Advertisement

காதல் தருவாயா காரிகையே 20

                             ரகுவின் அறையில் புதிதாக குடியேறி இருந்த கணினியின் முன் அமர்ந்திருந்தாள் தேவா.. வேலுமாணிக்கம் கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வாக இருப்பதால் முத்து மாணிக்கத்திற்கு வேலைகள் சற்றே அதிகம்.. நிலத்தில் பயிர் செய்து இருப்பதால் அங்கேயும் ரகு அருகில் இருந்து கவனித்தே ஆக வேண்டிய சூழ்நிலை இருக்க, அவனால் அங்குமிங்கும் அலைய முடியாமல் திண்டாடித் தான் போயிருந்தான் ரகு.

                              கடையிலும் முத்து மாணிக்கத்தை ஒரு அளவுக்கு மேல் அவனால் அனுமதிக்க முடியவில்லை. நன்றாக இருந்த அவனின் சித்தப்பா திடீரென படுத்து விடவில்லையா.. இதில் தந்தை வேறு எதையாவது இழுத்து விட்டு கொண்டால் நிச்சயம் தன் குடும்பம் தாங்காது என்று எண்ணியவன் மாலை வேளைகளில் நேரத்திற்கே கடைக்கு வந்து விடுவான்..

                           அவன் கடைக்கு வந்த அடுத்த அரைமணி நேரத்தில் முத்து மாணிக்கத்தை அவன் வீட்டிற்கும் அனுப்பிவிட, இவன் கணக்கு பார்த்து, கடையை மூடி கிளம்ப எப்படியும் பதினோரு மணியை தாண்டி விடும். அதன்பிறகும் சில நாட்களில் கணக்கு புத்தகம் கையோடு வீட்டுக்கு வரும்..

                         அவன் உணவும், உறக்கமும் தானாகவே குறைய ஆரம்பிக்க, அவன் நந்தனா தானாகவே பொறுப்பெடுத்துக் கொண்டவள் அவனை நச்சரித்து இந்த கணினியை வாங்கி கொண்டிருந்தாள். அவள் திட்டப்படி பத்து மணிக்கு கடையை அடைத்து விடுபவன் கடையின் கணக்கு வழக்குகளையும் கையோடு கொண்டு வந்து தேவாவிடம் கொடுத்து விடுவான்.

                       அவன் இரவில் கொண்டு வரும் கணக்குகளை சரிபார்த்து அதை கணினியில் அவள் முறைப்படுத்தவும் தொடங்கி இருக்க, அவன் சற்று முன்னதாகவே வீட்டிற்கு வர பழகி இருந்தான். தினமும் வயலிலே கிடப்பதால், அவனது உணவு பொறுப்பையும் அவள் ஏற்றுக் கொண்டிருக்க, சத்தான உணவுகளை பார்வதியுடன் சேர்ந்து தயாரிப்பவள் கொஞ்சம் கூட சலிக்காமல் நடந்து விடுவாள்.

                      முதலில் இரண்டு மூன்று நாட்கள் திட்டியவன் அவள் கேட்காமல் போகவும், ஒரு டியோ வண்டியை அவளுக்காக வாங்கி கொடுத்து விட்டிருக்க, இப்போதெல்லாம் அதில்தான் வலம் வருவது. சில நேரங்களில் இவள் கிளம்பும் நேரம் சஞ்சய் அழுது அடம்பிடித்தால் அவனையும் அழைத்துக் கொண்டே சென்று விடுவாள்.

                     அவளின் அருகாமையும், அவள் கொண்டு வரும் சுவையான உணவும், கையில் இலவச இணைப்பாக சஞ்சயின் மழலையும் என ரகுவின் பொழுதுகள் இன்பமயம் தான்..

