                    அவனை முறைத்துக் கொண்டே “அவன் கிடக்கிறான்.. நீ வா தேவாம்மா..” என்று கையை நீட்டினார் வேலு மாணிக்கம். வந்து விடுவாளா தேவா..?? பாவமாக அவள் ரகுவை பார்த்து நிற்க

                   பார்வதியும் “டேய்… அவளை ஏன்டா படுத்திட்டு இருக்க.. மேல அனுப்பிவிடு.. சொல்லு அவகிட்ட..” என்று ரகுவை மிரட்டிக் கொண்டிருந்தார்..

                  தேவா பாவமாக முழித்தாளே தவிர, இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. அத்தனை பேர் கூப்பிட்டும் இன்னமும் ரகுவின் அருகில் தான் நின்றிருந்தாள். தேவா அப்படிதான், ரகுவிடம் ஆயிரம் வாக்குவாதங்கள் இருந்தாலும், அவன் சொல்வதை  அப்படியே கேட்பாள்… பொதுவாக அவன் சொற்களை அவள் மீறுவது கிடையாது..

                    ரகுவும் அந்த தைரியத்தில் தான் அவளை அருகில் நிறுத்திக் கொண்டே தன் உறவுகளிடம் வம்பளந்து கொண்டிருந்தான்.. ஒரு கட்டத்தில் “எந்த நேரத்துல பெத்து வச்சியோ..  எப்பவும் அவன் சொல்றதை தான் கேட்க வேண்டியதா இருக்கு.. எப்படியும் சொல்றதை கேட்கமாட்டான்..” என்று  சத்தம் போட்டு, முத்து மாணிக்கம் கிளம்ப, அவருடனே வேலு மாணிக்கமும் கிளம்பினார்.

                பார்வதி “ஏண்டா.. இப்படி செய்யிற.. அவளை வயல்ல இறக்கி என்ன செய்யப்போற…” என்று அப்போதும் முறைக்க, சங்கரி சிரிப்புடன் பார்த்து நின்றார்…

                ரகு கொஞ்சம் கூட அலட்டாமல் “ம்மா.. ஏன்மா இப்படி பதறுறீங்க… நிலம் மட்டும் வாங்க தெரியுது இல்ல, விவசாயம் கத்துக்க வேணாம்.. கொஞ்சம் கூடமாட வேலை செய்யட்டும்.. அவ எப்போ கத்துக்கறது..” என்று சட்டம் பேச

                 “அடேய்…புள்ளையாடா நீ…” என்று அவனை திட்டியவர் “தேவா.. நீ மேல வா… ” என்று அவள் கையை பிடித்து இழுக்க

                  “அவர் சொல்றதும்  சரிதான அத்தை.. நான் கத்துக்கறேன்.. மாமாகிட்ட வாங்கி இருக்க கடனை சீக்கிரம் அடைக்கணும்  இல்லையா..” என்றவள் ரகுவை பார்க்க, அவளை சிரிப்புடன் பார்த்து நின்றான் அவன்.

                   பார்வதி கோபத்துடன் “என்னவோ செய்ங்க..” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட, சங்கரியும் சிரித்துக் கொண்டே அவருடன் நடந்தார். ரகுவின் முகத்தில் இருந்த சிரிப்பு அவன் விளையாட்டை காட்டிவிட, சங்கரி சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்.

                அவர்கள் நகரவும் “சொல்லுங்க நான் என்ன செய்யணும்..” என்று தேவா கேட்க

              “பார்றா.. சொன்னதும் உடனே செஞ்சிடுவா இவ..” என்று நக்கல் பேசினான் கணவன்.

           “அதான் செய்யமாட்டேன் தெரியுது இல்ல.. அப்புறம் ஏன் என்னை இறக்கி விட்டிங்க… என்னால நிற்கக்கூட முடியல..” என்றவள் அவன் கையை இன்னும் சற்று அழுத்தமாக பிடித்துக் கொள்ள

                “அடியேய் பொண்டாட்டி… இது நம்ம நிலம்.. நம்மோட இடம்.. சேத்துல இறங்க இப்படி பயந்து தயங்கி நிற்பியா… நாமதான் செய்யணும்.. இப்போ தெரியாம போனாலும் கத்துக்கணும் நீ..”

