Advertisement

காதல் தருவாயா காரிகையே 17

                               வேலுமாணிக்கம் பூங்கோதையிடம் “உனக்கு சம்மதமா..” என்று கேட்டு நிற்க, அங்கு யார் அதிகம் அதிர்ந்து போனது என்பதை கணிக்க முடியாதபடி இருந்தது சூழ்நிலை. வானதி தன் சித்தப்பாவின் வார்த்தைகளில்  மருண்ட பார்வையை பூங்கோதை மீது செலுத்த, பூங்கோதையும் அவளைத்தான் பார்த்திருந்தார் அந்த நொடி.

                            வானதிக்கு அவரின் பார்வையில் எதுவும் புரியாமல் போக, ரகுவை நெருங்கி நின்று கொண்டாள். ரகு தங்கையின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டவன் “நான் இருக்கிறேன்..” என்பது போல் அவள் கைகளில் ஒரு அழுத்தம் கொடுக்க, தன் அண்ணனை திரும்பி பார்த்தாள் அவள்.

                          ரகுவின் பார்வை அவளிடம் எதையோ உணர்த்த, அந்த நிமிடம் அவன் பார்வையும் புரியாமல் தான் பார்த்திருந்தாள் வானதி. இதற்குள் பூங்கோதையை அங்கிருந்த சோஃபாவில் அமர்த்தி இருக்க, அவரின் அழுகை சற்றே குறைந்திருந்தது.

                        வானதியை பார்த்தவரின் பார்வை உண்மையில் அவளிடம் இறைஞ்சுதலாகவே படிந்து கொண்டிருந்தது. வானதிக்கு அந்த நிமிட அதிர்ச்சியில் ஒன்றும் புரியாமல் போக,அவர் பார்வையின் அர்த்தம் புரியாமல் குழம்பி நின்றிருந்தாள்.

                        வேலு மாணிக்கம் மீண்டும் “நீ சொல்லு கோதை.. வானதியை உன் மருமகளா ஏத்துப்பியா..” என்று கேட்க

                      பூங்கோதை தன் கையை நீட்டியவர் வானதியை  அருகில் அழைக்க, சட்டென ஒரு பயம் வந்து ஒட்டிக் கொண்டது அவளிடம். இதுவரை இருந்த சூழ்நிலையே வேறு. காவேரி தான் மரியாதையாக தள்ளி நிற்பாள் ஒழிய, வானதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருந்தது இல்லை.

                    இதே கோதையுடன் கையை கோர்த்துக் கொண்டு பலமுறை வலம் வந்திருக்கிறாள். அத்தை என்று உரிமையும் அதிகம்… ஆனால் இந்த ஐந்து நிமிட பேச்சுவார்த்தை ஆண்டாண்டு கால இடைவெளியை ஏற்படுத்தி விட்டது போல் தோன்ற, தயங்கிய படியே முன்னேறினாள் அவள்.

                  கோதை வானதியின் கையை பிடித்து தன் அருகில் அமர்த்திக் கொண்டவர் “வனிம்மா.. நீ.. நீ..” என்றவருக்கு வார்த்தையே வரவில்லை. அதற்கே அவர் கண்கள் கலங்கிவிட, வார்த்தை தடுமாறியது. வானதியின் கைகள் இன்னும் அவர் கைகளுக்குள் இருக்க, வானதியின் பார்வை தலை குனிந்து இருக்கும் தன் அத்தையின் தலையில் இருந்தது.

                      சட்டென கண்களை திருப்பியவள் காவேரியை வேண்டுதலாக பார்க்க, அவளோ தன் அன்னையின் பின்னால் நின்று இருந்தவள் இவர்களை ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வையில் நிச்சயம் செந்திலின் மீதான பிடித்தமோ, சங்கரியின் மீதான பயமோ எதுவுமே இல்லை.

