Advertisement

காதல் தருவாயா காரிகையே 25

                         சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த ஒரு பண்ணை வீட்டில் இருந்தனர் ரகுவும் அவன் நந்தனாவும்.. அவன் கையணைப்பில் இருந்தவள் இன்னமும் நடந்த நிகழ்ச்சிகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்திருக்கவில்லை…

                       அழுது கொண்டே அங்கிருந்து கிளம்பியவள் காரிலும் அழுகையை தொடர “இப்போ நீ அழுகையை நிறுத்தல.. என்ன செய்வேன்னே தெரியாது நந்தனா… இப்படி ஓயாம அழுது என்ன சாதிக்க போற..” என்று அதட்டிவிட, அவனை பாவமாக பார்த்தவள் கண்ணீரோடு கண்களை மூடி பின்னால் சாய்ந்து கொள்ள, அவளை தன் கை வளைவில் இழுத்துக் கொண்டான் ரகு.

                         இதற்குள் காரை ஓரமாக நிறுத்தி விட்டிருக்க, சிறிது நேரம் அவள் அழுகையை பொறுத்தவன் அழுகை விசும்பலாக மாறவும், “முடிச்சிட்டியா..” என்று கேட்டுக் கொண்டே காரை விட்டு இறங்கினான்… சற்று தள்ளி இருந்த கடையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்து கொடுத்து முகம் கழுவ செய்து, ஒரு ஜூஸ் பாட்டிலையும் வாங்கி அவள் கையில் கொடுத்திருந்தான்.

                        தண்ணீரை குடித்தவள் அந்த ஜூஸை தொடாமல் இருக்க, “அதை ஓபன் பண்ணு…” என்றவன் அவள் திறந்து நீட்டவும் “குடி…” என்றுவிட்டான்.. தேவா மறுப்பாக பார்க்க “நிறைய பேசிட்ட நந்தனா.. தொண்டை எல்லாம் வலிக்கும்.. சாப்பிடவும் இல்ல.. குடி. அடம் பண்ணாத என்கிட்டே..” என்று முறைக்க, மறுபேச்சு பேசாமல் அதை குடித்து முடித்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

                    கண்களை மூடிக் கொண்டிருந்தவள் மெல்ல மெல்ல உறக்கத்தின் வசம் சென்றுவிட, சிறிது நேரம் கழித்து ரகு அவளை எழுப்பவும் தான் விழித்து எழுந்தாள்.. அப்போது தான் வேறு எங்கோ வந்திருப்பது புரிய கேள்வியாக ரகுவை பார்க்கவும் “கண்ணெல்லாம் வீக்கமா இருக்கு..உன்னை இப்படியே ஊருக்கு கூட்டிட்டு போனா, நாந்தான் அழ வச்சேன் ன்னு என்னை ஒருவழி பண்ணிடுவாங்க… வா..” என்று கூறிக் கொண்டே முன்னால் நடந்தான் அவன்.

                                   தேவா எதுவும் பேசாமல் அவனுடன் நடக்க, சுற்றிலும் மரங்களும்,செடி கொடிகளும் சூழ்ந்து பார்க்கவே ரம்யமாக இருந்தது அந்த இடம். ஆனால் தேவா இருந்த மனநிலையில் எதுவும் கருத்தில் பதியாமல் போனது. ரகு வீட்டிற்குள் செல்லாமல் வீட்டின் பக்கவாட்டில் நடந்தவன் பின்புறம் இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.

                     அங்கிருந்து அந்த மொத்த தோட்டமும் தெரிய, இவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு எதிரே நீச்சல் குளம் ஒன்று விரிந்திருந்தது.. தேவாவுக்கு எதிலும் நாட்டம் இல்லாமல் போக அமைதியாக அவன் அருகில் அமர்ந்து கொண்டாள். ரகு அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன் “ஏண்டா இப்படி இருக்க… என்ன நினைக்கிற நீ.. என்கிட்டே சொல்லிடேன்..” என்று அவள் தாடையை பிடித்து தன்னை நோக்கி திருப்ப

                     மீண்டும் கண்களில் நீர் சேர்ந்து கொண்டது தேவாவுக்கு… அவள் கண்களில் வைரம் போல் மின்னிய அந்த ஒற்றை துளி கண்ணீரை வெளிவர விடாமல் தன் கையால் ஒற்றி எடுத்தவன் “சத்தியமா வலிக்குதுடா பொண்ணே..” என்றான் ஆழ்ந்த குரலில்.

