Advertisement

                       “ஒருவேளை அவங்க இருந்து வளர்த்து இருந்தா, தேவாவும் கூட அப்படியே இருந்திருப்பாளோ என்னவோ.. அவ நல்ல நேரம்.. முழுசா உங்க கைக்குள்ள வந்துட்டா… நடந்ததையே நினைச்சு உட்கார்ந்திட்டா வேதனை தான் மிஞ்சும் பாட்டி… வெளியே வர பாருங்க… உங்க மகனையும் பார்த்துக்கோங்க..” என்று அவன் முடிக்க

                          “உன் வளர்ப்பை நினைச்சா பொறாமையா இருக்கு ரகு… உங்க குடும்பத்துல இருந்து தானே ஜானகியும் வந்தா.. ஆனா.. அவளையும் ஒரேடியா தப்பு சொல்லிட முடியாது… என் மகனோட கொஞ்ச நாள் வாழ்ந்து இருந்தாலும் அத்தனை அன்யோன்யம் அவங்களுக்குள்ள…

                         “ரெண்டு பேருக்கும் இடையில யாருமே வர முடியாது… அவ்ளோ அன்பா இருந்தாங்க.. கடவுள் அப்படியே வாழ்ந்துட்டு போகட்டும் ன்னு கூட விட்டு வைக்கலையே…மகராசி அத்தனை அவசரமா போய் சேர்ந்துட்டாளே…” என்று அழுதவர்

                          “என் மகனோட முகத்தை பார்க்க முடியாம அவன் வாழ்க்கையை சரி பண்றேன் ன்னு, நானே அவனை பிடிச்சு குழில தள்ளிட்டேன் ரகு… கொஞ்சம் பேராசை படுவா தெரியும்.. சரி.. சின்ன பொண்ணு இப்போதான் கல்யாணமாகி வந்திருக்கா.. அவளுக்கும் ஆசைகள் இருக்கும் தானே ன்னு பெருசா எடுத்துகிட்டதே இல்ல… என் மகன் நல்லபடியா வாழ்ந்தா போதும் ன்னு தான் நினைச்சேன்…ஆனா, என் பேத்தி வாழ்க்கையை அழிக்கவே திட்டம் போடுவாளா… என்ன தைரியம் இருக்கணும் அவளுக்கு…” என்று அப்போதும் கூட குதித்தார் சுந்தராம்பாள்..

                       “உங்க மகனோட கோபம்.. யார்கிட்ட இருந்து வந்தது ன்னு இப்போதான் புரியுது…” என்று ரகு மெல்ல சிரிக்க

                   “கோபம் மட்டும் இருந்திட்டா போதுமா ரகு… சம்பாதிக்கிறேன் ன்னு ஊர் ஊரா சுத்தி வந்தே குடும்பத்தை விட்டுட்டான்…ஜானகியோட இழப்புல இருந்து அவன் வெளியே வந்தா போதும் ன்னு மட்டும்தான் நினைச்சேன்…”

                 “என் பேத்திக்கு ஒரு சங்கடம் வர வரைக்கும் நானுமே சுயநலமா தானே இருந்திட்டேன்.. தேவா விஷயத்துல சாவித்ரி ஒழுங்கா நடந்து இருந்தா, அவளோட சின்னத் தனங்களை எல்லாம் பெருசா எடுத்திருக்கவே மாட்டேனே…” என்று புலம்பிக் கொண்டே இருந்தார் அந்த பெரியவர்.

                 ரகு ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி அழைப்பை துண்டித்தவன் தானும் சென்று தேவாவுடன் படுத்துக் கொண்டான்.. ஆனால் உறக்கம் தான் வரவில்லை… தன் அத்தை ஜானகியை பற்றி நினைக்கும் போதே அப்படி ஒரு கோபம் எழுந்தது..

                  அவர் மட்டும் சரியாக இருந்திருந்தால் ஒருவேளை தேவா தங்களின் அரவணைப்பில் இன்னும் கூட, பாசமான சூழலில் வளர்ந்திருப்பாளே… தாய்க்கு தாயாக தாங்கி கொள்ள தன் அன்னை காத்திருக்க, இவர்கள் ஒரு பணத்தாசை பிடித்த பேயை சித்தி என்று கொண்டு வந்து அது அவள் வாழ்வையே கெடுக்க பார்த்ததே…

                சாவித்ரி பேய் என்றால் ஜானகியை என்னசொல்வாய் என்று மனம் கேள்வி கேட்க, அவரும் ஒரு வகையில் பணத்திற்கு மயங்கி போனவர் தானே.. அவருக்கும், சாவித்ரிக்கு பெரிதாக வித்யாசம் தெரியவில்லை அவனுக்கு.

                       ஜானகி பணத்தை கண்டவுடன் தான், தன் குடும்பம் என்று சுயநலமாக யோசிக்க, அந்த வகையில் சாவித்ரியை சற்று மேல்.. பணத்தாசை இருந்தாலும் அவரின் தங்கை, தம்பி என்று அனைவரையும் குணாவின் பணத்தில் தான் கரையேற்றி இருந்தார்.. ஜானகியை போல் தான் வாழ்ந்தால் போதும் என்று கைகழுவ வில்லை என்று நினைத்துக் கொண்டான்.

