Advertisement

வண்டியை ஓரமாக நிறுத்தி அவர்கள் இறங்க, நான்கு பேரும் மாட்டிக் கொண்டவர்களாக முழித்துக் கொண்டே நிற்க, சஞ்சய் விளையாட்டில் இருந்தவன் அந்த பானையில் இருந்த கரியை மீண்டும் தன் அத்தையை போலவே கையில் பூசி கொள்ள, “டேய்..என்னடா செஞ்சு வச்சிருக்கீங்க என் பிள்ளையை..” என்று பதறிப் போனவனாக அவனை கையில் ஏந்திக் கொண்டான் சந்திரன்…

                   சஞ்சய் தந்தையின் கைகளில் இருந்தவன் தன் அத்தை செய்தது போலவே கையில் இருந்த கரியை சந்திரனின் முகத்தில் பூசிவிட்டு, தேவாவை பார்த்து கிளுக்கி சிரிக்க, சிரிப்பு பொங்கியது அவளுக்கு.. “டேய்.. என்னடா பண்ற.. சஞ்சு.” என்று கத்திக் கொண்டே சந்திரன் அவனை இறக்கிவிட, அடுத்ததாக ரகுவின் அருகில் சென்றான் சஞ்சய்…

                     ரகு வேகமாக பின்னால் இரண்டடி நகர, சஞ்சய்க்கு அந்த விளையாட்டு பிடித்து போனது.. மீண்டும் அவனை பயபடுத்துவது போல அவன் நெருங்க, ரகு பயந்து விட்டவன் போல் “சஞ்சு.. ரகுப்பா பாவம்.. தேவா.. தேவா பிடி..” என்று விட, தேவாவிடம் அவன் கவனம் திரும்பியது..

                     தேவா அலட்டிக் கொள்ளாமல் அவன் உயரத்திற்கு மண்டியிட, தன் கையிலிருந்த கரியை தேவாவின் முகத்தில் பூசியவன் மீண்டும் சிரிக்க, தேவா தன் கன்னத்தை அவன் கன்னத்தோடு ஒட்டி வைத்துக் கொண்டு அவளும் சிரிக்க, அழகாக அதை படமாக்கி கொண்டான் ரகு..

                                   சந்திரன் “எப்போடா வந்திங்க… இப்படி நின்னுட்டு இருக்கீங்க…” என்று கேட்க

                   ரகு தன் தம்பியை பார்த்தவன் “நீ பம்மிகிட்டே கிளம்பும் போதே ஏதோ திருட்டுத்தனம் பண்றிங்க ன்னு தான் நெனச்சேன்… எப்பவும் நீங்க ரெண்டு பேரும் தான மாட்டுவீங்க.. இப்போ இவர்களையும் சேர்த்து கெடுக்க ஆரம்பிச்சாச்சா..” என்று ரகு தேவாவையும், காவிரியையும் காட்டி கேட்க

                    “ஒரு வேலையை ஒழுங்கா செய்யமாட்டியாடா நீ..”என்பது போல் அவனை முறைத்தாள் வானதி…

                பிரசன்னா திருட்டு முழி முழித்தவன் “நாங்க சின்னபிள்ளைங்க.. விளையாட வந்தோம்.. நீங்க ரெண்டு பெரும் ஏன் வந்திங்க..” என்று சவடாலாக கேட்க

                “மாமரத்துக்கு உரம் வைக்கணும்.. அதுக்கு ஆள் பார்க்க தான் இந்த பக்கம் வந்தோம்…” என்று சந்திரன் பதில் சொல்ல,

               “அதை பார்க்காம இங்கே ஏன்யா வந்திங்க.. கிளம்புங்க.. கிளம்புங்க..” என்று அவர்களை துரத்திவிடுவது போல் விரட்டினான் பிரசன்னா…

                   வானதி “அண்ணே.. சாப்பிட்டு போவோம் இரு..எங்களோடவே சாப்பிடுங்க ரெண்டு பேரும்..” என்று சற்று தள்ளி இருந்த பம்பு செட்டில் முகம் கழுவ சென்றாள்.. தேவாவும், காவேரியும் அவளோடு செல்ல,

                   “பார்த்துட்டே இருந்தா… போய் இலையை எடுத்துட்டு வாங்க ரெண்டு பேரும்…” என்று பிரசன்னா நக்கலாக கூற

                 “ஏன் சார் அதை கூட செய்யமாட்டீங்களா.. போய் எடுத்துட்டு வாடா..” என்று ரகு அவனை முறைத்து நின்றான்…

