Advertisement

காதல் தருவாயா காரிகையே 24

                              ரகுவும், தேவாவும் காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னையில் இருந்த தேவாவின் வீட்டை அடைந்து விட்டிருந்தனர். ரகு வெகுவாக தயங்கினாலும் தேவாவை தனியே விட மனமில்லாமல், தன் கோபத்தையும், சுய கௌரவத்தையும் ஒதுக்கி வைத்து தேவாவை அழைத்து வந்து விட்டிருந்தான்.

                              ஆனாலும் அவள் வீட்டை நெருங்க நெருங்க,  புரியாத ஒரு உணர்வு அவனை ஆக்கிரமித்துக் கொள்ள, இந்த பயணம் தேவைதானா?? என்று நூறு முறைக்கும் மேல் யோசித்து விட்டிருப்பான். மனைவியின் வேதனை படிந்த முகம் அவளிடம் எதையும் கேட்க விடாமல் செய்ய, அமைதியாகவே கழிந்திருந்தது பயணம்.

                            இப்போதும் இதோ வீட்டு வாசலில் கார் நிற்க, உள்ளே செல்வதா?? வேண்டாமா?? என்று ஒரு ஊசலாட்டம் மனதில்… ரகு தயங்கியபடியே அமர்ந்திருக்க, தேவா அவனை புரிந்தவளாக “நீங்க கிளம்புங்க… நான் பேசிட்டு உங்களுக்கு கூப்பிடறேன். நீங்க அப்போ வாங்க..” என்றவள் காரிலிருந்து இறங்க முற்பட

                       அவளை இழுத்துக் கொண்டவன் லேசாக அணைத்து விடுவித்து “உனக்கு என்ன தோணுது.. இந்த நிலைமையில உன்னை தனியா விட்டுட்டு போவேன்.. நினைக்கிறியா…” என்று அவள் கண்களை பார்க்க, ஒரு நிம்மதியான புன்னகை அவளிடம்…

                          அதன்பிறகே அவள் காரிலிருந்து இறங்க, இருவரும் வீட்டிற்குள் நுழையும் நேரம் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார் சாவித்ரி.இவர்களை கண்டு ஒரு நொடி அதிர்ச்சியடைந்தாலும், தன் திட்டம் வெற்றி பெற்று விட்டதோ என்று எண்ணமிட்டவர் “தேவாம்மா… வாடா…” என்று வராத கண்ணீரை வரவழைத்துக் கொண்டே அவளை நெருங்கினார்..

                        அவராகவே அவளை அணைத்து கொள்ள,தேவா அவரின் கண்ணீரை கண்டு கொள்ளாமல்  அப்படியே தான் நின்றாள்… ஒருவழியாக அவர் விலகவும் “பாட்டி எங்கே சித்தி..” என்று அவள் கேட்க

                      “பாட்டி கோவிலுக்கு போயிருக்காங்க தேவாம்மா.. அவங்களுக்கு உன்னைப்பத்தி தான் கவலை… உன்னை இப்படி கொண்டு போய் தள்ளிட்டோமே ன்னு கவலையிலேயே ஆள் நொடிஞ்சு போய்ட்டாங்க…” என்று அளந்துவிட்டவர்

                        “எதுக்குடா இங்கே வந்திருக்க… என் பொண்ணோட வாழ்க்கையை திட்டம் போட்டு நாசமாக்கிட்டு இப்போ எதுக்காக இங்கே வந்திருக்க… நாங்க வேதனையில் துடிக்கிறதை பார்த்து சிரிக்கவா… என்னடா பாவம் செஞ்சோம் நாங்க..”

                         “எங்க தேவாம்மா வாழ்க்கையை இப்படி நாசமாக்கிட்டீங்களே.. அப்படி என்னடா அந்த மனுஷன் மேல வன்மம் உங்களுக்கு… உன் அத்தை உயிரோட இருக்கும்போது ஒன்னும் அவர் என்னை கட்டிக்கிடலையே… ஏண்டா இப்படி..” என்றவர் மேலும் பேசும் முன்

                           “போதும் சித்தி..” என்று கர்ஜனையாக அவரை அடக்கி இருந்தாள் தேவா…

                          “என்ன தைரியம் உங்களுக்கு.. என் முன்னாடியே என் புருஷனை அவன் இவன் ன்னு பேசுவீங்களா… அவர் இந்த வீட்டு மருமகன்… கொஞ்சமாவது அந்த எண்ணம் இருக்கா உங்களுக்கு… உங்களோட உரிமை என்னோட நிற்கட்டும் சித்தி… என் புருஷனை பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல..” என்றவள் கொதி நிலையில் இருக்க

                          “ஏன் உன் சித்தி பேசினதுல என்ன தப்பு??” என்று கேட்டுக் கொண்டே கோபமாக இறங்கி வந்தார் குணசேகரன்..

