Advertisement

காதல் தருவாயா காரிகையே 23

                 ரகு அவன் வீட்டை அடைந்தபோது நேரம் இரவை தொட்டிருக்க, காலையில் இருந்து இப்போது வரை எதுவுமே உண்டிருக்கவில்லை அவன். பிரசன்னா அழைத்த நேரம் தான் சாப்பிட செல்வதாக இருந்தான். அவன் அழைக்கவும், அழைப்பை ஏற்றவன் அவன் கூறிய விஷயங்களில் உணவை மறந்து விட்டிருந்தான்.

                    ஆனால் அவன் வேலை சற்றே நீடிக்க, அதை முடித்துவிட்டு அடுத்த நிமிடம் அங்கிருந்து கிளம்பி இருந்தான். வழியில் எங்கேயும் நிற்காமல் கூட, அவன் வந்திருக்க நேரம் இரவு ஒன்பதை கடந்திருந்தது.. தேவா அவள் அத்தையுடன் தான் இருந்தாள் அந்த நேரம்.

                    பார்வதி அவளை தனியாகவிட மறுத்து விட்டவர் அவளை கீழே அழைத்து வந்து விட்டிருக்க, அவருடனும், சங்கரியுடனும் தான் நின்றிருந்தாள். ரகு வீட்டிற்குள் வரவும்,பார்வதி அவன் முகம் பார்த்தே அவன் சோர்வை கண்டு கொண்டவர் “குளிச்சிட்டு வா ரகு.. டிபன் எடுத்து வைக்கிறேன்..” என்று விட, மறுக்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்தான், ஆனால் பார்வை மொத்தமும் அங்கே ஓரமாக நின்றிருந்த தேவாவின் மீது தான்..

                அவன் பார்வையை சந்தித்தவள் தலையை குனிந்துகொள்ள, சற்றே கோபம்தான் ரகுவுக்கு..ஆனால் அன்னையின் முன் காட்டிக் கொள்ள விரும்பாமல் குளிக்க சென்றான். அவன் குளித்து முடித்து கீழே இறங்க,தேவா மட்டுமே உணவு மேசையில் அமர்ந்திருந்தாள்..

              பார்வதியும்,சங்கரியும் அவரவர் அறைக்கு சென்றிருக்க, தேவா மட்டுமே ரகுவுக்காக காத்திருந்தாள். அவன் வரவும் எழுந்து அவனுக்கு உணவை எடுத்து வைக்க,அவள் கையை பிடித்து இழுத்தவன் தன்னருகில் அவளை அமர்த்திக் கொண்டான்.

                  தேவா அவனை நிமிர்ந்து பார்க்க, அவளுக்கும் தட்டு வைத்து பரிமாறியவன் “சாப்பிடு…” என்றுவிட, “நான் ஏற்கனவே சாப்பிட்டேன்..” என்று அவள் சொன்னது அவன் காதிலேயே ஏறவில்லை…

                    “சாப்பிடுன்னு சொன்னேன்.. ” என்று வழக்கமான அழுத்தத்துடன் ரகு கூற, “இவனுக்கு மனசாட்சியே இல்லையா… “என்று ஆதங்கத்துடன் தான் பார்த்தாள் தேவா…

                    “நீ என்ன சாப்பிட்டு இருப்ப ன்னு எனக்கு தெரியும்… அதான் சொல்றேன், சாப்பிடு..” என்று அவன் உணவை அள்ளி அவள் வாயில் திணிக்க, “துப்பிவிடுவோமா..” என்று கூட தோன்றியது அவளுக்கு.. ஆனால் உண்ணாமல் விடமாட்டான் என்பது புரிய, அமைதியாக உண்ண தொடங்கினாள்.

                    அவளுக்கு ஊட்டி முடித்தவன், தானும் உண்டு முடித்து எழுந்து கொள்ள, பாத்திரங்களை ஒதுக்கி வைக்க தொடங்கினாள் அவள்.. அவள் செய்யும் வேலைகளை பார்வையிட்டுக் கொண்டே அவன் அமைதியாக அமர்ந்திருக்க, தேவாவுக்கு தான் கால்கள் பின்னியது. அவனின் அந்த பார்வை எதுவோ செய்ய, பார்வையால் மட்டுமே அவளை தீண்டிக் கொண்டிருந்தவன் அந்த பார்வையின் மூலமே அவளை கரைத்துக் கொண்டிருந்தான்..

