Advertisement

காதல் தருவாயா காரிகையே 22

 

                                      தேவா கடையை விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே முத்து மாணிக்கம் கடைக்கு வந்து சேர்ந்திருந்தார். பிரசன்னா என்ன செய்வது என்று புரியாமல் நின்று விட்டிருக்க, அவனுக்கு தேவா கடையில் இல்லை என்பது கூட தெரியவில்லை.

 

                                     அவன் அவனுடைய எண்ணங்களிலேயே உழன்று கொண்டு நிற்க, முத்து மாணிக்கம் வந்தவர் அவன் தோளை தொட்டு அசைக்க, “பெரியப்பா..” என்று அப்போது தான்  கலைந்தான் அவன்.

 

                      “தேவாம்மா எங்கேடா..” என்று முத்து மாணிக்கம் கேட்க, அப்போது தான் தேவா கடையில் இல்லை என்பதே தெரிந்தது பிரசன்னாவுக்கு. சற்றே அதிர்ந்தாலும்வீட்டுக்கு போறேன் ன்னு கிளம்பினாங்க பெரியப்பா..” என்று சொல்லவும்

 

                     “தேவாம்மா வண்டியை நான் எடுத்துட்டு போய்ட்டேனே.. நடந்தே போயிருக்காடா.. நீ என்ன பண்ணிட்டு இருந்தஇங்கேயே இருக்க சொல்ல வேண்டியது தானே..” என்று அவர் அதட்ட

 

                   பிரசன்னாநான் போய் பார்க்கிறேன் பெரியப்பா.. இப்போதான் கிளம்பினாங்கஅப்படியே வீட்டுக்கும் போயிட்டு வந்துடறேன்பெரியம்மா வர சொல்லி இருந்தாங்க..” என்று விட்டு அவர் பதிலை கூட எதிர்பார்க்காமல் கிளம்பி விட்டான்.

 

                   கடையிலிருந்து கிளம்பியவன் அவன் வீடு இருந்த தெரு முனைக்கு அருகில் தான் தேவாவை பிடிக்க முடிந்தது.. அவள் அருகில் வண்டியை நிறுத்தியவன்ஏன் அண்ணி நடந்தே வந்திங்க.. என்கிட்டே சொன்னா கூட்டிட்டு வர மாட்டேனாஏறுங்க…” என்று நிற்க, எதுவும் பேசாமல் அவன் வண்டியில் ஏறி கொண்டாள்.

 

                    இருவரும் ஒன்றாக வரவும், சங்கரிஎன்னடா நீயும் வந்துட்டபெரியப்பா தனியா என்ன செய்வாங்க.. நீ கூட இருக்க வேண்டியது  தானே..” என்று கேட்க, அவன் பதில் சொல்வதற்கு முன்பாகவே அவர்களை கடந்து தங்கள் அறைக்கு சென்றுவிட்டாள் தேவா.

 

                 பிரசன்னா தன் அன்னையின் கேள்விக்கு பதில் கூறாமல் தன் பெரியம்மாவை தேடி செல்ல, சங்கரியும் அவன் பின்னோடு சென்றார். பார்வதி பின்கட்டில் இருக்க, அவரிடம் சென்று நின்றவன் நடந்தது அனைத்தையும் அவன் பார்த்த வரையில் ஒன்று விடாமல் கூறி முடித்து விட்டான்.

 

                பார்வதிக்கும் அதிர்ச்சிதான்தன் மகன் இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பான் என்பதையே அவரால் நம்ப இயலவில்லை. இந்த திருமணம் முழுக்க முழுக்க சுந்தராம்பாளின் விருப்பத்திற்காக மட்டுமே நடந்தது என்று அவர் இன்று வரையில் நம்பி இருக்க, இது என்ன புது குழப்பம் என்று தான் அவர் எண்ணம் ஓடியது.