               தேவா அவரை நிமிர்ந்து பார்க்க, அதற்குள் சாவித்ரி “பாருங்க தேவாப்பா… இவன் நம்ம பொண்ணை ஏமாத்திட்டான் ன்னு ஆதங்கத்துல நான் பேசிட்டேன்.. ஆனா நம்ம தேவா எப்படி மாறி போய்ட்டா பார்த்திங்களா… ஐயோ என் மகளை மொத்தமா மாத்தி வச்சிருக்கானே..” என்று அவர் மீண்டும் அழ

                       “இரு சாவித்ரி…” என்று அவரை அடக்கிய குணசேகரன் “என்ன தைரியம்டா உனக்கு.. என் மகளை ஏமாத்தி கல்யாணம் செஞ்சிட்டு என் வீட்டுக்குள்ளேயே வந்து நிற்பியா… உன்னை..” என்று அவனை நெருங்கியவர் ரகுவின் சட்டையை பிடிக்க முயல, அவரின் கையை பிடித்து தடுத்து விட்டிருந்தாள் தேவா…

                       “தப்பு பண்றிங்கப்பா… ரொம்ப பெரிய தப்பு… நீங்க அவரை பேசற ஒவ்வொரு வார்த்தையும், என்னை சொல்றது போல தான். அவர் சட்டையை பிடிப்பிங்களா நீங்க.. அவர் பதிலுக்கு உங்க மேல கையை வைக்க நினைச்சா என்ன செய்விங்க…”

                       “அடிக்கடி சொல்றிங்க. ஏமாத்திட்டார் ன்னு… என்ன ஏமாத்திட்டாரு.. யாரை ஏமாத்தினாரு… கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ண நிச்சயத்தன்னிக்கு விட்டுட்டு போறத விட, பெரிய ஏமாத்து வேலை இருக்கமுடியுமா… அவனோட வார்த்தையை வச்சு நீங்க என் புருஷனை எடை போடுவீங்களா..”

                      “எப்படிப்பா நீங்க இப்படி நடந்துபிங்க.. யார் கொடுத்த தைரியம் இது… இன்னிக்கு அவர் சட்டையில கை வைக்கிறவர் நாளைக்கு என் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுவீங்களா… என் அப்பாவா நீங்க..” என்றவளுக்கு குரல் கலங்கி தொண்டையை அடைக்க, கண்களில் கண்ணீர் வடிந்தது..

                      “தேவாம்மா நீ புரியாம பேசுறடா.. இவங்க குடும்பமே சேர்ந்து உன்னை ஏமாத்திட்டு இருக்காங்கடா… உன் அப்பாக்கிட்டே இருந்து உன்னை மொத்தமா பிரிக்கிறது தான் இவங்களோட திட்டமே.. நீ உன் அப்பாவை புரிஞ்சிக்கோயேன்…” என்று சாவித்ரி மன்றாட

                       “உங்க தம்பியை விடவா ஏமாத்திட போறாங்க சித்தி… ஏன் இன்னிக்கு என் அப்பாகிட்ட உண்மையை சொல்லி இருக்கானே… கல்யாணம் முடிஞ்ச அடுத்தநாளே வந்துசொல்லி இருக்கலாமே.. இல்ல, அவன் ஆம்பிளை தானே.. இவரை அடிச்சு போட்டுட்டு தப்பிச்சு வந்து என் கழுத்துல தாலி கட்டி இருக்கலாமே… ஏன் செய்யல..” என்று அழுத்தமாக கேட்க, சாவித்ரியிடம் பதில் இல்லை.

