Advertisement

காதல் தருவாயா காரிகையே 15

                            இதற்குமுன் கடந்திருந்த சில நாட்களை போலவே ஒரு அழகான விடியல் ரகுவுக்கு. காலை இந்து மணிக்கு முன்பாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட, அவன் அவசரமாக அவனின் சூப்பர் மார்கெட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. சரக்கு வருவதால் அதை இறக்கி வைக்க ஆட்களுக்கு ஏற்கனவே சொல்லி இருந்தான். இவனும் உடன் இருந்தல் தான் வேலை சரியாக நடக்கும், கிளம்பிய ஆக வேண்டும்.

                         ஆனால் இப்படி ஒருத்தி சுகமாக அவன் மேலே ஏறி படுத்திருந்தால் எங்கிருந்து நகர்வது அவன். ஆம்… தேவா முழுவதுமாக அவன் மேலே ஏறி படுத்திருந்தாள். அவன் நெஞ்சில் தலையை வைத்தி அவனை கட்டிக்கொண்டு அப்படி ஒரு உறக்கம் தலைவிக்கு.

                         ரகு சில நிமிடங்கள் பொறுத்து பார்த்தவன் மெதுவாக அவளை புரட்டி கட்டிலில் விட, மெல்ல கண்விழித்துக் கொண்டாள் அவள். ரகுவை “என்ன பண்றிங்க..” என்று கேட்டுக் கொண்டே முறைக்க

                         “ஹேய்.. கடைக்கு கிளம்பனும் நான், இப்படி என்மேல ஏறி படுத்துட்டு என்ன பண்றிங்க ன்னு கேட்கறியா..” என்றவன் அவள் கன்னத்தை கிள்ளி வைக்க, அதற்கே அவள் முகம் சிவந்து போனது.

                      “ஏண்டி இப்படி இருக்க.. உன்னை இப்படி பார்த்தா கடைக்கு போக எண்ணம் வருதா..” என்று அவன் சலிக்க

                     “நீங்க பார்க்கவே வேண்டாம் கிளம்புங்க.., எனக்கு தூக்கம் வருது.” என்று மீண்டும் போர்வையை தலைவரை இழுத்து போர்த்திக் கொண்டு அவள் படுத்துவிட, அந்த போர்வைக்கு மேலாகவே அவளை இறுக்கி அவள் உச்சியில் ஒரு முத்தம் வைத்துவிட்டு குளிக்க சென்றான் ரகு.

                     அவன் குளித்துமுடித்து கடைக்கு சென்றுவிட, அடுத்த சிறிது நேரத்தில் அலாரம் அதன் வேலையை சரியாக செய்தது. தேவா தானும் குளித்து கீழே இறங்க, பார்வதியுடன் இனைந்து கொண்டாள். பார்வதி அன்றைய சமையலுக்கான வேலைகளை பார்த்துக் கொண்டு நிற்க, வழக்கம் போல் அவருக்கு உதவியவள் தன் மாமா க்களுக்கு கஞ்சி தயாரித்து எடுத்து செல்ல, ஏதோ முக்கியமாக பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர் அவர்கள்.

                      தேவாவுக்கு அவர்கள் பேசுவதில் இருந்து ஏதோ நிலத்தை வாங்குவது பற்றி என்பது வரை புரிய, பெரிதாக கவனிக்கவில்லை அவள். வேலு எப்போதும் போலவே “உட்காருடா..” என்றுவிட, “இல்ல மாமா. உள்ளே வேலையிருக்கு..” என்று அவள் நகர

                      “நமக்கு உழைக்க தெம்பு இருக்கு வேலு.. ஆனா நம்ம கைய கடிக்காம இருக்கணும்ல.. இப்போ இதுல காசை போட்டுட்டா மொத்தமா எல்லாத்துக்கும் இடிக்கும். அந்த நிலைத்து விளைச்சல் வரவரைக்கும் எல்லாம் நம்மால சமாளிக்க முடியாதே..” என்று முத்துமாணிக்கம் தீவிரமாக வேலுவுக்கு எடுத்து கூற

                        “அதுவும் சரிதாண்ணே.. யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ…” என்றுவிட்டு எழுந்தார் அவர்.

                        தேவா இவர்களின் பேச்சை கேட்டிருந்தவள் ” என்ன விஷயம் மாமா…” என்று பொதுவாக கேட்க

                      “ஒண்ணுமில்லடா.. நம்ம நிலத்துக்கு பக்கத்துல இருக்க விவசாய பூமி ஒன்னு விலைக்கு வருது..முப்பத்தைந்து ஏக்கர் இருக்கு..நம்மோடதை விட கொஞ்சம் பெரிய இடமும் கூட.. சொந்தக்காரங்க வெளியூர்ல இருக்காங்க மா.. இத்தனை நாள் ஆள் வச்சு விவசாயம் பார்த்தாங்க.. இப்போ அவங்க பிள்ளைங்க வெளிநாடு போய்ட்டாங்க,அதான் நிலத்தை வித்துட்டு அவங்களும் கிளம்ப பார்க்கிறாங்க…

