Advertisement

காதல் தருவாயா காரிகையே 16

                      ரகு தேவாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டவன் நேராக வீட்டிற்கு தான் வந்து சேர்ந்தான். வரும் வழியில் கூட அவளிடம் எதுவுமே பேசி இருக்கவில்லை. வீட்டிற்குள் நுழையவும் அவள் வேகமாக உள்ளே சென்றுவிட, சமையலறையில் பார்வதி இல்லை.

                   அவர் ஏதோ வேலையாக வீட்டின் பின்பக்கம் இருக்க, தேவா மட்டுமே சமையலறையில். ரகு அவள் ஓட்டத்தில் சிரித்துக் கொண்டே நிதானமாக வந்தவன் அவளை தொடர்ந்து சமையறைக்குள் சென்று நிற்க, தேவா அவனையே பார்த்து நின்றிருந்தாள்.

                  ரகு அவள் பார்வையை கண்டுகொள்ளாமல் மிரட்டலாகவே “இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீ மேல வரணும்… ஏதாவது சாக்கு  சொல்லிட்டு கீழேயே சுத்திட்டு இருந்த, நானே வந்து தூக்கிட்டு போய்டுவேன்.. யார் இருந்தாலும் பார்க்கமாட்டேன்…” என்று கூறிச் சென்றான் அவன்.

                 அவன் விடமாட்டான் என்பது புரியவும், தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அமைதியாக படிகளில் ஏறினாள். அவர்கள் அறையின் கட்டிலில் படுத்திருந்தவன் கையை கண்கள் மீது மடித்து வைத்துக் கொண்டு இருக்க, அவன் முகம் தெரியவில்லை தேவாவுக்கு.

                  அமைதியாக அவள் ரகுவின் அருகில் வந்து நிற்க, அவன் அப்படியே இருக்கவும் “தூங்கிட்டானோ..” என்று எட்டி அவன் முகத்தை பார்க்க முயன்றாள். அவன் அசையாமல் படுத்து இருக்கவும், மெதுவாக மீண்டும் அவள் அறையின் வாயிலுக்கு செல்ல, “நில்லுடி..” என்று அழுத்தமாக வந்தது குரல்.

                  தேவா சட்டென நின்று அவனை நோக்கி திரும்ப, “தூங்கினா எழுப்ப மாட்டியா.. நீ பாட்டுக்கு போய்டுவியா..” என்று அவன் முறைக்க

                    “நீங்க தூங்கிட்டு இருந்திங்களா..” என்று பதிலுக்கு அவனை முறைத்து நின்றாள் அவள்.

                  அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் “இங்கே வா..” என்று ரகு அழைக்க, அவன் அருகில் வந்து அமர்ந்தாள் தேவா. “சொல்லுங்க” என்பது போல் அவன் முகம் பார்க்க

                  “என்ன சொன்ன உன் மாமாகிட்ட..” என்று அவன் ஆரம்பிக்க

                 “மாமா எல்லாமே உங்ககிட்ட சொல்லி இருப்பாங்கல்ல, திரும்ப என்னை ஏன் கேட்கறீங்க..” என்று முகத்தை சுருக்க, அவள் மூக்கை பிடித்து இழுத்து வலிக்க திருகியவன் “ஏன் உன் மாமா சொன்னா, நீ சொல்லமாட்டியா..பரவாயில்ல சொல்லு..” என்று விடாப்பிடியாக நிற்க

                 அவன் பிடி உண்மையில் வலித்தது. “வலிக்குது விடுங்க..” என்று அவன் கையில் அடித்தவள் “உங்ககிட்ட ஏன் சொல்லணும்.. சொன்னா மட்டும் என்ன செய்ய போறீங்க நீங்க… உன் பணம் வேண்டாம் ன்னு முடிச்சிடுவீங்க, அதான் என் மாமாங்க கிட்ட கேட்டேன்..

                   “அதுவும் கடன் தான் கேட்டு இருக்கேன்… எப்படியும் திருப்பி கொடுத்துடுவேன்…” என்று விறைப்பாக அவள் சொல்லி முடிக்க

                 “எப்படி திருப்பி கொடுப்ப..” என்று ஆர்வமாக வந்தது கேள்வி

                “ஏன்.. அது விவசாய நிலம் தான..அதுல இருந்து வர்ற வருமானத்தை வச்சு கொடுத்திட்டு போறேன்.. ” என்று அவள் இலகுவாக சொல்ல

                “விவசாய நிலம் தான்.. ஆனா யார் விவசாயம் பார்க்கிறது… நீ போய் அறுத்து கட்டிட்டு வந்துடுவியா..” என்று அவன் கிண்டலாக கேட்க

                   “நான் ஏன் போகணும்… அதான் என் மாமாங்க இருக்காங்களே.. அவங்க பார்த்துப்பாங்க..”

                  “அப்போ கடையை யாரு பார்ப்பா…” என்று ரகு கேட்டு வைக்க

                “உங்க கடை தானே நீங்களே பாருங்க… என் மாமாங்க ரெண்டு பெரும் என் நிலத்தை பார்த்துக்கட்டும்.. கணக்கெல்லாம் நான் அவங்களுக்கு உதவி பண்ணுவேன்..” என்று அவள் திட்டம் போட, அவள் திட்டத்தில் எங்குமே ரகு இல்லை.

