Advertisement

அவர்கள் கேட்ட மருந்துகளையும் அவள் வாங்கி கொடுத்து இருக்க, இன்னும்கூட யாரும் வந்திருக்கவில்லை.. அவரை அனுமதித்து இரண்டு மணி நேரங்கள் கழிந்திருக்க, தேவா ரகுவுக்கு ஏற்கனவே அழைத்து விவரத்தை சொல்லி இருந்தாள்.

             அவன் அங்கிருந்து கிளம்பி விட்டதாக கூறியவன் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அழைத்துக் கொண்டே இருந்தான்.. முத்துமாணிக்கமும் தேவாவிற்கு அழைத்தவர் விவரம் கேட்க, “பார்த்துட்டு இருக்காங்க மாமா.. ஒன்னும் இருக்காது நீங்க வாங்க..” என்றதோடு முடித்துக் கொண்டவள் மருத்துவர்களுக்காக காத்திருந்தாள்.

                மேலும் சிறிது நேரம் கழித்தே மருத்துவர்கள் வெளியே வர, வேலுமாணிக்கம் நன்றாக இருப்பதாக கூறியவர்கள் அவர் மயக்கத்திற்கு காரணமாக கூறியது அதிகப்படியான மனஉளைச்சலை தான். ஏற்கனவே அவருக்கு ரத்த அழுத்தமும் இருக்க, நேற்றிலிருந்து நடந்திருந்த நிகழ்வுகளில் அதற்கான மாத்திரையும் எடுக்காமல் விட்டிருந்தார்.

                 காலையில் இருந்தே அவர் உடல்நிலை சோர்வை காட்டிக் கொண்டே இருக்க, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியம் செய்திருந்தார்..அதன் விளைவே இப்படி வாட்டி இருக்க, அவர் உடல்நிலையும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

                 உடலில் சர்க்கரையும், உப்பும் வழக்கத்தைவிட அதிகமாக இருக்க, சற்றே பேணி காத்து கொள்ள வேண்டிய நிலை தான். அவர் மருத்துவர்களின் அறிவுரையை கேளாமல், அவர் போக்கிற்கு இருந்துவிட எல்லாம் சேர்ந்து அவருக்கு வினையை இழுத்து விட்டிருந்தது.

                  இப்போதும் அவரை கவனிக்காமல் விட்டிருந்தால், அவர் கைகால்கள் செயலிழந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்றுகூறிய மருத்துவர்கள் மேலும் அவரை இன்னும் கவனத்துடன் பார்த்துக் கொள்ளுமாறும் கூறிவிட்டிருந்தனர்.

               இன்னும் இரண்டு நாட்கள் அவரை மருத்துவமனையில் இருக்க சொல்லிவிட, பிரசன்னாவுக்கு அந்த சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை.. அண்ணன்கள் வீட்டை கவனிக்க, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தவன்.. இந்த சூழலை கடக்க முடியாமல் அவன் தவித்து நிற்க, பெண்களின் நிலை அதற்கும் மேலாக இருந்தது.

                  சங்கரி மருத்துவர் சொன்னதை கேட்டே நொந்து போயிருந்தார்.. வேலுவிற்கு மட்டும் ஏதாவது ஒன்றென்றால் தான் என்னவாவோம் என்ற பயம் அவரை யோசிக்க விடாமல் செய்திருக்க, அருகில் நின்றிருந்த பிள்ளைகள் கூட அவர் கவனத்தில் பதியவில்லை.

                  தேவாவுக்கு அவர்களில் யாரை வீட்டுக்கு அனுப்புவது, யாரை அங்கிருக்க சொல்வது என்று கூட தெரியவில்லை. பிரசன்னா நகரமாட்டான் என்பது புரிய, பெண்களை தனியே அனுப்பவும் பயமாக இருக்க, யாராவது வரட்டும் என்று அவளும் ஒரு ஓரமாக நின்றுவிட்டாள்.