 

                   இதற்குள் சங்கரி அவரை உலுக்கியவர்அக்கா.. தேவா முகமே சரி இல்ல.. நீங்க அவளை முதல்ல பாருங்க..” என்று விரட்ட, பார்வதிக்கும் அதுவே முதன்மையாக பட்டதால் தேவாவின் அறைக்கு சென்றார் அவர்

 

               தேவா கட்டிலில் கண்களை மூடி தலையை பின்னால் சாய்த்து அமர்ந்திருக்க, பார்வதிதேவா..” என்று அழைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தார். அவரை கண்டவள்வாங்க அத்தை… ” என்று காலை மடித்து அமர்ந்து கொள்ள, அவள் அருகில் அமர்ந்தவர்என்னடா.. ஏன் முகம் வாட்டமா இருக்கு…” என்று விசாரிக்க

 

                “பிரசன்னா சொல்லி இருப்பானே அத்தைஅப்பா வந்திருந்தாங்க..” என்று கூறியவள் அதோடு முடித்துக் கொள்ள, “உனக்கு என்ன தோணுது தேவாரகு தப்பு பண்ணி இருப்பான் ன்னு நீ நினைக்கிறியா…” என்று மெல்லிய குரலில் அவர் கேட்க

 

              மெலிதாக சிரித்தவள்உங்க மகனோட எப்பவும் தப்பான விஷயங்களை சேர்க்கவே முடியாது அத்தை.. நிச்சயமா இதுக்கு பின்னாடி ஏதோ விஷயம் இருக்குஉங்க மகனுக்கும் எல்லாமே தெரிஞ்சிருக்கு.. அப்பா பொய் சொல்ல மாட்டாங்கஇளங்கோ விஷயத்துல ரகு என்ன செஞ்சார் ன்னு அவர்தான் சொல்லணும்..அதுவரைக்கும் நாமளே ஒரு முடிவுக்கு வர முடியாது.. பார்ப்போம்..” என்றுஅவள் முடிக்க,அவள் முகம் லேசான வேதனையை காட்டியது..

 

               பார்வதி அவளை தன் மடியில் சாய்த்துக் கொள்ள, மறுக்காமல் படுத்தவள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வடிய, பார்வதி அழுத்தமாக அவள் கண்களை துடைத்துவிட்டவர்ஏன் அழற.. என்ன நடந்துடுச்சு இப்போ. ரகு வந்த உடனே அவன் சட்டையை பிடிச்சு கூட சண்டை போடு.. ஏண்டா இப்படி செஞ்ச ன்னு கேளுஆனா அழக்கூடாதுதைரியமா இருக்கணும்..” என்று அவர் ஆறுதல் அளிக்க, சம்மதமாகத் தலையசைத்தாள் தேவா.

 

                 சற்று நேரம் அவர் மடியில் படுத்திருந்தவள்அப்பாவுக்கும், மாமாவுக்கும் என்ன பிரச்சனை அத்தை..” என்று பார்வதியிடம் கேட்க  

 

                  ஒரு பெருமூச்சுடன்நீதான் பிரச்சனைஉன்மேல யாருக்கு உரிமை அதிகம் ன்னு தான் சண்டையே..” என்று கூறினார் அவர். தேவா  பார்வதியை புரியாமல் பார்க்க

 

                  “உன் அப்பா குடும்பம் இதே ஊரை சேர்ந்தவங்க தான்.. ஆனா அவங்க அந்த காலத்துலயே மெட்ராஸ்ல குடியேறிட்டாங்கஇங்கே ஊர் திருவிழா, வேற ஏதாவது விசேஷம் ன்னா மட்டும் வந்து போவாங்க

 

                 “அப்படி ஒருமுறை சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு வந்தப்ப தான் உன் அம்மாவை பார்த்து  பிடிச்சு போச்சு உன் அப்பாவுக்குஅவங்க கொஞ்சம் வசதியா இருக்கவும், இங்கே நம்ம வீட்ல கொஞ்சம் பயந்துட்டே தான் இருந்தாங்க..