                 “சஞ்சனா அண்ணி இதெல்லாம் வாய்ப்பே இல்ல.. வானதி, காவேரி இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணுங்க… எங்க அம்மாக்கு வயசு ஆகுது இல்ல.. எவ்ளோ நாள் அவங்களே செய்வாங்க.. நீயும் கத்துக்கோ.” என்று கூறியவன்

                  “கடையை உன் மாமாங்க ரெண்டு பெரும் பார்த்துக்குவாங்க.. நீதானே இழுத்து விட்ட.. இனிமே தினமும் நீ வயலுக்கு வர்ற..” என்று அதட்ட

                   முகத்தை சுருக்கி அவனை முறைத்தவள் “நீங்க என் புருஷன் தானே… ” என்று சந்தேகமாக கேட்க

                சுற்றிலும் பார்த்தவன் “சந்தேகம் எதுவும் இருந்தா சொல்லு.. இப்போவே நிரூபிக்கறேன்..” என்று சிறு சிரிப்புடன் வினவ

                 ” உங்களுக்கு எதுவும் சந்தேகம் இருக்குமோ ன்னு தான் கேட்டேன். பரவால்ல.. அதுவரைக்கும் ஞாபகம் இருக்கே… இது என்னோட நிலம்… என் புருஷன் பார்த்துக்குவான்… நீங்க கவலைப்படாதீங்க..” என்றவள் மேலேற பார்க்க, கோபமாக காலை இழுக்க முற்பட்டவள் சேற்றில் தடுமாறி விழ பார்க்க, அவளை கீழே விழாமல் கவனமாக பிடித்து நிறுத்தினான் ரகு.

                  பயந்து போனவள் “விளையாடாம என்னை மேல ஏத்தி விடுங்க ரகு.. பயமா இருக்கு..” என்றவள் இன்னும் அவனுக்கு நெருக்கமாகவே நிற்க

                  “அம்மா செஞ்சதை பார்த்த இல்ல.. நீயும் ஒரு கட்டு நடவு செஞ்சிட்டு மேல ஏறு..” என்று விடாப்பிடியாக நின்றான்.

                 “ரகு.. எனக்கு தெரியாது இதெல்லாம்.. விளையாடாதீங்க..” என்று அவள் மறுக்க

                 “நந்து… நான் இருக்கேன்ல.. சொல்லி தரேன்.. நீ செய்.. இது நம்ம இடம்டா.. எனக்கு நீ செய்யணும்.. ” என்றவன் பிடிவாதமாக நிற்க, அவன் நம்ம இடம் என்றது நிம்மதியாக இருக்க, மேலும் அவன் ஆசையும் புரியவே “சரி சொல்லி கொடுங்க..” என்றவள் கையில் ஒரு கட்டை எடுத்துக் கொடுத்தவன் சிறு குழந்தைக்கு சொல்வது போல, கண்களில் ஒட்டிக் கொண்ட சிறு மின்னலுடன் அவளுக்கு பயிற்றுவிக்க, அவன் சொல்லியபடியே செய்து முடித்தாள் தேவா..

                அவள் அந்த கட்டை நடவு செய்து மேலேற, சரியாக காரில் வந்து இறங்கினார் குணா.. அவரின் கூடவே சுந்தராம்பாளும்… இருவரையும் பார்த்தவள் அமைதியாக ஒரு பார்வை பார்த்து விட்டு நடந்து வர, குணாவுக்கு தான் பொறுக்கவே முடியவில்லை…

                “தேவா.. நீ ஏண்டா இதெல்லாம் செஞ்சிட்டு இருக்க… உன்னை யாரு இதெல்லாம் செய்ய சொன்னது..” என்று சற்றே கோபமாக அவர் கேட்க

                “நான் ஏன் இதெல்லாம் செய்யக்கூடாது… இது எங்க நிலம்.. நாங்க தான் செய்யணும்… யார் சொல்வாங்க…” என்று அவரை முறைத்தவள் கண்டுகொள்ளாமல் நடந்து விட்டாள். ரகு பாட்டியை “வாங்க பாட்டி..” என்று அழைத்தவன் அவசரமாக தேவாவின் பின்னால் ஓடினான்..