                இவர்கள் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றிருக்கும் நேரம் தான் சந்திரன் அவசர அவசரமாக ஓடி வந்தான். வந்தவன் தேவாவிடம் “என்ன ஆச்சு சித்தப்பாவுக்கு.. என்ன நடந்தது தேவா..” என்று கேட்க

            அவனிடம் விவரம் கூறியவள், அவர் நன்றாக இருப்பதாகவும் சேர்த்து கூறினாள்..            சந்திரன் அதன் பிறகே சற்று நிம்மதியாக “எனக்கு ஒரு போன் போட்டு இருக்கலாம்ல தேவா…” என்று பாவமாக கேட்க

             “அந்த நேரத்துல என்ன செய்யுறது ன்னு புரியல மாமா.. இருந்த அவசரத்துல மாமாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வர்றது தான் முக்கியமா இருந்தது.. அதோட அக்காவும் அங்கே தான் இருந்தாங்க, அவங்க சொல்லிடுவாங்க ன்னு நினைச்சேன்..” என்று தயக்கத்தோடு அவள் சொல்லி முடிக்க, ஒருநொடி வேதனையை காட்டிய அவன் முகம் அடுத்த நொடி கோபமாக மாறியிருந்தது.

                 அமைதியாக அந்த இரவை அவர்கள் கடக்க முற்பட, முத்துமாணிக்கமும், பார்வதியும் வந்து சேர, பார்வதி அதன்பிறகு சங்கரியை தாங்கி கொண்டார். சந்திரன் பெண்களை வீட்டிற்கு அழைக்க, சங்கரி மறுத்து விடவும், மற்ற வானதி, காவேரி, தேவாவை அழைத்துக் கொண்டு அவன் கிளம்ப, தேவா பிரசன்னாவை கண்டவள் அவனையும் உடன் அழைத்துக் கொண்டாள்.

                அவன் மறுத்து அங்கேயே இருப்பதாக சொன்னபோதும், விடாப்பிடியாக அவனையும் அழைத்து சென்றுவிட்டாள் அவள். மருத்துவமனையில் பார்வதியும், முத்துமாணிக்கமும் கவனித்துக் கொள்ள, இயல்பாகவே வீட்டை பொறுப்பேற்றுக் கொண்டாள் தேவா.

                சந்திரனை பிரசன்னாவுடன் படுத்து கொள்ள சொல்லி அனுப்பியவள், தானும் மேலே தனது அறைக்கு செல்லாமல் வானதி, காவேரியுடன் இருந்து கொண்டாள். இடையில் சஞ்சனா வேலு மாணிக்கத்தை பற்றி விசாரித்த போது கூட, “நல்லா இருக்கார்..” என்பதோடு முடித்துக் கொண்டு படுக்க சென்றுவிட்டாள்.

              அடுத்த நாளும் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தன் வேலைகளை முடித்தவள் காவேரியை பிரசன்னாவுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டாள்… காலை எட்டு மணி அளவில் அங்கிருந்தவர்களுக்கு உணவை எடுத்துக் கொண்டு அவள் வானதி, சந்திரனுடன் மருத்துவமனைக்கு வந்துவிட பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள் தேவநந்தனா…

              இவர்கள் சென்ற நேரம் வேலு கண்விழித்திருக்க, மருமகளை கண்டதும் பாசமாக அவர் புன்னகைக்க, அவரை முறைத்து கொண்டே நின்றாள் மருமகள்.. “எல்லாரையும் பயப்பட வச்சிட்டு சிரிச்சுட்டு இருக்கீங்களா நீங்க..” என்று கேட்க, பதில் சொல்லவில்லை அவர்…

             அங்கிருந்த அத்தனை பேருக்குமே தேவாவின் மீது இருந்த பாசமோ, வாஞ்சையோ, மரியாதையோ இன்னும் ஒருபடி கூடிப்போக, சத்தமே இல்லாமல் தன் அன்பால் அவர்களை கட்டி வைத்திருந்தாள் தேவா.. ரகுவும் அங்கு தன் தம்பியோடு நின்றிருக்க, அவனை இன்னும் பார்த்திருக்கவே இல்லை அவள். ஆனால் அவன் பார்வை முழுதாக தன் மனைவியின் மீது தான்.

                அவன் தன் மனைவியிடம் என்ன எதிர்பார்த்தானோ, அது அத்தனையும் அவள் செயல்கள் மூலம் அவள் நிரூபித்து கொண்டிருக்க, ஒரு கணவனாக தான் சரியாக இருக்கிறோமா?? என்று சிந்திக்க தொடங்கி இருந்தான் ரகு.

