Advertisement

அங்கே யாரும் அவளை ஒரு பொருட்டாக கூட மதித்ததாக தெரியவில்லை. பார்வதி முழுவதுமாக கேட்டு கொண்டவர் “நான் என்னங்க சொல்றது.. நீங்க என்ன சொல்றிங்களோ அப்படித்தான்.. ரகுகிட்ட பேசிடுங்க, அவன் தான் முறைச்சிட்டு இருப்பான்..” என்பதோடு முடித்துக் கொள்ள

சஞ்சனா இதற்குள் உள்ளே  சென்றவள் சங்கரியை அழைத்து வந்திருந்தாள். சங்கரியும் பதவிசாக வந்து ஹாலில் நின்றவர் “என்ன மாமா ஏதோ நிலம் வாங்குறீங்க போல..” என்று மேம்போக்காக கேட்பது போல் கேட்க

“ஆமாமா.. .இதுவரைக்கும் எங்க தங்கச்சிக்கு தான் எதுவும் செய்யல.. இப்போ என் மருமக இந்த வீட்டுக்கு வந்திருக்கா. அவளுக்காவது ஏதாவது செய்யணும் இல்லையா. அதுதான் நம்ம நிலத்துக்கு பக்கத்துல இருக்க அந்த சுப்பையா  பிள்ளையோட நிலத்தை தேவா பேர்ல வாங்கலாம்ன்னு இருக்கோம்..” என்று அவர் கூறிவிட

“அதெப்படி அவ பேர்ல வாங்குவிங்க… இந்த வீட்டுல இத்தனை பேர் இருக்கும்போது, நேத்து வந்த அவ பேர்ல நிலத்தை வாங்கினா எனக்கு என்ன மரியாதை எங்கே..” என்று தனது கீச் குரலை சற்றே உயர்த்தி சஞ்சனா சத்தம் போட

“உன் மரியாதைக்கு ஒரு பங்கமும் வராது… நிலத்தை வாங்குற அளவுக்கு இப்போ நம்மகிட்ட மொத்தமா பணமே கிடையாது.. அவ அவளோட பணத்தையும் கொடுத்து தான் இந்த நிலத்தை வாங்குறா.. கிட்டத்தட்ட அம்பது லட்சம்…”

“உன்கிட்ட இருந்தா கொடு.. உன்பேர்லயே வாங்கிடுவோம்..” என்று இராமச்சந்திரன் மனைவியிடம் கேட்க

“ஏன் நான் ஏன் கொடுக்கணும்.. என்ன அவ பணம்.. இந்த வீட்டுக்கு வந்துட்டா பொது தான்.. இடம் வாங்கினா ஒன்னு மாமா பேர்ல வாங்கணும்.. இல்ல உங்க யார் பேர்லயாவது வாங்கணும்.. அதென்ன அவ பேர்ல நிலம் வாங்குறது.. இந்த வீட்டுக்கு தான சீர் கொடுத்தாங்க..” என்று அவள் விடாமல் வாதாட

“எப்படி எப்படி இந்த வீட்டுக்கு சீர் கொடுத்தாங்களா.. உன் வீட்ல உனக்கு போட்ட அம்பது பவுன் நகை யார்கிட்ட இருக்கு இதுவரைக்கும்.. வேணும்ன்னா ஒன்னு செய்யேன் அந்த நகையெல்லாம் எடுத்துட்டு வா.. அடகு வச்சிட்டு அந்த பணத்துல நிலத்தை முடிப்போம்..” என்று மீண்டும் சந்திரன் வழி சொல்ல

“இங்கே பாருங்க மாமா.. இந்த பேச்செல்லாம் ஆகாது… இத்தனை பேர் இருக்கப்போ நீங்க எப்படி அவ பேர்ல வாங்குவிங்க.. அப்படியே பாதிப்பணம் அவளோடது ன்னாலும், மீதி நீங்க தானே கொடுக்க போறீங்க.. அதுல எங்க எல்லாருக்கும் பங்கு இருக்கு இல்லையா… ” என்று அவள் தன் மாமனாரிடம் வாதிக்க

“அந்த பணத்துக்கு ஈடா அவளோட நகைகளை எங்ககிட்ட கொடுக்கறேன் ன்னு தேவா ஏற்கனவே சொல்லிட்டாம்மா… எங்களுக்கு தான் அதுல விருப்பம் இல்ல.. அதனால தான் உன் அத்தைபேர்லயும், தேவா பேர்லயும் சேர்த்து நிலத்தை எழுதறதா இருக்கோம்..” என்று முத்து மாணிக்கம் அமைதியாகவே கூற

