Advertisement

காதல் தருவாயா காரிகையே 27

                                   சஞ்சனா  அவள் வீட்டிற்கு கிளம்பி ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகி இருக்க, சஞ்சய் ஒருவழியாக அழுகையை நிறுத்தி உறங்க ஆரம்பித்து இருந்தான்.. தேவா கொப்புளம் வைத்துவிடுமோ என்று பதட்டத்தில் அடிக்கடி அவனையே பார்த்து அமர்ந்திருக்க, நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

                             சஞ்சனாவை பற்றி கவலை கொண்டாலும், அந்த நேரத்தில் பிள்ளையை தனித்து விட்டு விட்டு அவள் கிளம்பியதை ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. அப்படி என்ன கோபம்.. குழந்தைக்கு என்ன ஆனது என்று கூட பார்க்க மாட்டாளா?? என்று இன்னுமே கோபம் தான் வந்தது.

                            அவள் யோசனையில் இருக்கும்போதே சஞ்சய் லேசாக சிணுங்கி கொண்டே விழித்து எழ, தேவா எதிரில் இருக்கவும் அவனை கட்டிக் கொண்டவன் “டேவா… ஊஊ..ஊஊ…” என்று தன் காயத்தை காட்ட

                       “அச்சோ.. என் தங்கக்கட்டியை ஊஊ.. கடிச்சிருச்சா.. சரியாகிடும் செல்லம்..” என்று அவள் கன்னத்தில் முத்தமிட,அடுத்து ரகு வரவும் அவனிடமும் காட்டியவன் வீட்டில் உள்ள அனைவரிடமும் தனி தனியாக காயத்தை காட்டி கொண்டிருக்க, அங்கே சஞ்சனாவால் ஏற்பட்டிருந்த சங்கடம் மெல்ல குறைந்தது…

                        தேவா பேசிக்கொண்டே அவனுக்கு உணவை ஊட்டி முடிக்க, அவள் சாப்பிட்டு படியேறும் நேரம் சந்திரன் கைகளில் இருந்தவன் தேவாவிடம் தாவ, புன்னகையுடன் வாங்கி கொண்டாள். சந்திரன் சங்கடமாக தம்பியை பார்க்க “போய் தூங்குடா.. நான் பார்த்துக்கறேன்..” என்று அவன் தோளில் தட்டிவிட்டு மாடியேறினான் ரகு.

                      எப்போதும் பாதி படிகளில் தேவாவை தூக்கி கொள்பவன் இன்றும் அவளை பார்க்க, கையில் குழந்தை வேறு இருக்க, இன்னும் கவனமாக இருந்தாள்.. அவள் கையிலிருந்த சஞ்சய்யை தான் வாங்கி கொண்டவன் அவனை வலது தோளில் போட்டுக் கொண்டு, இடது கையால் தேவாவை தோளில் தூக்கி கொண்டான்.

                       அவனின் ஒரு பக்க தோளில் இருந்த சஞ்சய் தேவாவை பார்த்து சிரிக்க, “ரகு.. பாப்பா இருக்கான்.. இறக்கி விடுங்க.. பத்திரமா பிடிச்சுக்கோங்க…” என்று கத்திக் கொண்டே வர, அறையும் வந்திருந்தது. இருவரையும் ரகு கட்டிலில் விட, சஞ்சய் குஷியாகி விளையாட கிளம்ப, தேவாவும் அவனுக்கு சரியாக ஈடு கொடுத்துக் கொண்டிருந்தாள்..

                      ரகுவுக்கு அவர்களை பார்க்க, தாய் மகனை போலவே தெரிய, தங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் எப்படி இருக்கும் என்று அவன் கற்பனை ஓட, நன்றாகத்தான் இருந்தது.. ஆனால் தேவாவிடம் எதையும் சொல்லாமல் அவன் தூரமாக அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்க்க, சஞ்சய் ஆடி முடித்தவன் சற்றே கண்களை சுழற்ற, அவனை படுக்க வைத்து அருகில் படுத்துக் கொண்டவள் இதமாக தட்டிக் கொடுக்க, சில நிமிடங்களில் உறங்கி இருந்தான் அவன்.