                      அதோடு “என்ன சொன்னிங்க.. என் அப்பாகிட்ட இருந்து என்னை முழுசா பிரிக்க பார்க்கிறார்களா… குடும்பத்துல இருந்து பொண்ணை பிரிச்சு கூட்டிட்டு வர்றதுல என் அப்பா முன்னோடி சித்தி… நீங்க சொல்லுங்கப்பா…”

                         “நீங்க அம்மாவை அவங்க குடும்பத்துல இருந்து பிரிச்சி மாதிரி என்னை பிரிச்சுடுவாங்க ன்னு நினைக்கிறீங்களா…” என்று குத்தி கிழித்துவிடும் குரலில் தேவா கேட்க

                        ஜானகியின் நினைவில் குணசேகரனின் முகம் கசங்கி போனது.. இவளுக்குஎன்ன தெரியும் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை என்று நினைத்தவர் “உனக்கு என்ன தெரியும் உன் அம்மாவை பத்தி.. அவ முழுக்க முழுக்க என்னோட அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழ்ந்தா.. நாங்க வாழ்ந்த வாழ்க்கையை விமர்சிக்கிற அளவுக்கு உனக்கு தகுதி இல்ல..” என்று காட்டமாக குணா பதில் கொடுக்க

                       “நிச்சயமா… காசு,பணம் பார்த்தவுடனே கூடப் பிறந்தவங்களையும், பெத்தவங்களையும் மறந்து போன உங்க மனைவியையோ, இல்ல பொண்டாட்டி மட்டும் போதும், அவளோட சொந்தம் வேண்டாம் ன்னு நினைச்ச உங்களையோ விமர்சிக்கிற அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போகல…” என்று சற்றே ஏளனமாக தேவா கூறிவிடவும்

                      சட்டென அவளை நோக்கி கையை நீட்டிவிட்டார் குணசேகரன்… ரகு அவள் அருகில் நின்றிருந்தவன்  மாமனாரின் செயலை உணர்ந்தவனாக அவர் கையை பிடித்து அவரை தடுத்துவிட, தந்தையின் செயலில் முழுதாக அதிர்ந்து போயிருந்தாள் தேவா…

                     அவர் தன்னை அடிக்க வருவது எல்லாம் கனவில் கூட நினைத்ததே இல்லை அவள். இப்போது நிஜத்தில் அவள் கண்முன்னே நடந்துகொண்டிருக்க, அவள் அதிர்ந்து நின்ற நொடிகளில் ரகு மாமனாரை முறைத்துக் கொண்டு நின்றவன் “அவ மேல கையை வைக்கிற வேலையெல்லாம் இருக்கவே கூடாது…” என்று மிரட்டலாகவே கூற

                        “நீ யாருடா அதை சொல்ல… அவ அவரோட பொண்ணு…” என்று சாவித்ரி இடையிட்டார்.

                    அவரை கண்டுகொள்ளவே இல்லை ரகு..”உன் மக எல்லாம் முடிஞ்சு போன கதை.. இப்போ என் பொண்டாட்டி அவ… அவளை பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்க…இல்ல..” என்றவன் விடாமல் அவரை முறைக்க,

                    “உன் பொண்டாட்டியை கூட்டிட்டு உன் வீட்டுக்கு கிளம்புடா… யார் வீட்டுக்கு வந்து யார் யாரை மிரட்டறது… அவரோட வீடு இது… எங்க வீட்டுக்குள்ள நின்னுட்டு என் வீட்டுக்காரரை பேசுவியா நீ..” என்று சாவித்ரி சற்றும் மரியாதை இல்லாமல் பேச

                    சரியாக அப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார் சுந்தராம்பாள்.”ஏய் சாவித்ரி…” என்று அவரை அதட்டியவர் “யார்கிட்ட என்ன பேசிட்டு இருக்க… முதல்ல உன் நிலை என்ன ன்னு தெரிஞ்சு பேசு…” என்று அவர் கோபமாக அதட்ட

                      “ஏன்மா.. அவ சொன்னதுல என்ன தப்பு… இவன் என் கையை பிடிச்சு தள்ளி விடுவான் என் பொண்டாட்டி பார்த்திட்டு இருப்பாளா…” – 

                      “ஏன் கொஞ்சம் முன்னாடி நீ என்ன செய்ய பார்த்த.. அவன் பொண்டாட்டியை நீ அடிக்க போனா, உன்னை தள்ளிவிடாம என்ன செய்வான்…”

                     “ஆமா.. பெரிய பொண்டாட்டி.. ஏமாத்திட்டு கட்டிட்டு போன இவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு நிற்கிறா… முட்டாள்..” என்று அவர் மகளை திட்ட