சங்கரி அப்போது தான் வாயை திறந்தார். “இது என்ன மாமா.. எல்லாமே உங்க பேர்லயே வாங்குவிங்க ன்னா நானும், என் பிள்ளைகளும் எதுக்கு இந்த வீட்ல..  எனக்கு என்ன மரியாதை இங்கே.. என் புருஷன் வாயை திறக்காம இருக்கிறதால, எங்களை அப்படியே விட்டுடுவீங்களா..” என்று அவர் பங்குக்கு அவரும் போர்க்கொடி உயர்த்த

வேலுமாணிக்கம் “ஏய் யார்கிட்ட என்ன பேசிட்டு இருக்க.. என் அண்ணனுக்கு தெரியும் என்ன செய்யணும்ன்னு.. உன் பிள்ளைங்களை உன்னை விட நல்லபடியா என் அண்ணனும் அண்ணியும் பார்த்துப்பாங்க.. வாயை மூடிட்டு உள்ளே போறது தான் உனக்கு நல்லது..” என்று அதட்டியும் அவர் அடங்காமல்

“உங்களை கட்டிக்கிட்டு நாந்தான் இந்த குடும்பத்துக்கு அடிமையாவே காலத்தை தள்ளிட்டேன்.. என் பிள்ளைகளையும் அப்படியே இருக்க சொல்றிங்களா.. கடை, நிலம் அத்தனையையும் இவங்க தான் அடுத்து இருக்காங்க.. இப்படி வர்றதையும் உங்க பேரிலேயே விட்டுட்டா என் பிள்ளைகளுக்கு என்ன மிஞ்சும்..” என்று கத்தி கூப்பாடு போட

சஞ்சனா நிலம் அத்தையின் பேரிலும் சேர்த்து வாங்குவதாக சொன்ன கணமே எதையோ கணக்கு போட்டவளாக அமைதியாகி இருந்தாள். எப்படி இருந்தாலும் பார்வதியின் பெயரில் இருந்தால் தங்களுக்கு வந்து தானே ஆகவேண்டும் என்பது அவள் எண்ணமாக இருக்க, அமைதியாகி இருந்தாள் அவள்.

“ஏய் எங்கே வந்து யாரை பிரிச்சு பேசிட்டு இருக்க.. என் அண்ணனும், அண்ணியும் என்னிக்கு டி பிள்ளைங்களை பிரிச்சு பார்த்தாங்க.. அந்த புத்தி எல்லாம் உனக்குதான் வரும்..என் குடும்பத்தை பிரிக்கணும் ன்னு நினைச்ச..” என்று வேலுமாணிக்கம் கையை ஓங்கிக்கொண்டு முன்னேற

அவர் கையை பிடித்து நிற்கவைத்தார் முத்து மாணிக்கம். “என்ன பண்ற வேலு நீ.. வயசு திரும்புதா.. நேத்து தான்  கல்யாணம் முடிஞ்சா மாதிரி கையை ஒங்கிட்டு கிளம்புற… தொலைச்சுடுவேன்..” என்று அவர் சத்தம் போடவும் அடங்கி நின்றார் வேலு.

முத்து மாணிக்கம் முடிவாக சங்கரியையும், சஞ்சனாவையும் பார்த்தவர் “இங்கே பாரும்மா.. நிலம் வாங்குறது என் மருமகளுக்காக தான்.. எங்க தங்கச்சிக்கு நாங்க செய்ய வேண்டிய கடமை இருக்கு… நீங்க மைதியா இருந்தா பார்வதி பேர்லயும் சேர்த்து வாங்குவேன்.. இல்லையா, என் தங்கச்சிக்கு கொடுக்க வேண்டிய சொத்தை பங்கு போட்டு அதை வித்துட்டு இந்த நிலத்தை மொத்தமா என் மருமக பேர்ல வாங்கிடுவேன்..  ரெண்டுல ஒண்ணுதான் நடக்கும்..”

“என்ன செய்யறது ன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.. அதோட நாளைக்கு அந்த நிலத்துல பங்குன்னு வந்தாலும் ஒருபாதி தேவாவுக்கு மட்டும்தான். மீதி பார்வதி பேர்ல இருக்க நிலம் மட்டும் தன் உங்களுக்கு உரிமை.. உங்களுக்குன்னா சந்திரன், பிரசன்னா ரெண்டு பேருக்கு மட்டும்தான்…புரியுதா.. இதுக்குமேல இதுல பேச எதுவும் இல்லன்னு நான் நினைக்கிறேன்..” என்று அவர் அந்த விஷயத்தை அத்துடன் முடித்துவிட மனதுக்குள் பொருமிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர் இருவரும்.