                  அவள் வேலையை முடித்துவிடவும், அடுத்து என்ன என்று புரியாமல் சமையல் அறையில் நின்றுவிட, ரகு எழுந்து வந்தவன் எதுவுமே பேசாமல் அவளை தன் கைகளில் ஏந்தி இருந்தான்..தேவா அப்போதும் மௌனமாகவே இருக்க, அவளை தூக்கி கொண்டே தன் அறையை அடைந்தவன் அவளை கட்டிலில் விடாமல் அறையின் வாசல் தாண்டியதுமே இறக்கி விட்டுவிட்டான்.

                     தேவா அவன் விட்ட இடத்திலேயே நிற்க, கதவை தாழிட்டவன் அந்த அறையில் இருந்த மேசையில் சற்றே சாய்ந்தவாறு நின்று கொள்ள, அவனையே பார்த்து நின்றிருந்தாள் தேவா… அவள் அமைதியை ஏற்க முடியாமல்

                      “என்ன கேட்கணும் நந்தனா.. சட்டு ன்னு கேட்டுடு…” என்ற ரகுவின் விழிகள் தேவாவை மட்டுமே நோக்கி கொண்டிருக்க

                       “நான் எப்பவும் கேட்கமாட்டேன்…எனக்கு தெரியணும் ன்னு நீங்க நினைச்சா சொல்லுங்க.. போதும்..” என்றவள் குரல் வெகு நிதானமாக ஒலிக்க

                       “இங்கே வா…” என்று கைகளை லேசாக மேலெழுப்பினான் ரகு.. தேவா அசையவே இல்லை..அவளை சட்டென கீழே இறக்கிவிட்டு அவன் விலகி நின்றது பிடிக்கவே இல்லை..இத்தனை களேபரத்திலும் மனம் அதனை குறித்து வைத்திருக்க, இப்போது அவன் அழைக்கவும் நெருங்கும் எண்ணம் இல்லை.

                     “கீழே விட்டாய் தானே..” என்று நினைத்தவளாக அவள் நிற்க,ரகு புன்னகையுடன் தான் நின்றிருந்தான்.. அதே புன்னகையுடன் அவளை நெருங்கி தானாகவே அவள் கைகளை எடுத்து தன்னை சுற்றி போட்டுக் கொண்டவன் “வில்லன்கிட்ட மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கா..” என்று கேட்டுக் கொண்டே அவளை இடையோடு அணைக்க

                     “அப்படி நினைக்க முடிஞ்சா கூட, நிம்மதியா இருக்கும்.. என்னால உங்கள தப்பா நினைக்கவே முடியல… “என்றவள் கண்ணீர் விட

                     “தப்பா நினைக்க முடியல ன்னு ஏண்டி அழற…” என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டவன் அவளை மென்மையாக அணைத்து கொள்ள, அவன் நெஞ்சில் புதைந்து போனாள் அவள். அந்த நிமிடம் சூழ்ந்திருந்த சங்கடங்கள் சற்றே மட்டுப்பட்டது போல் தோன்றியதென்னவோ நிஜம்..

                     ஏதோ ஒரு மூலையில் ரகு பொய்த்து போக மாட்டான் என்ற நம்பிக்கை துளிர்விட, அதை பற்றிக் கொண்டவள் அந்த நிமிடம் வரை தாக்கு பிடித்திருக்க, ரகு அந்த சில நொடிகளில் அவள் நம்பிக்கையை விருட்சமாக வளர்த்து விட்டிருந்தான்..

                     மனதின் குழப்பங்கள் இன்னும் அப்படியே இருந்தாலும், ரகுவை எந்த விதத்திலும் குற்றம் சாட்டவில்லை பெண்..அவன் அணைப்பில் அடங்கி நின்றிருக்க, அவளை மீண்டும் கையில் லேசாக தூக்கி கொண்டவன் அந்த அறையில் இருந்த ஒற்றை நாற்காலியில் அமர்ந்து அவளை மடியில் இருத்திக் கொண்டான்..

