Advertisement

காதல் தருவாயா காரிகையே 26

நள்ளிரவு நேரத்தில் ரகுவும் நந்தனாவும் வீட்டிற்கு வந்து சேர, இன்னும் யாரும் உறங்க சென்றிருக்க வில்லை. முத்து மாணிக்கத்தின் மொத்த குடும்பமும் அந்த வீட்டின் முற்றத்தில் அமர்ந்து இவர்களுக்காக காத்திருக்க, இருவரும் வந்து சேரவும் அவசரமாக தன் மருமகளின் முகத்தை தான் ஆராய்ந்தனர் மாமன்கள் இருவரும்..

நன்கு அழுதிருக்கிறாள் என்பது அவள் முகத்திலேயே தெரிய, பார்வதி அவளை நெருங்கவும் தானாகவே அவரிடம் ஒண்டிக் கொண்டவள் மீண்டும் அழுகையை தொடங்க, பார்வதி அவள் முதுகில் தட்டி கொடுத்தவர் “ஒன்னும் இல்லடா… என்ன ஆகிடுச்சு ன்னு இப்போ அழுதுட்டு இருக்க.. நாங்க இத்தனை பேர் இருக்கோம்டா உனக்கு… அவ ஏமாத்திட்டா எல்லாம் முடிஞ்சிடுமா.. விட்டுடு தேவாம்மா.. சும்மா அதையே யோசிக்காத..” என்று ஆறுதல் கூற

“இப்படி நீ கஷ்டப்படக் கூடாது ன்னு தான் உன்கிட்ட எதுவுமே சொல்லாம இருந்தோம் தேவா… நீயும், ரகுவும் சண்டை போட்டுக்க போறீங்க ன்னு இவ மொத்தத்தையும் சொல்லி வச்சிட்டா.. இது எதுவுமே உனக்கு தெரியாது நினைச்சுக்கோடா… எதையும் யோசிக்காத..” என்று முத்து மாணிக்கம் ஆதுரமாக அவள் தலையை தடவி கொடுக்க,

“என்மேல உங்களுக்கு கோபமே இல்லையா மாமா…” என்று கண்ணீருடன் கேட்டு விட்டாள் தேவா.. இவர்கள் காட்டும் பாசம் அவளுக்கு சுமக்க முடியாமல் போக, தாயின் சுயநலம் அவளை குற்றுயிராக்க துடித்துக் கொண்டிருந்தது… ஆனால் தன் மருமகளை அப்படி விட்டு விடுவார்களா முத்துவும், வேலுவும்…

“நீ என்னடா தப்பு செஞ்ச… உன் அம்மா மேல கூட எங்களுக்கு எந்த கோபமும் கிடையாது..அவ நல்லா இருந்தா போதும் தான் நினைச்சோம்.. அவளும் இந்த வீட்ல இருந்த வரைக்கும் எங்க மேல பாசமா இருந்தவ தானே… அவ சூழ்நிலை அவ அப்படி மாறிட்டா.. யாரை சொல்லி என்ன செய்ய முடியும்…இதுல நீ எங்கேயுமே இல்ல தேவாம்மா.. நீ எங்க மருமகடா.. எங்களோட ரத்தம்..” என்று உணர்ச்சி பெருக்குடன் வேலுமாணிக்கம் சொல்ல

“அவளே நொந்து போய் அழுதுட்டு இருக்கா.. நீங்க வேற கூட சேர்ந்து அழுவீங்களா… தள்ளி போங்க..” என்று சங்கரி தன் கணவரை தூர நிறுத்தினார்..

“நீ புத்திசாலி தேவா… இதெல்லாம் இப்போவாவது தெரிஞ்சதே ன்னு சந்தோஷப்பட்டுக்கோ… சும்மா அதையே பேசி பேசி, உன்னையே காயப்படுத்திகிட்டு அழுதுட்டே இருக்க கூடாது… எல்லாத்தையும் தூக்கி போடு.. “

“இப்போ என்ன பேசினாலும் அழுதுட்டே தான் இருப்ப.. போய் படு.. காலையில சீக்கிரம் எழுந்துக்கணும் இல்ல.. அமைதியா தூங்கு.. நீ அழுதா உன் மாமன்களுக்கு தாங்காது.. அதை மட்டும் மனசுல இருத்திக்கோ.. போ…” என்று அவளை விரட்டியவர் வானதி கொண்டு வந்த பாலை குடிக்க கொடுத்து அவளை அறைக்கு அனுப்பி வைத்து விட்டார்.

அடுத்து வந்த ஒரு வாரமும் அந்த குடும்பம் தேவாவை மொத்தமாக தாங்கி கொள்ள, பழைய விஷயங்களை நினைக்க கூட விடவில்லை அவளை. எந்நேரமும் யாராவது அவளோடு சுற்றிக் கொண்டே இருக்க, காவேரி கூட அவளுடன் கோவில், கடைக்கு என்று வெளியே சுற்றிவர தொடங்கி இருந்தாள்.