                     “அவ முட்டாள் இல்ல குணா.. நீதான் முட்டாள்.. பால் எது??விஷம் எது ன்னு பிரிச்சு பார்க்க தெரியாத முட்டாள்..” என்று அவர் சற்று கடுமையாகவே சாட

                      “அம்மா.. சும்மா உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போகாதீங்க.. இங்கே என்ன நடந்தது ன்னு ஒண்ணுமே தெரியாது உங்களுக்கு..முதல்ல இவனை என் வீட்ல இருந்து வெளியே போகச் சொல்லுங்க…”

                    “நீ என்னடா அவனை வெளியே போக சொல்றது.. என் பேத்தியோட வீடு இது.. ரகு அவ புருஷன்..அவனுக்கு இந்த வீட்ல எல்லா உரிமையும் இருக்கு… அவனை வெளியே போகச்சொல்ல இங்கே யாருக்கும் உரிமை இல்ல..”

                 “இந்த வீடு இன்னமும் என் பேத்தி பேர்ல தான் இருக்கு.. மறந்து போச்சா… அதோட இது என் புருஷன் கட்டின வீடு.. மகனா உனக்கு உரிமை இருக்கு.. ஆனா அதைவிட அதிகமா என் பேத்திக்கு இருக்கு..அவ நினைச்ச நேரம் இந்த வீட்டுக்கு வருவா…”

                    “கண்டதுங்க எல்லாம் என் பிள்ளைகளை பேசக்கூடாது..” என்று சுருக்கென சொல்லியவர் தன் பேத்தியின் கையை பிடித்துக் கொண்டு நிற்க

                   “பார்த்திங்களா.. என்னைத்தான் அவங்க கண்டதுங்க ன்னு சொல்றாங்க… எனக்கு இந்த வீட்ல எந்த உரிமையும் இல்லையா.. நான் பேசவே கூடாதாங்க…” என்று கண்ணீருடன் உருக்கும் குரலில் சாவித்ரி கேட்க

                  “நீ பேசி பேசி இந்த குடும்பத்தை சீரழிக்க திட்டம் போட்ட வரைக்கும் போதும்… இனி நீ பேச ஒன்னும் இல்ல..” என்று முகத்திற்கு நேராகவே கூறினார் சுந்தராம்பாள்..

                  “ஏன்.. ஏன்.. நான் என்ன சீரழிச்சிட்டேன் உங்க குடும்பத்தை… நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்த நாள்ல இருந்து இவளை என் மகளா நினைச்சு வளர்த்து இருக்கேன்.. உங்களுக்கு நல்ல மருமகளா, உங்க மகனுக்கு நல்ல மனைவியா இருந்திருக்கேன்.. என்னசீரழிச்சிட்டேன் உங்க குடும்பத்தை..” என்று அவரும் சிலிர்த்துக் கொள்ள

                  சுந்தராம்பாள் அவரை ஏளனமாக பார்த்தவர் “என்ன..நீ வளர்த்தியா.. மூணு வயசு குழந்தை சாப்பாட்டுக்கு அழறத கூட கவனிக்காம உன் புருஷன் கூட ஜோடி சேர்ந்துட்டு சுத்தி வந்தியே அதான் வளர்ப்பா… எத்தனை நாள் அவளோட ஸ்கூலுக்கு போயிருக்க… அவளோட ஸ்கூல்,காலேஜ் ஏதாவது எங்கே இருக்கு தெரியுமா உனக்கு…”

                 “எத்தனை நாள் என் பேத்திக்கு சாப்பாடு கொடுத்திருக்க.. உங்க யாரையும் அவகிட்ட அண்டவிடாம அவளை வளர்த்து ஆளாக்கி இருக்கேன்… அவ என்னோட வளர்ப்பு… அதனால தான் அவ இன்னும் குணசேகரன் வீட்டு பொண்ணா இருக்கா…”

                 “உன்கிட்ட விட்டு இருந்தா என் பேத்தி  என்னிக்கோ ஒண்ணுமில்லாம போயிருப்பா… ” என்று வெறுப்புடன் முகம் சுழித்து விட்டார்.