                    வானதி அந்த நிமிடம் முடிவெடுத்துக் கொண்டவளாக தன் தந்தையை பார்க்க அவருமே கலங்கித்தான் நின்றிருந்தார். காவேரிக்கு செந்திலை முடித்துக் கொள்வது என்ற பேச்சு வார்த்தை சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருப்பது தான்.

                   ஏன் இன்று மறுத்து நிற்கும் காவேரியும், சங்கரியும் கூட இதுவரை அமைதியாக இருந்து ஆமோதித்தவர்கள் தான். காவேரி வானதியை விட ஒருவயது பெரியவளாக இருக்க, அதன் காரணமாகவே அவளை பேசி இருந்தது கூட..

                   அவர்களை பொறுத்தவரை வானதி சிறுபெண்.. ஏன் கோதைக்கே கூட அந்த எண்ணம் தான். காவேரி வானதி அளவுக்கு நெருக்கம் இல்லையென்றால் கூட மரியாதையாக ஒதுங்கி நிற்கிறாள் என்ற எண்ணம் தான் அவருக்கு. வானதி அத்தை அத்தை என்று அவர் பின்னோடே அலைவதால் வேறு எண்ணங்கள் இதுவரை கிடையாது.

                  நேற்றுவரை சிறுபெண் என்று நினைத்திருந்தவளை இன்று வேலுமாணிக்கம் சட்டென மணமகளாக முன்னிறுத்தி விட, வேறு எதையும் விட தன் மகளின் மனநிலைதான் முக்கியமாக இருந்தது முத்துமாணிக்கத்திற்கு. குழந்தை கலங்கி போவாளே என்பது போலத்தான் அவர் பார்வை மகளின் மீது படிந்தது.

                    அவளும் அதையே பிரதிபலிப்பது போல் தன் அண்ணனுடன் ஒண்டி கொள்ள, மனிதர் பயந்துபோய் தான் நின்றார். அவரின் நிலை இருதலைக் கொல்லி எறும்பு போல தான். தங்கையின் நிலையையும் தாங்க முடியவில்லை, அதே நேரம் மகளை கட்டாயப்படுத்தவும் முடியவில்லை.

                    அவர் கலங்கி போனவராக மகளை பார்த்துக் கொண்டே நிற்க, வானதியின் பார்வை அடுத்ததாக தன் அன்னையை நோக்கியது. அவர் முகத்தில் மறுப்பாக எதுவும் தெரியாமல் போக, அங்கு நின்றிருந்த தன் அண்ணன்களையும் ஒருமுறை பார்த்தவள் கடைசியாக பிரசன்னாவை பார்க்க, அவன் “சம்மதம் சொல்லிடு..” என்பதுபோல் தலையை அசைத்து சைகை செய்தான்.

                     வானதி தன் முன் இருந்த கோதையிடம் இருந்து தன் கையை மெதுவாக உருவிக் கொள்ள, கோதை அதிர்ச்சியுடனே அவளை நிமிர்ந்து பார்த்தார். அவர் பார்வையை உணர்ந்தவள் “எதுக்கு இப்படி அழறீங்க.. அதான் உங்க அண்ணன் சொல்லிட்டாரே, இன்னும் என்ன.. ஒருவேளை நான் மருமகளா வரப்போறத நினைச்சு அழறீங்களா..” என்று முறைப்பாக அவரை கேட்டு வைக்க

                   கோதையில் முகத்தில் மின்னலின் ஒளி போல அத்தனை வெளிச்சம் அந்த நிமிடம். அவர் பார்வை காவேரியிடம் ஒருமுறை படிந்து மீள, அவளை முறைத்து சட்டென முகத்தை திருப்பிக் கொண்டவர் வானதியிடம் “நீ அத்தை வீட்டுக்கு வர்றியாடா… செந்திலை கட்டிக்கிறியா..” என்று மீண்டும் ஒருமுறை கேட்டு நிற்க, வானதி எதுவுமே பேசாமல் அவரை நோக்கி சம்மதமாக தலையை மட்டுமே அசைத்தாள்.