                      இப்போதும் அவன் நேற்று கொண்டு வந்திருந்த கணக்குகளை முறைப்படுத்தி வைத்தவள் வேலையை முடித்து கீழே இறங்க, வீட்டில் ஒருவரும் இல்லை.. வீட்டின் பின்பக்கம் குரல் கேட்கவும், தேவா அங்கே சென்று பார்க்க வேலு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க, அவருக்கு சற்று தள்ளி பார்வதியும், சங்கரியும் திண்ணையில் அமர்ந்திருந்தனர்.

                 அங்கே ரகுவை பற்றிய பேச்சு ஓடிக் கொண்டிருக்க, வேலுமாணிக்கம் தான் தன் அண்ணன்மகனை பற்றி சிலாகித்து கொண்டிருந்தார்.. “வேலை அதிகம் அண்ணி அவனுக்கு.. பிள்ளை பாவம் தனியாளா இழுத்து போட்டுட்டு அலையுறான்.. நிற்கக்கூட நேரமில்லாம ஓடிட்டே இருக்கான், இந்த நேரத்துல இந்த உடம்பு இப்படி உட்கார வைக்கணுமா என்னை??” என்று அவர் புலம்ப

                    “இது உழைக்கிற வயசு தானே தம்பி.. அதோட கூட நீங்களும் இத்தனை நாள் அவன்கூட தானே ஓடிட்டு இருந்திங்க.. இப்போ முடியல அவன் செய்யுறான்.. அவ்வளவு தானே.. நீங்க சும்மா அதையும் இதையும்  யோசிச்சு குழப்பிட்டே இருக்காதிங்க…கொஞ்ச நாள் தான, பிரசன்னா படிப்பு முடிஞ்சதும் அவன் அவன் அண்ணனோட நின்னு தொழில் பார்க்க போறான்..இதுக்கு ஏன் தம்பி இவ்ளோ கவலைப்படணும்..” என்று பார்வதி ஆறுதலாக கூற

                   “என்னவோக்கா.. ரகு இப்படி ஓடிட்டே இருந்தா, அந்த பிள்ளையும் என்ன நினைக்கும்.. புதுசா கல்யாணமானதுங்க.. இவன் அந்த பிள்ளையை கூட்டிட்டு ஒருநாள் கூட எங்கேயும் வெளியே தெருவ போனது கூட இல்ல.. அதுவும் வருத்தப்படும் இல்ல..” என்றார் சங்கரி.

                   இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு நின்றிருந்த தேவாவுக்கு சிரிப்பு தான் வந்தது… ரகுவை பாவம் என்று அவர்கள் நினைக்க, அவனா பாவம் என்றுதான் தோன்றியது அவன் மனைவிக்கு.. ரகு தேவாவை எங்கும் அழைத்து செல்லாமல் இருக்கலாம் ஆனால், அதைப்பற்றிய சிறு கவலை கூட அவளுக்கு வராத அளவுக்கு தேவாவை தாங்கி கொள்வான் அவன்.

                  தேவா இவர்கள் சொல்லும் அளவுக்கு எல்லாம் யோசித்ததும் இல்லை..அவளுக்கு அவனுடைய உணவு நேரமும், இரவில் அவன் முழுதாக அவளை சரணடையும் அந்த தித்திப்பான சில நிமிட நேரங்களுமே போதுமானதாக இருந்தது.. அவளை பொறுத்தவரையில் அவள் எதிர்பார்த்த காதல் முழுதாக இல்லையென்றாலும் அரைகுறையாக அவ்வபோது ரகுவின் பார்வையில் எட்டிப்பார்க்க, அந்த நிமிடங்களை கணக்கெடுப்பது தான் முக்கிய வேலையாக இருந்தது அவளுக்கு…

                  இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே சிரிப்புடன் அவள் நிற்க, அவள் பின்னால் நின்று கொண்டு அவள் காதை வலிக்க திருகினான் கணவன். தேவா வலியில் “ஆஅ… அம்மா…” என்று கத்தி விட்டவள் அதன்பிறகே திரும்பி பார்க்க, ரகுவை காணவும் வாய் மூடிக் கொண்டது.

