Advertisement

காதல் தருவாயா காரிகையே 21

                                ரகு அன்று அதிகாலையிலேயே கொள்முதல் விஷயமாக தேனீ கிளம்பி இருந்தான். இது அவ்வபோது நடப்பது தான், என்றாலும் இந்த முறை தந்தையை தனியே விட்டு செல்ல அவன் சற்று அதிகமாகவே யோசிக்க, பிரசன்னாவை கடையில் அன்று ஒருநாள் தந்தைக்கு உதவியாக அமர்த்திவிட்டு வந்திருந்தான் ரகுநந்தன்.

                                 ரகு மூன்று மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி இருக்க, அவன் அரவம் கேட்ட தேவாவும் அந்த நேரத்திற்கே எழுந்து விட்டிருந்தாள்.. நேற்று இரவு அவள் பார்த்த ரகுவுக்கும் எனக்கும் சம்பந்தன் இல்லை என்பது போல் அந்த காலையில் குளித்து கிளம்பி விட்டவன் அறையை விட்டு வெளியேறும் நேரம் அவளை இழுத்து அணைத்து அவள் வாசத்தை முழுவதுமாக தன்னுள் நிறைத்துக் கொண்டே கிளம்பினான்…

                              தேவாவுக்கு அதற்கு மேல் உறக்கம் வராமல் போக, கையில் தனது மொபைலை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.. மெல்லிய இசையாக பாடல் ஒலிக்க, ரகுவின் நினைவுகளில் மூழ்கியவளாக பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

                            அப்படியே கிட்டத்தட்ட ஒருமணி நேரத்தை கழித்தவள் அதற்குமேல் முடியாமல், எழுந்து  குளித்து விட்டு கீழே இறங்க, அதன் பின் அவளின் வழக்கமான தினமாக வேலைகள் தொடங்கி இருந்தது.. ரகு இல்லாததால் பிரசன்னா ஐந்து மணிக்கே எழுந்து வெளியே வர, கடை சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

                          அதன்பின் ஒவ்வொருவராக விழித்து எழ, சமையலறையில் வழக்கம் போல் பார்வதியும், தேவாவும் நின்றிருக்க, அவர்களோடு சங்கரியும் தானாகவே இணைந்து கொண்டிருந்தார். தேவா சரியான நேரத்திற்கு வேலு மாணிக்கத்திற்கு காலை உணவை எடுத்து செல்ல, அடுத்து வானதியும், காவேரியும் கல்லூரிக்கு கிளம்பி இருந்தனர்.

                     பிரசன்னாவும் இதற்குள்  கடையை பெரியப்பாவிடம் ஒப்படைத்து விட்டு வந்திருந்தவன் அவனும் கிளம்பி கல்லூரிக்கு சென்றுவிட, தேவா பெரிதாக வீட்டில் வேலை என்று ஒன்றும் இல்லாததால் தன் பெரியப்பாவுக்கு உதவியாக இருக்கிறேன் என்று கடைக்கு கிளம்பி விட்டாள்.

                      இதுவும் இப்போதெல்லாம் அடிக்கடி வாடிக்கையாகி கொண்டிருந்தது… கையில் வண்டி இருப்பதால் நினைத்த நேரம் கடைக்கு வந்து விடுவாள்..  பெரிதாக அவள் எந்த வேலையும் செய்ய வேண்டி இருக்காது அங்கே.. அனைத்து வேலைகளுக்கும் ஆட்களை ரகு நியமித்து இருக்க, எல்லாம் சரியாக நடக்கிறதா என்று பார்க்கும் வேலை தான் முத்து மாணிக்கத்திற்கே.

                  ஆனால் தேவா கடைக்கு வந்தால் கடையின் ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் அவள் பார்வை சுழலும்.. சலிக்காமல் பத்து முறையாவது அந்த கடையை சுற்றி வருவாள். அவ்வபோது அவளுக்கு தோன்றும் மாற்றங்களையும் அவள் சொல்ல தொடங்கி இருக்க, அவளுக்காகவே அந்த தொழிலில் ஒரு ஈடுபாடு வந்திருந்தது…

                      முதலில் தயக்கத்தோடு தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டவள் ரகுவின் மெச்சுதலில், இப்போதெல்லாம் தான் நினைப்பதை அப்படியே அவனிடம் கடத்த தொடங்கி இருந்தாள்.. அவளின் பேச்சில் இருந்த தெளிவிலும், முதிர்ச்சியிலும் ரகுவும் அவள் சொல்லும் விஷயங்களை அமைதியாக கேட்பவன், அவளின் வழி காட்டுதலில் இப்போது ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடுகளை தொடங்கி இருந்தான்.

