Advertisement

காதல் தருவாயா காரிகையே 18

                              தன் வீட்டிற்கு பின்னால் இருந்த வயலின் முகப்பில் கையை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் செந்தில். அவன் முகம் தீவிர யோசனையை காட்ட, எதிரே விரிந்திருந்த வயல் பரப்பில் அவன் கவனம் இல்லை. அவன் மனம் முழுவதும் நேற்று இரவில் அன்னை கூறிய விஷயங்களே ஓடிக் கொண்டிருந்தது.

                            நேற்று இரவு அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டு வருவதாக கோதை நின்றபோது கூட, நான் கூட்டி போகிறேன் என்றுதான் சொன்னான் அவன். ஆனால் அவனை தவிர்த்துவிட்டு தனியாகவே அவர் கிளம்பி சென்றுவிட, அதற்குமேல் அவரை எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்துவிட்டான் அவன்.

                            அவர் அடிக்கடி இப்படி செல்வது வழக்கம் தான் என்பதால், அவனும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இரவு வெகுநேரம் கழித்து ரகுவுடன் திரும்பி வந்தவர் கூறிய விஷயங்கள் நிச்சயம் அதிர்ச்சி தான் அவனுக்கு..

                           காவேரிக்கும் அவனுக்குமான திருமண பேச்சு அவன் அறிந்தது தான் என்றாலும் அதை பற்றி தீவிரமாக எல்லாம் யோசித்தது இல்லை செந்தில். அம்மாவுக்காகவும், பட்டிக்காகவும் தான் திருமணம் என்றிருந்தவன் அவர்கள் யாரை காட்டினாலும் கட்டிக் கொள்ளும் எண்ணத்தில் தான் இருந்தான்.

                           கோதை, அவர் ஒன்றுவிட்ட அண்ணன் மகளான காவேரிதான் மருமகளாக வரவேண்டும் என்று சொன்னபோதும் அவரின் விருப்பம்தான் என்று சொன்னதோடு சரி. இதுதான் நடக்கும் என்று தெரிந்து அதன் போக்கில் விட்டுவிட்டிருந்தான்.

                            ஆனால், இப்போதைய அவளின் மறுப்பு நிச்சயம் சிறு வலியை கொடுத்தது உள்ளுக்குள். அதை முழுதாக உணரும் முன்பே வானதியை அன்னை பேசி முடித்து வந்திருக்க, இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை அவனுக்கு.

                            நான்கு வயதிலேயே தந்தை இறந்து போயிருக்க, கோதை,  தன் தாய் ராக்காயியின் வீட்டோடு வந்து விட்டிருந்தார். அந்த நான்கு வயதில் இருந்தே இரண்டு பெண்களின் வளர்ப்பில் வளர்ந்தவன் அவன்.

                                 அவன் பாட்டி ராக்காயி உடன் சிறுவயதிலிருந்தே சற்றே நெருக்கம் அதிகம் செந்திலுக்கு. அவரும் அவனை பாசத்தோடு தன் கைகளுக்குள் அடக்கியே வளர்த்துவிட, எந்த இடத்திலும் ஒரு சிறு குறையும் சொல்ல முடியாதபடி கண்களில் கண்ணியதோடு வளர்ந்து நின்றான் செந்தில்.

                பூங்கோதைக்கு உடன் பிறந்தவர்கள் என்று யாரும் இல்லாதபோதும் கூட, முத்து மாணிக்கமும், வேலு மாணிக்கமும் சித்தி மகளை உடன் பிறந்த தங்கையாகவே எண்ணி பாசம் காட்டி இருக்க, இன்று வரை பூங்கோதையும் அந்த அன்புக்கு நன்றியுள்ளவராகவே இருந்திருக்கிறார்.