                      தேவா அவன் முகம் பார்க்காமல் கீழே குனிந்து கொள்ள பார்க்க,அவளை விடாமல் தாடையை பற்றி நிமிர்த்தியவன் “என்ன நினைச்சு அழற நந்தனா… என்கிட்டே சொல்லலாம்ல… உன் அப்பாவை நினைச்சு அழுதா அது தேவையே இல்ல.. அந்த மனுஷன் முழுசா ரெண்டு நாள் கூட தாங்க மாட்டாரு.. நம்ம வீட்டுக்கே கூட உன்னை தேடி வரலாம்…”

                         “அடுத்து உன் பாட்டி… பேசணுமா இல்ல பார்க்கணும் போல இருக்கா.. வர சொல்லவா..” என்று அவள் முகம் பார்க்க

                        “வேண்டாம்.. எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்.. யாரையும் பார்க்க வேண்டாம்…” என்று கலங்கிய குரலுடனே அவள் சொல்லி முடிக்க

                    அவளை அணைத்திருந்த வலது கையால் லேசாக தட்டிக் கொடுத்தவன் “போதும்டி… சும்மா அதையே நினைச்சுட்டு இருக்காத… உன் சித்தி எல்லாம் நீ இந்தளவுக்கு கவலைப்படத் தகுதியே இல்லாதவங்க.. “

               “ஆனா, நான்… முட்டாள் மாதிரி இவங்க எல்லாரையும் நம்பி இருக்கேனே ரகு… ஒரு ஜீவன் தன்னோட கடைசி நொடிகள்ல கூட எனக்காக துடிச்சிருக்கு… ஆனா எனக்கு அவங்க யாருன்னே தெரியல.. வேடிக்கையா இல்ல.. எப்படி அவங்களால முடிஞ்சுது..”

                  “மாமா மட்டும் இல்லன்னா நான் என்னவாகி இருப்பேன் ன்னு கூட நினைக்க முடியல என்னால… ஆனா அப்பா அன்னைக்கு என்னல்லாம் பேசினார் தெரியுமா… நான் அவரோட மரியாதையை கெடுத்துட்டேன்.. மானத்தை  வாங்கிட்டேன்.. அப்படி இப்படி இன்னும் நிறைய…”

             “ஆனா.. நான் அந்த இளங்கோவை கட்டிட்டு இருந்தா இவரோட கௌரவம் அப்படியே இருந்திருக்குமா… இவங்க என்ன நினைக்கிறாங்க. அவன் கெட்டவன் தெரிஞ்சும் நான் அவனையே கட்டிக்கிட்டு அவனோட வாழ்ந்து இருந்தா என் பொண்ணு சொல்வாரா… நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல என்ன தப்பு..”

                “என் மாமா பையன் தானே நீங்க.. அப்பவும் நான் உங்களை காதலிச்சோ இல்ல நீங்க என்னை தூக்கிட்டு போயோ கல்யாணம் பண்ணிகிட்டோமா.. இல்லையே.. இவரோட அம்மா தானே கட்டி வச்சாங்க.. அதுக்கு நாம என்ன செய்ய முடியும்…”

               “இதுல உங்களை குறை சொல்ல என்ன இருக்கு… சட்டையை பிடிக்க வர்றாரு… எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.. அந்த வீட்டு மருமகன் நீங்க.. உங்ககிட்ட அப்படி நடந்துப்பாரா…அதுவும் என் கண்முன்னாடி.. என்னால எடுக்கவே முடியல ரகு.. எல்லாம் யோசிச்சு யோசிச்சு பைத்தியம் பிடிச்சுடும் போல…” என்று அவள் மண்டையை பிடித்துக் கொள்ள,

                 “நந்தனா… நீ அவரோட இடத்துல இருந்து யோசிச்சு பாரு… உன் சித்தியை ரொம்பவே நம்பிட்டாரு அவரூ.. பாட்டி இறந்த விஷயம் அவருக்கே தெரியாது போல.. நீ கேட்டதும் அவர் முகத்துல அப்பட்டமான அதிர்ச்சி தான் தெரிஞ்சுது…

                “இங்கே நிறைய பேர் இப்படித்தான்.. குழந்தையை வளர்க்க ரெண்டாவது கல்யாணம் ன்னு சொல்லி செஞ்சிட்டு, குழந்தையையும் கவனிக்க முடியாம, வீட்டையும் கவனிக்க முடியாம வாழ்க்கையை தொலைச்சிடறாங்க… ஆனா உன் விஷயத்துல அப்படி எதுவும் நடக்காம உன் பாட்டி உன் கூடவே இருந்து உன்னை காப்பாத்திட்டாங்க…அதுவரைக்கும் நீ சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்..

               “அதோட தேவகி பாட்டி விஷயத்துல நீ இவ்ளோ வேதனைப்பட ஒண்ணுமே இல்ல.. நீ தெரிஞ்சு வராம இல்லையே.. உனக்கு இப்படி ஒரு பாட்டி இருக்கறதே தெரியாது.. அப்புறம் நீ எப்படி அவங்க இறப்புக்கு பொறுப்பெடுத்துக்க முடியும்…”

                 “ஒரே ஒரு விஷயத்தை நினைச்சு நீ சந்தோஷப்படலாம்.. இன்னிக்கு நடந்த விஷயங்கள் உனக்கு மட்டுமில்ல, உன் அப்பாவுக்கு கூட கண்திறப்பு தான்..இந்நேரம் உன் சித்தியை தாளிக்க ஆரம்பிச்சு இருப்பாரு… உன் சித்தியை பத்தி புரிஞ்சிக்க உனக்கு கிடைச்ச வாய்ப்பு ன்னு நினைச்சுக்கோ..”