வானதியை மட்டுமே உடன் அழைத்துக் கொண்டு சுற்றி வருபவள் இப்போது காவிரியையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள ஒரு வண்டியில் மூன்று பேர் தான் எப்போதும்… இதில் கிளம்பும் நேரம் சஞ்சய் கண்ணில் பட்டுவிட்டால் அவனும் சேர்ந்து கொள்ள, அந்த ஒற்றை டியோ இவர்களிடம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது..

அன்றும் அப்படிதான்… பெண்கள் மூவரும் ஊருக்கு சற்று தள்ளி இருந்த அவர்களின் பம்பு செட்டுக்கு வண்டியில் புறப்பட, இன்று வானதி தான் டிரைவர்..  அவர்கள் கிளம்பும் நேரம் தேவாவை பார்த்துவிட்ட சஞ்சய், கண்களை மூடி திறந்து, கசக்கி அழுகை என்ற பெயரில் ஏதோ செய்து தேவாவை நகர விடாமல் அவள் கால்களை கட்டிக் கொண்டான்..

தேவா குழந்தையை அழவைக்க விரும்பாமல் அவனையும் தூக்கி கொண்டு வர, வானதியின் கால் இடைவெளியில் நிற்காமல் ஒரே அடம் அவன்.. வானதியின் பின்னால் காவேரி அமர்ந்திருக்க, தேவா சஞ்சய்யை அவளுக்கு பின்னால் நிறுத்தவும் பல்லி போல் அவள் முதுகில் ஒட்டிக் கொண்டவன் தேவாவையும் விடாமல் கையை நீட்டி பிடிக்க, “அட.. என் செல்லக்குட்டி.. சமத்துடா நீ..” என்று கொஞ்சலுடன் அவள் பின்னால் அமர்ந்து கொள்ள, நால்வர் படை அவர்களின் தோட்டத்துக்கு புறப்பட்டது..

வானதியும், காவேரியும் கூட்டாஞ்சோறு செய்து விளையாடுவோம் என்று தேவாவிடம் சொல்லி இருக்க, “எப்படி விளையாடுவீங்க..” என்று புரியாமல் அவர்களை கேட்டிருந்தாள் தேவா. அவளை வேற்றுகிரக வாசியை போல் பார்த்தவர்கள் செய்முறை விளக்கம் கொடுப்பதற்காக அவளை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்…

அங்கே மோட்டார் அறையில் இருந்த இவர்களின் பொக்கிஷங்களை வானதியும், காவேரியும் எடுத்து வந்து தேவாவிடம் காட்ட, அந்த மண்பானை, சட்டி தட்டு, மரக்கரண்டி இன்னும் சில பொருட்களை அதிசயமாக பார்த்தாள் தேவா…

கூடவே சிறு சிறு டப்பாக்களில் உப்பு, மிளகாய் தூள், புளி, கடுகு, சீரகம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டும் இருக்க, “இதை வச்சு எப்படி கூட்டாஞ்சோறு செய்விங்க…” என்று நக்கலாக தேவா வினவ

“இதை வச்சு செய்ய முடியும் ன்னு நாங்க சொன்னோமா.. நம்ம அடிமையை ஏற்கனவே கடைக்கு அனுப்பிட்டேன்.. அவன் தேவையான எல்லா பொருளையும் சரியா சுட்டுட்டு வந்திருவான்… அவன் நமக்காகவே படைக்கப்பட்ட சீனி பூதம்…” என்று வானதி பாவனையாக கூற

பின்னாலிருந்து அவள் தலையில் கொட்டினான் பிரசன்னா… “பாவமாச்சே ன்னு அண்ணனை சமாளிச்சு பொருள் எல்லாம் கொண்டு வந்தா, நான் பூதமா… பிசாசே நீதாண்டி குட்டி பிசாசு..” என்று இன்னும் இரண்டு அடி வைக்க

“பார்த்திங்களா அண்ணி.. நினைச்சவுடனே வந்து குதிச்சிட்டான், நம்ம சீனியோட பவர் அப்படி.. அப்படியே சீனி இந்த பாத்திரம் எல்லாம் கழுவி கொண்டு வந்திடு..” என்று அவள் மேலும் வாய்பேச, பிரசன்னா அடிக்க வரவும் சட்டென அவள் விலகி ஓட, அவளை துரத்த தொடங்கினான் பிரசன்னா..

சஞ்சய்யும் சிரித்துக் கொண்டே “பிதி.. பிதி…” என்று மழலையாக அவர்களை பிடிப்பது போல் ஓட, தேவா சஞ்சய்யின் பின்னால் ஓடவும் அப்படி ஒரு சிரிப்பு அவனுக்கு… காவேரி சிரித்துக் கொண்டு நிற்க, வானதி அவள் அருகில் வந்தவள் அவள் கையை பிடித்துக் கொண்டு ஓட, “ஏய்.. விடுடி.. ” என்று அலறி கொண்டே அவளுடன் ஓடினாள் காவேரி…