                    அவனின் முதலீடுகளின் மொத்த பொறுப்பும் தேவா தான்.. அவன் தன் கணக்கிலிருந்து அவள் கணக்கிற்கு பணத்தை மாற்றி விடுவதோடு சரி.. மற்றபடி அதை லாபம் தரும் பங்குகளில் முதலீடு செய்வதோ, வாங்குவதோ, விற்பதோ அத்தனை முடிவும் தேவாவினுடையது தான்…

                   இன்று வரை அவன் கொடுத்த பணத்திற்கும் கணக்கு என்று எதுவும் கேட்டதில்லை ரகு.. தேவா எப்போதும் போல் கடைக்கு வந்தவள் அன்றும் நிதானமாக கடையை சுற்றி வந்து முத்து மாணிக்கத்தின்  எதிரில் அமர,

                   “நீ வேற ஏண்டா.. இங்கே வந்து உக்காந்திட்டு இருக்க.. வீட்ல அத்தையோட இருக்கலாம்ல..” என்று பாசமாகவே அவர் கேட்க

                    “இருக்கேன் மாமா.. பிரசன்னா வர்ற வரைக்கும் தானே…. பிரசன்னா வந்தவுடனே நான் கிளம்ப போறேன்.. கொஞ்ச நேரம்தானே…” என்று அவள் கூறிவிட

                    “சரி.. நீ கடையிலேயே இருக்கியா… நான் நம்ம வயலுக்கு போய் ஒரு எட்டு பார்த்துட்டு, அப்படியே தோப்புக்கும் போயிட்டு வந்துடறேன்..” என்று அவர் கேட்க

                    “வண்டி எடுத்திட்டு போங்க.. அங்கே வெயில்ல ரொம்ப நேரம் இருக்க கூடாது.. அரைமணி நேரத்துல திரும்ப இங்கே வந்திடனும்..” என்ற நிபந்தனையோடு அவரை அனுப்பி வைத்தாள் மருமகள்.

                       வயலில் வேலை நடந்து கொண்டிருக்க, அருகில் இருந்து கவனித்தே ஆக வேண்டிய கட்டாயம் தான்.. ஆனால் கடையை விட்டு எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டே முத்து மாணிக்கம் அமர்ந்திருக்கும் நேரத்தில் தான் தேவா வந்தது.

                     அவள் வரவும் அவளை கடையை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு தான் வயலுக்கு கிளம்பி விட்டிருந்தார் அவர். அவளும் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள், கணினி திரையின் முன்னால் அமர்ந்து கடையின் சிசிடிவி யை பார்வையிட்டுக் கொண்டிருக்க, கடையின் வெளிப்புறம் இருந்த கேமராவில், கடைக்கு சற்று தள்ளி நின்றிருந்த அந்த கார் அவளின் கவனத்தை கவர்ந்தது.

                      காரின் வெளியே காரில் சாய்ந்து நின்றிருந்தார் குணசேகரன்… அவளின் தந்தை.. கண்ட நொடிகள் சட்டென அவள் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி கொள்ள, சட்டென இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவள் வேகமாக கடையின் வாயிலுக்கு செல்ல தொடங்க, சட்டென ஏதோ தோன்றவும், நின்ற இடத்தில்  நின்றுவிட்டாள்..

               

                       தந்தை இதற்கு முன்னால் தன்னுடன் பேசிய வார்த்தைகள் நினைவு வர, கலங்கிய கண்களை யாரும் கண்டு விடாமல் மறைக்க  கடையில் இருந்த ஓய்வறைக்கு சென்று விட்டாள்.. இப்போதும் தெருவில் தானே நிற்கிறார், உன்னை தேடி வரவில்லையே..ரகு கேட்பது போல் நீ முக்கியமாக இல்லையே… என்று நினைத்துக் கொண்டவளுக்கு கண்களில் கண்ணீர் வழிய தொடங்க, அமைதியாக அங்கேயே சில நிமிடங்கள் நின்று தன்னை தேற்றி கொண்டு, முகத்தையும் கழுவி துடைத்து மீண்டும் முன்புறம் வந்து அமர்ந்தாள்.