                       ஆனால், என்ன சொன்னாலும் அந்த சாவித்ரி தேவாவின் வாழ்வை இளங்கோவிடம் ஒப்படைக்க நினைத்ததை மன்னிக்கவே முடியாது என்று சொல்லிக் கொண்டவன், அருகில் உறங்கி கொண்டிருந்த தன் மனைவியின் முகம் பார்க்க, தனக்காக அவள் தந்தையிடம் சண்டையிட்டது தான் நினைவில் வந்தது..

                         “என்னா கோவம் வருது இவளுக்கு.. ” என்று கொஞ்சிக் கொண்டவன் தூங்கி கொண்டிருந்தவளின் தாடையில் முத்தமிட்டு அவள் அருகில் படுத்து கண்களை மூடிக் கொண்டவன் மெல்ல மெல்ல தன் நிலவின் குளுமையில் குளிர் காய, தூக்கம் அவன் கேட்காமலே அவனை தழுவிக் கொண்டது.. அப்படி ஒரு உறக்கம் இருவருக்கும்..

                    அவன் நேற்று முழுவதும் பயணத்திலேயே கழித்திருக்க, இன்றும் இதோ இப்போது வரை அவளுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான். மனம் தெளிவாக இருந்தாலும் உடல் ஓய்வு கேட்க, அவளோ நேற்று காலை முதலே அதிகப்படியான மன உளைச்சலில் இருக்க அந்த உளைச்சலே அவள் உடலையும், மனதையும் பாதித்து இருந்தது…

                     வெகுநேரம் கழித்து தேவா விழித்து எழ, அவளை அசைய விடாமல் கட்டிக் கொண்டு உறங்கி கொண்டிருந்தான் ரகு.. அவனின் இறுக்கமான பிடியில் இருந்து விடுபட முடியாமல் போக, தூங்கும் அவனை செல்ல கோபத்தோடு முறைத்தவள் அவனை மீண்டும் கட்டி கொண்டாள்.

                    அவன் கன்னத்தில் மெல்ல தன் இதழ்களை அவள் ஒற்றி எடுக்க, தூக்கத்தில் லேசாக துடைத்து விட்டு மீண்டும் அவன் உறங்க, பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கடுப்பாகி போனது.. மீண்டும் அழுத்தமாக தன் இதழ்களை அவள் பதிக்க, மெல்ல தூக்கம் தொலைந்தது ரகுவுக்கு..

                    ஆனால் இந்த முறையும் கூட தன்னிச்சையாக அவன் கைகள் கன்னத்தை தொட்டிருக்க, அவன் எழும் நேரம் அவன் இடுப்பில் அழுத்தமாக கிள்ளி இருந்தாள் தேவா.. ரகு லேசான சத்தத்தோடு விழித்தவன் “என்னடி பண்ற…” என்று முறைக்க

                   “நீங்க என்ன பண்ணீங்க..” என்று பதிலுக்கு அவனை முறைத்தாள் மனைவி..

              “என்னடா நந்து.. என்ன பண்ணேன்…. மேல கால் எதுவும் போட்டுடேனா…” என்றுஅவன் புரியாமல் கேட்க, தேவா கண்களால் தாங்கள் இருந்த நிலையை சுட்டி காட்டினாள் அவனுக்கு. இன்னமும் கூட முழுதாக அவன் அணைப்பில் தான் இருந்தாள் தேவா.. இதில் கால் போட்டேனா?? என்று கேள்வி வேறு..

                   ரகு அப்போதும் புரியாமல் “சாரிடா.. தூங்கு..” என்று அவளை விடுவிக்க, “போடா..” என்று நினைத்தவள் அவன் மண்டையில் நங்கென்று கொட்டி அவன் கன்னத்தையும் கடித்து வைத்து விட்டாள்.. ரகு அவள் செயல்களை புரியாமல் பார்த்தாலும், அவள் முகம் சற்றே தெளிவாக காணப்பட்டதில் நிம்மதியாக உணர்ந்தான்..

                      அவள் கடிக்கவும் வலியில் தானாக அவன் கைகள் கன்னத்தை தொட, ‘துடைச்சிங்க.. மறுபடியும் கடிப்பேன்..” என்றாள் எச்சரிப்பது போல்..

                    “என்ன..” என்று அதிர்ச்சியானவன் “என்னடி பண்ற.. என்று அவளை தன் கைகளுக்குள் மீண்டும் வளைத்து பிடிக்க, அப்போதும் உர்ரென்ற முகத்துடன் தான் இருந்தாள் அவள்… ரகு அவள் முகத்தை பார்த்தவன் “என்னன்னு சொல்லுடி ராங்கி..” என்றுவிட

              “நான் ராங்கியா… நீங்கதான் அராத்து… நான் முத்தம் கொடுத்தா துடைச்சு விட்டுபிங்களா..” என்று சண்டைக்கு நிற்க

                 “ஹேய்.. நீ எப்போ முத்தம் கொடுத்த… கடிச்சு தானே வச்ச ராட்சசி.. “என்றவன் “வா எப்படி கொடுக்கணும் ன்னு மாமா சொல்லி தரேன்..” என்று அவளுக்கு இன்னும் நெருக்கமாக

                அவனை விலக்கி வைத்தவள் “நான் கொடுத்தேன்..” என்று சிறுபிள்ளையாக முகம் சுருக்கி கொண்டே எழுந்து அமர, “எப்போடி..” என்று அதிர்ந்து பார்த்தான் அவன்..