                 முத்து மாணிக்கத்தின் ஆதரவும், அன்பும் எப்படி பட்டது என்பது  கணவனை இழந்து கையில் குழந்தையோடு தனித்து நின்ற அந்த இருபத்து மூன்று வயது பூங்கோதைக்கு மட்டுமே தெரியும். அவள் இந்த ஊரில் பாதுகாப்போடு வாழ வழி செய்து கொடுத்தவர் அவர்.

                தேவாவின் அம்மா ஜானகியை குணா திருமணம் செய்து சென்னைக்கு அழைத்து சென்றிருந்த சமயம் அது. தங்கையின் பிரிவில் வாடி இருந்த முத்துவும், வேலுவும் சித்தி மகளை தாங்கி கொள்ள இவர்களின் பிணைப்பு இறுகி போயிருந்தது.

                  செந்தில் குமரனுக்கும் மாமன்கள் மீது அளவுகடந்த பிரியம் தான். அதன் பொருட்டே அன்னையின் முடிவுகளுக்கு அவன் தலையசைக்க, இதோ நேற்று பெண்ணை முடிவு செய்துவிட்டு வந்திருந்தார் அவர். இப்போதும் செந்திலுக்கு வானதியை மணந்து கொள்வதில் பெரிதாக எந்த மறுப்பும்  கிடையாது.

                சொல்ல போனால் அன்னையுடன் அவள் பிணைப்பை அறிந்தவன் என்பதால் சற்றே நிம்மதியும் கூட..இவர்கள் இருவரும் சேர்ந்து என்னை என்ன செய்ய காத்திருக்கிறார்களோ என்ற எண்ணம் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, முகத்திலும் ஒரு அமர்தலான புன்னகை தான் குடி கொண்டிருந்தது.

                 பல ஆண்டுகளாக பேசி வைத்திருந்த திருமண பேச்சில் கூட காவேரியை மனைவியாக நினைத்து பார்த்திராதவன், நேற்று அவன் அன்னை உறுதி செய்த வானதியை இன்று அவரின் மருமகளாக கற்பனை செய்து நின்றிருந்தான்.. கூடவே என்னை என்ன செய்ய போகிறாளோ என்று வேறு அவன் எண்ணமிட, மனித மனம் எப்போதும் விந்தைதான் போலும்.

                                                   இங்கு ரகுவின் வீட்டில் தன் அத்தையுடன் அமர்ந்திருந்தாள் தேவா. சங்கரியும், சஞ்சனாவும் அறையில் இருக்க, இவர்கள் வீட்டின் பின்கட்டில் அமர்ந்து பூஜை பாத்திரங்களை விளக்கி கொண்டு அமர்ந்திருந்தனர்… பார்வதி விளக்குகளை பளிச்சென்று தேய்த்து எடுக்க, அவர் அருகில் அமர்ந்திருந்தவள் அவர் சொன்னபடியே விபூதி வைத்து துடைத்து அவற்றிற்கு பொட்டிட்டு கொண்டிருந்தாள்.

                 சங்கரி அன்று காலை எழுந்ததில் இருந்தே தலை வலியாக இருக்க, காலை உணவை முடித்தவர் எப்போதும் போல துணிகளை வேறு ஊற வைத்து விட்டிருந்தார். இப்போது தலைவலி அதிகமாகி இருக்கவும், துணியில் கைவைக்க முடியாது என்று புரிந்து போக, தன் அண்ணன் மக்களிடம் சென்று நின்றார் அவர்.

                 அவள் அறையில் இருந்தவளிடம் “சஞ்சுமா.. இன்னிக்கு ஒரு நாள் இந்த துணியெல்லாம் கொஞ்சம் துவைச்சு போடறியா.. அத்தைக்கு தலைவலியா இருக்குடா..” என்று அவர் பாசமாக கேட்க

                  “ஐயோ.. என்ன அத்தை நீங்க.. முடியலைன்னா ஏன் துணியை ஊற வச்சீங்க… தலைவலிக்கு மாத்திரை போட்டிங்களா..” என்று பாசத்தோடு கேட்டவள் அவர் பதில் சொல்லும் முன்பே “நான் எப்படி அத்தை தண்ணியில கை வைக்க முடியும்.. சஞ்சய்க்கு சேராதே…” என்று பாவமாக சொல்லிவைக்க, சங்கரிக்கு புரிந்து போனது அவள் உதவமாட்டாள் என்று.