                  இதற்குள் அவள் கத்தியதில் பார்வதியும், சங்கரியும் எழுந்து வந்திருக்க, இருவரையும் பார்த்தவர்கள் சிரிக்க தொடங்கி இருந்தனர். ரகு தன் அன்னையிடம் “இவ என்ன செய்யுறா தெரியுமா.. நீங்க பேசறதை ஒட்டு கேட்டுட்டு இருக்காம்மா..” என்று பொய் கோபத்துடன் புகார் சொல்ல

                  பார்வதி சிரித்துக் கொண்டே “ஆமா.. நாங்க ராணுவ ரகசியம் பேசறோம்.. அவ காதை விடுடா.. வலிக்க போகுது..” என்று ரகுவை அதட்ட

                அவனோ “நீங்களாவது கேளுங்க சித்தி..” என்று சங்கரியிடம் முயற்சிக்க

                 “அவளுக்கு தெரியக்கூடாது ன்னு எதையும் பேசல ரகு.. அதோட அவ ஒட்டெல்லாம் கேட்டு இருக்கமாட்டா.. எங்களை தேடி தான் வந்திருப்பா..” என்று சரியாக கூற

                  “ஆமா.. சின்னத்தை.. உங்களை தேடி தன வந்தேன்.. உங்களுக்கு காஃபி போடவா ன்னு கேட்க வந்தேன்.. நீங்க பேசிட்டு இருக்கவும், ஒரு நிமிஷம் அமைதியா நின்னுட்டேன்.. அதுக்கு என் காதை பிடிச்சு திருகிட்டாங்க..” என்று அவள் முகம் சுருக்க

                   “காதை விடு ரகு.. வலிக்கும்…” என்று சங்கரியும் ரகுவையே அதட்ட, அவரை சற்றே ஆச்சர்யமாக தான் பார்த்தான் ரகு. அவர் சற்று மாறி இருப்பது அவ்வபோது கண்ணிலும், கருத்திலும் பதிந்தாலும் கூட, தேவாவுக்கு இந்தளவு ஒத்துழைப்பது எல்லாம் அதிசயம் தான்…

                 “போச்சு… நீங்களாவது மாமியாரா இருப்பிங்க ன்னு நெனச்சேன்.. பார்வதி மாதிரியே உங்களையும் கவுத்துட்டா…” என்று சங்கரியிடம் ரகு கூற

                  “அவ ஏன் கவுக்க போறா… அவளுக்கு அதெல்லாம் தெரியாது தேவா… ஜானகி மகளாச்சே..” என்று பாசமாக சொன்னவர் தேவாவின் கன்னத்தை வருடிவிட்டு வெளியே தன் கணவரிடம் சென்றுவிட, “இவங்க என்ன இப்படி ஆகிட்டாங்க..” என்பது தான் தேவாவின் எண்ணமாக இருந்தது..

                     பார்வதியும், ரகுவும் அவளை பார்த்து சிரிக்க, பார்வதி வெளியே செல்லவும், தேவாவும் அவருடன் நடக்க, “ஏய்.. நீ எங்கே போற..எனக்கு டீ வேணும் தேவா.. போட்டுக்கொடு..” என்று நிற்க

                    அவனை முறைத்து பார்த்தாலும், நேராக சமையல் அறைக்கு சென்றாள் தேவா.. பார்வதி “ஏண்டா.. நான் போடமாட்டேனா.. அவளே இப்போதான் கீழே இறங்கி வந்தா.. பாவம் பிள்ளை..” என்று கூற

                    “அதெல்லாம் போட்டுக் கொடுப்பாம்மா.. உங்ககிட்ட கேட்டாலும் திட்டத்தான் செய்வா.. வாங்க நீங்க..” என்று அன்னையைஅழைத்து சென்று வேலுவுடன் அமர்ந்து கொண்டான் ரகு.