                    மீண்டும் கணினி திரையை அவள் பார்க்க, இன்னமும் அங்கேயே தான் நின்றிருந்தார் மனிதர்..சட்டென தோன்றிய எண்ணத்தில் கடையின் முதல் தளத்தை அடைந்தவள், அங்கிருந்த கண்ணாடியின் வழியாக சற்றே மறைவாக நின்று பார்வையிட இன்னும் தெளிவாக தெரிந்தார் குணசேகரன்.

                    அவள் திருமணத்தன்று தான் கடைசியாக பார்த்தது தந்தையை.. இப்போது பார்க்கையில் இந்த ஒன்றரை மாதத்தில் சற்றே ஓய்ந்து போனவராக காணப்பட,  கையில் சிகரெட் வேறு.. தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காகவே புகைப்பதை ஒளித்து மறைத்து செய்யும் தந்தை, அதை முற்றிலுமாக குறைத்துக் கொண்டவரும் கூட  என்பது நினைவு வர, உடல்நிலையை கெடுத்துக் கொள்கிறாரோ என்று அஞ்சியது மனது.

                      ஆனாலும் ஏதோ ஒரு வைராக்கியம், அவளை இழுத்து பிடிக்க நின்ற இடத்திலேயே வேரோடியது போல் நின்றிருந்தாள்.. அடுத்த சில நிமிடங்களில் குணசேகரன் இவர்கள் கடையை திரும்பி பார்த்தவர், ஒரு நிமிடம் நின்று எதையோ யோசித்து பின் கடையை நோக்கி நடந்தார்.

                     அவர் அருகே வர வர, நெஞ்சில் ஏதோ பிசையும் உணர்வு தேவாவுக்கு.. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு படிகளில் இறங்கி கீழே வர , கடைக்குள் நுழைந்து கொண்டிருந்தார் குணசேகரன்.

                   தேவா அமைதியாக சென்று தன் இருக்கையில் அமர, அவள் படிகளில் இறங்கும்போதே அவளை பார்த்து விட்டிருந்தார் குணசேகரன். முன் மதிய நேரமாக இருக்க கடையிலும் கூட்டம் அதிகமில்லை.. ஒன்றிரண்டு பேர் மட்டுமே அங்குமிங்குமாக நிற்க, மகளை சுலபமாக அடையாமல் கண்டு கொண்டிருந்தார் குணா..

                     மகள் தன்னை கண்டு கொண்டாள் என்பதும் அவருக்கு புரிந்து விட, அமைதியாகவே சென்று மகளின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தார் குணசேகரன்…

                  “சொல்லுங்க சார்.. என்ன வேணும்..” என்று தேவா துடுக்காக கேட்டுவிட

                 “நான் உங்க கடைக்கு பொருள் வாங்க வரல தேவா.. நான் என் மகளை பார்க்க வந்திருக்கேன்…” என்று நேரடியாகவே அவர் கூறிவிட

                  சட்டென நெகிழ்ந்தாலும் “உங்க மகளை பார்க்கணும் ன்னு நினைச்சு இருந்தா, அவ வீட்டுக்கு போயிருப்பிங்க.. இப்படி கடைக்கு வந்திருக்க மாட்டிங்க…”

                 “உங்களை பத்தி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்போவும் நீங்க வந்தது வேற ஏதோ விஷயம்… மத்தபடி மகள் மேல பாசம் தாங்காம ஓடி வரல நீங்க…என்ன விஷயம் சொல்லுங்க..” என்றவள் அப்போதும் அப்பா என்ற வார்த்தையை தவிர்த்து விட்டாள்.

                   குணசேகரனும் அதை உணர்ந்தே இருந்தாலும், வந்திருக்கும் விஷயம் அதைவிட முக்கியமானது என்பதால் “உன்கிட்ட பேசணும் தேவா.. அந்த ரகு உன்னை எப்படி ஏமாத்தி இருக்கான் ன்னு நீ தெரிஞ்சுக்கணும்.. இவங்க எல்லாரும் சேர்ந்து திட்டம் போட்டு உன் வாழ்க்கையை நாசம் பண்ணி இருக்காங்க தேவாம்மா… அப்பா உன்கிட்ட கோபப்பட்டது எல்லாமே தப்புடா…”