               தன் குடும்பத்தை அவள் தாங்கி கொள்ள, தான் அவளின் ஒரே உறவான அவள் தந்தையை என்னவெல்லாம் பேசி வைக்கிறோம், அதுவும் அவளிடமே.. என்று நினைத்தவனுக்கு தன் தவறுகள் லேசாக புரிய ஆரம்பித்து இருக்க, பார்வை மொத்தமும் மனைவியின் மீது தான்.

                  பார்வதியிடம் பேசிவிட்டு திரும்பியவள் அப்போது தான் கணவனை பார்க்க, முகத்தில் சட்டென ஒரு நொடிநேர வெளிச்சம்.. ஆனால் அடுத்தக்கணமே அதை அவள் மறைத்து கொள்ள, பார்க்க வேண்டியவன் சரியாக கவனித்திருந்தான்.. இனி முழுநேர வேலை இவளை கவனிப்பது தான் என்று முடிவு செய்து நின்றிருந்தான் அவன்.

                     அதற்குள் சங்கரியின் அண்ணன் குடும்பம் மருத்துவமனைக்கு வர, சங்கரியை சூழ்ந்து கொண்டனர் அவர்கள். அவர்கள் குடும்பம் மொத்தமும் வந்திருக்க, வேலு மாணிக்கத்திடம் நலம் விசாரித்தவர்கள் “ராத்திரியே ஒரு போனை போட்டு சொல்லக்கூடாதா சங்கரி.. அண்ணன் ஓடி வந்திருப்பேன்ல..” என்று கேட்க

              “எதுவுமே தோணல அண்ணே.. அவர் கண்ண திறந்து பார்க்கிற வரை வேற எதுவுமே ஓடல எனக்கு…” என்று வருத்தத்தோடு கூற, அவர் கண்கள் கலங்கி போயிருந்தது..

              சஞ்சனாவும் தன் தாய் வீட்டுடன் அங்கே வந்திருக்க, அவள் கையிலிருந்த சஞ்சய் அழுகையோடு பார்வதியிடம் தாவிக் கொண்டான்.. சஞ்சனாவை அதிருப்தியாக பார்த்த பார்வதி, சூழ்நிலை உணர்ந்து வாயை மூடிக் கொண்டு நின்றிருந்தார்..

              ஆண்கள் பேசிக் கொண்டே அறைக்கு வெளியே வந்து நின்றுவிட, சங்கரியின் அண்ணி “என்ன நேரமோ என்னவோ அண்ணி.. உங்க வீட்டுக்கு புது மருமக வந்த ராசி, அண்ணனை கூட்டிட்டு வந்து படுக்க வச்சிட்டா… இதுக்கு தான் நேரம் காலம் பார்த்து எல்லாம் செய்யணும் ன்னு சொல்றது..” என்று  கீச்சு குரலில் சங்கரிக்கு போதித்து கொண்டிருக்க, அரைகுறையாக என்றாலும் பார்வதியின் காதில் விழுந்துவிட்டது..

               அங்கு நின்றிருந்த தேவாவின் காதிலும் விழுந்து இருக்கும் என்பதும் அவருக்கு புரிய, அவர் பேச வாயெடுக்கும் போதே, சஞ்சய் பசியில் சிணுங்க தொடங்க, தேவாவிடம் “தேவா.. இட்லியை தட்டிலே வச்சு எடு.. பிள்ளைக்கு பசிக்குது போல..” என்று அதட்டலாக கூறியவர்

                முறைப்புடனே சஞ்சனாவிடம் திரும்பினார்.. “பிள்ளையை சிங்காரிச்சு தூக்கிட்டு வந்துட்டா மட்டும் போதுமா.. காலையில என்ன சாப்பிட கொடுத்த அவனுக்கு..” என்று கோபமாக கேட்க

               “அங்கே என்ன இருந்தது அவனுக்கு கொடுக்க, நானே பதட்டத்துல அப்பாவோட கிளம்பி வந்துட்டேன்.. நான் என்ன செய்யுறது, பால் தான் கொடுத்தேன்..” என்று மனசாட்சியே இல்லாமல் கூற