                       “நமக்கு நல்ல பழக்கம்.. அதான் நேத்து கடைக்கு வந்தவரு விக்கிறது ஆள் பார்க்க சொல்லிட்டு போயிருக்காரு.. உன் சின்ன மாமனுக்கு நாமளே அந்த நிலத்தை வாங்கணும் ன்னு எண்ணம்.. ” என்று அவர் கூறி முடிக்க

                         “நல்ல விஷயம் தான மாமா.. நாமளே வாங்கிக்கலாமே.. நம்மோடது அதைவிட கம்மியான நிலம்ன்னு சொல்றிங்க, அடுத்து வரவங்க ஏதாவது குடைச்சல் கொடுத்தாலும் ஒன்னும் செய்ய முடியாதே.. அப்போ கஷ்டப்படறதுக்கு நாமளே வாங்கலாமே,…” என்று தேவா கேட்க

                         ” நிலம் வாங்கறது நல்ல விஷயம் தான் தாயி.. பணம் இருக்கணும் இல்லையா… ” என்று அவர் தயங்க

                          “எவ்ளோ சொல்றாங்க..” என்று சாதாரணமாக கேட்டாள் மருமகள்.

                           “மொத்தம் முப்பத்தைஞ்சு ஏக்கர் நிலம் இருக்குடா.. எல்லாமே விவசாய நிலம்தான், மொத்தமா எண்பது லட்சம் கேக்குறாங்க.. நாம அப்படி இப்படி ன்னு அடிச்சு பேசினா ஒரு எழுபத்தைஞ்சுக்கு ஒத்து வருவாங்க.. ஆனா நம்ம கையில இப்போ முழுசா நாற்பது லட்சம் கூட இல்ல..” என்று அவர் உள்ள நிலையை தெளிவாக விளக்கி கூறிவிட்டார்.

                          தேவா சிறிது நேரம் யோசித்தவள் “நான் ஒரு யோசனை சொல்லவா மாமா.. ” என்று கேட்க

                       முத்துமாணிக்கம் “உன்னோட நகையையோ, பணத்தையோ எடுக்க நிச்சயம் உன் புருஷன் சம்மதிக்க மாட்டான் தாயி..” என்று எச்சரிக்கையாக கூறிவிட்டார்.

                        சட்டென சோர்ந்தவள் உடனே “அப்போ ஒன்னு செய்யலாம்.. அந்த நிலத்தை நீங்க வாங்காதீங்க.. நானே வாங்கிக்கறேன்..” என்று கூறிவிட, வேலுமாணிக்கம் சிரித்துவிட்டார்.

                    “எண்பது லட்சம் தேவாம்மா.. எப்படி முடியும்..” என்று அவர் கேட்டு நிற்க

                    “ஏன் முடியாது…என்கிட்டே ஒரு முப்பது லட்சத்துக்கு பணமாகவே இருக்கு. பேங்க்ல இருந்து அதை எடுத்துக்கலாம்.. மீதி அம்பது லட்சம் நீங்க எனக்கு கடனா கொடுங்க.. நான் அதுக்கு ஈடா என்னோட நகைகளை உங்ககிட்ட கொடுக்கறேன்..”

                      “நான் அம்பது லட்சத்தை திருப்பி கொடுக்கறப்போ நீங்க என் நகைகளை கொடுத்திடுங்க..” என்று அவள் வியாபாரம் பேச

                        முத்துமாணிக்கமும்,வேலுமாணிக்கமும் பதறிப் போய் தான் நின்றனர். “என்னமா பேசுற நீ, எங்க வீடு பொண்ணுடா நீ.. உன்கிட்ட நகையை வாங்கிட்டு பணம் கொடுப்போமா..” என்று அவர் வருத்தமாக கேட்க

                        “சரி என்ன செய்யலாம் சொல்லுங்க.. இல்லேன்னா நகையெல்லாம் பேங்க்ல அடமானம் வைப்போமா…” என்று அவள் கேட்க

                        “அதெல்லாம் வேண்டாம் தேவாம்மா… எனக்கு கொஞ்சம் நேரம் கொடு.. நான் யோசிச்சு சொல்றேன்..” என்று முத்துமாணிக்கம் முடித்துவிட

                          “அந்த நிலம் நிச்சயம் நமக்குதான் மாமா.. உங்க பேர்ல வாங்க போறிங்களா, இல்ல எனக்கு வாங்கி கொடுக்க போறிங்களா… அதை பத்தி மட்டும் யோசிங்க..” என்று அவரிடம் கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டாள் தேவா.