                   “நான் ஏற்கனவே நிறைய வேலை செஞ்சுட்டேன்… கடையில இருந்து எல்லாம் கொண்டு வந்து வேற கொடுத்திருக்கேன்.. சோறு வேணும்ன்னா போய் இலையை எடுத்துட்டு வாங்க..” என்று கூறியவன் அங்கேயே அமர்ந்துவிட, “சரி.. நான் சித்தப்பாக்கு போன் போடறேன்.. கடையில் இருந்த நிறைய பொருள் காணும்.. பிரசன்னா அவன் சிநேகிதனுங்களோட வந்து எடுத்திட்டு போயிருக்கான் சொல்லிடறேன்..” என்று அவன் மொபைலை எடுக்க

             “நான் போய்ட்டேன்..” என்று ஒடினான் பிரசன்னா.. பின்னே அவன் தந்தையிடம் யார் பாட்டு வாங்குவது.. அடுத்த சில நொடிகளில் அவன் இலையுடன் வர, அங்கே விருந்து களை கட்டியது. வட்டமாக அமர்ந்து கொண்டவர்கள் தாங்களே பரிமாறிக் கொண்டு உன்ன ஆரம்பிக்க, சஞ்சய் தேவாவிடம் இருந்தான்..

                அந்த உணவின் சுவை அலாதியாக இருக்க, “சூப்பரா இருக்கு வனி.. “என்று சப்பு கொட்டினாள் தேவா…சஞ்சய்க்கு வெறும் மீனை மட்டும் உதிர்த்து தேவா கொடுக்க, அவனும் தன் விரல்களில் பாதி, தேவாவின் மேல் மீதி என பூசிக் கொண்டே உண்டு முடித்து அனைவரும் கிளம்ப

             இப்போதும் வானதியே வண்டியை எடுக்க, அவளின் பின்னால் காவேரி. ரகு இவ எப்படி வருவா?? என்று பார்க்கும்போதே சஞ்சய்யை தூக்கி காவேரியின் பின்னால் நிறுத்த அவன் அவளின் கழுத்தை கட்டிக் கொள்ளவும், அவனுக்கு பின்னால் தேவா..

                  ரகு பதட்டமாக “ஏய்.. என்னடி பண்ற… எப்படி நாலு பேர் வருவீங்க இந்த வண்டில… பிரசன்னாவோட ஒருத்தர் வர வேண்டியது தானே…” என்று கேட்க

               தேவா வண்டியில் இருந்து இறங்க, சஞ்சய் காவேரியின் கழுத்தை கட்டிக் கொண்டே, தேவாவிடம் கையை நீட்டியழ “வரும்போதே இப்படித்தான் வந்தோம் அண்ணா. நாங்க வந்திடுவோம்.. நீங்க கிளம்புங்க..” என்றாள் காவேரி..

                   தேவா மீண்டும் வண்டியில் அமர்ந்து கொள்ள,  வண்டி கிளம்பியது… நால்வரும் சிரித்துக் கொண்டே வர, அவர்களை தொடர்ந்து வந்த ரகுவுக்கும், சந்திரனுக்கும் தான் பதட்டமாக இருந்தது.. பிரசன்னா இதை ஏற்கனவே நிறைய முறை பார்த்திருப்பதால் அலட்டிக் கொள்ளவில்லை..

                                                ஒரு வழியாக வீடு வந்து சேர, தன் வண்டியில் முன்னால் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் சந்திரன்.. சங்கரி இவர்களை ஒன்றாக பார்த்தவர் “எங்கே போயிருந்திங்க நாலு பேரும்.. காலையில போயிட்டு இப்போ வர்றிங்க.. ரகுவும், சந்திரனும் வேற கூட்டிட்டு வர்றாங்க… எங்கே போனீங்க..” என்று வினவ

                  ” நல்லா கேளுங்க சித்தி.. நாலு பேரும் தோட்டத்துல ஒரே ஆட்டம்.. கூடவே இந்த குட்டி வாண்டு வேற… நாங்க பார்க்கவும் அதட்டி கூட்டிட்டு வர்றோம்..” என்று ரகு கோர்த்து விட, சங்கரி அவர்களை முறைக்க தொடங்கினார்..

                 சந்திரன் இடையிட்டு “விடுங்க சித்தி.. நம்ம தோட்டத்துல தானே இருந்தாங்க.. ” என்று கூறி, அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

                தேவா குளித்து முடித்து கிழிறங்கியவள் பார்வதியிடம் சென்று அமர்ந்து கொள்ள, சந்திரன் அப்போது அவர்களிடம் வந்தவன் தன் கையில் இருந்த பையை தேவாவிடம் கொடுத்தான். தேவா என்ன என்பது போல் பார்க்க “வாங்கிக்கோ..” என்றான்..