                         அதன் பிறகே அந்த அறையில் இருந்த ரகுவை தேவா நிமிர்ந்து பார்க்க, அவளை நோக்கி பெருமிதமாக புன்னகைத்தவன் அமர்ந்த இடத்தில்  இருந்தே தன் கைகளை விரிக்க, இருந்த இடத்தை விட்டு அசையாமல் அவனை பார்த்தவள் “தூக்கு..” என்பது போல் தன் கைகளை தூக்கி காட்டினாள்.

                             ரகு புன்னகையை பெரிதாக்கியவன் எழுந்து வந்து அவளை கைகளில் தூக்கி கொள்ள, அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள் தேவா.. அந்த நாற்காலியில் அமராமல், சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்து கொண்டவன் தேவாவை மடியிலேயே இருத்தி கொண்டான்.

                             தேவா ரகுவின் மீது அமர்ந்திருந்தவள் அவன் கழுத்தை கட்டி கொண்டு அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.. “என்ன சார், ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல..” என்று தேவா வினவ

                           “ஆமா… இந்த தேவா பெண்ணால தான்… நிம்மதியா இருக்கேன் நந்தனா…” என்று அவள் கன்னத்தில் அவன் முத்தமிட

                            “சந்திரன் மாமா விஷயத்துல ஏதாவது செய்யணும் ரகு.. சஞ்சனா அக்காவை கூட்டிட்டு வரணும்…சஞ்சய் அவங்களை தேடாம இருந்தாலும், பிள்ளை ஏங்கிடுவான்.. நாம நாளைக்கு அவங்க வீட்டுக்கு போய்ட்டு வருவோமா??….” என்ற தேவா ராகுவின் முகத்தையே பார்த்து இருக்க, அவள் கன்னத்தை மீண்டும் ஒருமுறை தீண்டி விலகியவன் “அப்பா.. ஏற்கனவே சிதம்பரம் மாமா கிட்ட பேசிட்டாங்க… அவரே நாளைக்கு அண்ணியை கொண்டு வந்து விட்டுடுவாரு..” என்று ரகு சொன்னதும் தான் நிம்மதியாக இருந்தது தேவாவுக்கு..

                       தூங்கி கொண்டிருந்த சஞ்சய்யை பார்த்த ரகு “சந்திரன் இந்த காரியத்தை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருந்தா, அண்ணி எப்பவோ திருந்தி இருப்பாங்க… எல்லாம் இவனால,.. ஆரம்பத்துலயே நல்லா இடம் கொடுத்திட்டு, இப்போ புலம்பிட்டு இருக்கான்..” என்று அண்ணனை வசைபாட

                      “அதுசரி.. எல்லாம் ரகுவா இருப்பாங்களா.. உண்மையை சொல்லணும் ன்னா சந்திரன் மாமா ரொம்ப  நல்ல குணம்.. அவருக்கு இருக்க பொறுமைக்கு தான் இவங்க இத்தனை நாள் தாக்கு பிடிச்சதே.. யாருக்கு தெரியும்..அவருக்கு என்ன சூழ்நிலையோ..

                       “குடும்பத்துல பிரச்சனை வரக்கூடாது ன்னு கூட, அவர் அமைதியா இருந்து இருக்கலாம்.. ஆனா அன்னைக்கு அத்தையை சஞ்சனா அக்காவோட அப்பா பேசவும், எவ்ளோ கோபம் வந்தது பார்த்திங்கல்ல.. அதுதான் அவரோட குணம்..

                     “நிச்சயமா சஞ்சனா அக்கா புரிஞ்சிப்பாங்க… ” என்று நம்பிக்கையாக கூறினாள் தேவா..