                  அவளாய் அவனுக்கு முத்தமிட்டாளா??? நினைவே இனிக்க, ஆவலாகவே அவள் முகம் பார்த்தான் ரகு.. “நான் கிஸ் பண்ணா, துடைச்சு விட்டுட்டு தூங்கிட்டிங்க..” என்று அவள் புகார் படிக்க

                  “அடப்பாவி” என்று அடித்துக் கொண்டவன் “ஹேய் அம்மு.. ப்ளீஸ்டி ஒண்ணே ஒன்னு இப்போ கொடு.. மாமா என்ன செய்யுறேன் ன்னு மட்டும் பாரேன்..” என்று கன்னத்தை காட்ட

                    “அது என்ன மாமா… புதுசா சொல்றிங்க..” என்று அவள் முகம் சுருக்க

                  “நீ என் மாமன் பொண்ணு இல்லையா.. சோ நான் உனக்கு மாமா தானே… ” என்று கெத்தாக கேட்டு நின்றான் ரகு..

                   “அத நான் சொல்லணும்… நீங்களே சொல்லிப்பிங்களா…” என்றவள் “நான் மாமா ன்னு எல்லாம் கூப்பிட மாட்டேன்.” என்று முறுக்கி கொண்டாள்..

                  “அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்டி.. ஒரே ஒரு கிஸ் கொடேன்..” என்று அவன் நெருங்க, “அதெல்லாம் கிடையாது… துடைச்சு விட்ட இல்ல.. எதுவுமே கிடையாது போ..” என்று கட்டிலின் நுனியில் அமர்ந்து கொண்டவள்  “ஊருக்கு எப்போ கிளம்புவோம்…எனக்கு இங்கே வேண்டாம்..போகலாம்..” என்று அவனை பார்த்து சொல்ல

                “நாளைக்கு கிளம்புவோம்.. இன்னிக்கு இங்கேதான்..”என்று அவன் சாவகாசமாக சொல்ல

               “யாரோட வீடு இது.. இங்கே எப்படி தங்க முடியும்.. கிளம்புவோமே ப்ளீஸ்…” என்றவள் முகத்தை பாவமாக வைத்துக் கொள்ள

                 அவளை தன்னோடு இழுத்துக் கொண்டவன் “ஏண்டி ப்ளீஸ் எல்லாம் சொல்ற.. வேண்டாம் ன்னா கிளம்புவோம்… உன் பாட்டி உன்னை பார்க்கணும் ன்னு நினைச்சா,… அதான் காலையில அவங்களை பார்த்திட்டு கிளம்பலாம் ன்னு நினைச்சேன்…” என்று அவன் தயக்கமாக கூற

                “எனக்கு இப்போ இருக்க மனநிலைல நான் யாரையும் பார்க்க வேண்டாம் ரகு.. யார் பேசினாலும் காயப்படுத்திடுவேன் நான்.. என் பாட்டி பாவம்.தாங்க மாட்டாங்க…ரெண்டு நாள் கழிச்சு அவங்களே என்னை தேடி வந்திடுவாங்க.. அப்போ  பார்த்துக்கறேன்.. என் கோபமும் கொஞ்சம் குறையட்டும்…”

                   “எனக்கு அத்தையை பார்க்கணும்.. காலையிலஎதுவுமே சொல்லாம கிளம்பி வந்துட்டேன்.. நாம கிளம்புவோம்..” என்றவள் ஒரே பிடியாக நிற்க,அவளை வற்புறுத்த விருப்பம் இல்லாமல், அவன் நண்பனுக்கு அழைத்து ரகு பேச, அவன் அனுப்பிய ஆளிடம் வீட்டை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.

               இவர்கள் இங்கே நடந்த நிகழ்வுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருந்த நேரம், தன் வீட்டில் தனது அறையில் மது பாட்டிலுடன் அமர்ந்திருந்தார் குணசேகரன்… அவருக்கு மகளின் கண்ணீர் படிந்த முகம் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து இம்சிக்க

                   எத்தனை தூரம் முட்டாளாக இருந்திருக்கிறோம் என்ற நினைவே கசந்தது… சாவித்ரி.. அவரின் துரோகம் என்று சொல்வதா, இல்லை தன்னுடைய ஏமாளித்தனம் என்று சொல்வதா புரியவில்லை மனிதருக்கு.. ஆனால் தான் சரியானவன் இல்லை என்ற எண்ணம் அழுத்தமாக மனதில் படிந்து விட்டிருந்தது…

                    மகள் தான் அத்தனை தெளிவாக குற்றம் சாட்டி விட்டாளே….

Advertisement