                     “இந்த கேடுகெட்ட குடும்பம் மொத்தமா சேர்ந்து திட்டம் போட்டு, அவனை உன் தலையில…” என்றவர் அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன்னமே எழுந்து விட்டாள் தேவா…

                   அவள் எழுந்து நின்றதில் குணசேகரன் அதிர்ந்து பார்க்க “இனி ஒரு வார்த்தை என் புருஷனையோ, அவர் குடும்பத்தையோ பத்தி நீங்க பேசக்கூடாது.. இல்ல இப்படித்தான் பேசுவீங்க ன்னு சொன்னா, வெளியே போய்டுங்க… எனக்கு உங்களோட பேச வேண்டாம்..” என்று அமைதியான குரலிலேயே கூறி முடித்தாள் அவள்.

                   அவளை பாவமாக பார்த்தவர் “உன்னை பார்த்தா வருத்தமா இருக்குடா எனக்கு.. நீ என்ன சொன்னாலும் சரி.. நீ இந்த அப்பாவே வேண்டாம் னு சொன்னாலும் சரி.. இவங்க எல்லாரும் சேர்ந்து உன்னை ஏமாத்தி இருக்காங்க அது சத்தியமான நிஜம்.. உன் அப்பா உன்கிட்ட பொய் சொல்ல மாட்டேன்..” என்று சொல்ல

                அவர் சொல்வது ஒன்றுமே புரியவில்லை மகளுக்கு.. ஆனாலும் அவரிடம் கணவனை விட்டு கொடுக்க விரும்பாதவள் “சரி.. ஏமாத்தியே இருக்கட்டும்..அது என்னோட பிரச்சனை… நான் என்ன ன்னு பார்த்துக்கறேன்.. நீங்க கிளம்புங்க…” என்று விட்டாள் மகள்.

                 அதில் கோபம் வர பெற்றவர் “தேவா.. முட்டாளாவே இருக்க போறியா… நான் என்ன சொல்ல வரேன் ன்னு கூட கேட்க மாட்டியாடா…அன்னிக்கு கல்யாணத்துல இருந்து இளங்கோ ஓடிப்போகல.. அவனை மிரட்டி மலேசியா க்கு அனுப்பி வச்சதே ரகுதான்… அவனை துரத்தி விட்டுட்டு இவன் மாப்பிள்ளையாகி இருக்கான்..”

                  “என்னை பழிவாங்க உன்னை உபயோக படுத்திக்கிட்டாங்க தேவா.. நீ நம்பாம போனாலும் இதுதான் நிஜம்.. இங்கே இருக்க ஒவ்வொருத்தரும் உன்னை ஏமாத்திட்டு இருக்காங்கடா.. உன் பாட்டியும் இதுக்கெல்லாம் உடந்தையா இருந்து இருக்காங்க..” என்று அவர் குற்றம் சாட்ட

                  தந்தையின் கண்களை பார்த்தவளுக்கு அவர் பொய் சொல்லவில்லை என்பது புரிந்தது. ஆனால் அதே சமயம் அவர் சொல்லும் விஷயங்களையும் ரகுவையும் அவளால் தொடர்பு படுத்தவே முடியாது.. அவர் சொல்வது போல ரகு ஏமாற்றுவான்  ஏமாற்றி விட்டான் என்றோ நிச்சயமாக தோன்றவில்லை அவளுக்கு..

                  தந்தை ஏதோ தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று தான் தோன்றியது மகளுக்கு. ஏற்கனவே ரகுவுக்கும், அவருக்கும் ஏழாம் பொருத்தம் தானே.. அதைக் கொண்டு எதையோ தவறாக நினைத்து விட்டார் என்றுதான் அந்த நிமிடம் நினைத்தாள் அவள்.

                 அதையே அவரிடமும் கூறுபவளாக, “நீங்க கவலைப்படற அளவுக்கு எதுவும் இருக்காது… எனக்கு ரகுவை தெரியும்.. அவர் நிச்சயமா இப்படி எல்லாம் செஞ்சிருக்க மாட்டார்.. நீங்க வீணா என்னை பத்தி கவலைப்படாதீங்க.. நான் இங்கே சந்தோஷமா இருக்கேன்.. நீங்க நிம்மதியா கிளம்புங்க..” என்று பொறுமையாகவே கூற