இவர்கள் பேசி முடிக்கவும், பார்வதி பேரனை சந்திரனிடம் கொடுத்துவிட்டு சமையல் அறைக்கு செல்ல, அதுவரையும் கூட தேவா பின்பக்கம் தான். பார்வதி சமையல் அறையில் இருந்த நேரத்தில் பூங்கோதை தன் அண்ணனின் வீட்டுக்கு வர, அவரை வரவேற்று அமர வைத்த முத்துமாணிக்கம் பார்வதிக்கு குரல் கொடுத்தார்.

பார்வதியும் வந்து வரவேற்க, இன்னமும் கூட தெளிவடைய வில்லை பூங்கோதையின் முகம். தன் அண்ணன்களை கண்டதும் மீண்டும் கண்ணீர் வர “அட,… என்ன ஆத்தா.. எதுக்கு அழுதுட்டே இருக்க…நாங்க எல்லாம் இல்லையா..” என்று வேலு மாணிக்கம் கேட்க

“என் அண்ணன்க இருக்கீங்க ன்னு தான் நம்பி வந்திருக்கேன் அண்ணா..” என்று பீடிகை போட்டார் அவர்.

முத்து மாணிக்கம் “என்னம்மா.. என்ன கேட்கணும் அண்ணன்கிட்ட.. சட்டுனு கேட்டுடு.” என்று ஊக்கம் கொடுக்க

“புதுசா என்னன்னே கேட்க போறேன். நம்ம காவேரியை செந்திலுக்கு கேட்கத்தான் இப்போவும் வந்திருக்கேன்..நீங்க தான் சொல்லணும்..” என்று அவர் கண்களில் கண்ணீரோடு கேட்க

“அட.. என்னம்மா நீ, இதுக்குமா அழணும்.. நானும் யோசிச்சிட்டே தான் இருந்தேன், துக்கம் நடந்த வீட்ல எப்படி பேச ன்னு தான் அமைதியா இருந்தேன்.. ” என்று முத்து கூறவும், சட்டென ஒளிர்ந்தது பூங்கோதையின் முகம்.

“கெட்டது நடந்த வீட்ல நல்லது நடக்கணும் ன்னு சொல்வாங்க..நான் நல்லா இருக்கும்போதே என் மகனுக்கு ஒருவழி பண்ணிடனும் ன்னு நினைக்கிறேன்னா… நீங்க அம்மாவோட காரியம் முடியவும், நாள் பாருங்க…என் மருமக என் வீட்டுக்கு வரட்டும்..” என்று அவர் தன் அண்ணனிடம் பேசிக் கொண்டிருக்க

“இந்தா.. உன் வீட்டு மருமக ன்னு நீ முடிவு செஞ்சிட்டா போதுமா.. என்னையும், என் மகளையும் கேட்க வேண்டாமா..” என்று கொண்டையை முடிந்து கொண்டே அங்கு வந்து சேர்ந்தார் சங்கரி..

பூங்கோதை அதிர்ச்சியாக “என்னண்ணி சொல்றிங்க.. ஏற்கனவே பேசி வச்சது தானே..” என்று கேட்க

“என்ன சொல்லணும். என் மகளுக்கு இதுல விருப்பம் இல்ல.. என் அண்ணன் மகன் சிங்கப்பூர்ல இருக்கான்.. அவனை என் மகளுக்கு முடிச்சுக்கறதா என் அண்ணன் சொல்லி இருக்கு.. நான் என் மகளை என் அண்ணன் மகனுக்கு தான் கொடுக்க போறேன்..”

“உன்னை மாதிரி ஒண்ணுமில்லாதவ வீட்டுக்கு அவளை கட்டி கொடுத்து அவளும் சீரழியவா..” என்றவர் மேலும் என்ன பேசி இருப்பாரோ.. அதற்குள் வேலுவின் கை அவரின் கன்னத்தை தொட்டிருந்தது..

ஆனால் அப்போதும் அடங்காதவர் “நீங்க என்னை அடிச்சே கொன்னாலும் சரி.. என் மக உங்க தங்கச்சி வீட்டுக்கு மருமகளா போக மாட்டா.. ” என்று அவர் கத்த

“நீ என்னடி சொல்றது.. என் மக சொல்லட்டும்..” என்ற வேலு “காவேரி..” என்று சத்தமாக அழைக்க, அவளும் வந்து அமைதியாக நின்றாள் அங்கே.