               கையில் வாங்கி கொண்டவள் பையை பிரித்து பார்க்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை.. உள்ளே கட்டுகளாக பணம் தான் என்று தெரிந்து விட, கேள்வியாக அவனை பார்த்தாள்… “அந்த நிலத்து சொந்தக்காரர் நேத்து வந்து பேசி இருந்தார்.. அடுத்த வாரமே கிரயம் முடிச்சுக்கலாம் ன்னு சொல்லிட்டாரு. அதான் நான் கொடுக்கறதா சொன்ன பணத்தை பேங்க்ல இருந்து எடுத்துட்டு வந்துட்டேன்..” என்று சிரிப்புடன் கூற

               “என்கிட்டே ஏன் கொடுக்கறீங்க.. மாமாகிட்ட..” என்று அவள் இழுக்கும்போதே

             “உன் மாமாதான் உன்கிட்ட கொடுக்க சொன்னாங்க..” என்று முடித்தவன் சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டான்.. பத்து லட்சம் பணம் நிச்சயம் பெரிய தொகை தான்.. ஒன்றுமே கேட்காமல் தன்னிடம் கொடுத்து விட்டு செல்பவனை அதிசயமாக பார்த்திருந்தாள் தேவா..

                  அவள் பணத்தை பார்வதியிடம்  கொடுக்க “நீயே வை தேவா..” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்து விட்டார் பார்வதி… அன்றிரவு ரகுவும் தன் அண்ணனை போலவே ஒரு பையை எடுத்து வந்தவன் தன் தாயிடம் கொடுக்க, பார்வதி அதையும் தன் மருமகளிடம் கொடுத்து விட்டார்.

                 அடுத்த ஒரு வாரத்தில் தன் குடுபத்தினருடன் சென்று ஒருமுறை நிலத்தை பார்வையிட்டு வர, அடுத்த இரண்டு நாட்களில் மொத்த பணத்தையும் கொடுத்து நிலத்தை வாங்கி கொண்டனர்.. சஞ்சனாவுக்கு நடக்கும் விஷ்யங்களைப்படி ஒரு வயிற்றெரிச்சலை கொடுக்க, தன் அத்தையும் அமைதியாக இருப்பது இன்னமும் பற்றிக் கொண்டு தான் வந்தது.

             குடும்பத்தில் அத்தனை பேரும் மகிழ்ச்சியுடன் இருக்க, அவள் ஒருத்தி மட்டும் தனியாக நின்றாள். மனம் முழுவதும் பணத்தின் மீதே இருக்க, அன்று மாலை வேளையில் சஞ்சய் அவள் கையில் இருக்க, அவனுக்கு கொடுக்க வைத்திருந்த சத்து மாவு கஞ்சியை அவளிடம் கொடுத்துக் கொடுக்க சொல்லி இருந்தார் பார்வதி..

                  தேவா பூவை தொடுத்துக் கொண்டே சற்று தள்ளி அமர்ந்திருக்க, சஞ்சய் அவளிடம் போக முற்பட்டு சஞ்சனாவின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருந்தான்.. தேவா அவனை பார்த்து சிரித்தாளே தவிர, அவனை தூக்க முற்படவில்லை.. எப்போதுமே சஞ்சனா இருந்தால் பெரிதாக சஞ்சையுடன் ஓட்டமாட்டாள்..

                 இன்றும் அப்படியே அவள் இருக்க, கஞ்சியை ஆற்றி கொண்டிருந்தவள் சஞ்சய்யை ஒரு கையில் பிடித்திருக்க, அவன் கையை வீசியதில் அந்த கஞ்சி கிண்ணம் மொத்தமாக அவள் சேலையிலும், சஞ்சயின் வயிற்று பகுதியிலும் கொட்டிவிட, வலியில் துடிக்க ஆரம்பித்திருந்தான் குழந்தை..

                  தேவா வேகமாக நெருங்கியவள் குழந்தையை தூக்கி கொண்டாள்.. அருகில் இருந்த தண்ணீரை அவன் மீது ஊற்றியவள் அவன் வயிற்று பகுதியை சோதித்து கொண்டிருக்க, சந்திரன் அறையில் இருந்து வந்தவன் சஞ்சனாவை ஒரு அரை விட்டிருந்தான்..

                அவன் அடித்ததில் அவள் கீழே விழுந்திருக்க, அழுது கொண்டிருக்கும் பிள்ளையை பற்றி கூட யோசிக்காமல் தன்னை அடித்த கணவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. பார்வதி இதற்குள் எண்ணெயை எடுத்து வந்திருக்க, சஞ்சய்யின் வயிற்று பகுதியில் தடவிவிட, பெரிதாக காயம் இல்லை..

                ஆனால் எரிச்சலில் குழந்தை அழுது கொண்டே இருக்க, இங்கு சஞ்சனா தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தாள். தேவாவின் கையில் இருந்த பிள்ளையை அவள் வாங்க முற்பட, இன்னமும் பயந்து அழுதான் அவன்..

               சந்திரன் மீண்டும் ஒன்று வைத்தவன் அவளை தூரமாக நிறுத்த, அழுது கொண்டே தன் பிறந்த வீட்டிற்கு கிளம்பி இருந்தாள் அவள்..

Advertisement