                  “உனக்கு புரியவே புரியாதா தேவா… உன் அப்பா நான்.. உன்கிட்ட கத்திட்டு இருக்கேனே, இவன் பொய் சொல்வானா ன்னு யோசிக்கவே மாட்டியா..உன்மேல எனக்கு அக்கறையே இருக்கக்கூடாதா …” என்று மன்றாடலாக அவர் கேட்க

                 “அக்கறையா… இத்தனை நாள் எங்கே போச்சு இந்த அக்கறை. இத்தனை நாள் என்ன நம்பிக்கையில என் முகத்தை கூட பார்க்காம, ஒரு போன் கூட பண்ணாம இருந்திங்க… அக்கறை இருக்க யாராச்சும் இப்படி செய்வார்களா… என்னை பேச வைக்காதிங்க..”

                 “நீங்க சொல்றதுக்காக எல்லாம் என்னால ரகுவை சந்தேகப்பட முடியாது.. அப்படியே நீங்க சொல்றபடி அவர் செஞ்சு இருந்தாலும், நிச்சயமா அதற்கு வேற ஏதாவது காரணம் இருக்கும்… நான் இந்த ஒன்றரை மாதமா அவரோட வாழ்ந்ததை வச்சு சொல்றேன்.. பழிவாங்குற எண்ணமெல்லாம் கிடையாது அவருக்கு…

                 “எனக்கு என் புருஷனை பத்தி தெரியும்.. அவர் தப்பான எந்த விஷயத்தையும் செஞ்சிருக்கவே மாட்டாரு.. அவருக்கு அதெல்லாம் வராது…” என்று அவள் அழுத்தம் திருத்தமாக கூறிவிட

                 “அப்போ நான் பொய் சொல்றேன் ன்னு சொல்றியா தேவாம்மா.. “என்று அவர் கலங்கி போனவராக கேட்க

                  “நிச்சயமா இல்லை.. ஆனா நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க… இல்ல எதையோ அரையும், குறையுமா தெரிஞ்சிட்டு இருக்கீங்க… நீங்க சொல்றபடி அவர் பழி வாங்க என்னை கல்யாணம் பண்ணி இருந்தா இந்த ஒன்றரை மாசத்துல, என்னை எத்தனையோ செஞ்சிருக்கலாம்…”

                  “எனக்கு தெரியும்.. அவர் இதுக்கான ஆள் இல்ல.. என்கிட்டே சொல்லிட்டீங்க இல்ல, இந்த விஷயத்தை இதோட விட்டுட்டு நீங்க கிளம்புங்க… நான் இதை யார்கிட்ட பேசணுமோ அங்கே பேசுகிறேன்..” என்று அவள் முடிக்கும் நேரம் தான் சற்று தள்ளி இருந்த பிரசன்னா  கண்ணில்பட்டான்.

                    தந்தை நிச்சயம் கோபப்படுவார் என்று புரிந்தவளாக, அவரை அங்கிருந்து கிளப்பி விட மீண்டும் ஒருமுறை “நீங்க கிளம்புங்க.. நான் நல்லா இருக்கேன்.. எனக்கு எந்த சங்கடமும் இல்ல இங்கே.. என்னை நினைச்சு கவலைப்படாம, உங்க உடம்பை பாருங்க..” என்று கூறியவள் அசையாமல் நிற்க, “என்ன சொன்னாலும் மகள் கேட்கமாட்டாள்.” என்பது புரிந்து போனது குணசேகரனுக்கு..

                   அவர் முகம் வாடிப் போனவராக, “எனக்கு என் மக நல்லா இருந்தா போதும் தேவாம்மா.. ஆனா எல்லாரும் சேர்ந்து என் மகளை ஏமாத்தி இருக்காங்கடா.. அப்பாவால அதைத்தான் தாங்கிக்கவே முடியல.. என்னை பெத்த என் அம்மா கூட என்னை ஏமாத்திட்டாங்க தேவாம்மா… ஆனா, அப்பா உன்னை விட்டுட மாட்டேன்.. “

                     “எப்போ, எந்த நிமிஷம் உனக்கு இந்த வீட்ல இருக்க வேண்டாம்னு தோணினாளோ, இல்ல உனக்கு ஏதாவது பிரச்சனை னு வந்தாலோ நீ நேரா அப்பாகிட்ட வந்துடனும் தேவா.. ஒரு போன் போடு போதும்… உன் அப்பா உன் வீட்டு வாசல்ல வந்து நிற்பேன்… அப்பா எப்பவும் உனக்காகவே இருப்பேண்டா..” என்றவர் அவள் கைகளை பிடித்துக் கொள்ள,

                    “இவ்ளோ உணர்ச்சிவசப் படாதீங்க.. எதையும் நினைச்சு கவலைபட்டுட்டே இருக்காதிங்க.. நீங்க பயப்படற மாதிரி எனக்கு எந்த பிரச்சனையும் வராது.. வந்தாலும் உங்க மக அதையெல்லாம் சமாளிப்பா… என்னை அப்படித்தானே வளர்த்து இருக்கீங்க..”