                      குழந்தையை போல் அவளை தாங்கி இருந்தவன், அவளை கழுத்தோடு அணைத்துக் கொண்டிருக்க, அவள் முகத்திற்கு வெகு சமீபத்தில் இருந்தது அவன் முகம். ஆனாலும் அவனை பார்க்காமல் தேவா விழிகளை தாழ்த்தி அமர்ந்திருக்க, அவள் கழுத்தை இன்னும் இறுக்கி அவளை தனக்கு நெருக்கமாகக்கொண்டு வந்தவன் “ஒரே ஒரு முறை கேளு..எல்லாத்தையும் சொல்லிடறேன்..” என்று அவள் கன்னத்தில் உதடுகளால் உரசியபடி கூறி முடிக்க

                  அவனை கண்களை திறந்து பார்த்தவள் “எனக்கு கேட்க ஒன்னும் இல்ல..” என்றுவிட

                “அவ்ளோ நம்பிக்கையா என்மேல..” என்று கேட்டவன் இதழ்கள் இந்த முறை அவள் கழுத்தில் புதைந்திருந்தது.. தேவா மீண்டும் கண்களை மூடி  கொள்ள, அவளை நிமிர்ந்து பார்த்தவன் புன்னகையுடன் அவளிதழ்களை கொள்ளையிட தொடங்கினான் நந்தன்..

                   தேவா “என்ன செய்கிறான் இவன்..??” என்று அதிர்ந்தவளாக கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக் கொள்ள, அவளை அள்ளிக் கொண்டவன் கட்டிலை அடைந்து அங்கும் தன் கைவளைவிலேயே அவளை இருத்திக் கொண்டான்…

                     தேவாவுக்கு இருந்த குழப்பங்களில் இப்போது இது தேவைதானா என்று தோன்றினாலும், அவனிடம் மறுக்கும் எண்ணம் இல்லாததால் அமைதியாகவே இருக்க, அவளை ஒரு கையில் இறுக்கி இருந்தவன் தன் மற்றொரு கையால் சட்டை பையில் இருந்த தன் அலைபேசியை எடுத்தான்.

                    தேவா அவனையே பார்க்க, இளங்கோவுக்கு அழைத்தவன் தன் அலைபேசியை தேவாவிடம் நீட்டினான்.. தேவா புரியாமல் அலைபேசியை வாங்கியவள் திரையில் மின்னிய எழுத்துக்களை கண்டதும் அழைப்பை துண்டித்து இருந்தாள்..

                  ரகு அவள் முகத்தை பார்க்க “எனக்கு அவனோட பேச எதுவும் இல்ல… அதோட எனக்கு நீங்க தான் சொல்லணும்.. உங்களைப்பத்தி வேற ஒருத்தர்கிட்ட நான் தெரிஞ்சிக்க வேண்டாம்…” என்று அழுத்தமாக கூறியவள் அவன் கை வலையிலிருந்து விலகி படுத்துவிட,அவளை நெருங்கி அணைத்து கொண்டவன் நிச்சயம் பரவச நிலையில் தான் இருந்தான்.

                 அவனுக்கு அப்போதே அவள் வேண்டும் என்ற நிலை.. ஆனால் அவள் மனநிலையும் முக்கியமாக தோன்ற “நந்தும்மா ப்ளீஸ்.. நாம இதைப்பத்தி கொஞ்ச நேரம் கழிச்சு பேசுவோமா… எனக்கு இப்போவே இந்த நிமிஷமே என் நந்து வேணும்..” என்றவன் அவள் முகம் பார்க்க

                  “நான் எப்போ வேண்டாம் ன்னு சொன்னேன்..” என்று கேட்டிருந்தாள் தேவா… தேவாவின் மொத்த காதலும் அந்த நிமிடம் அவள் முகத்தில் தெரிய, அடுத்தடுத்த நிமிடங்களில் தன்னுடைய காதலை அவளிடம் கொட்ட தொடங்கி இருந்தான் ரகு..

                    தேவாவுக்கு அந்த நாளின் நினைவுகள் மெல்ல மெல்ல பின்னே செல்ல, ரகு மட்டுமே முழுவதுமாக அவள் நிஜத்தை ஆட்கொள்ள தொடங்கி இருந்தான்… இருவரும் நிஜத்தில் திளைத்து, நினைவுகளை மறந்து, தங்களில் மூழ்கி முத்தெடுத்த நேரம் தேவாவை தன் நெஞ்சில் தாங்கி கொண்டான் ரகுநந்தன்.

தேவா சுகமாக கண்களை மூடிக் கொண்டுஅவன் மீது சாய்ந்திருந்தவள் மெதுவாக விலகி எழுந்து குளியல் அறைக்குள் சென்று வர, புன்னகையோடு அவளுக்காக காத்திருந்தான் ரகு..