                  அங்கே மோட்டரிலிருந்து தண்ணீர் கொட்டி கொண்டிருக்க, அவள் கையை கழுவிக் கொள்ள உதவியவன் கூடவே “அவங்க நம்ம வீட்டு விசேஷத்துக்கு வந்திருக்காங்க.. வாங்க ன்னு கேளு.. ” என்று அடிக்குரலில் மிரட்டினான் அவளை..

                   “நான் உங்களை அழைக்க சொன்னேனா.. யாரைக்கேட்டு கூப்பிட்டீங்க நீங்க.. ” என்று அவனிடமும் அவள் சண்டைக்கு நிற்க

                 “ஏய் அடங்குடி.. உன் மாமா தான் கூப்பிட்டாரு..இப்போ வந்து வாங்க சொல்லு..” என்று அவன் அதட்ட

                 “உங்களுக்கும் அவர் மாமா தானே.. உங்களுக்கு வேணும்ன்னா நீங்கப் போய் கூப்பிடுங்க.” என்று விட்டு முன்னே நடந்தவள் தோட்டத்திற்குள் சென்று மற்றவர்களுடன் அமர்ந்து விட்டாள்.

                  ரகு “வர வர பிடிவாதம் அதிகமா போச்சு..” என்று முனங்கி கொண்டே, “வாங்க பாட்டி..வாங்க மாமா..” என்று அவர்களை அழைத்து வர, குணாவும் அலட்டிக் கொள்ளவில்லை..

                    மாறாக சற்றே கரகரப்பான குரலில் “வர்றேன் மாப்பிளை..”என்றவர் அவனுடனே நடந்து வர, அங்கே அமர்ந்திருந்த அவன் பெற்றோர், சித்தி, சித்தப்பா,அண்ணன், தம்பி, தங்கைகள் என்று அத்தனை உறவுகளும் விழி தெறித்து விடுவது போல் பார்த்திருந்தனர் ரகுவை..

                    சந்திரன் சற்று வெளிப்படையாகவே நக்கல் சிரிப்பு ஒன்றை உதிர்த்தவன் தம்பி முறைக்கவும், சிரிப்பை அடக்கி கொண்டான்… தேவாவின் பார்வை முழுதாக கணவன் மீது தான்.. ஒரு ஆழ்ந்த பார்வை விழியெடுக்காமல்… இவன் என்னவன் என்ற பெருமித பார்வை… யாருக்கு புரிந்ததோ இல்லையோ.. மகளையே பார்த்து வந்த குணாவுக்கு மகளின் இந்த பார்வை அட்சர சுத்தமாக விளங்கியது…

                ரகுவின் மீதான அவரின் அத்தனை கோபங்களும், கசப்புகளும் ஏற்கனவே ஒன்றுமில்லாமல் போயிருக்க, இந்த நிமிடம் ஒரு அலாதியான மரியாதை தான் வந்தது அவன்மீது… தன் மகளைய்ந்த அளவிற்கு நேசிக்க வைக்க, அவன் எந்த அளவு நேசத்தை கொடுத்திருக்க வேண்டும் என்பது புரிய, மகள் வாழ்வு சிறக்க மனதார வேண்டிக் கொண்டார் அந்த நிமிடம்..

               சுந்தராம்பாள் இதற்குள் பேத்தியின் அருகில் சென்று அமர்ந்து விட்டிருக்க, தேவாவின் கையை இறுக்கமாக பற்றி இருந்தார் அவர்..

                 “என்கிட்டே என்னடி வீம்பு உனக்கு.. வயசான காலத்துல என்னை தள்ளி வச்சு வேடிக்கை பார்க்கிறியா..” என்று அவர் கண்ணீருடன் கேட்க

                “நீ உன் மகன் இல்லாம வர மாட்டியே.. அதான் உன்னையும் வர வேண்டாம் ன்னு சொன்னேன்..” என்று கொஞ்சம் கூட இளக்கமில்லாமல் கூறினாள் பேத்தி..