இதற்குள் சத்தம் கேட்டு சந்திரன்,ரகு, பிரசன்னா, வானதி என்று அனைவரும் அங்கே வந்திருக்க, காவேரியிடம் அப்போதே “உனக்கு செந்திலை கட்டிக்கத்தான விருப்பம்..” என்று கேட்டிருந்தார் வேலு..

அவள் அமைதியாகவே நிற்க “பதில் சொல்லுடா.. ஏற்கனவே பேசினது தானே.. உனக்கும் அவனை பிடிச்சிருக்கு தானடா…” என்று அவர்கேட்டு வைக்க

சற்று பயந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் மறுப்பாக தலையசைத்தாள் மகள். வேலுமாணிக்கம் அதிர்ந்து நின்றுவிட, பூங்கோதை கைகளில் வாயை பொத்தி கொண்டவர் குலுங்கி அழவே தொடங்கி விட்டார்.

பார்வதி அவரை சட்டென தாங்கி பிடிக்க, வானதி உள்ளே ஓடிச்சென்று அவருக்கு நீர் எடுத்து வந்து கொடுக்க, எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை அவர். மகனின் வாழ்வு கண்முன் ஊசலாட, அதைத்தவிர வேறு நினைவே இல்லை அவரிடம்.

முத்து மாணிக்கமும் தங்கைக்கு ஆதரவாக வந்து நிற்க, வேலு மகளின் பதிலில் ஆடிப் போயிருந்தார். பிரசன்னா “ஏய்..என்ன உன் பிரச்னை.. ஏற்கனவே செந்திலை உனக்கு பேசி வச்சது தானே.. இப்போ ஏன் குட்டையை குழப்புற..” என்று காவேரியை அடிக்க போக

“நான் அம்மா சொல்றவங்களை தான் கட்டிப்பேன்..” என்றவள் தன் அன்னையின் பின்னால் சென்று நின்று கொண்டாள்.

ரகுவுக்கு அங்கே நடக்கும் நாடகம் தெளிவாக புரிய, அங்கே அழுது கொண்டிருக்கும் தன் அத்தையை பார்க்கவே பாவமாக இருந்தது அவனுக்கு.. சட்டென தோன்றிய எண்ணத்தில் தன் சிறிய தந்தையின் கையை அழுத்தியவன் பூங்கோதையை கண்ணால் காட்ட

“ரகு நான் என்ன செய்வேண்டா..” என்று அவருக்கு மேலாக கலங்கி நின்றார் வேலுமாணிக்கம்.

ரகு சட்டென சுதாரித்தவனாக “நீங்க ஏன் சித்தப்பா கலங்கி போறீங்க.. உங்களுக்கு ஒரே மகதான் இருக்காளா என்ன??” என்று அவருக்கு மட்டுமே கேட்கும் குரலில் அவரை ஆறுதல் படுத்த, நிமிர்ந்து மகனை பார்த்தவர் அவன் சொல்வதை புரிந்தவராக கண்களை துடைத்துக் கொண்டார்.

தன் தனகையின் அருகில் சென்றவர் “ஏன் கோதை அழுதுட்டு இருக்க.. உன் வீட்டுக்கு வந்து வாழ கொடுத்து வைக்கல அவ.. நீ அந்த கழுதையை விட்டு தள்ளு..”

“உனக்கு என்ன.. என் மக உன் மருமகளா வரணும் அதான.. நான் என் மக வானதியை செந்திலுக்கு கட்டி வைக்கிறேன்.. என் மக என் பேச்சை மீறமாட்டா.. இந்த குடும்பத்துல யாரும் இதுக்கு மறுப்பு சொல்லவும் மாட்டாங்க.. நீ எதை பத்தியும் கவலைப்படாத.. உனக்கு சம்மதமா??” என்று கேட்டுவிட

பூங்கோதையின் பார்வை வானதியிடம் தான் சென்றது.. அவள் சட்டென நடந்துவிட்ட நிகழ்வுகளில் முழு அதிர்ச்சியில் நின்றிருந்தாள்.. அவளுக்கு இப்போது என்ன உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பது கூட புரியாமல் போக, தன் ரகுண்ணா வின் கைகளை பிடித்துக் கொண்டு நின்றுவிட்டாள்.

Advertisement