                    “சோ.. என்னை பத்தி கவலைப்படாதீங்க.. பாட்டியை பத்திரமா பார்த்துக்கோங்க, இந்த விஷயமா அவங்களையும் எதுவும் சொல்லக்கூடாது…” என்று மிரட்டலாக கூறியவள் “கிளம்புங்க..” என்றுவிட

                    “அப்பா ன்னு கூப்பிடவே மாட்டியா..” என்று குழந்தையாக முகம் சுருக்கி நின்றார் மனிதர்.

                  “என் வீட்டுக்கு வாங்க.. அன்னிக்கு கூப்பிடறேன்..” என்று வீம்பாக கூறியவளுக்கு புன்னகை வந்துவிட, அவளின் சிரிப்பில் குணாவின் முகமும் மெல்ல சிரித்தது…

                   “கேட்க ஆள் இல்லன்னு பாக்கெட்ல சிகரெட் வச்சிட்டே சுத்தணும் ன்னு அர்த்தம் இல்ல..” என்று பேச்சோடு பேச்சாக அவள் சொல்லிவிட

                   “இதை மட்டும் நான் ஏன் கேட்கணும்.. என்னை அப்பா ன்னு கூப்பிடமாட்ட, ஆனா இது மட்டும் சொல்லலாமாடா..” என்று அவர் கேட்கவும்

                   “நான் எனக்கு தோணினதை சொல்லிட்டேன்.. நீங்க கேட்பிங்களா மாட்டிங்களா ங்கிறது உங்களோட விஷயம்.. நான் அதுல தலையிடமாட்டேன்..” என்று தெளிவாக உரைத்தாள் மகள்.

                   அவளின் பேச்சில் லேசாக சிரித்தவர், அவள் தலையில் கையை வைத்து லேசாக அழுத்தி “கவனமா இரு.. எதுவா இருந்தாலும் உடனே எனக்கு கூப்பிடனும்..” என்று மீண்டும் ஒருமுறை கூற, அமைதியாக அவள் தலையசைக்கவும், “நான் கிளம்புறேண்டா..” என்று மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினார்.

                             அவரது மனம் முழுவதும் ரகுவின் மீது கோபம் இருந்தாலும், மகளின் பேச்சில் இருந்த தெளிவிலும், அவள் முகத்தில் இருந்த கலையிலும் அவளின் வாழ்வு அவர் கண்ணுக்கு புலப்பட, அவளை பற்றிய கவலை சற்றே குறைந்திருந்தது..

                   என்ன நடந்தாலும், என் மகள் மீண்டு வருவாள் என்ற எண்ணம் ஒரு தந்தையாக நிம்மதி அளித்தாலும், ரகுவின் மீதான அவரின் எண்ணத்தில் துளியும் மாற்றமில்லை… தன் மகளை ஏமாற்றி இருக்கிறானே என்ற கோபம் இந்த நிமிடம் வரை அப்படியே இருக்க, அவன் முகத்திரை கிழியும் நாளுக்காக காத்திருக்க தொடங்கினார் அவர்.

                  அதே சமயம் தந்தை கிளம்பும் நேரம்  அவரை வாசல் வரை வந்து வழியனுப்பிய தேவா, மனம் முழுவதும் சூழ்ந்து கொண்ட குழப்பங்களில் இருந்து மீண்டு வர முடியாமல் தடுமாறி நின்றிருந்தாள்… அவளுக்கு தங்கள் திருமணமும், அதை ஒட்டி நடந்த நிகழ்வுகளும் கேட்காமலே கண்முன் நிழலாட, அங்கு நின்றிருந்த பிரசன்னாவை மறந்து நடந்தே வீட்டிற்கும்  கிளம்பி விட்டாள்..

            

                

                   

Advertisement