                    அந்த நொடிகளில் கோதைக்கு அவள் குலதெய்வமாகவே மாறிப்போக, அவளை கட்டி அணைத்து கொண்டார் கோதை. அவர் கண்களில் வழிந்த நீரோடு தன் அண்ணன் மகளின் தோளில் சாய்ந்து அழ, வானதி அவரை அணைத்து கொண்டு அமைதியாகவே அமர்ந்திருக்க, பார்வதி தான் கோதையின் தோளில் தட்டிக் கொடுத்து அவரை சமாதானம் செய்தார்.

                  ஒருவழியாக அங்கே சற்றே இயல்புநிலை திரும்ப, சஞ்சனாவிற்கு ஏதோ படம் பார்க்கும் உணர்வுதான். சங்கரியும், காவேரியும் என்ன நடந்தாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது போல ஒரு மிதப்பான பார்வைதான் பார்த்து நின்றனர் அப்போதும்.

                தேவாவும் வெகுநேரம் கழித்து அப்போது தான் வீட்டிற்குள் எழுந்து வர, முன்னறையில் அனைவரும் கூடி நிற்பதை கண்டவள் தானும் அங்கேயே சென்று ஒரு ஓரமாக நின்று கொண்டாள். அங்கு இருந்த சூழலை கணிக்க முடியாமல் அவள் குழப்பத்தில் இருக்க, என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை அவளுக்கு.

               அவள் அமைதியாகவே நிற்க, பார்வதி “எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வை தேவா.. அண்ணி இங்கேதான் சாப்பிட்டுட்டு போவாங்க..” என்று கூறவும், தலையசைத்தவள் அங்கிருந்து நகர

               கோதை “தேவா..” என்று அழைத்தவர் அவள் நிற்கவும் “சாமிகிட்ட இருந்து வெற்றிலை பாக்கு, பழம் எடுத்துட்டு வாம்மா…” என்று கூறினார்.

              தேவா கேள்வியாக அவரை பார்த்தாலும், உள்ளே சென்று அவர் கேட்டதை எடுத்து வந்து அவர் கையில் கொடுக்க, வானதியை இடது கையில் பிடித்துக் கொண்டவர் எழுந்து நின்று தன் அண்ணனிடம் “இதை வாங்கிக்கோ அண்ணே.. என் மருமகளை சீக்கிரமே என் வீட்டுக்கு அனுப்பிடு..” என்று கூற, முகம் நிறைந்த சிரிப்புடனே கையில் வாங்கி கொண்டார் முத்துமாணிக்கம்.

                  பார்வதி “இப்போ நிம்மதியா கோதை.. வா.. வந்து சாப்பிடு.. அப்புறம் கிளம்பலாம்..” என்று அவரை அழைத்துக் கொண்டு உள்ளே நடக்க, தேவா வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்தாள். அவளுக்கு ஒன்றுமே புரியாவிட்டாலும் இப்போது யோசித்து நிற்கமுடியாது என்பதால் உணவை எடுத்து வெளியே உணவு மேசையில் வைத்தவள் தன் அத்தையுடன் நின்று பரிமாற தொடங்கினாள்.

                முதலில் பூங்கோதை, முத்து மாணிக்கம், வேலுமாணிக்கம், மூவரும் உண்டு முடிக்க, ரகுநந்தன் தன் அத்தையுடன் புறப்பட்டான். அவரை வீட்டில் விடுவதற்காக அவன் கோதையுடன் கிளம்பிவிட, எஞ்சி இருப்பவர்கள் உண்டு முடிக்கவும் தன் அத்தையை பிடித்துக் கொண்டாள் தேவா.