             ஓரளவிற்கு அனைவருமே கிளம்பி இருக்க, இருந்த ஒரு சிலரும் சற்று தள்ளி சென்றுவிட்டதால் பாட்டியும், பேத்தியும் பேசுவது யார் காதுகளிலும் விழாமல் போனது… இவர்களை தவிர குணாவும், ரகுவும் மட்டுமே அங்கே..

              “அதுக்கு என்ன செய்ய முடியும்… அவனையும் பத்து மாசம் சுமந்து பெத்து இருக்கேனே… தண்ணி தெளிச்சா விட்டுட முடியும்.. அவனும் கலங்கி தான நிற்கிறான்..” என்று அவர் கண்ணீர்விட

                “இந்த டிராமா போடற வேலையை விடவே மாட்டியா.. நீயே மாப்பிளையை துரத்தி விட்டுட்டு, அஞ்சு நிமிஷம் அழுது ட்ராமா பண்ணி எனக்கு கல்யாணத்தையே முடிச்சு வச்சிருக்க.. இன்னும் நீ அழுதா நான் நம்புவேனா…” என்றவள் கண்களை உருட்டி முறைக்க, பாவமாக அவளை பார்த்தார் பாட்டி…

                தேவா விடாமல் “சித்தியை எதுக்கு ஊட்டிக்கு அனுப்பி வச்சிருக்கீங்க..” என்று அவரிடமே கேட்க

                 “பின்ன அவ செஞ்ச வேலைக்கு, அவளை கூடவே வச்சு, தலைக்கு கொள்ளி வச்சுக்க சொல்றியா..” என்று ஆத்திரத்துடன் சுந்தராம்பாள் கேட்க

                 “இவருக்கும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகி தோராயமா ஒரு இருபது வருஷம் இருக்குமா.. எத்தனை முறை உங்க தலைக்கு கொள்ளி வச்சிருக்காங்க… நீங்க தான் அவங்களை இப்படி மாத்தி இருக்கீங்க பாட்டி..”

                   “இன்னும் இன்னும் தப்பு செய்ய வேண்டாம் ன்னு சொல்லுங்க உங்க மகன்கிட்ட.. அவங்களை கூட்டிட்டு வர வழியை பாருங்க..” என்று முடிவாக அவள் கூற

                   “உன் வாழ்க்கையை கெடுக்க பார்த்தாளே அது தப்பில்லையா..”  என்று பாட்டி ஆவேசமாக கேட்க

                  “என் வாழ்க்கையை அவங்க கைக்குள்ள வச்சுக்க நெனைச்சாங்க.. நான் கெட்டு போகணும் ன்னு நினைக்கல…” என்று தெளிவாக மறுத்தாள் தேவா..

                “அப்போ அவ நல்லவ.. நான் கெட்டவளா..” என்று பாட்டி கண்ணீர்விட

                “நீங்க கெட்டவங்க ன்னு நான் எப்பொ சொன்னேன்.. சும்மா பேசக்கூடாது பாட்டி.. என் பாட்டி ரொம்ப தெளிவானவங்க.. நான் சொல்றது உங்களுக்கு நல்லா புரியுது.. ஆனா ஏத்துக்க தான் முடியல…நீங்களே யோசிங்க..” என்றவள் எழுந்து கொண்டாள்..

                  “என்கூட ஒரு பத்து நிமிஷம் பேசக்கூட மாட்டியா நீ..” என்று அவர் முறைக்க, சிரித்தவள் “ஐயோ… சுந்தரம்   பாட்டி.. உனக்கு சாப்பிட எடுக்கத்தான் போறேன்.. நீயும் வேணா கூட வா..” என்று பேத்தி அழைக்க, அதற்குள் பார்வதி காபியும், சிறிது பலகாரங்களும் கொண்டு வந்து பாட்டிக்கும், குணாவுக்கும் கொடுக்க, மறுக்காமல் அவர்கள் வாங்கி கொள்ளவும் தேவா மீண்டும் பாட்டியின் அருகில் அமர்ந்து கொண்டாள்..