                  அண்ணன் மகளை மனதிற்குள்ளே நொந்து கொண்டவர் அவளிடம் இருந்தே ஒரு மாத்திரையை வாங்கி போட்டுக் கொண்டு பின்கட்டுக்கு வர, அங்கே அவர் கண்டது பார்வதியுடன் அமர்ந்து விளக்கை துடைத்துக் கொண்டிருந்த தேவாவைத்தான்..

                  அத்தனை பதவிசாக அவள் குனிந்து அமர்ந்து கொண்டு தீவிரமாக வேலையில் மூழ்கி இருக்க, அவளை வாஞ்சையாக பார்த்திருந்தார் பார்வதி. சங்கரிக்கு சற்றே பொறாமைதான் அவர்களின் இந்த நிலை. பார்வதியிடம் இப்படி பூனையாக அமர்ந்திருப்பவள் தன்னை மதிக்க கூட மாட்டாள் என்று தோன்ற அத்தனையும் திமிர் என்று வழக்கம் போல மனதோடு பாடிக் கொண்டே சென்றுவிட்டார்.

                 அவரின் தலையெழுத்து அன்று மொத்த துணியையும் அவர் ஒருவராகவே துவைத்து எடுக்க, உதவிக்கு என்று கூட வந்து அவருடன் நிற்கவில்லை சஞ்சனா. பார்வதி வழக்கம் போல வீடு வேலைகளை பார்க்க, தேவாவும் அவருடன் தான் சுற்றிக் கொண்டிருந்தாள் அன்று நாள் முழுவதும்..

                  அன்றைய தினம் அப்படியே கடக்க, அன்று மாலை வேளையில் பார்வதியின் சொந்தத்தில் ஒரு திருமணம் என்று தஞ்சாவூருக்கு கிளம்பினர் முத்துமாணிக்கமும், பார்வதியும்.. வேலுமாணிக்கம் கடையை பார்த்துக் கொள்ள ரகு கொள்முதல் வேலைக்காக தேனீ சென்றிருந்தான். அன்று இரவோ அல்லது அடுத்த நாள் காலையோ தான் திரும்புவேன் என்று தேவாவின் முதுகை பார்த்து தகவல் சொல்லி கிளம்பி இருந்தான்.

                 வீட்டில் பெரியவர்கள் இல்லாததால் தேவா வழக்கம் போல வானதி, பிரசன்னாவுடன் அரட்டை அடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, சஞ்சய்யை அறைக்குள் வைத்து பூட்டிக் கொண்டிருந்தாள் சஞ்சனா.. உன் பிள்ளை நீ பார்த்துக் கொண்டால் சரி    என்பது போல் தான் நினைத்துக் கொண்டாள் தேவா.

                  அன்று அவள் கையில் இருந்து பிடுங்கி சென்றதில் இருந்தே பார்வதியிடம் இருக்கும் நேரங்களில் மட்டும்தான் அவள் சஞ்சயுடன் விளையாடுவது. மற்ற நேரங்களில் வீணான வாக்கு வாதங்கள் வேண்டாம் என்று தள்ளியே  நிற்பாள்.

                   வானதியின் திருமண விஷயத்தை வைத்து அவளை பிரசன்னா வம்பிழுத்துக் கொண்டிருக்க, தேவாவும் அவனுடன் சேர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போது தான் வேலுமாணிக்கம் வீட்டிற்கு வந்தார். தேவா அவர் தலையை  கண்டதும் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, வாங்கி கொண்டவர் மருமகளை பார்த்து

                      சோர்வாக சிரித்து வைக்க, அவர் முகமே வாட்டமாய் தெரிந்தது தேவாவுக்கு.