                முகத்தை கழுவிக் கொண்டு வந்தவள் அவனருகில் அமர, அவள் மடியில் தலை வைத்துக் கொண்டவன், அவள் முகம் பார்க்கும்படி படுத்துக் கொண்டான். தேவாவின் இரு கைகளையும் தன் கையில் பிடித்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டவன் “என்மேல கோபமே வரலையா தேவா…” என்று நெகிழ்ந்த குரலில் கேட்க

                “தெரியல.. ஆனா எங்கேயோ ஒரு இடத்துல நீங்க தப்பு செய்திருக்கமாட்டிங்க ன்னு இப்போவும் தோணிட்டே இருக்கு..” என்றாள் மனைவி..

                 ரகுவுக்கு அந்த வார்த்தை போதுமாக இருக்க, அவள் மடியிலிருந்து எழுந்து கொண்டவன் தன் அலமாரியை திறந்து அதிலிருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான். தேவா என்ன என்பதுபோல் பார்க்க “ம்ம்..”என்று அவன் உந்த, அந்த புகைப்படத்தை கையில் வாங்கி கொண்டாள் அவள்.

               அது அவளுடைய படம்தான் என்பது அவன் கையில் இருக்கும்போதே புரிந்துவிட, என்ன சொல்ல வருகிறான் என்பது புரியவில்லை. அவள் அந்த படத்தைப் பார்த்திருக்கும் போதே அவள் மடியில் மீண்டும் படுத்திருந்தான் ரகு.

              தேவா இப்போது அவன் முகம் பார்க்க “உன்னை ரொம்ப சின்ன பொண்ணா தான் பார்த்திருக்கேன்.. பெருசா உன் முகம் கூட நியாபகத்துல இல்லாத நேரம்.. சரியா நம்ம கல்யாணத்துக்கு மூணு மாசம் முன்னாடி ஒருநாள் என் அப்பா என்னை சென்னைக்கு கூட்டிட்டு போனாரு…

               “அப்போதான் உன் பாட்டியை பார்த்தேன்… அவங்க தான் இந்த படத்தை என்கிட்டே கொடுத்தாங்க.. முதல்ல இந்த கல்யாணத்தை நிறுத்தி உனக்கு வேற மாப்பிளை பார்க்கிற ஐடியா தான்… அப்பா உன்னை பார்க்கணும் ன்னு கேட்கவும் இந்த படத்தை கொண்டு வந்திருந்தாங்க…

                “என்ன தோணுச்சோ, நாங்க கிளம்புற நேரம் “என் பேத்தியை உன் மகனுக்கு கட்டிக்கிறியா” ன்னு அப்பாகிட்ட கேட்டுட்டாங்க.. எனக்கும் அதிர்ச்சி தான்… உன் அப்பன் முகம் வேற க்ளோஸ் அப்ல வந்துட்டு போச்சு.. வேண்டாம் சொல்லிட்டேன்.

                                “ஆனா, டேபிள்ள இருந்த உன்  போட்டோவையும் அத்தனை சுலபமா கடக்க முடியல.. கொஞ்ச கொஞ்சமா இந்த பொண்ணு கொள்ளையடிச்சிட்டா… “

            “அப்போகூட உன் கல்யாணத்தை நிறுத்திட்டு, கிளம்பி ஊருக்கு வர்றதா தான் இருந்தேன்.. ஆனா, எப்படியோ எங்கேயோ ஒரு எண்ணம்… ஏன் என் மாமன் பொண்ணு தானே.. நான் கட்டிக்கிட்டா என்ன??… அப்படி தோன்றவும் தான் உன் பாட்டியை கூப்பிட்டு பேசினேன்…

               “சரியா உன் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி, உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது ன்னு முடிவு பண்ணிட்டேன்.. எல்லாமே திட்டம் போட்டது நாந்தான்… இளங்கோவை அவன் லவ்வரோட மலேசியா அனுப்பி வச்சதும் நாந்தான்..

            “ஏற்கனவே ஒருத்தியை லவ் பண்ணிட்டு உன் சித்தியோட டார்ச்சர்ல உன்னை கட்டிக்க சம்மதம் சொல்லி இருந்தான்.. உன் பாட்டி மூலமா விஷயம் தெரியவும் நான் அவனுக்கு உதவி செஞ்சேன்.. அவனும் அவன் லவ் பண்ண பொண்ணோட மலேசியா போக ஒத்துக்கிட்டான்..”