                “நமக்கு கீழே எத்தனையோ பேர் நந்தும்மா.. உன் நிலைமை பரவாயில்ல.. உன் பாட்டி நல்லபடியா வளர்த்து இந்த ஏமாளியையும் உன்கிட்ட பிடிச்சு கொடுத்துட்டாங்க… நீ ஜாலியா இருக்கலாம்டா…” என்று அவன் சிரிப்போடு அவளை பார்க்க

                “நீங்க ஏமாளியா… வெளியே சொல்லிடாதீங்க…” என்று முறைத்தாள் நந்தனா…

               “ஏன் ஒத்துக்க மாட்டியா… அப்பா கூப்பிட்டார் ன்னு கூட வந்த பாவம்… என்னை உன்கிட்ட சிக்க வச்சிட்டாங்க..நான் பாவம் இல்லையா..” என்று மீண்டும் அவன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க

                 “என்ன பாவம்… என்ன சிக்கிக்கிட்டிங்க நீங்க… நான்தான் உங்ககிட்ட வந்து மாட்டி இருக்கேன்.. இந்த அடுப்பு எப்போ கொதிக்கும், எப்போ அணையும் ன்னு தெரியாம வந்து மாட்டிட்டேன் என்று அவள் பொரிந்து தள்ள

               “அடிப்பாவி.. என்னையா அடுப்பு ன்னு சொல்ற… உன்னை கொதிக்க வைக்கிறேன் இரு..” என்றவன் அவள் கன்னத்தை கிள்ளி வைக்க

                “வலிக்கவே இல்ல..” என்றவள் அவன் மீது சாய்ந்து கொண்டாள். அவனின் அருகாமை மட்டுமே அப்போதைக்கு ஆறுதலாக இருக்க, அவனை விட்டு விலகும் எண்ணமே இல்லை பெண்ணுக்கு.. ரகு தன் மொபைலில் உனக்கு ஆர்டர் செய்ய, அடுத்த சில நிமிடங்களில் உணவு வந்திருந்தது…

                  அவளை உள்ளே அழைத்து வந்தவன் உணவை ஊட்டிவிட, சமத்தாக உண்டவள் அவன் காட்டிய இடத்தில படுத்துக் கொண்டாள்.. ரகு அவளுடனே படுத்துக் கொண்டவன் அவள் உறங்கிய பிறகே தன் வீட்டிற்கு அழைத்தான்..

                     தாயிடமும், தந்தையிடமும் நடந்ததை கூறியவன் தாங்கள் இருக்கும் இடத்தையும் தெரிவித்து, நாளை வருவதாக சொல்லி வைத்து விட்டான்.அதன் பிறகு தேவாவின் பாட்டிக்கு அழைத்தான்..

                     சுந்தராம்பாள் எடுத்த உடனே “தேவா எப்படி இருக்கா ரகு..”என்று கரகரத்த குரலில் கேட்க

                  “தூங்குறா பாட்டி.. இப்போதான் ஒருவழியா சாப்பிட வச்சேன்.. தூங்கிட்டா..”என்று குழந்தையை போல் பாவித்து சொல்ல, பாட்டிக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

                   “அங்கே என்ன நடந்தது பாட்டி.. எதுவும் பிரச்சனை இல்லையே… உங்க மகன் எப்படி இருக்காரு…” என்று கேட்க

                      “எப்படி இருப்பான் ரகு… இடிஞ்சு போன மாதிரி உட்கார்ந்துட்டான்… உன் குடும்பத்துக்கு நாங்க செஞ்ச பாவம் தான் எங்களை இப்படி துரத்துது போல…”என்று அவர் கண்ணீர் விட

                     “தேவாகிட்ட சில விஷயங்களை என்னால பேச முடியாது பாட்டி.. அவ என் அத்தையோட பொண்ணு.. பெத்தவங்களை பத்தி பிள்ளைக்கிட்ட தப்பா சொல்லக்கூடாது… ஆனா, என் அத்தையோட குணம் ஓரளவு என்னால புரிஞ்சிக்க முடியும்…”

                       “அவங்க நினைச்சு இருந்தா, உங்க பையன் எங்க வீட்டோட நல்ல உறவுல இருந்துருப்பாரு.. ஆனா அவங்களுக்கே எங்க உறவு தேவையில்லை.. அவங்களுக்கு புதுசா கிடைச்ச உங்க பையனோட அன்பும், அவரோட ஆடம்பரமும் போதும்ன்னு நினைச்சு அதோடவே திருப்தி ஆகிட்டாங்க..”

                     “ஒரு கட்டத்துல இதுக்கெல்லாம் பழகி அடிமையாகவே மாறிப் போய்ட்டாங்க போல..அதான் என் அப்பா, சித்தப்பாவோட பாசமோ, என் பாட்டியோட கண்ணீரோ கூட அவங்களை அசைக்கல…”

Advertisement