                           சமையல் அறையில் பார்வதி நின்றிருக்க, அவரிடம் சென்று நின்றவள் வெளியே பேசிக் கொண்டிருந்த விஷயங்களை மேம்போக்காக சொல்லி கொண்டே பூரியை திரட்டி கொடுக்க,

                            “உன் புருஷனும் நீயும் இப்போதான் கொஞ்சம் நல்லா இருக்கீங்க.. இப்போ இதெல்லாம் தேவையா தேவா.. ” என்று கேட்டார் அவர்.

                           “இதுக்கும் என் புருஷனுக்கும் என்ன வந்தது.. உங்க மகன் தான் கொஞ்சம் முரண்டுவார்.. பரவால்ல சமாளிப்போம்..” என்று தனக்கும் சேர்த்தே சொல்லிக் கொண்டாள் அவள்.

                          அன்று மதியமே விஷயம் தந்தையின் மூலம் ரகுவின் காதுக்கு வந்துவிட, “நானும் யோசிச்சிட்டே தான் இருந்தேன்ப்பா… நம்ம நிலத்துக்கு வர பாதையில இருந்து, வாய்க்கால் வரைக்கும் ஒண்ணாதான் இருக்கு.. வேற ஒருத்தன் கைக்கு போனா நிச்சயம் பிரச்சனை வர வாய்ப்பிருக்கு..” என்று அவன் ரசனையாக இழுக்க

                         அப்போதுதான் தேவா கூறிய விஷயங்களை முழுதாக அவனிடம் கூறினார் தந்தை. அவன் கோபப்படுவான் என்று மாணிக்கம் நினைத்ததற்கு மாறாக சிறு சிரிப்புடன் கேட்டுக் கொண்டவன் “நீங்க என்ன யோசிக்கிறீங்க..” என்று தன் தந்தையையும், சித்தப்பாவையும் அவன் கேட்க

                         வேலு சட்டென “இதுல யோசிக்க என்ன இருக்கு ரகு.. அந்த நிலம் நமக்கு ரொம்ப முக்கியம்ன்னு தான் நீயே சொல்லிட்டியே.. அதோட எங்க தங்கச்சிக்கு நாங்க முறையா எந்த சொத்தை கொடுத்துட்டோம் இதுவரைக்கும்..”

                        “அவ கல்யாணத்துக்கு போட்ட நகையோட சரி.. அதுவும் கூட எங்கப்பா போட்டது தான்.. அவ இருக்க வரைக்கும் நாங்க எதுவுமே அவளுக்கு செய்யலையே.. இப்போ என் மருமக அவளா வாயை திறந்து எனக்கு வாங்கி கொடுங்க ன்னு கேட்டு இருக்கா.. எப்படி விட முடியும்..”

                         “அந்த நிலத்தை நாம தான் வாங்கறோம் ரகு. நீ வீட்டை பத்தி யோசிக்காத… என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்..” என்று அவர் பட்டென கூறிவிட, முத்து மாணிக்கத்திற்கும் அதுவே தான் எண்ணம் என்பதை அவர் மௌனம் கூறியது..

                         “உங்க மருமக நல்லா வேப்பிலை அடிச்சிட்டா போலவே வேலுப்பா… ” என்று அவரை கிண்டல் செய்ய

                          “என் மருமக ஏண்டா வேப்பிலை அடிக்கணும்.. எத்தனை தெளிவா பேசுறா தெரியுமா…படிச்சா பிள்ளைன்னு நிரூபிச்சிட்டா..” என்று வக்காலத்து வாங்கினார் அவர்.

                           “அதுசரி.. யோசிப்போம் சித்தப்பா.. சாதாரண விஷயம் இல்லையே.. கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா பணம்.. நாம பேசி முடிச்சாலும் வீட்டு பொம்பளைங்க என்ன நினைக்கிறாங்க ன்னு ஒன்னு இருக்குல.. சித்தியை கூட விட்டுடுங்க.. ஆனா சஞ்சனா அண்ணி நிச்சயமா பிரச்சனை பண்ணுவாங்க..” என்று அவன் சரியாக கணிக்க

                            “அதுங்க ரெண்டையும் விட்டு தள்ளு ரகு.. நீ மீதி பணத்துக்கு என்ன வழின்னு யோசி.. நம்ம சந்திரனுக்கு போனை போட்டு வர சொல்லு.. அவன்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுடுவோம்..” என்று வேலுமாணிக்கம் கூறிவிட, தன் மொபைலில் இருந்து அண்ணனுக்கு அழைத்தான் ரகு.

                         கடையில் வேலையாக இருந்தவன் தம்பியின் அழைப்பை கண்டதும், சட்டென ஒரு பரபரப்புடன் எடுத்து காதில் வைக்க “கடைக்கு வா சந்திரா.. அப்பா ஏதோ பேசணுமாம்..” என்று மட்டுமே கூறினான் ரகு.

                         சந்திரன் அதற்கே உணர்ச்சி வசப்பட்டவனாக  “இதோ இப்போவே வரேன் ரகு.. கிளம்பிட்டேண்டா..” என்று தடுமாற்றமாக கூற, ஏதோ போலானது ரகுவுக்கு.

Advertisement