                பார்வதியிடம் அவள் கேட்க, நடந்த அனைத்தையும் அவர் கூறி முடிக்கவும், எப்போதும் வானதியின் மேல் இருக்கும் வாஞ்சை அந்த நிமிடம் அதிகமானது தேவாவுக்கு. அதே நேரம் காவேரியின் மீதும், சங்கரியின் மீதும் லேசான கோபமும் எழ எதையும் வெளிப்படுத்தாமல் பார்வதி கூறியவற்றை கேட்டுக் கொண்டாள்.

                 பார்வதி “வானதி என்ன சொல்லுவாளோ ன்னு பயந்தே போய்ட்டேன் தேவா.. அவ மட்டும் முடியாது ன்னு சொல்லி இருந்தா கோதையோட நிலைமையை என்னால நினைச்சே பார்க்க முடியல.. என் மக காப்பாத்திட்டா..” என்றவர் உணர்ச்சிவசப்பட்டவராக தேவாவின் கையை பற்றிக் கொள்ள

                “அட என்னத்தை நீங்க.. அதான் எல்லாம் சரியாகிடுச்சே.. விடுங்க..” என்று அவரை ஆறுதல் படுத்தியவள் “நீங்க போய் படுங்க.. ரொம்ப சோர்வா இருக்கீங்க.. மாமாவையும் பாருங்க..” என்று கூறவும் சட்டென எழுந்து கொண்டார் பார்வதி.

               அவருக்கும் கணவரின் முகம் நினைவில் இருந்ததே… பார்வதி எழுந்து சென்றுவிட, தேவா மட்டுமே ரகுவுக்காக காத்திருந்தாள் அங்கே. மற்ற அனைவரும் உண்டு முடித்து அவரவர் அறைக்கு சென்று விட்டிருக்க, இவள் மட்டுமே முற்றத்தில்.

                 அடுத்த கொஞ்ச நேரத்தில் ரகு வந்துவிட, அவனுக்கு உணவை எடுத்து வைப்பதற்காக எழுந்து கொண்டாள் அவள். அவள் வேகமாக உள்ளே செல்ல, ரகுவுக்கு அவள் கோபத்தில் முகம் திருப்புவதாகவே பட்டது. அவனும் பின்னோடு செல்ல, தட்டை எடுத்து வைத்தவள் அவன் முகம் பார்க்க ஏன் கூப்பிட மாட்டாளா?? என்று சண்டித்தனமாக  சண்டையிட்டது மனது.

                 ஒரு நொடி நின்றவன் அவள் அழைக்காமல் போகவும், மீண்டும் நடக்க “சாப்பிட்டுட்டு போங்க..” என்று கடுப்புடன் வந்தது தேவாவின் குரல்.

                 ரகு அமைதியாக அவளை பார்த்தவன் வந்து அமர, படபடவென அவனுக்கு உணவினை எடுத்து வைத்தாள் தேவா. அவன் அமைதியாகவே உண்டு முடித்து மேலேற, அவன் படிகளில் ஏறுவதை கண்டவளுக்கு  மீண்டும் கோபம் பிரதானமாக நின்றது.

                அந்த கோபத்துடனே சமையல் அறையை ஒதுக்கி வைத்தவள் விளக்கை அணைத்துவிட்டு தன் அறைக்கு செல்வதற்காக கிளம்ப, மேசையில் இருந்த அவளின் அலைபேசி அங்கே இல்லை. அங்கே வைத்தது நினைவில் இருக்க, ரகு எடுத்து சென்றிருப்பானோ என்றும் தோன்றியது..

                 சில நொடிகள் சுற்றி முற்றி பார்த்தவள் தன்னை திடப்படுத்திக் கொண்டு அந்த படிகளின் அருகில் வர, மெதுவாக படிகளில் ஏற ஆரம்பித்திருந்தாள். ரகு விட்டுச் சென்றது அப்படி ஒரு கோபத்தை கொடுக்க, அவனை திட்டிக் கொண்டே அவள் அந்த படிகளில் ஏற உள்ளூர சற்றே பயம்தான்.