               சாவித்ரி கண்ணீருடன் “நல்ல வார்த்தை சொல்லிட்டீங்க அத்தை… உங்களுக்காகவே உழைச்ச எனக்கு இது தேவை தான்.. எல்லாரையும் சேர்த்து பிடிக்க நெனைச்சேனே… கடவுளே!!! எனக்கு இது தேவையா..” என்று அவர் அழ

                  “சேர்த்து பிடிக்க நினைச்சீங்களா… அதனால தான் என் பாட்டி இறந்து போக போறாங்க ன்னு தெரிஞ்சும் என்னை பார்க்கவே விடாம என் மாமாவை துரத்தி விட்டிங்களா… வாட்ச்மேன் கிட்ட சொல்லி துரத்தி விடுறது தான் சேர்த்து பிடிக்கிறதா…” என்று வேதனையாக தேவா கேட்க

                 அதிர்ந்து நின்றார் சாவித்ரி.. இந்த விஷயமெல்லாம் இந்த நிமிடம் வரை குணசேகரனுக்கு கூட தெரியாது.. ஆனாலும் உடனே சமாளிப்பவராக “தேவாம்மா.. நீ கூட என்னை புரிஞ்சிக்கலயா… உன் நல்லதுக்காக தான் அவங்களை உன்கிட்ட நெருங்கவிடாம செஞ்சேண்டா… உன் பணத்துக்காக உன்னையே சுத்திட்டு இருந்தாங்க அவங்க..” என்று அப்போதும் அவர் தன் வினையை மறைக்க அடுத்தவர் மீது பழிபோட

                  “போதும் சித்தி… அவங்க பணத்துக்காக திட்டம் போட்டாங்க.. நீங்க எதுக்காக உங்க தம்பியை வச்சு திட்டம் போட்டீங்க… எதுக்காக அந்த பொம்பளை பொறுக்கிக்கு என்னை கல்யாணம் செஞ்சு வைக்க பார்த்தீங்க… நான் உங்ககிட்ட அவனை பத்தி சொல்லல…”

                  “அதுக்கு என்ன சொன்னிங்க நீங்க… கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டாரு உங்க அப்பா… இப்போ இது தெரிஞ்சா என் வாழ்க்கையே போய்டும்டா ன்னு என் கால்ல விழ வரல நீங்க… இளங்கோவை நீங்க சரி செய்யறதா எனக்கு வாக்கு கொடுக்கல.. அப்போ நீங்க என்ன திட்டம் போட்டிங்க… நீங்க எதுக்காக திட்டம் போட்டிங்க…” என்று அவரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டவள் அவரை உலுக்க தொடங்க, பேய் முழி முழித்தார் சாவித்ரி…

                            தேவா கண்ணீருடன் அவரை விடாமல் உலுக்கிக்கொண்டே இருக்க, ரகுதான் அவளை அவரிடமிருந்து பிரித்து நிறுத்தினான்…

              அப்போதும் “பாவம் சித்தி அவங்க… சாகப்போற கடைசி நொடியிலே கூட என்னை நினைச்சு துடிச்சு இருக்காங்க… எவ்ளோ பெரிய பாவம் தெரியுமா.. உங்களுக்கு ஏன் சித்தி தோணல.. அப்படி என் அப்பாவையும், பாட்டியையும் மீறி என்ன செஞ்சிருப்பாங்க என்னை.. ஒரு வார்த்தை என்கிட்டச்சொல்லி இருக்கலாமே…” என்றவள் அதற்கு மேல் முடியாமல் உடைந்து அழ, மகளின் அழுகை பொறுக்காமல் குணா மகளை நெருங்க

                    தேவா சுதாரித்துக் கொண்டு எழுந்தவள் கையை நீட்டி அவரை விலக்கி நிறுத்தி விட்டாள். குணா அப்படியே நின்றுவிட “உங்களுக்கும் எனக்கும் எதுவுமே இல்ல… ரகு எனக்கு இவரை பார்க்கவே வேண்டாம்.. என்னை கூட்டிட்டு போங்க..” என்று அவன் நெஞ்சில் முகத்தை மறைத்துக் கொள்ள

                  “என்ன நடந்தது சாவித்ரி.. என்ன பண்ணி வச்சிருக்க நீ.. என் மக வாழ்க்கையை கெடுக்க பார்த்தியா..என்ன சொல்றா இவ..” என்று அவர் சாவித்ரியிடம் குதிக்க, சாவித்ரி பயத்தில் நடுங்கி கொண்டு நின்றார்..