                  ரகு அவள் காதோரத்தில் காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்த முடியை லேசாக சுற்றி விட்டவன் “பாட்டி போன் பண்ணி இருந்தாங்க நந்தும்மா… “என்று கூறிவிட, தேவாவின் முகம் லேசாக வாடி, பின் சீரானது..

                  அவள் பதில் சொல்லாமல் போக, ரகு மீண்டும் “நான் என்ன சொல்லட்டும் நந்தனா..” என்று மீண்டும் அவளை மீள விடாமல் இறுக்க,அப்போதும் மௌனமே…

                    “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும்டா… யாருக்கு எப்படியோ, உன் விஷயத்துல உன் பாட்டி ரொம்பவே நல்லவங்க.. முழுசா உனக்காக மட்டுமே வாழ்ந்திட்டு இருக்க ஜீவன்.. நீ இப்படி செய்யுறதால எவ்ளோ வருத்தப்படுவாங்க.. யோசிச்சியா..” என்று அவன் பாடம் நடத்த

                      “நான் என்ன செஞ்சேன்..” என்று அவனை முறைத்தாள் நந்தனா…

                    “நானே சொல்ற வரைக்கும் என்னை பார்க்க வரவேண்டாம் சொல்லி இருக்கியே.. அது ஒன்னு போதாதா…” என்றவன் அவளை கண்டிப்பான கண்களுடன் பார்க்க

                   “எனக்கு என்ன செய்ய தெரியல ரகு.. பாட்டி மேல கோபம் இல்லாம போனாலும், என் பாட்டியா இப்படிங்கிற வருத்தம் நிறைய இருக்கு… இப்போ பாட்டியை இங்கே வர சொன்னா நிச்சயம் அவங்க அப்பாவையும் கூட்டிட்டு தான் வருவாங்க..எனக்கு அவரை பார்க்க வேண்டாம்..” என்று பிடிவாதமாக, மறுக்கமுடியாத அழுத்தத்துடன் அவள் கூறிவிட

                  “உங்களுக்கு ஊட்டில ஒரு எஸ்டேட் இருக்கு இல்ல..” என்று நிதானமாக கேட்டான் ரகு..

                 என்ன பேசிக் கொண்டிருக்க, சம்மந்தமில்லாமல் என்ன கேட்கிறான் இவன் என்று அவனை பார்த்தவள்    ஆம் என்பது போல் தலையை மட்டும் அசைக்க “உன் சித்தி இப்போ அங்கேதான் இருக்காங்க… உடம்பு முடியல,ரெஸ்ட்க்காக போயிருக்காங்க.. அப்படிதான் எல்லார்கிட்டயும் சொல்லி இருக்காரு உன் அப்பா…” என்று தகவலாக கூறி முடித்தான் அவன்..

                  ‘இவருக்கு புத்தியே வராதா ரகு.. அவங்களை இப்போ தனியா அனுப்பிட்டா எல்லாம் சரியாகிடுமா.. அவங்களோட பிரச்சனைக்கு மூல காரணமே இவர்தான்… இவர் அவங்களுக்கு நான் இருக்கேன் ன்னு நம்பிக்கைகி கொடுத்து இருந்தா, அவங்க ஏன் மத்தவங்களை பத்தி  யோசிக்க போறாங்க…”

                    “தன்னோட தம்பி, தங்கைகளை எந்த இடத்திலேயும் விட்டு கொடுக்காம, அவங்களை நல்லபடியா வளர்த்து கல்யாணமும் செஞ்சு கொடுத்திருக்காங்க.. அப்பா உதவி செஞ்சிருந்தாலும், செய்யணும் ன்னு அவங்களுக்கு எண்ணம் இருக்கவும் தானே செஞ்சாங்க.. அப்படிப்பட்ட ஒருத்தர் எப்படி கெட்டவங்களா இருந்திருக்க முடியும்…”

                  “இளங்கோவை எனக்கு கல்யாணம் செய்ய நினைச்சது கூட, அந்த வீட்ல அவங்களோட இடத்தை தக்க வச்சிக்க தான்.. வேற யாரும் மாப்பிள்ளையா வந்தா, தன்னை ஒதுக்கிடுவாங்களோ ன்னு ஒரு எண்ணம்.. அப்படி ஒரு எண்ணம் அவங்களுக்கு வர யார் காரணம்..”