                      அடுத்த சில நிமிடங்களில் தேவாவும் அங்கே வந்து அமர்ந்து கொள்ள, அவள் கையிலிருந்த சுக்கு காஃபியை அங்கிருந்தவர்களுக்கு ஊற்றி கொடுத்தாள். வேலு ஆவலாக வாங்கியவர் ஒரு வாய் குடித்ததும் முகம் சுருக்க, அவரை பார்த்து சிரித்தவள் “என்னென்ன வேலை பார்க்கிறிங்க மாமா நீங்க.. இன்னிக்கு எல்லாருக்கும் அரை சர்க்கரை தான்.. குடிங்க..” என்றவள் தானும் அதையே குடித்துக் கொண்டாள்.

                     வேலுவின் உணவு அட்டவணை தேவா சொல்படி தான்.. காலையில் கஞ்சியில் தொடங்கி, இரவு அவர் படுக்க செல்லும் முன் எடுத்துக் கொள்ளும் பால் வரை அவள் பொறுப்பு தான். கணவரின் சர்க்கரை அளவு சற்றே குறைந்திருக்க, சங்கரி தேவா என்ன சொன்னாலும் தலையாட்டும் நிலையில் தான் இருந்தார்.

                  பின்னே அவரை ஏமாற்றி விடும் வேலு, மருமகள் கொடுப்பதை அமைதியாக உண்டு முடிக்கிறாரே.. அவரின் திருட்டுத்தனங்கள் மருமகளிடம் எடுபடாமல் போக, மனிதர் அவளின் ஒற்றை முறைப்புக்கு அடங்கி அமர்ந்து விடுவதோடு அவளின் அட்டவணைக்கும் பழகி விட்டிருந்தார்..

                     இவர்களின் தேநீர் நேரம் பேச்சிலேயே கழிய, அடுத்த அரைமணி நேரத்தில் கடைக்கு கிளம்பினான் ரகு.. இன்று வேலை சற்று நேரத்திலேயே முடிந்திருக்க, வீட்டிற்கு வந்திருந்தான்.. இதோ இப்போது மீண்டும் ஓட்டம்.. அவன் சென்ற அடுத்த பத்து நிமிடங்களில் முத்து மாணிக்கம் வீட்டிற்கு வந்து விட்டார்..

                      அன்று இரவு வழக்கத்தை விட சற்றே தாமதமாக வீட்டிற்கு வந்தவன் முகம் ஏதோ யோசனையிலேயே இருக்க, உணவை உண்டு முடித்தவன் தேவாவை அழைத்துக் கொண்டு அறைக்கு வந்திருந்தான். ஆனால் அவன் யோசனையில் குழம்பியவள் “என்ன விஷயம்.. ஏன் எப்படியோ இருக்கீங்க..” என்று அவனிடம் கேட்டு வைக்க

                        “எப்படி இருக்கேன்..” என்று வந்தது எதிர்கேள்வி..

                     “இப்போ நார்மல் தான்.. நீங்க உங்க வேலையை பாருங்க..” என்றவள் இரவு உடையை எடுத்துக் கொண்டு நகர, அவள் கையிலிருந்த உடையை பிடுங்கி கட்டிலில் போட்டவன் “என்னடி கொழுப்பா..” என்று  சின்னதான முறைப்புடன் பார்க்க

                       “பின்னே… நான் ஒரு கேள்வி கேட்டு, நீங்க சரியா பதில் சொல்லிட்டா தான், நான் என்னவோ ன்னு யோசிக்கணும்…எதிர்கேள்வி கேட்டா, நீங்க நார்மல் ன்னு தான் அர்த்தம்..” என்று கையை கட்டிக் கொண்டு அவனை பார்த்து நிற்க