                 “என்ன மாமா.. என்ன ஆச்சு, உடம்புக்கு எதுவுமே முடியலையா.. உங்க முகமே சரி இல்லையே..” என்று அவள் கேட்க

                 “அதெல்லாம் ஒண்ணுமில்ல தேவாம்மா.. கடையில கொஞ்சம் வேலை அதிகம்.. அதுதான் எப்படியோ இருக்கு.. படுத்தா சரியாகி போகும்டா..” என்றவர் எழுந்து கொள்ள, தேவாவும் அவருக்கு உணவை எடுத்து வைக்க உள்ளே சென்றாள்.

                  இதுவரையும் கூட சங்கரி எழுந்து வெளியே வந்திருக்கவில்லை. அவருக்கு இன்னும் தலைவலி விடாததால் உணவுக்கு கூட எழுந்து வராமல் படுத்தே கிடந்தார் அவர். வேலு மாணிக்கம் முகம் கழுவ பின்கட்டிற்கு சென்றவர் சட்டென நெஞ்சில் ஏற்பட்ட வலியில் நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே சரிந்து அமர்ந்துவிட, சத்தம் போட்டு யாரையும் அழைக்க கூட முடியவில்லை அவரால்.

                     வலியில் அவர் துடித்துக் கொண்டிருக்க, தேவா உணவை எடுத்து மேசையில் வைத்தவள் அவரை காணாமல் தேடிக் கொண்டு செல்ல, பின்னாலிருந்த திண்ணையில் சரிந்து விட்டிருந்தார் மனிதர். அவள் பதறி போனவளாக “மாமா..” என்று கத்திக் கொண்டே அவரை எழுப்ப மொத்தமாக மயங்கி இருந்தார்.

                   தேவா பயத்தில் “வனி.. பிரசன்னா..” என்று குரல் கொடுக்கவும், எழுந்து ஓடி வந்தனர் இருவரும். மூன்று பேருக்குமே அந்த நேர அதிர்ச்சியில் அடுத்து என்ன என்பது புரியாமல் போக, முதலில் சுதாரித்துக் கொண்டது தேவா தான்.

                   அவள் பிரசன்னாவை விரட்ட, பக்கத்தில் ஒருவரிடம் கேட்டு அவன் காரை எடுத்து வர, இதற்குள் வானதி சங்கரியை எழுப்பி இருந்தாள். சங்கரிக்கு கைகால்கள் எல்லாம் உதற ஆரம்பித்துவிட்டது கணவரின் நிலையை கண்டு.. “என்னங்க.. என்னங்…” என்றவர் அழுது கொண்டே இருக்க,

                  தேவாவும்,வானதியும் அவர்களுக்கு தெரிந்த வகையில் முதலுதவியை செய்து அவரை பிரசன்னா எடுத்து வந்திருந்த காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர். வேலுமாணிக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, பிரசன்னா முழுவதுமாக ஓய்ந்து போயிருந்தான்.

                 காவேரியும், சங்கரியும் ஒருபுறம் அழுது கொண்டே இருக்க, பிரசன்னாவுடன் வானதி நின்றிருந்தாள். இன்னும் வீட்டிலிருந்து யாரும் வந்திருக்கவே இல்லை… சஞ்சனா யாருக்கு தகவல் சொன்னாள் என்று கூட தெரியாது அவர்களுக்கு…

                  தேவாவுக்கு அதையெல்லாம் யோசிக்கும் நேரம் இல்லாமல் போக, மருத்துவர்கள் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள் அவள். அவள் ஒருத்தி மட்டுமே சற்று தெளிவாக இருக்க, மருத்துவமனையில் முதற்கட்டமாக செலுத்த வேண்டிய பணத்தையும் தன் வங்கி அட்டையில் இருந்தே செலுத்தி விட்டிருந்தாள்.

Advertisement