                 “இப்போவும் இவரோட ஈகோவும், இயலாமையும் கண்ணை உறுத்தவும் தான் அவங்களை அங்கே கொண்டு போய் விட்டு இருப்பாரு… என்னசொல்றது தெரியல எனக்கு…” என்று தேவா அக்குவேறு ஆணி வேறாக அவள் தந்தையின் தவறுகளை அலசி ஆராய, அவளை ஆச்சர்யமாக பார்த்தான் ரகு.

                எப்போதுமே அவன் எண்ணங்களுக்குள் அடங்காதவள் தான் நந்தனா.. அவளை பற்றிய அவனின் கற்பனைகளை எப்போதும் உடைத்தெறிந்து வேறு ஒரு பிம்பமாக முழுமையாக அவனை ஆகர்ஷித்து கொள்பவள் இன்றும் அப்படியே காட்சி கொடுத்தாள்.

                   தந்தையே என்றாலும் அவரின் தவறுகளை தயங்காமல் சுட்டி காட்டி, சிற்றன்னைக்கும் நியாயம் பேசுபவள் அந்த நிமிடம் தேவதையாகவே தெரிந்தாள் ரகுவுக்கு.. அவளை தன் அணைப்பில் வைத்திருந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு “பாட்டி பாவம் தேவா.. பேசிடு..” என்றுவிட

                  “நாளைக்கு பேசறேன்..” என்று முடித்துக் கொண்டாள்.. ரகுவும் அதற்குமேல் அவளை வற்புறுத்தவில்லை.. அவளை பற்றி நன்கு தெரிந்தவன் என்பதால் நிச்சயம் அவளே பேசிவிடுவாள் என்று தோன்ற, அமைதியாக விட்டுவிட்டான்.

                 நந்தனாவுக்கு அந்த அமைதி பிடிக்காமல் போக, “நாளைக்கு பேசறேங்க..” என்று மீண்டும் அவன் முகம் பார்த்து சொல்ல, “ஹேய்.. கோபம் இல்லடா.. வேற ஏதோ யோசனை… ” என்று ரகு அவள் தலையில் தட்ட

              “என்னோட இருக்கீங்க.. வேற என்ன யோசனை..” என்று அவள் முறைக்க

              “இந்த நந்தனாவை பத்திதான் யோசிச்சேன்..” என்று கூறிவிட்டான் ரகு..

            “என்ன யோசிச்சீங்க..” என்று நந்தனா அவளாகவே வந்து சிக்க,

             “என்ன யோசிப்பேன்.. இன்னிக்கு இந்த நந்தனா பொண்ணை எப்படி வெட்கப்பட வைக்கலாம் ன்னு தான்… என்னென்ன செய்யலாம்….” என்று அவளிடமே அவன் கேட்க

              “சஞ்சய் இருக்கான்..” என்று கையை நீட்டி அவள் மிரட்ட, “அவன் தூங்கிட்டான்.. நீ என்னை தூங்க வை.. விட்டுடறேன்..” என்று நெருங்கியவன் அவளை அப்படியே அந்த வெறும் தரையில் சாய்த்துவிட, அவனும் அவள்மேல் படர்ந்திருந்தான்.