                     “இப்போ என்ன??  நீ கேள்வி கேட்டா, நான் பதில் சொல்றது இல்ல ன்னு குத்தி காட்றியா…”

                     “ஏன் குத்தி காட்டணும்.. நேராவே சொல்லிட்டேனே..” என்று சிரிப்பை அடக்கி கொண்டே அவள் கூறிவிட,

                      “உனக்கு வாய் ரொம்ப அதிகமா போச்சு..நான் குறைக்கிறேன் இரு..” என்று அவன் நெருங்க

                      “நான் இன்னும் டிரஸ் கூட சேன்ஜ் பண்ணல.. வழி விடுங்க முதல்ல..” என்று அவள் நகர

                    “அதை வேற எதுக்கு வீணாக்கிட்டு.. விடு அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றவன் இன்னுமே நெருங்கிவிட

                     “என்ன ஆச்சு.. ஏன் அப்போ அப்படி இருந்திங்க..” என்று மீண்டும் கேட்டாள் அவள்.

                     “ஒன்னும் இல்ல.. கடை விஷயமா கொஞ்சம் வேலை இருக்கு.. நாளைக்கு தேனீ போகணும்.. அதான்  அப்பாவை விட்டுட்டு எப்படி போறது ன்னு யோசனை..” என்றவன் இதழ்கள் அவள் கழுத்தில் இருக்க, ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் கழுத்தை உரசி தீ மூட்டி கொண்டிருந்தான் அவன்..

                       அவன் பேச்சில் கவனம் வைக்க முடியாமல் திண்டாடியவள் “என்ன பண்றிங்க நீங்க… ஒன்னு பேசுங்க, இல்ல.. “என்றவள் அடுத்து பேச வாய் வராமல் வாயை இறுக்கமாக மூடிக் கொள்ள

                      சட்டென கூர்மையானவன் “என்ன.. என்ன சொன்ன?? பேசாம என்ன செய்யணும்..” என்று அவள் முகத்தை பார்க்க, சட்டென அவனை கட்டிக்கொண்டு முகத்தை மறைத்தவள் “ரகு… வர வர ரொம்ப பேசறீங்க நீங்க..” என்று சினுங்க

                   “நான் எங்கேடி பேசினேன்.. நீதான் பேசாம எதுவோ செய்ய சொன்ன.. என்னன்னு தானே கேட்டேன்..” என்றவன் இன்னும் சீண்ட

                  “ரகு..ப்ளீஸ்.. தெரியாம சொல்லிட்டேன்.. விடுங்களேன்..” என்று இன்னுமே புதைந்து கொள்ள, குனிந்து அவள் முகம் பார்த்தவன் சிரிப்புடன் அவள் கன்னத்தில் தன் இதழ்களை ஒத்தி எடுக்க, அமைதியாக ஒத்துழைப்பு நல்கினாள் மனைவி..

                  அடுத்து வந்த சில பல நிமிட நேரங்கள் காதலர்களுக்கே உரியதாக மாறிப்போக, மெதுவாக, மிக மெதுவாக அவளை கைகளில் அள்ளிக் கொண்டான் ரகு.. தேவா கண்களை மூடிக் கொள்ள, அவளை படுக்கையில் கிடத்தியவன் அவள் இதழ்களின் மீது தன் கன்னத்தை அழுத்தமாக அழுத்த, அந்த அழுத்தத்தின் அர்த்தம் புரிந்தவளாக அவன் கன்னத்தில் தன் இதழ்களை அவள் அழுத்தி எடுக்க, புன்னகையுடன் அவள் இதழ்களை கைகளில் சுண்டி தன் இதழ்களில் ஒற்றிக் கொண்டான் அவன்.