                         “ஏன் என்னை கேட்க  மாட்டாளா..” என்று ஒரு வீம்பு சட்டென தலை தூக்க “சோ எல்லாம் பிளான் பண்ணிட்ட.. நிலத்தை வாங்கி நீயும் உன் மாமன்களும் சேர்ந்து விவசாயம் பண்ண போறீங்க..” என்று ஒருவிதமான குரலில் அவன் கேட்க

                     அவன் குரலின் பேதம் சட்டென பிடிபட்டது தேவாவுக்கு. இதுவரை அவன் பேசிய தொனி இது இல்லை என்பது புரிய “என்ன ஆச்சு… அந்த நிலத்தை வாங்க வேண்டாமா.. இல்ல நான் தலையிட வேண்டாமா… புரியல எனக்கு..” என்று அவள் ரகுவின் முகம் பார்க்க

                    “நான் எதுவுமே சொல்லலையே..”

                  “அதுதான் விஷயம் திட்டிட்டா கூட அப்போவே முடிஞ்சி போச்சு ன்னு விட்டுடலாம். இந்த அமைதி நிச்சயம் வம்பு தான். சொல்லுங்க என்ன விஷயம்..?” என்று அவன் கண்களை பார்த்து மனைவி கேட்க

                   “என்ன சொல்றது ஒன்னும் இல்ல..நிலம் வாங்குறது ன்னு முடிவு பண்ணிட்ட, வாங்கிட வேண்டியது தான்..” என்று அவன் முடிக்க

                  “என்ன ன்னு சொல்லுங்க..” என்றுஅதிலேயே நின்றாள் தேவா.

                  “என்ன சொல்லணும்.. நீ என்ன சொன்ன என்கிட்டே.. நிலம் வாங்கணும் ன்னு தோணினா என்கிட்டே தானே சொல்லி இருக்கணும். நகையை அடகு வைக்கிற அளவு யோசிக்க தெரியுது.. நிலத்தை நீங்க பார்த்துக்கோங்க ன்னு சொல்ல வாய் வரல.. இதுல என்னன்னு சொல்லணுமாம்.. எழுந்து போடி…” என்று அவள் கையை பிடித்து லேசாக அவன் தள்ளிவிட

                 எழுந்து செல்வதற்கு பதிலாக அவன் தள்ளி விட்டதில் கட்டிலில் விழுந்திருந்தாள் தேவா. கட்டிலில் விழுந்தவள் அவனை முறைத்து பார்க்க,

“ஏய் என்ன.. என்ன முறைப்பு..” என்று ரகு அதட்ட

 “            சட்டென எழுந்து கொண்டவள் கட்டிலில் இருந்து இறங்கிவிட்டாள். அவனிடம் எதுவும் பேசாமல் அவள் வெளியே செல்ல முற்பட, அவள் கையை பிடித்து இழுத்தவன் மீண்டும் தன் எதிரில் அமர்த்தி இருந்தான் அவளை.

                 தேவா அப்போதும் அமைதியாகவே இருக்க “நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்.. நீ எழுந்து போற.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ..” என்று அவள் கைகளை விடாமல் அவன் வம்பிழுக்க

                 “என்ன கேட்கணும் உங்ககிட்ட… நீங்க என்னோட வீட்ல இருந்து கொடுத்தாங்க ங்கிற ஒரே காரணத்துக்காக அந்த பணத்தை தொடவே மாட்டிங்க.. ஏதோ தீண்டத்தகாத பொருள் போல உடனே எடுத்துட்டு போய் பேங்க்ல வச்சிடுவிங்க..”

                 ‘நான் மட்டும் ஒவ்வொரு விஷயத்துக்கும் உங்களை எதிர்பார்ப்பேனா… என்கிட்டே பணம் இருக்கு நிலம் வாங்கி கொடுங்க, விவசாயம் பாருங்க ன்னு நான் வந்து உங்ககிட்ட கேட்பேனா.. எனக்கு லாம் சுயமரியாதை ன்னு எதுவுமே இருக்காதா இல்ல இருக்கவே கூடாதா..” என்று கடினமாக தேவா ரகுவை கேள்வி கேட்டு நிற்க

                “உனக்கும் எனக்கும் நடுவுல சுயமரியாதை எங்கே இருந்து வந்தது…. என்னை பொறுத்தவரைக்கும் உன்னோட நகை விஷயத்துல நான் இந்தளவுக்கு அமைதியா இருக்கறதா பெரிய விஷயம் தான்.. என்ன பண்ணிருக்கணும் நான், பொண்டாட்டி மூலமா சொத்து வருது ன்னு ஆடணுமா.. எல்லா பணத்தையும் அடுத்தநாளே எடுத்து கையில வச்சுட்டு சுத்தணுமா..”