ஒருவழியாக ஆடிக் களைத்தவர்கள் அந்த பாத்திரங்களை கழுவி எடுத்து வர, பிரசன்னா தூரத்தில் இருந்த கற்களை கொண்டு வர, கற்களை வைத்தே அடுப்பு மூட்டி சமையலை தொடங்கி இருந்தனர் மூவரும்.. தேவா அவர்கள் சொல்லும் வேலையை செய்து கொண்டிருந்தவள் அவளும் சிறுபிள்ளையாகவே மாறி கொட்டமடித்துக் கொண்டிருந்தாள்…

பிரசன்னா சஞ்சய்யை வைத்துக் கொண்டு அமர்ந்து விட, அவனோ வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்த தேவாவின் கழுத்தை விடாமல் கட்டி கொள்ள, கண் எரிச்சலில் அழ ஆரம்பித்தான்.. பிரசன்னா தூக்கியும் வர மறுத்தவன் தேவாவையும் விடாமல் அழுது கொண்டிருக்க,

“அடேய்.. உன் அலப்பறை ஓவரா போயிட்டு இருக்குடா… அண்ணி வர்றதுக்கு முன்னாடி முழு நேரமும் என்னோட தான இருப்ப.. இப்போ என்ன.. வாடா..” என்று இழுக்க, இன்னும் அழுகை கூடியது.. வானதி வெங்காயத்தை கையில் வாங்கி கொண்டவள் சற்று தள்ளி உட்கார்ந்து வெங்காயத்தை வெட்ட தொடங்க, காவேரி பிரசன்னா எடுத்து வந்திருந்த பிஸ்கட்டை கொடுக்கவும் சஞ்சய் அழுகையை நிறுத்தி மீண்டும் விளையாட ஆரம்பித்தான்…

பிரசன்னா மீன் வாங்கி வந்திருக்க, தேவாவை சஞ்சய் விடாததால் வானதியே சமைத்து விட்டாள்.. காவேரியும் உடன் இருக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் மீன்குழம்பு, மீன் வறுவல், சாதம் என்று அனைத்தும் தயாராகி விட,வானதியும், காவேரியும் முகத்தில் அங்கங்கே கரியை பூசிக் கொண்டு நிற்க, தேவா அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

பிரசன்னா வேறு “இப்போதான் ரெண்டு பெரும் ஒரிஜினலா இருக்கீங்க… அப்படியே அம்சமா.. ப்ப்பா… வேற லெவல்..” என்று சிலாகிக்க, வானதி கடுப்பானவள் அந்த பாத்திரத்தில் ஒட்டி இருந்த கறியை கையில் தேய்த்து பிரசன்னா சுதாரிக்கும் முன்னமே அவன் முகத்தில் பூசி விட்டாள்.

தேவா இன்னும் சிரிக்க, காவேரி அவளுக்கு பக்கவாட்டில் நின்றிருந்தவள் வாந்திக்கு கண்ணை காட்ட, வானதி தன்னை நெருங்கவும், “வனிம்மா.. வேண்டாம்…” என்று சொல்லிக் கொண்டே எழுந்து கொண்டாள் தேவா..

வானதி விடாமல் துரத்த “ஐயோ வனி.. மூச்சு வாங்குது.. விட்டுடு..” என்று கூறிக் கொண்டே ஓடியவள் காவேரியை நெருங்கவும், காவேரி தேவாவை விடாமல் பிடித்துக் கொள்ள, வானதி சிரிப்புடன் அவள் முகத்தில்  மீசை வைப்பது போல் இருபுறமும் இழுத்து விட்டவள், நெற்றியில்பொட்டு, தாடி என்று தன் கலைநயத்தை காட்டி விட, தேவா என்ன கத்தியும் அவளை விடவில்லை அவள்..

பிரசன்னா வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்க, சஞ்சய் தேவாவை பார்த்து அவனும் சிரிக்கவும், தேவா அவனை கைகளில் தூக்கி கொண்டவள் “நீயும் மீசை வச்சுக்கோடா கன்னுகுட்டி… ” என்று அவனை கொஞ்சிக்கொண்டே அவனுக்கும் பாரதியை போல மீசை வைத்து, நெற்றியில் ஒரு போட்டும் வைத்திட்டாள்…

ஐந்து பெரும் அங்கே அப்படி ஒரு அட்டகாசம்.. அவர்களின் சொந்த இடமாக இருக்க, கேட்கவும் ஆள் இல்லாமல் போகவும், முகத்தில் கரியை பூசிக் கொண்டது கூட விளையாட்டாக மாறி இருக்க, ஐந்து பேரும் சிக்னல் விளையாட தொடங்கி இருந்தனர்..

செய்து வைத்த சாதமும், குழம்பும் கேட்க ஆள் இல்லாமல் ஒரு மூலையில் இருக்க, இந்த ஐவர் குழு ஓடியும், பிடித்தும் விளையாடிக் கொண்டிருந்தனர்… வயதை மறந்து குழந்தைகள் போல அவர்கள் ஆடி கொண்டிருக்க, சரியாக நேரம் பார்த்து அங்கே வந்து சேர்ந்தனர் சந்திரனும், ரகுவும்…

Advertisement