                    தேவா அவன் செயல்களில் கண்மூடியபடியே சிரிக்க, “கண்ணை திறடி..” என்று மெதுவாக வந்தது குரல்.. அவள் மாட்டேன் என்பது போல தலையசைத்து மறுக்க “கண்ணை திறக்கல.. நானே ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிடுவேன்..” என்று மிரட்டியவன் அவள் சேலையில் இருந்த பின்னில் கையை வைக்க

                    சட்டென கண்களை திறந்தவள் “கையை எடுங்க..” என்று அவன் கையை தட்டிவிட

                    “பரவாயில்லையே… கண்ணை திறந்துட்ட.. சரி, பார்ப்போம்…” என்றவன் மீண்டும் நெருங்க, தேவாவின் கண்கள் தானாகவே மூடிக் கொள்ள

                    ‘நீ கண்ணை மூடினா, இந்த சாரியை எடுத்துடுவேன் தேவா..” என்று பேரம் பேசினான் கணவனாக…

               தேவா அதிர்ந்தவளாக கண்களை திறந்து விட “அது என்ன, பக்கத்துல வந்தாலே கண்ணை மூடிக்கிறது.. இன்னிக்கு நீ என்னை பார்க்கிற… கண்ணை மூடின.. பார்த்துக்கோ..” என்று அவன் மிரட்ட

               “போங்க.. நீங்க..நான் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டே வரேன்.. நீங்க சரியே இல்ல இன்னிக்கு..” என்றவள் எழுந்து கொள்ள பார்க்க, “உன்னை யாரு விட்டா..” என்றவன் “நல்லா நியாபகம் வச்சிக்கோ.. கண்ணை மூடவே கூடாது…” என்று மீண்டும் நினைவு படுத்த,

                   “ரகு.. ஏன் இப்படி அடம் பிடிக்கிறிங்க.. என்னை விடுங்க..” என்று அவள் கொஞ்சலாக கேட்க

                   “விடறதா.. உன்னையா.. என்னை பேசாம வேலையை பாருடா ன்னு சொன்னல்ல..” என்று அவன் அவளை போலவே சொல்லி வேறு காட்ட

                  “ஹேய் நான் எப்போ அப்படி சொன்னேன்…”

                   “அப்போ.. வேற என்ன சொன்ன..”

                  “அய்யோஓஓஓ.. தெரியாம சொல்லிட்டேன்.. அதை விடுங்களேன்…”

                 “பார்த்தியா.. இப்போவும் அதை விட்டுட்டு வேலையை பாருடா ன்னு தானே சொல்ற..” என்று மீண்டும் அவன் ஆரம்பிக்க

                “சத்தியமா நான் பேசவே இல்ல..” என்று அவள் வாயில் கையை வைத்து மூடிக் கொள்ள, “இது இன்னும் வசதி..” என்றவன் அவள் சேலையில் கையை வைக்க, அவளின் கெஞ்சல்களும், கொஞ்சல்களும் அவனின் நந்தும்மாவில் அழகாக ஒளிந்து கொண்டது.

                                                 அழகான ஆலிங்கனம் முடிந்து அயர்வில் அவள் கண்மூடி அவன் மார்பில் சாய, அந்த கண்மூடலுக்கு தண்டனையாக அவளையே தழுவிக் கொண்டான் காதலன்… அவன் சொன்னது போலவே அவளின் இரவு உடையை அவனே அணிவித்தும் முடித்து  இருக்க, அவனை கண்களை திறந்து பார்க்கவே சங்கடப்பட்டவளாக கண்களை மூடியே இருந்தவள் அவனின் மெல்லிய தட்டி கொடுத்தலில் அப்படியே உறங்கி போயிருந்தாள்..

                  அந்த நாள் அவர்களுக்கு இனிமையான இரவாக மாறி இருக்க, அடுத்த நாள் அவர்களுக்கான சோதனையை தன்னகத்தே வைத்துக் கொண்டு காத்திருந்தது.. விதி குணசேகரனின் வடிவில் ஆட்டத்தை தொடங்கி இருக்க, கரை சேர்வார்களா காதலர்கள்????………..

Advertisement