                  “நீ என்ன செய்யட்டும் ன்னு கேட்ட.. பேங்க்ல வைப்போம் ன்னு நானே உன்னை கூட கூட்டிட்டு போய் அத்தனையும் உன்கூட இருந்தே செஞ்சு கொடுத்தேன்.. இதுக்கு மேல என்ன செய்யணும்..” என்று ரகுவும் விடாமல் பேச

                 “நீங்க எதுவும் செய்ய மாட்டீங்க… அது தெரிஞ்சதால தான் நானும் உங்ககிட்ட அதுக்குமேல எதிர்பார்க்கவே இல்ல..எனக்கு அந்த நிலம் வேணும்ன்னு தோணுச்சு நான் என் மாமாகிட்ட கேட்டேன்.. அவ்ளோதான்.. நீங்க தான் திரும்பவும் இதை ஆரம்பிக்கிறீங்க..” என்று பட்டென அவள் கூறிவிட

                  “நீ சொல்றது சரிதான்.. உன் மாமாகிட்டயே பேசி முடிச்சுக்கோ.. இனி இது விஷயமா எதுவும் என் காதுக்கு வரக்கூடாது..” என்று விட்டான் ரகு.

                  எப்போதும் போல தேவாவும் விட்டு கொடுப்பதாக இல்லை அன்று. அவளுக்குமே இன்று வருத்தமும், கோபமும் சரிபாதியாய் நிரம்பி நிற்க, அவனை சமாதானம் செய்வதாக இல்லை. வழக்கமாக வரும் கண்ணீர் கூட இல்லை கண்களில்.

                  அவன் முகத்தை திருப்பிக் கொள்ளவும் சட்டென எழுந்து வெளியே வந்துவிட்டாள்.அதன் பின்னான நேரங்கள் பார்வதியுடன் கழிய, சஞ்சய் உடன் இருக்கவும் அவனில் லயித்து போனவள் கணவனை சற்றே மறந்திருந்தாள்.

                   அன்று மாலை வேளையில் பெரியவர்கள் நேரமே வீட்டிற்கு வர, தேவா அவர்களுக்கு காஃபி கொடுத்தவள் மீண்டும் தன் அத்தையுடனே சென்று நின்றுவிட்டாள். அந்த நிலத்தை பற்றி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை யாரிடமும். பின்கட்டில் சஞ்சயை கையில் வைத்துக் கொண்டு அவள் விளையாடி கொண்டிருக்க, அந்த நேரம்தான் அங்கு வந்தாள் சஞ்சனா.

                   தேவாவின் கையில் இருந்த பிள்ளையை என்ன எது என்று அவள் உணரும்முன்பே வெடுக்கென பிடுங்கி கொண்டாள் அவள். தேவா அதிர்ந்தவளாக அவளை பார்க்க, சஞ்சய் சட்டென அப்படி தூக்கியதில் அழுகையை ஆரம்பித்து இருந்தான்.

                     சஞ்சய் அழ தொடங்கவும், சஞ்சனா “ஏய் வாயை மூடு.. எப்போ பார்த்தாலும் நை நை ன்னுட்டு..”என்று அவன் முதுகில் வேகமாக தட்டிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டாள். அவள் பார்வையில் இருந்த வெறுப்பு தேவாவுக்கு புரிய, “போடி..” என்ற எண்ணம் தான்.

                    இப்போதைக்கு யாரையும் பார்க்கும் எண்ணம் இல்லாமல் போக, அமைதியாக சென்று வீட்டின் பின்பக்கம் இருந்த துவைக்கும் கல்லில் கொண்டாள். கையில் அவளது அலைபேசி இருக்க, பாட்டியை அழைக்க நினைத்தவள் பின் அந்த எண்ணத்தை கைவிட்டவளாக அமைதியாக அமர்ந்து கொள்ள, உள்ளே முத்து மாணிக்கம் தன் மனைவியிடம் விஷயத்தை கூற ஆரம்பித்திருந்தார்.

                   வேலுவும், சந்திரனும் உடன் இருந்தனர் அந்நேரம்… இவர்கள் நால்வரும் வீட்டின் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, சஞ்சய் அழுகையை நிறுத்தாமல் போகவும் அவனை தன் அத்தையிடம் கொடுப்பதற்காக வெளியே வந்திருந்தாள் சஞ்சனா.

                      இவர்கள் பேசிய விஷயம் அவள் எந்த முயற்சியும் எடுக்காமலே அவளின் காதில் விழுந்து விட, சஞ்சய்யின் அழுகை சத்தம் கேட்ட பார்வதி “ஏன் பிள்ளையை இப்படி அழ விடற..” என்று கடிந்து கொண்டே அவனை கையில் வாங்கி கொண்டார்.

                      சஞ்சய் அழுகையை சற்றே நிறுத்தவும் முத்துமாணிக்கம் மீண்டும் தான் சொல்லிக் கொண்டிருந்த விஷயத்தை தொடங்கினார். அவருக்கு யாரிடமும் மறைக்கும் எண்ணம் இல்லையே. எனவே சஞ்சனாவையும் வைத்துக் கொண்டே அவர் கூறிவிட, அங்கே அமைதியாக அமர்ந்திருந்த தனது கணவனை தான் முறைத்து கொண்டிருந்தாள் அவள்.

Advertisement