                     அவள் பாதிப்படிகளை நெருங்கும் சமயம், அவள் கால்களில் அன்று போலவே எதுவோ தட்டுப்பட, பயத்தில் பதறிப் போனவள் துள்ளி குதிக்க சலனமே இல்லாமல் நிதானமாக அவள் இடையை அழுத்தி நிற்கவைத்தது ரகுவின் கைகள்.

                   தேவா அவன் கொடுத்த அழுத்தத்தில் சற்றே சுதாரித்து விலக, அவளை விடாமல் தன்னோடு இறுக்கி கொண்டே எழுந்தவன்  அவளை கைகளில் தூக்கி கொள்ள “என்னை விடுங்க.. நானே வருவேன்..” என்று தேவா மெல்லிய குரலில் கூறியதை கண்டுகொள்ளவே இல்லை அவன்.

                அமைதியாகவே அவன் நடக்க “நான் சத்தம் போடுவேன் ரகு.. விடுங்க என்னை..” என்று அவள் மீண்டும் கத்த

                “கத்து..” என்றவன் கூடவே “ஏற்கனவே கீழே விழுந்து கூட திமிர் குறையல, அப்படி என்னடி வீம்பு உனக்கு.. இப்போ கத்துற ல.. ரகு னு ஒரு குரல் கொடுத்தா குறைஞ்சு போய்டுவியா..” என்று கடிந்து கொண்டே நடந்தான்.

               இருட்டிலேயே பேச்சு வார்த்தைகள் நடக்க, இதற்குள் அறையும் வந்திருந்தது. அவளை கட்டிலில் தொப்பென விட்டவன் அவள் அருகிலேயே அமர்ந்து விட்டான். தேவா சட்டென விலகி எழுந்து கொண்டவள் அவனை முறைத்துவிட்டு தன்னிடத்திற்கு செல்ல, மீண்டும் அவளை இழுத்தவன் அவளை தன்மீது இலகுவாக கிடத்திக் கொள்ள, தேவா விலக பார்க்கவும், கைகளால் அவளை முழுவதுமாக சுருட்டிக் கொண்டான்..

                 தேவா அவன் கைகளில் சிறைப்பட்டவள் “என்ன பண்றிங்க நீங்க..” என்று கேட்க

              சம்பந்தமே இல்லாமல் “ரொம்ப கோபமா இருக்கியோ..” என்று கேட்டு வைத்தான் ரகு..

             தேவா பதிலே சொல்லாமல் மீண்டும் எழுந்து கொள்ள பார்க்க, அவளை மீண்டும் இறுக்கி கொண்டவன் “ஹேய் நந்தனா…சண்டை போடாதடி ..” என்று பாவமாக அவன் கூற

               கொதித்துக் கொண்டு வந்தது அவளுக்கு. “நான் சண்டை போடறேனா..” என்று நினைத்தவள் “விடுங்க என்னை..” என்று மீண்டும் திமிர

              இந்த முறை அவளை விட்டுவிட்டான். அவன் கைப்பிடி விலகவும், எழுந்து கொண்டவள் தன் இடத்தில படுத்துக் கொள்ள, முழுதாக இரு நிமிடங்கள் கழித்து அவளை புரட்டியவன், அவளை தன்னோடு இறுக்கி கொள்ள, தேவா அதிர்ச்சியாக அவன் முகம் பார்க்க

               “நம்ம சண்டை தான்.. எனக்கு ஞாபகம் இருக்கு…” என்றவன் அவள் தலையை தன் நெஞ்சில் அழுத்திக் கொண்டு “இங்கேயே இருந்து சண்டை போடு..” என்று மீண்டும் ஒருமுறை கூற

                “உங்களுக்கு மனசாட்சியே இல்லையா.. நான் சண்டை போடறேனா உங்ககிட்ட.. செய்யுறதெல்லாம் நீங்க செஞ்சிட்டு என்மேல பழி போடுவீங்களா.. இதுல தூங்க மட்டும் பொண்டாட்டி வேணுமா உங்களுக்கு..” என்று நிஜமாகவே சண்டையிட தொடங்கி இருந்தாள் அவள்.