                   “அவளை ஏண்டா கேட்கிற.. நான் சொல்றேன்… என் பேத்தி வாழ்க்கையை கெடுத்து அவளை இந்த வீட்லயே முடக்கி ஒரு மூலையில் போட திட்டம் போட்டவ அவ.. குடிக்கிறான், பொண்ணுங்க கூட சுத்துறான் ன்னு தெரிஞ்சும் அவன் தம்பிக்கு கட்டி வைக்க பார்த்தா…

                 “அன்னிக்கு நிலைமைக்கு நீயும், உன் மகளும் என் பேச்சை காதுலயே வாங்குறதா இல்ல.. நாந்தான் முத்து மாணிக்கத்துக்கு போன் போட்டேன்… அவன்கிட்ட பேசி செஞ்ச பாவத்துக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு என் பேத்தி வாழ்க்கையை காப்பாத்தி கொடுக்க சொன்னேன்…”

                 “அவன் தங்கம்… எனக்கு வாக்கு கொடுத்தது போலவே என் பேத்தி கல்யாணத்தை நிறுத்த எனக்கு உதவி செஞ்சான்.. நான் கண்ணீரோட நன்றி சொன்னப்ப கூட என் தங்கச்சி மகளுக்கு நான் செய்யமாட்டேனா ன்னு சொல்லிட்டான்.. அவனுக்கு தங்கச்சியா பிறந்துட்டு உன் பொண்டாட்டி எப்படி அப்படி மாறி போனா ன்னு இன்னிக்கு வரைக்கும் புரியவே இல்ல எனக்கு..”

                 “என் சொல் படி தான் எல்லாம் நடந்தது.. என் பேத்தியை வேற யாருக்கோ கொடுத்துட்டு வேடிக்கை பார்க்கிறதை விட,அவளை முத்து வீட்டுக்கு அனுப்புறது தான் சரி ன்னு எனக்கு பட்டது.. ரகுகிட்ட பேசினேன்.. அவனும் கொஞ்சத்துல சம்மதிக்கல..என் பேத்தியை பிடிச்சு இருந்தாலும், உன் மகள் வேண்டாம் ன்னு மறுத்துட்டான்…”

                “எனக்கு அவனை விட விருப்பம் இல்ல.. அவனை கட்டாயப்படுத்தி தான் கட்டி வச்சேன்… இன்னிக்கு வரைக்கும் என் நம்பிக்கையை காப்பாத்திட்டு இருக்கான்.. உன் மக உன்னை மறுத்து அவன் கூட நிற்கிறாளே அதுலயே தெரியலையா உனக்கு… என் பேத்தி என்ன வாழ்க்கை வாழறா ன்னு…”

                  “இவ தம்பி மலேசியால தான் இருக்கான்… உனக்கு சந்தேகம் இருந்தா அவனை பிடிச்சு கேட்டுக்க… இவ என்ன என்ன கேடுகெட்ட வேலையெல்லாம் செஞ்சிருக்கா ன்னு…”என்று கூறி முடித்தவர் தன் பேத்தியை நெருங்க இன்னும் கூட அழுகைதான் அவளிடம்…

                 என்ன முயன்றும் அவளால் அந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர முடியாமல் போக, கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை… பாட்டி பேத்தியை நெருங்கியவர் அவள் தலையை தடவி கொடுத்து கண்ணீர்விட, “எனக்கு இங்கே இருக்க வேண்டாம் ரகு.. போகலாம் ப்ளீஸ்..” என்று அழுகையோடு வந்தது குரல்…

                            பாட்டி “தேவா..” என்று அழைத்து அவளை தேற்ற முயல

            “ப்ளீஸ் பாட்டி.. எனக்கு இங்கே இருக்க வேண்டாம்.. நான் போறேன் ப்ளீஸ்..” என்றவள் “ரகு..” என்று அவன் கையை பிடிக்க, அடுத்த நிமிடம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை ரகு… அவள் கையை பிடித்துக் கொண்டவன் அவளைஅழைத்துக் கொண்டு வெளியேற, அவள் தந்தையின் முகத்தை ஒரு நொடி நேராக பார்த்தவள் “நான் இப்பொ இந்த வீட்டை விட்டு போறேன்.. இனி என் வாழ்நாள்ல நான் இந்த வீட்டு வாசலை மிதிக்கவே மாட்டேன்…”

            “நீங்களும் எப்பவும் என்னை தேடி வந்திடாதிங்க… எனக்கு நீங்க வேண்டாம்..” என்று உறுதியாக சொன்னவள் கணவனுடன் நடந்து விட்டாள்.

             

                 

                 

              

Advertisement