 

                 “ஆனா உன் அப்பா பிடிவாதமா இருக்கவும், யாரும் எதுவும் செய்ய முடியல.. எப்படியோ ஜானகியை கல்யாணம் பண்ணிட்டாருஇங்கே நம்ம வீட்ல அந்தளவுக்கு வசதி இல்லன்னு எப்பவும் ஒரு எண்ணம் இருந்துட்டே இருக்கும் அவங்களுக்கு…”

 

                “கல்யாணம் முடிஞ்ச கையோட ஜானகியை அழைச்சுட்டு மெட்ராஸ் போனது தான்.. இங்கே மறுவீட்டுக்கு கூட வரலஅப்போவே கொஞ்சம் கசப்புதான் ரெண்டு வீட்டுக்கும்அன்னிக்கு நிலைமைக்கு நம்ம கை தாழ்ந்து இருக்கவும் இங்கேயும் எதுவும் செய்ய முடியாத நிலை

 

                   “இன்னிக்கு எல்லாரும் வேணும்ன்னு நினைக்கிற பாட்டி கூட, அன்னிக்கு யாரையும் சேர்த்து பிடிக்கல.. கல்யாணம் முடிஞ்ச நாளா உன் அப்பா ஒருமுறை கூட இந்த வீட்டுக்கு வந்ததே இல்ல.. ஜானகி மட்டும்தான் வருவா..

 

                  “அதுவும் வருஷத்துக்கு ஒருநாளோ ரெண்டு நாளோஇங்கே வந்தாலும் தங்கினது எல்லாம் கிடையாது.. காலையில வந்தா சாயங்காலம் கிளம்பி போய்டுவா.. ஆனா உன் அப்பா யாருக்கு எப்படியோ, உன் அம்மாவுக்கு ரொம்பவே நல்ல புருஷன்…”

 

                 “ஜானகிக்கு இங்கே வர முடியல ங்கிறத தவிர்த்து வேற எந்த கவலையும் வராத அளவுக்கு அவளை பார்த்துக்கிட்டாரு.. அவ இங்கே வர்றப்போ நானே கேட்டு இருக்கேன்.. நான் நல்லா இருக்கேன் அண்ணி.. என்னை நல்லா பார்த்துக்கறாங்க ன்னு சொல்லும்போது அவ கண்ல தெரியுற மயக்கம் இருக்கே..”

 

              “அதுக்காகவே உன் அப்பா என்ன செஞ்சாலும் பொருத்துக்கலாம் ன்னு தோணிடும்.. அப்படி ஒரு சந்தோஷமான வாழ்க்கையைத்தான் உன் அம்மா வாழ்ந்தாஆனா யாரு கண்ணு பட்டுச்சோ, அவ ரொம்ப நாள் அந்த சந்தோஷத்தை அனுபவிக்கவே இல்ல…” என்று கண்களை துடைத்துக் கொண்டவர்

 

                   “கல்யாணமாகி ஆறு மாசத்துல உன் அம்மா உன்னை சும்மா தொடங்கிட்டா.. விஷயம் தெரிஞ்சதும் இங்கே எல்லாருக்கும் ரொம்பவே சந்தோஷம்.. உடனே ஜானகியை பார்க்கணும்ன்னு சென்னைக்கு வந்தாங்கஆனா, அப்பவும், உன் அப்பாவுக்கும், உன் பாட்டிக்கும்  அவங்க பணம்தான் பெருசா இருந்தது..

 

                 “இவங்க எல்லாரும் சென்னைக்கு வந்ததே உன் அப்பாவுக்கு பிடிக்கல.. இதுல அத்தை ஜானகியை இங்கே கூட்டிட்டு வந்து பார்த்துக்கறேன் ன்னு கேட்டு இருக்காங்க போல.. அது இன்னும் கோபம் உன் அப்பாவுக்குஉங்களால என்ன செய்ய முடியும்.. எப்படி பார்த்துப்பிங்க என் பொண்டாட்டியைஇது எங்க வாரிசு.. அப்படி இப்படி ன்னு இன்னும் நிறைய பேச்சு..

