Advertisement

சந்திரனின் திருமணத்திற்கு முன்பு வரை இருவரும் பாசமாக இருந்தவர்கள் தான். எப்போதும் ஒன்றாகவே திரிபவர்களும் கூட.. திருமணத்திற்கு பிறகு சந்திரனின் நடவடிக்கைகள் மாறிப்போக, அண்ணன் தம்பிக்கு இடையேயான ஒட்டுதலும் குறைந்து போயிருந்தது.

                         வீட்டில் நடந்த ஒரு சில கசப்பான நிகழ்வுகளுக்கு பின்னர் சந்திரனுடன் பேசுவதை நிறுத்தியே விட்டிருந்தான் ரகு..இப்போது சில தினங்களாக குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சந்திரன் அவன் அன்னைக்காக அவன் மாமனாரிடம் சண்டையிட்டதில் இருந்தே அண்ணன் மீது ஏதோ ஓர் மூலையில் சின்ன இளக்கம்.

                     இப்போதும் அழைத்த அடுத்த பத்து நிமிடங்களில் அவன் சூப்பர் மார்க்கெட்டில் இருக்க, அவன் தந்தைகளே அதிசயமாகத்தான் பார்த்தனர் அவனை. அவர்களின் பார்வையை ஒதுக்கி வைத்தவன் வந்து அவர்களுடன் அமர்ந்து கொள்ள “சொல்லுங்கப்பா..” என்று தன் தந்தையை கேட்டு வைத்தான்.

                        வேலு மாணிக்கம் அவனிடமும் அனைத்தையும் கூறி முடித்தவர் “நீ இந்த வீட்டுக்கு மூத்தவன் சந்திரா.. உன்கிட்ட கலந்துக்காம செய்ய கூடாது இல்லையா..அதான் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டேன்.. நீ சொல்லு என்ன செய்யலாம்..” என்று அவனிடம் கேட்க

                     “நான் என்ன சொல்ல சித்தப்பா.. நீங்களும் அப்பாவும் சொன்னா சரிதான்..” என்று அவன் முடிக்க பார்க்க

                    “உங்க விஷயத்துல அது சரிதான்.. ஆனா இது பொம்பளைங்க சம்பந்தப்பட்ட விஷயம்..உன் பொண்டாட்டி நாளைக்கு கேள்வி கேட்டுட கூடாது இல்லையா.. எல்லாத்தையும் யோசிக்கணும் இல்ல..” என்று முத்து மாணிக்கம் எடுத்து கூற

                      “எவ்ளோ பணம் கொடுக்க போறீங்க சித்தப்பா..” என்று கேட்டிருந்தான் அவன்.

                     “எண்பது லட்சம் கேட்கிறாங்க சந்திரா.. தேவாகிட்ட ஒரு முப்பது லட்சம் கூட தேறும்ன்னு வச்சுக்கோயேன்..நம்மகிட்ட ஒரு நாற்பது இருக்கு.. எல்லாம் சேர்ந்தா கூட இன்னும் ஒரு பத்து லட்சம் கையை கடிக்கும் தான். அதுக்கு என்ன செய்யுறது ன்னு யோசிக்கணும்..” என்று அவர் யோசனையாகவே கூற

                   “நான் ஒரு யோசனை சொல்லவா..” என்றவனை மூவரும் கேள்வியாக பார்க்க

                    “நம்ம வீட்ல இதுவரைக்கும் பொண்ணுங்க பேர்ல சொத்தெல்லாம் எதுவும் வாங்கினது இல்ல..வானதியும், காவேரியும் வேற வீட்டுக்கு போற பொண்ணுங்க.. அவங்களை விட்டுட்டாலும் அம்மா, சித்தி, என் பொண்டாட்டி ன்னு எல்லாரும் இருக்க தேவா பேர்ல மட்டும் எப்படி வாங்க முடியும்..” என்று அவன் நிறுத்த மூவரும் அவனை அதிர்ந்து தான் பார்த்தனர்.