              அவளை ரசனையாக பார்த்தவன் அவள் இதழ்களை நெருங்க, வாயை மூடிக் கொண்டவள் “மரியாதையா தள்ளி போய்டுங்க..” என்று கடுமையாக அவனை மிரட்ட

               “கையை எடுடி..” என்று அவளுக்கும் மேலாக மிரட்டினான் அவன்.. அவள் முடியாது என்பது போல் தலையசைக்க, “ஓகே விடு..” என்றவன் அவள் கழுத்தில் புதைய “ரகு….” என்று பல்லை கடித்தவள் அவனை தள்ளிவிட்டு எழுந்து அமர்ந்து கொண்டாள்.

                ரகு இன்னமும் படுத்தே இருக்க, “நான் இங்கே படுக்கவா.. இல்ல எழுந்து வெளியே போகவா..” என்று நிதானமாக வினவினாள் தேவா. ரகு அவள் முகத்தையே பார்த்தவன் “வெளியே போய்டுவியா… ட்ரை பண்ணேன்..” என்று சவாலாக கூற, விடமாட்டான் என்பதும் புரிந்தது அவளுக்கு.

                 என்னை கட்டாயப்படுத்துவானா?? என்று தோன்றிய நொடி தன் நிலை பூதாகரமாக தெரிய, கண்களில் நீர் திரளும் நேரம் எட்டி அவளை அணைத்து கொண்டான் கணவன். கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு அவள் தன்னை சமன்படுத்தி கொள்ள பார்க்க, அவளை விட்டு விலகி அமர்ந்தான் ரகு.

                 ” இப்போதைக்கு உன்னை ரேப் பண்ற ஐடியா எல்லாம் இல்ல.. நான் அதுக்கான ஆளும் கிடையாது..” என்று சற்றே கடினமாக அவன் கூற, அவனையே பார்த்திருந்தாள் அவள்.

                 அவள் கண்களை துடைத்தவன், “எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… உன்னை எப்படி பேச வைக்கிறது ன்னு தெரியல.. அதான் இப்படி…” என்று நிறுத்தியவன் அவள் முகம் பார்க்க “அதுக்கு இப்படி பண்ணுவியா..” என்று கேட்பது போல் இருந்தது அவள் பார்வை…

                 “தப்புதான்… ஆனா நான் பேசணும்…” என்று அவன் விடாப்பிடியாக கூற

                “எனக்கு உங்ககிட்ட பேச வேண்டாம்.. ” என்றவள் கண்களை துடைத்துக் கொண்டு படுத்துவிட,

               “நந்தனா..” என்று ரகு அழைத்ததற்கும் பதில் இல்லை.

                “நீ இப்படி பண்ணா, நான் வேற என்ன செய்யட்டும்..” என்று அவன் குரல் காதுகளுக்கு மிக அருகில் மோத, சலிக்காமல் அவனை தள்ளி விட்டவள் “ஒன்னும் செய்ய வேண்டாம்.. என்னை தூங்க விடுங்க..” என்று திரும்பி படுத்துக் கொள்ள

               “எனக்கு தூக்கமே வரலடி..” என்று அவன் புலம்ப

               “ஆனா, எனக்கு தூக்கம் வருது.. ஒன்னு படுத்து தூங்குங்க, இல்ல வெளியே போங்க..” என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்.

                “நல்ல முன்னேற்றம்டி..” என்று சத்தமாக கூறியவன் அவள் அருகில் படுத்துக் கொள்ள, வெகுநேரம் ஆகியும் உறக்கம் வரவில்லை அவனுக்கு. தேவாவுக்கு அப்படி இல்லை போல, ஏதோ ஒரு விதத்தில் அவனை வென்றுவிட்டதாகவே தோன்ற நிம்மதியாக உறங்கி விட்டாள் அவள்.

Advertisement