 

                   “உங்க வேலு மாமாவுக்கு கோபம் வந்து உன் அப்பாவோட சட்டையையே பிடிச்சிட்டாராம்.. அதுல உன் அம்மாவுக்கு கோபம்.. நான் எங்கேயும் வரல ன்னு சொல்லிட்டா.. அதுக்கு பிறகு இவங்க என்ன பேச முடியும்அமைதியா கிளம்பி வந்துட்டாங்க..

 

                  “இதை மனசுல வச்சிட்டே, உன் அம்மாவுக்கு வளைகாப்பு செய்ய கேட்டப்பவும் உன் அப்பா ஒத்துக்கவே இல்ல.. உன் பாட்டியும் இந்த ஊர்ல வசதி பத்தாது, நாங்க சென்னையிலேயே பார்த்துக்கறோம் ன்னு சொல்லிட்டாங்க

 

                   “உன் அப்பா ஒரே முடிவா அவரே சென்னையிலேயே வளைகாப்பை நடத்தி முடிச்சிட்டாருஇங்கே இருந்து யாரையும் கூப்பிட கூட இல்ல.. எப்படியோ மக நல்லா இருந்தா போதும் ன்னு நினைச்சு அத்தையும்,மாமாவும் இவங்களை அடக்கிட்டாங்க

 

                   “அடுத்து நீ பிறந்தப்பவும் எங்களுக்கு சொல்லலநாங்களா தெரிஞ்சு வந்தப்பவும் உன்னை பார்க்க விடலஅத்தை மட்டும் உன்னையும், உன் அம்மாவையும் பார்த்துட்டு வந்தாங்க…  அத்தை என்ன நினைச்சாங்களோ, இனி உன் தங்கச்சியை பார்க்க போகக்கூடாது, அங்கே இருக்கறது குணசேகரன் பொண்டாட்டி..  நீங்களா அந்த வீட்டுக்கு எப்பவும் போகக்கூடாது ன்னு உன் மாமாங்க கிட்ட சொல்லிட்டாங்க..

 

                  “அதோட ரெண்டு வீட்டுக்கும் சுத்தமா பேச்சு வார்த்தையே இல்ல.. எங்கேயோ அவ நல்லா இருந்தா சரின்னு நாங்களும் விட்டுட்டோம்..ஆனா ரெண்டு வருஷம் கழிச்சு, உன் அம்மாவை ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கறதா உன் பாட்டி சொல்லவும், பதறி போய்தான் கிளம்பி வந்தோம்…”

 

                 “ஆனா.. எதுவுமே செய்ய முடியல.. உன் அம்மாவுக்கு நீ பிறக்கும்போதே கர்ப்பப்பையில ஏதோ கட்டி இருந்து இருக்கு.. அது சாதாரண கட்டி ன்னு நினைச்சு, அது கரைய மாத்திரை மட்டும் கொடுத்திருக்காங்கஆனா அது புற்றுநோய் கட்டி ன்னு தெரிஞ்சு அவங்க வைத்தியம் பண்ண ஆரம்பிக்கிறப்போ உனக்கே ரெண்டு வயசு முடிஞ்சுபோச்சு…”

 

                “நாங்க அவளை பார்த்தப்போ அவளோட கடைசி நேரத்துல தான் இருந்தா அவஅடுத்த ஒரு வாரமும் போராட்டம் தான்.. உன் அப்பா மொத்தமா ஓய்ஞ்சு போயிருந்தாருநீ முழு நேரமும் என் கையில தான்தன்னை சுத்தி என்ன நடக்குது ன்னே புரியாம அழகா சிரிச்சிட்டு இருந்த உன்னை பார்க்கிறப்போ நெஞ்சை  அடைக்கும்ஆனா எதுவுமே செய்ய முடியல..