                     ஆனால் அடுத்து அவனே “நான் சொல்றேன் ன்னு தப்பா நினைக்காதீங்க சித்தப்பா, அம்மா அளவுக்கு சித்தி யாரையும் சேர்த்தெல்லாம் பிடிக்கமாட்டாங்க.. அவங்க பேர்ல சொத்தே இருந்தா கூட அவங்க காவேரியை மட்டும்தான் பார்ப்பாங்க.. பிரசன்னாவையே அவங்க பார்க்கிறது சந்தேகம் தான்.. அப்படி இருக்கப்போ மத்தவங்க எல்லாம் எப்படி..” என்று நிறுத்தியவன் பின் மீண்டும் தானே

                    “என் பொண்டாட்டி சித்திக்கும் ஒருபடி மேல… அவ சொத்து கைக்கு வந்த அடுத்த நிமிஷம் வீட்டை பிரிச்சு வாங்கிட்டு கிளம்பிடுவா.. இவங்க எல்லாம் மாறவே மாட்டாங்க சித்தப்பா…

                    “எனக்கு தெரிஞ்சு நம்ம தேவா அப்படி கிடையாது.. அந்த பொண்ணு இன்னிக்கு வரைக்கும் வானதி, பிரசன்னாவை பிரிச்சு பார்த்தது இல்ல.. ஏன் நம்ம சஞ்சய் கூட இப்போவெல்லாம் முழுநேரமும் அந்த பிள்ளை கூடத்தான்.

                      “ஆனா அந்த பொண்ணுக்கு செய்யுறோம் ன்னு சொன்னாலும் உங்க பொண்டாட்டியும், என் பொண்டாட்டியும் விடமாட்டாங்க..” என்று அவன் யோசனையாக மீண்டும் நிறுத்த

                     “என்ன சொல்லணுமோ அதை சட்டுனு சொல்லு சந்திரா..” என்று வேலு எடுத்து கொடுக்க

                   “மீதி இருக்க பத்து லட்சத்தை நான் ஏற்பாடு பண்றேன் சித்தப்பா..இடத்தை அம்மா பேர்லயும், தேவா பேர்லயும் சேர்த்து வாங்குங்க.. அதுதான் எல்லாருக்கும் நல்லது. யார் கேட்டாலும் பின்னாடி நானும் ரகுவும் பேசிக்கிறோம்..” என்று அவன் வழி சொல்ல

                    மீண்டும் ஒருமுறை அவனை அதிர்ச்சியாக பார்த்தது மூவர் குழு.. இவன் என்ன சொல்கிறான் என்று அவர்கள் பார்க்க “ரொம்ப யோசிச்சு தான் சொல்றேன் சித்தப்பா.. உங்க காலத்துக்கு பிறகும் இந்த குடும்பம் ஒண்ணா இருக்கனும்ன்னு நினைச்சா இதுதான் வழி..

                    “தேவா அப்படியே அம்மாவை மாதிரிதான் சித்தப்பா.. அந்த பொண்ணால யாருக்கும் கெடுதல் நினைக்க முடியாது… வானதியை மட்டும் இல்ல பிரசன்னா, காவேரியை கூட அம்மாவை மாதிரி பார்த்துக்க அந்த பிள்ளையால் தான் முடியும்..

                     “இவன்கிட்ட கேட்டா ஏதாவது பேசிட்டு இருப்பான்.. நீங்க தேவா சொன்னதை கேளுங்க..” என்று முடித்து விட்டான்…

                      ரகு “எப்போ இருந்து இந்த ஞானோதயம்..” என்று கிண்டலாக கேட்க

                     “என் அத்தை பொண்ணு வீட்டுக்கு வந்ததுல இருந்து ன்னு வச்சுக்கோயேன்..” என்று அவன் சிரிப்போடு கூற

                     அவனை முறைத்து பார்த்திருந்தான் ரகு. சந்திரன் அவன் முறைத்ததில் லேசாக சிரித்து விட்டவன் “நிஜமா ரகு..தேவா நம்ம வீட்டுக்கு வந்ததுல இருந்து தான் எனக்கு கண்திறப்பு ன்னு வச்சுக்கலாம்.. எவ்ளோ சுயநலமா இருந்திருக்கேன் ன்னே அப்போதான் புரிஞ்சது.