                “அவனுக்கு பெருசா குற்ற உணர்ச்சியெல்லாம் இல்ல… உன் சித்தி உங்க பணத்தை காட்டி அவனை முழுசா மயக்கி கல்யாணத்துக்கு அவனை தயார் பண்ணி இருந்தாங்க.. அவனோட லேசா பேசி பார்க்கும்போதே அவன் அந்த பொண்ணை எவ்ளோ காதலிக்கிறான் ன்னு புரிஞ்சிடுச்சு.. அவனை அந்த பொண்ணோட அனுப்பி வச்சிட்டு, இந்த பொண்ணுக்கு நானே மாப்பிளையாகிட்டேன்..” என்று கதை சொல்லும் குரலில் அவன் சொல்லி முடித்து விட

                   அப்போதும் எதுவும் கேட்கவில்லை தேவா… அவள் ரகுவை பார்த்தபடியே இருக்க “என்னடி..”என்று ரகு கேட்கவும்

                 “நீங்க என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டது மட்டும்தான் உண்மை.. மே பி இளங்கோவை அவன் காதலிச்ச பொண்ணோட நீங்களே சேர்த்து வச்சிருக்கலாம்… ஆனா ரொம்பவே பாலிஷ்டா யாரையும் பெருசா குறை சொல்லாம, அடுத்தவங்களை கையை நீட்டாம முடிச்சிட்டீங்க…”

                 ‘நிச்சயமா எனக்கு தெரியாம இன்னும் ஏதோ இருக்கு… ஆனா, உங்ககிட்ட இருந்து எந்த உண்மையும் வராது.. ” என்று உறுதியாக சொன்னவள் “நான் யார்கிட்ட கேட்கணுமா, அங்கே கேட்டுக்கறேன்… என்னை சென்னை கூட்டிட்டு போங்க…” என்று விட்டாள்.

                   அவள் சென்னைக்கு அழைக்கவும் அதிர்ந்தவன் “தேவா.. “என்று எழுந்து அமர

                 “என் கல்யாணத்துல நீங்க சொன்னதுக்கு மேல, வேற ஏதோ விஷயம் இருக்கு ரகு..நீங்க உங்க விஷயத்தை மட்டும் தான் சொல்லி இருக்கீங்க… எனக்கு இது போதாது…” என்று அவள் தெளிவாக கூற,

                  “நீ தெரிஞ்சிக்க வேண்டியதை நான் உனக்கு சொல்லிட்டேன் தேவா… இதுக்கு மேல என்ன தெரியணும்… இந்த விஷயத்தை இதோட விட்டுடு..” என்று ரகு அவளிடம் வலியுறுத்த

                  “என்னால விட முடியாது.. நான் விடறதா இல்ல..” என்றவள் தன்னிடத்தில் படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.. ரகு அவளையே பார்த்து அமர்ந்திருக்க, அவள் சில நிமிடங்களில் உறங்கி இருந்தாள்..

                   அடுத்த நாள் காலையிலும் நான்கு மணிக்கே எழுந்து கொண்டவள் குளித்து வெளியே செல்பவள் போல் தயாராகி நின்றிருந்தாள். ரகு அப்போது தான் எழ “என்னை சென்னைக்கு கூட்டிட்டு போங்க..” என்பது தான் அவள் வாயிலிருந்துவந்த முதல் வார்த்தைகள்…

                    ரகுவுக்கு அவளின் மனநிலை புரிந்தாலும், இவள் தாங்குவாளா என்பது தான்  பெரிய கவலையாக இருந்தது… ஆனால் இதற்குமேல் தான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டாள் என்பதும் தெரிந்து போக, குளித்து முடித்து அவளுடன் கிளம்பினான் அவன்.

                    இந்த சென்னை பயணம் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறதோ… இல்லை தேவாவை என்ன செய்ய காத்திருக்கிறதோ… நேற்று இரவு ரகுவின் விஷயத்தில் இருந்த நம்பிக்கை இப்போது யார் மீதும் வர மறுத்தது… இப்போதும் அவன் ஒருவனே உடன்வர தன் உறவுகள் பொய்த்து விடுமோ என்ற அச்சத்துடனே நகர்ந்தது தேவாவின் நிமிடங்கள்….

                 

Advertisement