             அவன் கைகள் அவள் இடையிலும், அதற்கு மேலான பகுதிகளிலும் கூட சுதந்திரமாக வலம் வர, நந்தனா  மூச்சு முட்டும் அவஸ்தையை முதல் முறை போலவே அனுபவித்துக் கொண்டிருந்தாள்.. ரகு அவள் முகத்தை பார்த்தவன் மூடி இருந்த அவள் இமைகளை மெல்ல தன் இதழ்களால் ஈரமாக்க, மெல்ல அவள் கண்களை திறந்த நிமிடம் “கிஸ் மீ நந்தும்மா…” என்று தன் இதழ்களை அவள் இதழ்களிடம் அவன் நகர்த்த, மறுப்பாக தலையசைத்தவள் வேகமாக கண்களை மூடிக் கொள்ள

                சிரித்துக் கொண்டே அவள் இடையில் அவன் கூச்சம் ஊட்ட, “ரகு…ரகு கூசுது விடுங்க..” என்று அவன் கைகளில் துள்ளினாள் தேவா..

                   “அப்போ ஒரே ஒரு கிஸ், நீயா கொடு..” என்று அவன் பேரம் பேச, “ரகு கூச்சமா இருக்கு..” என்று அழுது விடுபவள் போல் அவள் முகத்தை வைத்துக்கொள்ள

                  “ஹேய்.. நான் என்ன அடுத்தவன் பொண்டாட்டி கிட்டயா கிஸ் கேட்கிறேன்… என் பொண்டாட்டிடி நீ.. ஒரே ஒரு கிஸ் தான.. ப்ளீஸ்டா..” என்று அவன் கெஞ்சலில் இறங்கினான்.

                  “ஓஹ்.. சார்க்கு அடுத்தவன் பொண்டாட்டிகிட்ட கேட்கிற ஐடியா வேற வருதா..” என்று அவனை முறைத்தவள் கீழே தள்ளிவிட, அவள் பக்கத்தில் விழுந்தவன் அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.

                 சற்றே நெளிந்து முழுவதுமாக தன் மீது அவள் இருக்குமாறு செய்தவன் கால்களாலும், இரு கைகளாலும் அவளை இறுக்கி கொள்ள, மொத்தமாக அவன் மீது உரசிக் கொண்டிருந்தாள் அவள்… ஆனால் அப்போதும் அவனை முறைக்க, அழகாக கண்சிமிட்டியவன் இதழ்களை குவித்து கண்களை சுருக்கி கெஞ்ச, அந்த நொடிநேர சேட்டையில் சொக்கித்தான் போனாள் அவள்..

                   அவன் முகம் மட்டுமே நினைவில் இருக்க, தன்னை மறந்த நிலையில் அவன் இதழ்களை நெருங்கியவள் அவன் கழுத்தில் கையை கொடுத்து அவனை தன்னுடன் சேர்த்துக் கொண்டுஅவன் இதழ்களை லேசாக தீண்டினாள்..

                      அந்த ஒற்றை தீண்டலுக்கே ரகுவின் உடலில் இருந்த மொத்த செல்களும் உயிர்பெற, சட்டென்று விலக நினைத்தவளை சத்தமே இல்லாத முத்தத்துடன் மீண்டும் நினைவிழக்க செய்தான் ரகு.. அவர்களின் அந்த இதழ் யுத்தம், வெகுநேரம் நீடிக்க, யுத்தத்தை முடிக்கும் எண்ணம் இல்லாதவன் அவன் உடலின் பிற பிரதேசங்களிலும் யுத்தம் செய்தான்.. ஆம் அந்த கோபக்காரன் அன்று வலிக்க வலிக்க யுத்தம் தான் செய்தான்….