                   “தேவா அம்மாவோட சேர்ந்து நிற்கும்போது எவ்ளோ பாசம் தெரியுமா அவ கண்ணுல.. நிச்சயமா அந்த பிள்ளைக்கிட்ட பொய் இல்ல.. அதே சமயம் அந்த மாதிரி ஒரு பாசத்தை நான் சஞ்சனா கண்ல பார்த்ததே  இல்ல. ஏன் அவ சித்திகிட்ட பேசும்போது கூட நான் பார்த்தது இல்ல..

                 “இவங்க ரெண்டு பேர் செஞ்ச ஒரே நல்ல விஷயம் உன் விருப்பத்தை எதுவும் கேட்காம உனக்கு அந்த பொண்ணை கட்டி வச்சது தான்… வானதி கிட்ட பேசினாலே தெரிஞ்சிடும் தேவாவோட குணம்.. இந்த ஒரே மாசத்துல ரெண்டு பெரும் அவ்ளோ நெருக்கம்.

                 “வானதி பேரை தவிர அவளை பத்தி ஒண்ணுமே தெரியாது என் பொண்டாட்டிக்கு.. என் வாழ்க்கை எப்படியோ போகட்டும் ரகு.. சஞ்சயை நீயும், தேவாவும் பார்த்துக்கோங்க.. அவளை நம்பி எல்லாம் அவனை விட முடியாது…” என்று சற்றே விரக்தியாக அவன் கூற

                    “டேய் என்னடா.. இப்படி எல்லாம் பேசுற..அண்ணியை சமாளிக்கிறது எல்லாம் ஒரு விஷயமாடா.. மாறிடுவாங்க விடு..” என்று ரகு ஆறுதலாக கூற, வேலுவுக்கு தான் இன்னும் வேதனையாக இருந்தது. பின்னே அவர் மனைவியின் வார்த்தைக்காக அல்லவா அந்த திருமணம் நடந்தது.

                     சந்திரன் மேலும் சிறிது நேரம் அவர்களோடு செலவிட்ட பிறகே அங்கிருந்து கிளம்ப, வாசலில் தேவா உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள்.

                                             கையில் ஒரு கூடையோடு அவள் வந்து கொண்டிருக்க, வெளியே வந்த சந்திரனை கண்டவள் “நீங்களும் இங்கே தான் இருக்கீங்களா மாமா.. வாங்க சாப்பிட்டு போகலாம்..” என்று அழைக்க

              “இல்லம்மா.. நான் வீட்டுக்கு போய் சாப்பிடுகிறேன்..” என்றவன் கிளம்ப முற்பட,

             “அட வாங்க மாமா.. எல்லாருக்கும் தான் கொண்டு வந்திருக்கேன்..” என்று அவனையும் கையோடு அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள் அவள்.

             “தனியாவே வந்தியா..” என்று சந்திரன் கேட்க ” ஹான்.. இல்லையே பிரசன்னா கூட்டிட்டு வந்தான்..வெளியே யார்கிட்டேயோ பேசிட்டு இருக்கான் மாமா..” என்று பேசிக்கொண்டே அவள் நடக்க, அதுதான் முதல் முறை, அவள் அந்த கடைக்கு வருவது.

                ரகுவும் இவளை சிசிடிவியில் பார்த்தவன் எழுந்து வெளியே வர, அதற்குள் சந்திரன் அவள் கையில் இருந்த கூடையை தான் வாங்கி கொண்டிருந்தான். ரகுவுக்கு தன் மனைவியை அங்கு பார்த்ததும் கண்களில் லேசான மின்னல் ஒருநொடி மின்னி மறைந்தது.