               ஆனால், இந்த நிமிடம் வரை தந்தையின் பக்கம் பார்வையை திருப்பவே இல்லை.. பாட்டி அவளிடம் பேசிக் கொண்டே அமர்ந்திருக்க, ரகு குணாவுடன் அமர்ந்திருந்தான். குணாவை அவனுக்கு பிடிக்காது என்றாலும், தங்களை தேடி வந்தவரை அவமதிக்க முடியாமல் அவருடன் பேசிக் கொண்டு அவன் நிற்க, முத்து மாணிக்கமும், வேலுமாணிக்கமும் வரவும் சற்று நிம்மதியாக உணர்ந்தான்.

                   வேலுவிற்கு குணாவை கண்டதும் பழைய நினைவுகள் வந்து போக, இருவரும் சட்டையை பிடித்து சண்டையிட்டுக் கொண்டது தான் நினைவில் வந்தது.. கொஞ்சம் முறுக்காகவே அவர் நிற்க, முத்துமாணிக்கம் இயல்பாக பேசினார் குணாவிடம்.

                   குணா தன் தவறுகளுக்கு மனம் வருந்தி வருத்தம் தெரிவிக்க வில்லையே தவிர, அவர் முகம் அவரின் குற்ற உணர்ச்சியை தெளிவாக காட்டிக் கொண்டிருந்ததே.. அதற்குமேல் அவரை என்ன குத்தி காட்டுவது, குறை சொல்வது என்று அமைதியாக கடந்து விட்டார் முத்துமாணிக்கம்..

                  ஆனால், வேலு கூட நின்றார் அவ்வளவே.. பெரிதாக பேசவெல்லாம் முற்படவில்லை. குணா என்ன நினைத்தாரோ, அவராகவே “என்னை மன்னிச்சுடு வேலு.. ஏதோ அந்த நேர புத்தி கெட்டு ஏதோ செஞ்சிட்டேன்.. ஆனா உன் அம்மா இறந்த விஷயம் சத்தியமா எனக்கு தெரியாது..” என்று வேலுவின் கையை பிடித்துக் கொள்ள

                “அட.. என்ன மச்சான் நீங்க.., விடுங்க.. அதான் எங்க தங்கச்சியை கூட்டிட்டு போனதுக்கு பதிலா, எங்க தேவாவை எங்களுக்கே கொடுத்துட்டீங்களே.. அதைவிட வேற என்ன வேணும்… எங்க தேவாம்மாவுக்காகவே உங்களை மன்னிச்சிடலாம்… விடுங்க..” என்றுவிட்டார்..

                 குணாவிடம் பேசாமல் தேவா கொடுத்து கொண்டிருக்கும் தண்டனையே அவருக்கு பெரிது தான் என்பதால் அண்ணனும், தம்பியும் அவரை இலகுவாக விட்டுவிட்டனர்..

                  அந்த நாள் முடியும் நேரம் வரை அவர்களுடன் செலவிட்டு குணா அன்னையுடன் புறப்பட, சிதம்பரமும் தன் மனைவியுடன் புறப்பட்டார்.. பூங்கோதையும் கிளம்புவதற்கு தயாராக நின்றவர் தன் அண்ணனின் முகம் பார்க்க “அதான் பேசிட்டோமே ஆத்தா.. அடுத்த முகுர்த்தத்துல நிச்சயம் வச்சுப்போம்..” என்று உறுதி கொடுக்க, அருகில் நின்றிருந்த செந்தில்குமரன் விழிகள் ஆசையாக வானதியை தேடியது..

                      சற்றே தூரமாக நின்று அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்ததால் அவனின் பார்வையும், தேடலும் புரிந்தது அவளுக்கு.. உள்ளுக்குள் சற்றே மகிழ்ச்சியாக இருக்க, இனிய கனவுகள் மெல்ல மெல்ல அரங்கேற ஆரம்பித்திருந்தது அவளுக்குள்…

                                         

      

Advertisement