                                                    அடுத்த நாள் காலை சஞ்சய்யின் மெல்லிய சிணுங்கலுடன் அழகாகவே விடிந்தது தேவாவுக்கு.. ரகு அறையில் இல்லாமல் போக, தேவா சஞ்சய்யின் அருகில் படுத்திருந்தாள். அவளுக்கு நேற்று கீழே படுத்திருந்தது தான் நினைவில் இருந்தது.. ரகுதான் தூக்கி படுக்க வைத்திருப்பான் என்று நினைத்தவளுக்கு அழகாக ஒரு வெட்கம் வேறு…

                  சஞ்சய்யை தூக்கி கொண்டு அவள் கீழே இறங்க, அவர்களின் தினசரி அலுவல்கள் தொடர்ந்தது.. அன்று காலை ஒரு பதினோரு மணி அளவில் முத்து மாணிக்கம் வீட்டிற்கு வர, வேலுமாணிக்கமும் ரகுவுடன் வந்து சேர்ந்தார்.. என்ன என்பது போல் பார்வதி பார்க்க “சிதம்பரம் வர்றேன் ன்னு சொல்லி இருக்காரு பார்வதி.. அதான் வீட்ல இருக்கணுமில்ல..” என்று பதில் கொடுத்தார் முத்து மாணிக்கம்.

                    இவர்கள் வந்த சிறிது நேரத்தில் சிதம்பரம் மனைவி கனகா மற்றும் அவர் மகள் சஞ்சனாவுடன் வர, சஞ்சனாவின் முகமே சரியில்லை.. இன்னமும் சந்திரன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.. அவள் முகமே சற்று வீக்கம் கண்டிருக்க, நேற்று சந்திரன் அடித்ததால் தானோ,என்று நினைத்தவர்கள் அவள் குடும்பத்தினர் என்னபேச போகிறார்களோ என்று பார்க்க, சிதம்பரத்தின் பார்வை தேவாவிடம் இருந்த தன் பேரனின் மீது தான் இருந்தது..

                   இவர்கள் வந்து பத்து நிமிடங்கள் முடிந்திருக்க,இன்னும் தாயை திரும்பிக் கூட பார்க்கவில்லை மகன்.. தங்களிடமும் பாசமாக அவன் நெருங்கவில்லை என்பது கசப்பாக இருக்க முத்து மாணிக்கத்திடம் “மன்னிச்சிடுங்க சம்பந்தி..” என்று வருந்திய குரலில் கேட்டேவிட்டார்..

                  மாணிக்கம் பதறி போனவராக “என்ன சிதம்பரம் நீ..புருஷன் பொண்டாட்டி சண்டை.. நானும் வீட்ல இல்ல.. அவன் கையை நீட்டவும், இந்த புள்ள கோபத்துல கிளம்பி வந்துட்டு இருக்கு.. இதுல நீ மன்னிப்பு கேட்க என்ன இருக்கு.. ஏன் நீ கலங்கி போற…”  என்று ஆறுதல் கூறினார்..

               சிதம்பரத்திற்கு இப்போது தான் மனிதர்களின் குணம் புரிபட ஆரம்பித்திருக்க, “இல்ல சம்பந்தி.. இதுவரைக்கும் மகள் பேச்சை கேட்டு, எத்தனையோ முறை உங்ககிட்ட சண்டைக்கு நின்னு இருக்கேன்.. ஏன் கடைசியா கூட, சின்னமாப்பிளை மேல கையை வைக்க பார்த்தேனே..”

                “ஆனா.. இப்போ பாருங்க.. பெத்தவ என் பேரனை கண்டுக்காம கிளம்பி வந்துட்டாலும், சின்னவன் பொண்டாட்டி தானே பார்த்துட்டு இருக்கா.. நானாக வந்து இத்தனை நேரத்துக்கும் பிள்ளையை கையில வாங்கணும் ன்னு என் மகளுக்கு தோணல பார்த்திங்களா.. அதான் அவளோட வளர்ப்பு… நான் தவறிட்டேன் சம்பந்தி.. என்னை மன்னிச்சிடுங்க..” என்றவர் தேவாவிடம் “உன்னையும் அன்னைக்கு நிறைய பேசிட்டேன்.. மன்னிச்சுடும்மா..” என்று மனதார மன்னிப்பு கேட்க