               இப்படி தாமதமானால் உணவு கொடுத்து விடுவது வழக்கம் தான் என்றாலும், தேவா அதை கொண்டு வரவேண்டும் என்ற அவசியம் இல்லையே. அவன் அன்னை தான் எப்போதும் உணவு எடுத்துக் கொண்டு வருவார்.. சில சமயங்களில் பிரசன்னாவோடு வருபவர் பல நேரங்களில் விறுவிறுவென நடந்தே வந்து விடுவார்.

                  இப்போது சந்திரன் சொன்ன “நம்ம அம்மாவே தான் அந்த பொண்ணு..” என்ற வார்த்தைகள் புரிவது போல் இருந்தது ரகுவுக்கு. இதற்குள் தேவா அவனை நெருங்கி விட்டிருக்க, “எல்லாரும் இங்கேயே இருக்கீங்க.. ஆனா ஒருத்தர் கூட சாப்பிட வரல ன்னு அத்தை அங்கே புலம்பிட்டு இருக்காங்க..” என்று அவள் முறைக்க

                  “அதான் எடுத்துட்டு வந்துட்டியே வா..” என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தான் அவன். “சரியான ரோபோ..” என்று அவனை திட்டிக் கொண்டே அவன் பின்னால் நடந்தாள் தேவா.. ஒருவேளை மாமா எல்லாத்தையும் சொல்லிட்டாங்களோ, கோபமா இருக்கானா” என்றும் நினைவு ஓட, சமாளிப்போம் என்று நினைத்துக் கொண்டாள்.

                   அதன்பிறகு அவள் மாமாக்கள் இருவரும் அவளை வரவேற்க “முதல்ல சாப்பிடுங்க.. லேட் ஆச்சு ஏற்கனவே..” என்று அங்கிருந்த ஒரு அறையில் அவர்களுக்கு உணவை பரிமாறினாள். அங்கு தட்டு,டம்ளர் ஒரு கேன் தண்ணீர் என்று எல்லாமே இருக்க, அவர்களின் ஓய்வு அறைதான் அது.

                  அனைவரும் உண்டு முடிக்கும் வரை பிரசன்னா கல்லாவில் அமர்ந்திருந்தான். அதுவரையும் கூட ரகு எதுவுமே பேசாமல் இருக்க, அவன் கைகழுவ எழுந்ததும் தன் மாமாவிடம் “எல்லாம் சொல்லிட்டீங்களா..” என்று அவள் மெதுவாக கேட்க

                   “என்னடா கேட்கிற.. என்ன சொல்லணும் ” என்று அவளையே கேட்டார் முத்து.

                அதற்குள் ரகு வந்துவிட, அவனை பார்த்தவள் அமைதியாகிவிட “அதான் காலையில உங்களுக்கு ஒரு பிளான் போட்டு கொடுத்தாளே, அதை என்கிட்டே சொல்லிட்டீங்களா இல்லையா ன்னு கேட்கிறா.. உங்க மருமக..” என்று ரகுவே கூறிவிட, முத்துவும், வேலுவும் அவளை பார்த்து சிரித்து வைத்தனர்.

                தேவா மாட்டிக் கொண்டவளாக விழிக்க, “கிளம்பு.. வீட்டுக்கு போவோம்..” என்று அவளை அழைத்துக் கொண்டே எழுந்தான் ரகு.

                  அவனிடம் இருந்து தப்பிப்பவளாக “நான் பிரசன்னாவோட வந்தேன்..” என்று தேவா கூற

                 “நீ ரகுவோட போ தேவா.. பிரசன்னா இங்கே இருப்பான்..” என்று சந்திரன் கூற, “வேண்டாம்..” என்பது போல் கண்ணை சுருக்கி தலையசைத்தாள் தேவா.

                அவள் செய்கை புரியாமல் சந்திரன் விழிக்க, ரகு அவள் காதை பிடித்து எழுப்பியவன் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

Advertisement