 

                “அந்த வாரத்திலேயே உன் அம்மாவோட உயிர் பிரிஞ்சிடுச்சு..அவ காரியமெல்லாம் முடியவுமே உன்னை நாங்களே வளர்த்துக்கறோம் ன்னு வேலு கேட்க, உன் அப்பா மறுத்துட்டாரு.. மறுபடியும் உன் அப்பாவுக்கும், வேலுக்கும் சண்டை

 

                  “இந்த முறை உன் பாட்டி, என் பேத்தியை நானே வளர்த்துக்கறேன்னு முடிச்சிட்டாங்கஇங்கே அத்த ஜானகியோட இழப்பை தாங்கிக்க முடியாம ரொம்பவும் ஒடஞ்சு போய்ட்டாங்க.. உன்னையும் உரிமையோட வந்து பார்க்க முடியாத சூழ்நிலை..

 

                    “ஜானகியோட அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்த உன் அப்பா, அடுத்த ஆறு மாசத்துல சாவித்ரியை ரெண்டாம் தாரமா கட்டிக்க, இன்னும் ரெண்டு வீட்டுக்கும் பிரச்சினை அதிகமா ஆகிடுச்சு.. உன் மாமாவுக்கு கோபம் வந்ததும் அப்போதான்..

 

                    “என் தங்கச்சியை கொன்னது பத்தலையாடா உனக்கு..இப்போ அவ மகளையும் எவகிட்டேயோ கொடுக்க போறியா.. என் தங்கச்சி குழந்தையை எங்ககிட்ட கொடுத்திடுடாராணி மாதிரி நாங்க வளர்ப்போம் ன்னு மறுபடியும் சண்டைகடைசி வரைக்கும் உன்னை கொடுக்க அவங்க சம்மதிக்கவே இல்லை..

 

                   “அதுக்கு பிறகு உன்னை பார்க்க வந்தப்போவும் எங்களை அனுமதிக்கல.. எங்க உறவே வேண்டாம்ன்னு ஒரேடியா ஒதுக்கிட்டாங்கஉன் மாமா மட்டும் உன்னை அப்பப்போ வந்து பார்ப்பாரு.. ரகுவும் ரொம்ப சின்னதா இருப்பான்.. அவன் தான் உன் மாமா கூட வருவான்

 

                   “உன்னை தூரவே நின்னு பார்த்திட்டு வந்துடுவாங்கநீ பெரியவளா ஆனப்போ கூட உன்னை பார்க்க நாங்க வந்தோம்.. ஆனா உள்ளேயே விடல.. பார்க்க முடியாது ன்னு சொல்லி, வெளிவாசலோட துரத்தாத குறையா அனுப்பி வச்சாங்க…”

 

                “அதைக்கூட பொறுத்துகிட்டு தான் வந்தோம்.. நீ நல்லா இருக்க, உன்னை பார்த்துக்கறாங்க ன்னு எங்களையே தேத்திகிட்டோம்.. ஆனா உன் தேவகி பாட்டி இறந்து போக ஒருநாள் முன்னாடி அவங்களுக்கு என்ன தோணுச்சோ உன்னைப் பார்க்கணும் ன்னு கேட்டாங்க

 

             “ஒரே ஒரு முறை உன்னை பார்த்துட்டா போதும்ன்னு அவங்க கேட்கவும், உன் பெரியமாமாவும், ரகுவும் தான் உன்னை பார்க்க வந்தாங்கஆனா உன் சித்தி அவங்களை உள்ளவே விடலஉன்னையும் பார்க்க முடியல.. உன் அப்பாவை பார்க்க ஆபிஸ் போயிருக்காங்க.. அவர் ஊர்லயே இல்லன்னு சொல்லிட்டாங்க அங்கேயும்ஆனா அன்னிக்கு தேதிக்கு உன் அப்பா எங்கேயுமே போகல…”