                “ஐயோ.. அதெல்லாம் வேண்டாங்க.. மன்னிப்பு எல்லாம் சொல்லாதீங்க..” என்று பதறி போனாள் தேவா..  வேலு மாணிக்கம் “அட.. விடு மச்சான்.. பொம்பளைங்க வாய்க்கு நீ என்ன செய்வ.. பொண்ணை விடத்தான வந்த விட்டுட்டு கெளம்பு… எதுக்கு ஆகாத பேச்செல்லாம் பேசி சங்கடப்படற.. உன் தங்கச்சியை விடவா உன் பொண்ணு.. அவளையே இத்தனை வருஷம் நான் சமாளிக்கலையா…

                “அது போலத்தான்.. என் மகன் உன் பொண்ணை சமாளிச்சிடுவான்.. நீ கிளம்பு..” என்றுவிட, பிரசன்னாவும், வானதியும் பக்கென்று சிரித்துவிட,சங்கரி உக்கிரமாக தன் கணவரை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்…

                                   வேலு மாணிக்கம் அவரை கண்டு கொள்ளாதவர் போல, சிதம்பரத்திடம் பேசிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் தான் சந்திரன் வந்து சேர்ந்தான்.

                      வந்தவன் மனைவியின்  திரும்பாமல் “வாங்க மாமா..” என்று அழைத்து விட்டு தம்பியின் அருகில் நின்றுவிட, சிதம்பரம் அவனையே பார்த்தவர் “என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள.. ஆனா  இவ விஷயத்துல இனி நீங்க எடுக்கறது தான் முடிவு.. நான் எதுக்கும் தலையிடமாட்டேன்.. நீங்க முடிஞ்சா பாருங்க.. இல்ல அத்து விடுங்க மாப்பிளை..”

                      “நானே நல்லா பொண்ணா பார்க்கிறேன்..” என்று கூற, வேலு மீண்டும் “என் மாமனாரும் இருந்தாரே.. ஒருநாளும் இப்படி நல்ல வார்த்தை பேசி இருப்பாரா..” என்று மீண்டும் வருத்தப்பட, கையில் இருந்த சொம்பை நங்கென்று கீழே போட்டுவிட்டு நகர்ந்து கொண்டார் சங்கரி…

                    சஞ்சனா தந்தையின் வார்த்தைகளில் கலங்கி போனவளாக நிற்க, கணவனின் பாராமுகம் அப்போதுதான் பாதித்தது அவளை.. இந்த நிமிடம் வரை தன்னை நெருங்காமல் தேவாவிடம் ஒட்டிக் கொண்டிருந்த சஞ்சய் கண்களில்பட, நேற்று தந்தை அடித்ததும் இப்போது நினைவில் வந்தது..

                  ஆம்.. நேற்று மகள் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க, எதுவுமே கேட்காமல் மகளை ஒரு அரை விட்டிருந்தார் சிதம்பரம். காயம்பட்ட குழந்தையை விட்டு விட்டு இவள் தனித்து வந்தது அவருக்கு அப்படி ஒரு கோபத்தை கொடுத்திருக்க, நேற்று மகளிடம் எதுவுமே பேசி இருக்காதவர், காலை விடிந்ததும் இங்கே அழைத்து வந்து விட்டிருந்தார்..

                     தந்தை உடன் இருக்கிறார் என்ற தைரியம் ஆட்டம் கண்டிருக்க, தன் கணவனையும், மகனையும் நினைத்து கலங்கி நின்றாள் அவள்… ஆனால் அப்பொதும் அவள் தன் தவறை உணரவே இல்லை என்பதே நிதர்சனம். சிலர் இப்படித்தான்.. என்ன முயன்றாலும், பிறவிக்குணம் என்று ஒன்று இருக்குமல்லவா…

Advertisement