Advertisement

காதல் தருவாயா காரிகையே 19

                                 பார்வதி வெளியே அனுப்பி விடவும் கையில் சஞ்சயை தூக்கி கொண்டு அந்த அறைக்கு வெளியே வந்துவிட்டாள் தேவா. அவள் கையில்  உணவு கிண்ணமும் இருக்க, அவள் தனியாக வெளியே வருவதைக் கண்ட ரகு அவளை நெருங்கி பிள்ளையை தன் கைகளில் வாங்கி கொண்டான்.

                                “அவனுக்கு பசிக்குது.. சாப்பிட வைக்கணும்..” என்று தேவா மறுக்க, “நான் இங்கே தானே இருக்கேன்.. அப்படியே ஊட்டு..” என்றவன் சட்டமாக குழந்தையை கையில் வைத்துக் கொள்ள, அவன் அங்குமிங்கும் நடந்து கொண்டே விளையாட்டு காட்ட, வேடிக்கையின் இடையிலேயே அவனுக்கு ஊட்டி முடித்துவிட்டாள் தேவா.

                              அதிகபட்சம் பத்து நிமிடங்கள் தான் அவள் எடுத்துக் கொண்டது.. அந்த நேரத்திலேயே உணவை ஊட்டி முடித்துவிட, அங்கு தூரமாக நின்று இவளை பார்த்துக் கொண்டிருந்த சஞ்சனாவின்  தந்தைக்கு தேவாவின் குணம் புரிந்தது… தன் மகள் எங்கே தவறுகிறாள் என்பதும் தந்தையாக அவருக்கு புரிந்தது.

                              இதுவரை சஞ்சனா மட்டுமே ஒற்றை மருமகளாக இருந்திருக்க, இன்று தேவாவும் அதே வீட்டிற்கு மருமகளாக வந்திருக்கிறாள்.. இயல்பிலேயே அவர் மகள் சற்று சோம்பேறி என்பதும் அவருக்கு முன்பே தெரியும்.. இன்று வரை அது பெரிதாக கண்டு கொள்ள படாமல் இருந்திருக்க, இப்போது தேவாவின் சூட்டிகையில் மனம் இயல்பாகவே சஞ்சனாவை அவள் அருகில் நிறுத்தி பார்க்க சொல்கிறது என்று அவருக்கு உரைக்க, விஷயம் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை.

                         சுட்டு போட்டாலும் அவள் மகளுக்கு இதெல்லாம் வராது என்பதும் அந்த தந்தைக்கு புரிந்தே இருக்க, ஓரகத்தியின் குழந்தையிடம் தேவா செலுத்தும் அன்பும் பொய்யில்லை என்பது அவள் கண்களில் தெரிந்தது. அவர் அதை மட்டும் கவனிக்காமல் இவருக்கு பக்கவாட்டில் நின்றிருந்த சந்திரனையும் கவனித்துவிட, அவன் முகம் கசங்கி நின்றிருந்த விதத்திலேயே மருமகனின் மன ஓட்டம் ஒரு தந்தையாக அவருக்கு புரிந்தது…

                        இத்தனைக்கும் முத்து மாணிக்கமும், பிரசன்னாவும் அவர் அருகில் தான் நின்றிருந்தனர்.. பிரசன்னாவிற்கு தாய்மாமன் அல்லவா.. தன் மாமனின் முகவாட்டத்தை கண்டவன் ஏதும் அறியாதவன் போல் “வாங்க மாமா.. டீ குடிச்சிட்டு வருவோம்..” என்று அவரை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

                சஞ்சனாவின் தந்தை சிதம்பரத்திற்கு தான் அன்று மகளுக்காக அவள் புகுந்த வீட்டில் வரிந்து கட்டிக் கொண்டு நின்றது அசந்தர்ப்பமாக இன்று நினைவு வந்தது… இதோ நேற்று கூட, வேலுவின் உடல்நிலை இந்தளவிற்கு பாதிக்கப்பட்டு இருக்க, மகள்  சற்றும் அலட்டிக் கொள்ளாமல் காலை வரை வீட்டிலேயே இருந்ததும், இப்போதும் தங்களுடன் வெறும் கையை வீசிக் கொண்டு வந்ததும் அவரை மிகுந்த கவலைக்குள்ளாக்கியது..

                 மகள் அவள் வாழ்வை அவளே கெடுத்துக் கொள்வாளோ என்ற எண்ணம் முழுதாக அவரை அச்சப்படுத்த, எப்படி சரி செய்வது என்று ரசனையை தொடங்கி இருந்தார் சிதம்பரம்.

                அவர் முதல் மகளை பற்றி கவலை கொள்ள, அடுத்தவள் அங்கே ரகுவிற்கும், நந்தனாவிற்கும் அருகில் வந்து நின்றிருந்தாள்.. நந்தனா குழந்தைக்கு உணவை ஊட்டி முடித்தவள் அங்கேயே அவனுடன் நின்றுவிட்டிருந்தாள்..  உள்ளே கனகா பேசிய விஷயங்கள் மனதை அரிக்க, மீண்டும் உள்ளே சென்று அதை எல்லாம் காதில் வாங்க விருப்பம் இல்லை அவளுக்கு.

               அந்த காரணத்திற்காகவே அவள் ரகுவின் அருகில் நிற்க, அப்போது தான் அவர்களின் அருகில் வந்தாள் ஜனனி.  தேவா கையில் உணவு கிண்ணத்தை இன்னும் வைத்திருக்க “நான் ஊட்டட்டுமா தேவா..” என்று கேட்டுக் கொண்டே அவள் வர, தேவாவுக்கு ஏனோ அவளை பிடிக்கவே இல்லை.

                ரகுவின் மீதான உரிமை உணர்வு கூட காரணமாக இருக்கலாம்… ஆனால் அவளிடம் இயல்பாக பேசும் எண்ணம் வராமல் போகவும், அவள் அமைதியாக இருக்க ரகு “தேவாவே ஊட்டிட்டா ஜனனி.. அந்த கிண்ணத்தை மட்டும் கழுவி உள்ளே வச்சிடு..” என்றவன் அவளை அங்கிருந்து துரத்தவே பார்த்தான்..

             ஆனால் ஜனனி அந்த கிண்ணத்தை கையில் வாங்கி கொண்டும் உள்ளே செல்லாமல், அங்கேயே நின்று கொண்டு தேவாவிடம் பேச்சை வளர்த்தாள். “அப்புறம் தேவா.. எப்படி இருக்கீங்க.. உங்ககிட்ட பேசவே முடியாம போச்சு… இந்த ஊர் எல்லாம் பிடிச்சிருக்கா, ” என்று கேட்டவள் அவளாகவே “நீங்க சென்னையில வளர்ந்தவங்க.. இந்த பட்டிக்காடு எங்கே பிடிக்க போகுது..” என்று பதிலும் சொல்லிக் கொள்ள

           தேவா அமைதியாக சிரித்துக் கொண்டே நின்றாள்..ஜனனி “என்ன பேச மாட்டிங்களா.. எங்க மாமா உங்களை மிரட்டி வச்சிருக்காங்களா..” என்றாள் அழுத்தமாக

             “என் புருஷன் என்னை எதுக்காக மிரட்டணும் ஜனனி… நான் அவரை மிரட்டி வைக்காம இருந்தாலே போதும்.. அதோட நீங்கதான் உங்க கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிட்டீங்களே, அப்புறம் நான் என்ன சொல்றது…” என்றவள் அழகாக புருவங்களை ஏற்றி இறக்க

              ஜனனிக்கு அவரை அப்படியே விட்டுவிடும் எண்ணம் இல்லை போல.. “அப்போ எங்க மாமாதான் உங்களுக்கு அடிமையா இருக்காரா..” என்று சற்றே நக்கல் குரலில் வினவ

              “என் புருஷன் எனக்கு அடிமையா இருக்கறதுல உங்களுக்கு ரொம்ப வருத்தம் போலவே ஜனனி.. ஆனா பாருங்க.. இன்னும் உங்க மாமாவுக்கு அந்த நிலைமை எல்லாம் வரல.. நான் கண்கலங்காம அவரை பார்த்திட்டு தான் இருக்கேன்.. உங்களுக்கு சந்தேகமா இருந்தா அவரையே கேட்டு பாருங்களேன்..” என்று ரகுவை தேவா கைகாட்டிவிட, தேவாவை புன்னகையோடு பார்த்து நின்றான் ரகு.

                  அவன் கண்களில் வழிந்த காதல் தேவாவுக்கு தெரிந்ததோ இல்லையோ, எதிரில் நின்றவளுக்கு அட்சர சுத்தமாக விளங்கியது.. ஜனனிக்கு ரகுவின் முகத்தில் தெரிந்த உணர்வுகள் அவள் தோல்வியை உணர்த்த, அதுவும் தேவா அவளிடம் இப்படி பேசுவதும் பொறுத்து கொள்ளவே முடியவில்லை…

              அவள் தேவாவை  வம்பிழுக்க நினைத்து பேச்சு கொடுக்க, தேவா இப்படி பதிலுக்கு பதில் கொடுத்துக் கொண்டே நிற்பது ஆத்திரமாக வந்தது அவளுக்கு.. ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாதே.. உள்ளே அவள் அக்கா வாங்கி கட்டிக் கொண்டதை பார்த்துக் கொண்டு தானே நின்றாள். எனவே அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் அவள்.

              அவள் சென்ற நிமிடம் தேவா திரும்பி ரகுவை முறைக்க தொடங்க,, அவன் புரியாமல் “என்னடி..” என்று கேட்கவும், பதிலே கூறாமல் பிள்ளையை கையில் வாங்கி கொண்டு நடந்து விட்டாள். அதன் பிறகான பொழுதுகள் மெதுவாக கழிய, மதிய உணவு வேலைகளை கவனிக்க வேண்டும் என்று தேவா வீட்டிற்கு கிளம்ப, பார்வதி அவளுடன் கிளம்பினார்.

                 வானதியும் வீட்டிற்கு கிளம்பிவிட, அப்போதும் கூட சஞ்சனா அசையவே இல்லை… பிள்ளையை கையில் வைத்துக் கொண்டு அன்னையுடன் அமர்ந்திருக்க அவளை கண்டு கொள்ளாமல் வீட்டிற்கு கிளம்பி இருந்தனர் மூவரும்..

                     இவர்கள் கிளம்பிய சிறிது நேரத்திலேயே சுந்தராம்பாள் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர, அவரை கண்டவுடன் வேகமாக எழுந்து அருகில் சென்றான் ரகுநந்தன்.. “வாங்க பாட்டி.. உங்களுக்கு எப்படி..” என்று அவன் கேள்வியாக இழுக்க

            “தேவா போன் பண்ணி இருந்தா ரகு.. வேலு எப்படி இருக்கான்.. இப்போ பரவாயில்லையா..” என்று அவர் விசாரிக்க, அவருக்கு பதில் சொல்லிக் கொண்டே உடன் நடந்தான் ரகு.

               சுந்தராம்பாள் அறைக்குள் வரவும் சங்கரி தானாக எழுந்து நிற்க, சுந்தரம் வேலுவிடம் நலம் விசாரித்தவர் “ஒன்னும் இருக்காது வேலு.. அந்த ஆண்டவன் உன் கூடவே இருப்பான்.. சும்மா கவலைபட்டுட்டே இருக்காத.. எல்லாம் சரியாகிடும்..” என்று கூறியவர் சங்கரியிடமும் “ஓய்ஞ்சு போய் தெரியுற சங்கரி..முதல்ல நீ தெளிவா இருக்க வேணாமா.. ரெண்டு மருமகளுங்க இருக்காங்க வீட்ல.. நீ ஏன் இப்படி இருக்க..” என்று கடிந்து கொண்டார் அவர்.

               உண்மைக்கும் சங்கரி அப்படித்தான் இருந்தார். அவருக்கும் நேற்று காலையில் இருந்தே உடல் வாட்டிக் கொண்டு இருக்கிறதே.. ஆனால் கணவரின் உடல் நிலையில் தன்னை அவர் மறந்திருக்க, வீட்டினர் கவனிக்காததை சுந்தராம்பாள் கவனித்து இருந்தார்.

            சிறிது நேரம் கழித்தே அவர் தன் பேத்தியை தேட, “அவ அம்மாவோட வீட்டுக்கு போயிருக்கா பாட்டி… மதியம் வருவா..” என்று ரகு தகவல் சொன்னான். முத்து மாணிக்கமும் அப்போது தான் உள்ளே வந்தவர் சுந்தராம்பாளை பாசமாக வரவேற்க “வா முத்து.. “என்று அவரை அருகில் அமர்த்திக் கொண்டார் சுந்தராம்பாள்..

            முத்து தம்பியை நினைத்து கண்கலங்க “அட..அவனுக்கு தைரியம் சொல்லுவியா, அதை விட்டுட்டு நீயே கலங்கிட்டு நின்னா, அவனை யார் பார்த்துக்கறது.. அண்ணன் இருக்கான் ன்னு தானே அவனும் ஜம் ன்னு வந்து படுத்துட்டு இருக்கான்..ஓய்வு ன்னு நினைச்சுக்கோ.. அதான் பயப்பட ஒன்னும் இல்ல ன்னு சொல்லிட்டாங்களே ..” என்று அவரை தேற்றினார் சுந்தராம்பாள்..

             பேச்சுக்கள் அப்படியே நீள, ரகு சுந்தராம்பாளை வீட்டிற்கு அழைக்கவும், அவனுடன் கிளம்பியவர் கூடவே சங்கரியையும் அழைத்தார். ” இல்லம்மா நான் இங்கேயே இருக்கேன்… ” என்று அவர் கூற

               “உன் புருஷனை நீதான் பார்த்துக்கணும்.. யாரு இல்லன்னு சொன்னது.. ஆனா நீ தெம்பா இருக்கணும்ல.. முகத்தை பாரு, வா என்னோட.. கொஞ்சம் தூங்கி எழுந்து ராத்திரிக்கு வந்து இங்கே இரு..” என்று அதட்டலாக சுந்தராம்பாள் கூற

            வேலுவும் “நீ வீட்டுக்கு போயிட்டு வா சங்கரி.. எனக்கு இப்போ ஒன்னும் இல்ல, நல்லா இருக்கேனே.. நீ கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு சாயங்காலம் வா..” என்று அனுசரணையாக கூற, அவரின் இந்த குரலை சங்கரி  கேட்டு பல ஆண்டுகள் ஆகி இருந்தது.

            அதில் இன்னும் கண்ணீர் வர, கண்ணீருடன் கணவரை பார்த்தே நின்றார் அவர்.. வேலுவுக்கும் சங்கரி அழுவது சங்கடமாக இருக்க ‘அட என்னடி நீ.. அதான் அத்தை சொல்றாங்கல.. வீட்டுக்கு போயிட்டு வா.. ஏதாவது ஒழுங்கா சாப்பிடு..”என்றவர் “கூட்டிட்டு போங்க அத்தை.. நேத்துல இருந்து அழுதே கரையுறா.” என்று மனைவியை அனுப்பி வைக்கவும், ரகு அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

              இவர்கள் சென்ற நேரம் வீட்டில் மதிய உணவு தயாராக இருக்க, ரகு உணவை எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு கிளம்பி விட்டான். சங்கரி குளித்துவிட்டு வர, மதிய உணவை முடித்த பிறகே  பெண்கள் ஓய்வாக அமர, தேவா தலையணைகளை எடுத்து வந்து போட்டவள் “படுத்துகோங்க அத்தை.. நேத்துல இருந்து அலைஞ்சிட்டே இருக்கீங்க..” என்று சங்கரியிடம் கூற, அவருக்குதான் குற்றவுணர்வாக இருந்தது..

               நேற்றிலிருந்து அவரும் பார்த்துக் கொண்டே தானே இருக்கிறார் அவளை.எந்த இடத்திலும் சிறு குறையும் வந்து விடாமல் எப்படி சுழல்கிறாள் என்று.. அவள் மட்டும் சரியான நேரத்திற்கு கவனிக்காமல் விட்டிருந்தால்.. என்று நினைக்கும்போதே பயமாக இருக்க, நெஞ்சில் கையை வைத்துக் கொண்டுஎழுந்து அமர்ந்துவிட்டார் சங்கரி.

               சுந்தராம்பாளும், பார்வதியும் “என்ன.. என்ன சங்கரி.. என்னம்மா..” என்று பதற, அவர் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்கி அழுதார்.

              பார்வதி “என்ன சங்கரி.. எதுக்கு அழற.. என்ன செய்யுது..” என்று கேட்க

             “பயந்தே போய்ட்டேன்க்கா.. நேத்து மட்டும் தேவா பார்க்காம போயிருந்தா, நானுமே உயிரோட இருந்திருக்க மாட்டேன்.. அவர் இல்லாம என்ன செஞ்சிருப்பேன் நான்… ” என்று கலங்கி அழுதவர் தேவாவின் கைகளை பிடித்துக் கொண்டார்.

                “நேத்து அவர் கண்விழிச்சு பார்க்கிற வரைக்கும் உசுரே இல்ல எனக்கு.. இவ ஒருத்தி இல்லாம போயிருந்தா, ஒண்ணுமில்லாம போயிருப்போம்க்கா..” என்றவர் அழுது கொண்டே இருக்க

               சுந்தராம்பாள் தான் “அதான் எல்லாம் முடிஞ்சதே.. எதுக்கு பழசையே நினைச்சு அழுதுட்டு இருக்க சங்கரி.. நீ இப்படி அழுதுட்டே இருந்தா வேலு எப்படி நிம்மதியா இருப்பான்.. உன் முகமே சரியில்லாம இருக்கவும் தான் அங்க இருந்து கூட்டிட்டு வந்தேன் உன்னை..” என்று கடிந்து கொண்டார்.

                சங்கரி மெதுவாக அழுகையை நிறுத்தியவர் “ரொம்ப பண்ணிட்டேன்ம்மா.. கடவுள் அதுக்கெல்லாம் தண்டனையை இப்படி கொடுத்திடுவாரோ ன்னு நினைச்ச நிமிஷம் என் உயிர் போனாலும் பரவாயில்ல, அவரை திரும்ப கொடுத்திட்டு ன்னு தான் வேண்டிகிட்டேன்.. ” என்று கூற, அவரின் பேச்சுக்கள் நிம்மதியாக இருந்தது பார்வதிக்கு.

              இந்த மட்டும் உணர்ந்து இருக்கிறாளே.. என்று அவர் எண்ணிக் கொள்ள, சுந்தராம்பாள் “அட.. விடு சங்கரி.. என்ன பண்ணிட்ட நீ, எனக்கு தெரிஞ்சு உனக்கு வாய் கொஞ்சம் நீளம், அவ்ளோதான்.. மத்தபடி எல்லாம் உனக்கு கெட்ட குணம் வராது… இதோட எல்லாத்தையும் விடு.. ஏதோ உங்களை பிடிச்சது எல்லாம் ஒழிஞ்சது ன்னு சந்தோஷப்படு..” என்று ஆறுதலாக கூற, தலையசைத்து கேட்டுக் கொண்டார் அவர்.

                 உள்ளறையில் இருந்து காவேரியும், வானதியும் வர பேச்சு மாலைநேரம் வரை நீண்டது.. அன்று மாலையே சுந்தராம்பாள் சென்னைக்கு கிளம்பிவிட, பேத்தி குடும்பம் நடத்தும் அழகு வெகு திருப்தி அந்த பெரியவருக்கு.

                 அடுத்த இரண்டு நாட்களில் வேலு மாணிக்கம் வீடு திரும்பிவிட, இன்னும் குறைந்தது ஒரு மாதமாவது அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டுருந்தனர். அதன் பொருட்டே அவர் வீட்டிலேயே இருக்க, மற்ற அனைவரும் வேலைகளை பகிர்ந்து கொள்ள, வீடு சற்றே இயல்புக்கு திரும்பி இருந்தது.

                   அன்றைய தினம் நல்ல விதமாகவே கழிய, இதுவரை தேவா மருத்துவமனையில் கட்டிய பணத்தை பற்றி வீட்டில் யாரும் வாயை திறந்திருக்கவில்லை.. ஆனால் தேவா அதற்காகவே காத்திருந்தாள் போல்..

                  இரண்டு நாட்களாக அவள் மேல் அறைக்கு செல்லவே இல்லை.. கீழே வானதி, காவிரியுடன் தங்கி விட, ரகுவும் மருத்துவமனையில் இருந்ததால் மேலே அவர்கள் அறைக்கு செல்லும் எண்ணம் இல்லை அவளுக்கு.

                   ஆனால் இன்று இரவு உணவை முடித்து அனைத்தையும் ஒதுக்கி வைத்தவள் மெதுவாக அந்த படிகளின் அருகில் வர, பாதிப்படிகளில் எப்போதும் போலவே இருளில் வெளியே தெரியாமல் அமர்ந்திருந்தான் அவள் கள்வன். அன்று போலவே அவளை கைகளில் ஏந்தி கொள்ள, தேவாவும் இன்று சத்தம் எழுப்பவில்லை.

                      அவள் அமைதியில் குழம்பினாலும் அவளை தூக்கி சென்று அறையின் கட்டிலில் விட, அப்போதும் எதுவும் பேசாமல் எழுந்து அமர்ந்தாள் தேவா… அவள் முகத்தின் தீவிரம் ரகுவை தேக்கி வைக்க “என்ன.. என்ன விஷயம்..” என்று அவன் கேட்க,

                 அதற்காகவே காத்திருந்தவள் “உங்க சித்தப்பாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணப்போ என் பணத்துல இருந்து ஒரு இருபதாயிரம் கட்டி இருக்கேன்.. மறக்காம திரும்ப கொடுத்திடுங்க… ஏன்னா அது என்னோட பணம்.. தீட்டு..” என்றவள் சாதுவாக அமர்ந்திருக்க

                    “தீட்டா.. ஓகே அதை அப்புறம் பார்ப்போம்.. ஆனா நீ எனக்கா கட்டின.. உன் மாமாவுக்கு தானே கட்டின.. உன் பெரிய மாமாகிட்ட கேட்டு வாங்கிக்கோ.. என்கிட்டே சொன்னதை மாத்தாம அப்படியே சொல்லு…” என்று நக்கலாக ரகு கூறிவிட, இவனிடம் எல்லாம் பேசினோமே.. என்ற எண்ணம் தான் வந்தது அவளுக்கு..

              “சரி.. நான் மாமாகிட்ட பேசிக்கறேன்..” என்றவள் நகர முற்பட, அழுத்தமான பார்வையுடன் அவள் அருகில் அமர்ந்தவன் அவளை நகரவிடாமல் அவள் கையை இறுக்க, “கை வலிக்குது.. விடுங்க..” என்று மெல்லியதாக கத்தினாள் அவள்.

               ” வலிக்க வலிக்க பேசுற இல்ல, கொஞ்சம் வலிக்கட்டும்..” என்றவன் அவள் கையை விடாமல் இருந்தாலும் அழுத்தம் குறைந்திருந்தது..

                ” உங்க கூட  இருக்கேனே.. நீங்க  பேசுறதுல பாதியாவது பேச வேண்டாம்..” என்று அவள் அப்போதும் பேச

                  “வாய் குறையுதாடி உனக்கு..” என்று அவள் இதழ்களை சுண்டியவன் “என்ன சொன்ன தீட்டா.. எவ்ளோ ஈஸியா சொல்ற.. உன் பணம் தீட்டு ன்னா நீயும் தீட்டு தான்..” என்று நிறுத்தியவன் அவள் பேச முற்படவும், அவளை முந்திக் கொண்டு “நீ தீட்டுன்னா.. உன்கிட்ட இப்படியெல்லாம் நடத்துகிறேன் பாரு.. நானும் தீட்டுதான்…” என்று அவள் கன்னம் இதழ்கள் என்று முத்தமிட, அவனை பின்னால்  தள்ளி  இருந்தாள் தேவா.

                  அவனை மீண்டும் முறைக்க, “ஏய்.. அதான் நானும்  தீட்டு ஆகிட்டேனே..அப்புறம் ஏண்டி தள்ளி விடற..” என்றவன் மீண்டும் அவளை இழுக்க, அவனை விட்டு விலகி கட்டிலின் மூலையில் சென்று அமர்ந்து கொண்டாள் மனைவி..

                 அவள் பார்வையும் தீவிரமாக இருக்க, ரகு விளையாட்டை கைவிட்டு அவள் அருகில் சென்றவன் “நந்தனா.. ” என்று ஆழ்ந்த குரலில் அழைக்க

                “என் பக்கத்துல வராதீங்க..” என்று அழுகையோடு விரல் நீட்டி மிரட்டினாள் அவள்..

             “ஓகே.. நான் வரல, ஆனா நீ வா.. நீ வந்தாகணும் நந்தனா.. இப்படி நீ அழறதை பார்த்துட்டு இருக்க முடியாது  என்னால.. ” என்று ரகு கூற ” என்னை அழ  வைக்கிறதே நீங்க தான்..” என்று மூக்கை சுருக்கி அவள் குறை கூற

           “ஹேய்.. தெரியாம உன்கிட்ட சண்டை போட்டுட்டு கிட்டத்தட்ட நாலு நாளா உன்பின்னாடியே சுத்திட்டு இருக்கேன்டி.. இன்னும் நீயும் அழுது என்னையும் அலைய விட்டுட்டு, இப்போ குறையும் சொல்ற..” என்று பொறுமையாக அவன் சரணடைய, முகத்தை சுருக்கி கொண்டே அமர்ந்திருந்தாள் மனைவி.

                “அழுதது போதும் நந்தனா.. என்கிட்டே வா.. சின்னப்பிள்ளை மாதிரி பண்ணாத…” என்றுவிட, “ஒன்னும் வேண்டாம் போடா..” என்று தான் சொல்ல தோன்றியது தேவாவுக்கு.

                   அவள் எண்ணம் புரிந்தவன் போல் அவனாகவே அவளை இழுத்து அணைத்து கொண்டவன் “வேண்டாம் ன்னு எல்லாம் விட்டுட்டு போக முடியாது.. அதுவும் இப்படி ஒரு ரசகுல்லாவை விட்டுட்டு உன் ரகு எப்படி இருப்பான் சொல்லு…

                   “அப்பப்போ கொஞ்சம் கிறுக்காகிடுவேன்… அதை மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கோயேன் எனக்காக…”

                    “அப்பகூட இப்படியெல்லாம் பேசமாட்டேன் ன்னு சொல்லமாட்டீங்க இல்ல…” என்று அவள் மீண்டும் சிலிர்த்து எழ, அவளை அழுத்தமாக தன் கைகளுக்குள் அடக்கி கொண்டவன் “எதுக்கு இப்போ பூஸ்ட் ஆகுற… நான் அப்படி பேசினா நீயும் சட்டுன்னு ரெண்டு அடி போட்டுடு… உடனே சமாதானம் ஆகிடுவோம்..” என்று அவள் காதோரம் அவன் கிசுகிசுக்க,

                    “நிஜமாவே அடிச்சிடுவேன்… தள்ளி போங்க..” என்றாள் மனைவி..

                   “ஏய் என்ன இன்னும் தள்ளி போக சொல்ற… அதான் சண்டையெல்லாம் முடிஞ்சுது இல்ல, இனி தள்ளி எல்லாம் போக முடியாது… ” என்று அவன் அவளை மௌனமாக்கும் வேலையில் இறங்க,

                   “சண்டை முடியவே இல்ல.. நீங்க என்னை ஏமாத்தறீங்க போங்க..” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் இதழ்களை தீண்டியவன் மீண்டும் சண்டையில் தான் இறங்கி இருந்தான்…

            அவன் தலைமுடியை கைகளில் பற்றி இருந்தவள் அழுத்தமாக இறுக்க “நந்துமா.. சண்டை போட விடுடி..” என்று இன்னும் தீவிரமாக அவளிடம் அகப்பட்டுக் கொண்டிருந்தான் அவன்…

                 

                 

             

                  

                    

                

         

                

Advertisement