 

                 “அன்னிக்கு முழுக்க இவங்க அங்கேயே காத்திருக்க, இங்கே அத்தையோட உயிர் பிரிஞ்சுடுச்சு.. அந்த தகவல் தெரியவும் தான் ரெண்டு பெரும் கிளம்பி வந்தாங்க..ஆனா அவங்க இறப்புக்கு கூட உன் வீட்ல இருந்து யாருமே வரலஉன் பாட்டிக் கூட வராம போகவும் தான், ரகு மொத்தமா வெறுத்துட்டான்..”

 

                  “இனி சென்னைக்கே போகக்கூடாது ன்னு உன் மாமாகிட்ட ரொம்ப கோபமா சொல்லிட்டான்.. அவங்களும் மனசு வெறுத்து போயிருக்கவும், அவன் சொன்னதுக்கு தலையாட்டிட்டாங்க..அதோட நாங்க உன்னை பார்க்க வர்றதையும் நிறுத்திட்டோம்…”

 

 

                   “திடீர்ன்னு ஒருநாள் மூணு மாசத்துக்கு முன்னாடி நான் அவசரமா சென்னைக்கு போகணும் ன்னு உன் மாமா கிளம்பி வந்தாரு.. அவர் திரும்பி வந்த அடுத்த நாளே ரகுவோட மறுபடியும் சென்னைக்கு வந்தாருரெண்டு மூணு நாள்ல ரெண்டு பெரும் திரும்பி வந்துட்டாங்க… “

 

                    “அடுத்து உன் கல்யாணத்துக்கு தான் நாங்க சென்னைக்கு வந்ததுரகுகிட்ட அவர் ஏற்கனவே பேசி இருந்திருப்பார் போல..உன் கல்யாணம் நின்னப்போ, அவர் சொன்னதும் அவனும் மறுக்கவே இல்ல.. இப்போ யோசிச்சு பார்த்தா உன் அப்பா சொன்னதுக்கும், இதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ ன்னு தோணுதுடா..” என்று சொல்லி முடித்தார் பார்வதி..

 

                    அவர் சொல்ல சொல்ல ஒருமுறை கூட இடையிடாமல் அமைதியாக கேட்டு முடித்தவள் என்ன மனநிலையில் இருந்தாள் என்பதை அவளால் கணிக்கவே முடியவில்லை. தான் அனைத்துமாக நினைத்திருந்த தந்தை இந்த குடும்பத்திற்கு இத்தனை அநியாயங்கள் செய்திருக்கிறார் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

 

                      அவள் தந்தையை தவறாக நினைக்கவும் முடியாமல், தன் மாமன்களின் வேதனையும் தாங்கி கொள்ள முடியாமல் அவள்பட்ட வேதனை அவள் மனம் மட்டுமே அறிந்தது.. கண்களில் நீர் வழிய அவள் படுத்திருக்க, பார்வதிஎதுக்கு இப்போ அழற தேவா.. நீ இப்படி கஷ்டப்படக்கூடாது ன்னு தான் உன்கிட்ட இதுவரைக்கும் எதுவுமே சொல்லலஅழாதடா…” என்று பார்வதி கூற

 

                   “என்னை எப்படி அத்தை ஏத்துக்கிட்டிங்க.. என்மேல கோபமே வரலையா…” என்று கண்ணீரோடு அவள் கேட்க

 

                    “உன்மேல எதுக்கு கோபப்படணும்எங்க வீட்டு பொண்ணுடா நீஉனக்கு தெரிஞ்சு நீ எந்த தப்புமே செய்யலையேஉன்கிட்ட கோபப்பட என்ன இருக்கு…” என்று அவர் கேட்க

 