              “நீ ஏன்மா செய்யப்போற.. பாவம் தம்பியை இப்போதான் ஒருமணி நேரத்துக்கு முன்னாடி ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கு, நீயே பதறிப் போயிருக்க.. உனக்கு ஏதாவது செய்ய தோணுமா..” என்று எள்ளலாக கேட்டவர் “உன் அத்தைக்காரி செஞ்சதுல ஒரே நல்ல விஷயம் உன்னை என் தலையில கட்டினது தான், வேற எங்கேயாவது போயிருந்தா இந்நேரம் உங்க அப்பா வீட்டுக்கே திரும்பி போயிருப்ப நீ..” என்றுவிட்டார் கடுமையாக

                சஞ்சனாவின் அம்மா கோபமாக “என்ன பேசறிங்க அண்ணி நீங்க.. ” என்று கேட்க

               “ஏன் இல்லாததையா பேசிட்டேன்..” என்று கேட்டவர் குழந்தையை தேவாவின் கையில் கொடுத்து “இவன வெளியே கூட்டிட்டு போ தேவா.. இதை ஊட்டி முடி..” என்று அவளை அனுப்ப, மறுவார்த்தை பேசாமல் விலகி சென்றுவிட்டாள் அவள்.

                   பார்வதி இப்போது சஞ்சனாவிடம் திரும்பியவர் “நீ பெத்த பிள்ளைக்கு ஒருவேளை சோறு கொடுக்க முடியல உன்னால.. பிள்ளைங்க கிடந்து தவிச்சிருக்கு, உன் புருஷனுக்கு ஒரு போன் போட நேரம் கிடைக்கலையா உனக்கு… நான் சொன்னது தப்பே இல்ல, என் மகனை தவிர வேற யாரை கட்டி இருந்தாலும் நீ வாழ்ந்திருக்கவே மாட்ட..” என்று மீண்டும் அழுத்தமாக சொல்லி விட்டவர்

                அவள் அன்னையிடம் “என்ன எதுன்னு யோசிக்காம அடுத்தவங்க பொண்ணை குறை பேசறீங்க.. நீங்க சொன்னது ஒருவகையில சரிதான்.. அவளை கூட்டி வரவும் தான் சரியான நேரத்துல எங்க தம்பியை காப்பாத்தி கொடுத்திருக்கா, உங்க பொண்ணை நம்பி விட்டு இருந்தா…” என்று நிறுத்தியவர்

                 “முதல்ல இவளோட லட்சணம் என்னன்னு பாருங்க.. பிறகு அடுத்தவளை பத்தி பேசலாம்.. ஆனா அப்படி கூட நீங்க என் மருமகளை பேசக்கூடாது சொல்லிட்டேன்.. இனி அவளை பத்தி ஏதாவது உங்க வாயில இருந்து வந்தது, இவளோட லட்சணம் என்னன்னு நான் பஞ்சாயத்து வைப்பேன்…”

                  “சொந்தம் ன்னு சொல்லி இவளை எங்க தலையில கட்டிட்டு எங்க குடும்பத்தையே பேசுவீங்களா நீங்க.. ஏன் சங்கரி நீயும் வாயை மூடிட்டு இருக்க.. நேத்து தேவா இல்லாம போயிருந்தா என்ன நிலைமை இங்கே.. உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல, இனியாவது மனுஷங்களை புரிஞ்சு நடந்துக்கோ..” என்று கோபமாக கூறிவிட்டார் பார்வதி.

                 வேலுவிடம் “நானேதாவது  தப்பா பேசுறேனா சின்னவரே..” என்று கேட்க

                “ஏன் அண்ணி நீங்க வேற.. இவளுக்கு இதுக்கு அப்புறமாவது புத்தி வந்தா சரிதான்..நீங்க தேவாவை பாருங்க..”என்று அவர் அனுப்பிவிட,

                 சங்கரிக்கே பார்வதியின் இந்த அவதாரம் புதிது.. பின் சஞ்சனாவையும், அவள் அம்மாவையும் கேட்கவா வேண்டும்.. பேசவே மாட்டார் என்று நினைத்திருந்தவர் பதில் பேச முடியாத அளவுக்கு பேசிவிட்டு சென்றுவிட, சங்கரி முதல் முறையாக தேவாவை பற்றி நல்ல விதமாக நினைக்க தொடங்கி இருந்தார். அவரின் அண்ணன்மகள் இப்போது லேசாக உறுத்த தொடங்கி இருந்தாள் அவரை..

Advertisement