                  “பாட்டிபாட்டி என்னால தானேஎவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாங்க.. ஒருமுறை வந்து பார்த்திருக்கலாம் தானே…” என்றவள் அவர் மடியிலேயே விழுந்து அழ, அவள் இப்படி கலங்கி விடக் கூடாது என்று தானே அவர் இத்தனை நாள் இந்த விஷயங்களை மறைத்தே வைத்ததுஇன்று அவளின் வாழ்வுக்காகவே அவளிடம் சொல்லி இருக்க, அவளால் அந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்து வெளிவரவே இயலவில்லை

 

                      அவள் முழுதாக உடைந்து போனவளாக கதறி தீர்க்க, பார்வதி அவளை அணைத்து கொண்டவர்உன் பாட்டிக்கு போற வயசு தான்எல்லாமே பார்த்து, நல்லா வாழ்ந்து முடிச்சு தான் போயிருக்காங்கநீ இவ்ளோ அழுவ ன்னு தெரிஞ்சு இருந்தா, உன்கிட்ட சொல்லியே இருக்க மாட்டேன் தேவா.. சும்மா அழுதுட்டே இருக்க கூடாது…” என்று கண்டிப்புடன் கூறியவர், அவளுடனே அமர்ந்து கொண்டார்.

 

                   அவளை மீண்டும் மடியில் கிடத்திக் கொண்டவர் மெல்ல மெல்ல தட்டிக் கொடுக்க, தன்னை மறந்து அழுகையோடே உறங்கி போயிருந்தாள் தேவாஅவளை தலையணையில் சரியாக படுக்க வைத்தவர், அவள் அருகிலேயே தான் இருந்தார்

 

                   இடையில் சங்கரி, வானதி வந்து இருமுறை பார்த்துவிட்டு சென்றிருக்க, அப்போதும் எழுந்து கொள்ளவில்லை அவள்.. அப்படி ஒரு உறக்கம்.. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில் தான் ரகு அவளுக்கு அழைத்தான்..

 

                  அவள் அலைபேசி அருகில் இருந்த மேசையில் இருக்கவும், பார்வதி அதை எடுக்க,ரகுவின் எண்ணாக இருக்கவும் தானே ஏற்று பேசினார். ரகு அவரிடம் விவரம் கேட்டுக் கொண்டவன் தான் வரும்வரை அவளுடனே இருக்குமாறு பார்வதியிடம் கூற, அவரும் ஒப்புக்கொண்டார்.

 

                காரில் வானூர் திரும்பிக் கொண்டிருந்த, ரகுநந்தனுக்கு மனம் முழுவதும் தன் நந்தனாவின் நினைப்பு தான்.. அவளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டதாக தாய் சொல்லி இருக்க, என்ன நிலையில் இருக்கிறாளோ எந்த பதைப்பு தான் மனம் முழுவதும்

 

                   இவரை யாரு இந்த நேரத்துல வர சொன்னது என்று குணாவின் மீதும் ஆத்திரமாக வந்ததுஅவருக்கு என்ன தெரியும் என்பதும் அவனுக்கு முழுதாக தெரியாமல் இருக்க, அரைகுறையாக அவளிடம் அவர் உளறி வைத்ததிருந்ததை பிரசன்னா அழைத்து சொல்லி இருந்தான் ரகுவுக்கு..

 

                   அவரிடம் மனைவி தன்னை விட்டுக் கொடுக்காதது மகிழ்ச்சி தான் என்றாலும், தன்னையே நோகடித்துக் கொள்கிறாளே என்று தான் கோபம் வந்தது.. தனக்கு அழைத்துஎன்னடா செஞ்ச..” என்று கேட்டிருந்தால் கூட, சற்றே நிம்மதியாய் இருந்திருக்கும் அவனுக்கு.

 

                     எதையுமே செய்யாமல் வீட்டில் போய் முடங்கி கொண்டிருக்க, இவளை என்னவென்று சரி செய்வேன் என்று தவித்துக் கொண்டே தான் முன்னேறிக் கொண்டிருந்தான் ரகு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement